சதுர்முக லிங்கம் தரிசனம் செய்வோம்!! ஆரூர் சுந்தரசேகர்.

 சதுர்முக லிங்கம் தரிசனம் செய்வோம்!!

ஆரூர் சுந்தரசேகர். 

20201103194335615.jpeg

சிவலிங்க வழிபாடு என்பது ஒரு தொன்மையானது. ஈசனை நாம் “சிவன்” என்கிறோம். சிவன் என்றாலே மங்களத்தைக் குறிக்கக் கூடிய ஒரு சொல். லிங்கம் எனும் சொல் சிவனின் அருவுருவ நிலையைக் குறிப்பதாகும்.'லிம்' என்பது உயிர்களின் தோற்றத்தைக் குறிக்கும்.'கம்' என்பது அவற்றின் ஒடுக்கத்தைக் குறிக்கும் சொல்லாகும்.உயிர்கள் தோன்றவும்,ஒடுங்கவும் உரிய இடமாக சிவன் உள்ளதால் இப்பெயர் ஆகும். 

உருவமும் இல்லாமல், அருவமும் இல்லாமல் இறைவனைப் பூசிக்கும் ஒரு வடிவமே சிவலிங்க வழிபாடு. இந்தச் சிவலிங்க வழிபாட்டிலே முக லிங்கங்களும் உண்டு.

முக லிங்கங்கள்: 

சில புராதனமான சிவாலயங்களில், முகங்களுடன் லிங்கங்கள் பிரதிஷ்டை செய்து வழிபடபட்டு வந்தன. ஒரு முக லிங்கம் ஏகமுக லிங்கம், இரண்டு முக லிங்கம் துவிமுக லிங்கம், மூன்று முக லிங்கம் திரிமுக லிங்கம், நான்கு முகங்களைக் கொண்ட லிங்கம் சதுர்முக லிங்கம், ஐந்து முக லிங்கம் பஞ்சமுக லிங்கம் என்றும் அழைக்கப்பட்டு வந்தன. 

முக லிங்கங்களை வழிபடுவதனால், இம்மையில் அஷ்ட ஐஸ்வரியங்களும், மறுமையில் சிவலோக சித்தியும் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

ஆயிரம் தாமரை போலும் 

ஆயிரஞ் சேவடியானும் 

ஆயிரம் பொன்வரை போலும் 

ஆயிரந் தோளுடையானும் 

ஆயிரம் ஞாயிறு போலும் 

ஆயிரம் நீண்முடியானும் 

ஆயிரம் பேருகந்தானும் 

ஆருர் அமர்ந்த அம்மானே. 

ஆயிரம் தாமரை மலர்கள் போன்ற ஆயிரம் திருவடிகளை உடையவனும், ஆயிரம் மேருமலைகளைப் போன்ற ஆயிரம் தோள்களை உடையவனும், ஆயிரம் சூரியர்களைப் போன்ற ஆயிரம் நீண்ட முடிகளை உடையவனும், ஆயிரம் பெயர்களை விரும்பிக் கொள்பவனும், ஆரூர் அமர்ந்த அம்மான் ஆவான். என்று சிவபெருமானைப் பற்றி தேவாரத்தில் திருநாவுக்கரசு சுவாமிகள் பாடியுள்ளார்.

சதுர்முக லிங்கம்:

சிவனுக்கு ஐந்து முகங்கள் என்று ஆகமங்கள் கூறுகின்றன. கிழக்கு திசையை நோக்கிய முகம் தத்புருஷம்; இது ரிக் வேதத்துக்கு உரியது. மேற்கு திசையை நோக்கிய முகம் சத்தியோஜாதம்; ஸாம வேதத்துக்கு உரியது. தெற்கு திசையை நொக்கிய முகம் அகோரம். இது யஜுர் வேதத்துக்கு உரியது. வடக்கு திசையை நோக்கிய முகம் வாமதேவம்; அதர்வண வேதத்துக்கு உரியது. மேல் நோக்கிய முகம் ஐந்தாவது முகம். அது ஈசானியம் என் அழைக்கப்படுகிறது. நான்கு முகங்களையே நான்கு திசைகளாகவும், நான்கு வேதங்களாகவும், நான்கு யுகங்களாகவும் பல விதமாக உருவகிக்கின்றனர்.

ஐந்தாவது முகம் உடலில் இருந்து வெளியேறும் ஆவிகளின் அதிபதியாக மேல் உலகங்களைக் குறிப்பிடும் வகையில் ஈசானன் என்று அழைக்கப்படுகிறது. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே காலத்தின் பிடியில் கட்டுண்டு பூவுலகில் வாழும் மனிதர்களுக்கு நன்மைகள் புரியும் வகையில் ஐந்தாவது முகத்தை அகற்றி நான்கு முகங்களுடன் கூடிய சதுர்முக லிங்கத்தை அமைத்து வழிபடுவது மரபாக இருந்தது. சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் சதுர்முக லிங்கத்தைப் பிரம்ம லிங்கம் என்றும் குறிப்பிடுகின்றனர். இந்த சதுர்முக லிங்கம் என்னும் நான்கு முக லிங்கம் "வேத லிங்கம்" என அழைக்கப் படுகிறது.

சதுர்முக லிங்கம் ஆகம முறைப்படி அமைக்கப்பட்டால், நான்கு முகங்களுக்கும் நேராக சந்நிதியில் நான்கு வாயில்கள் அமைக்கப்பட வேண்டும். மேலும் ரிக், யஜூர், சாம, அதர்வண வேத முறைகளின்படி ஒவ்வொரு முகத்துக்கும் ஒவ்வொரு வேதத்தால் பூஜை செய்ய வேண்டும். நேபாளத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற பசுபதீஸ்வரர் கோயிலில் மூலவரான பசுபதிநாதர் சதுர்முக லிங்கம் ஆகும். இந்தக் கோயிலில் நான்கு முகங்களுக்கும் நான்கு வாயில்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு முகத்துக்கும் ஒவ்வொரு வேதப்படி பூஜைகள் நடைபெறுகின்றன. இவ்விதம் அமையப் பெறும் கோயில்களுக்கு ‘சர்வதோபத்ராலயம்’ எனப்பெயர். 

இதேபோல், சதுர்முக லிங்க சந்நிதிகள் பல்வேறு சிவன் கோயில்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆந்திர மாநிலத்தில் காளஹஸ்தியில் உள்ள சதுர்முக லிங்கம் பிரசித்தி பெற்றதாகும். தமிழகத்தில் அட்ட வீரட்ட ஸ்தலங்களில் ஒன்றான, பண்ருட்டியை அடுத்த திருவதிகையிலும், மற்றும் திருவண்ணாமலை, திருவானைக்காவல், காஞ்சீபுரத்தில் உள்ள கச்சபேஸ்வரர் கோயிலிலும் அமைந்துள்ள சதுர்முக லிங்கங்கள் உள்ளன.

இந்த சதுர்முக லிங்கத்தை நான்கு முக ருத்ராட்சத்தால் அலங்கரித்து நால் வகை வில்வங்களால் அர்ச்சனை செய்து வழிபடுபவர்கள் பேரறிஞர்களாவார்கள் என்று ஆகமங்கள் கூறுகின்றன. 

திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் கோயில்:

“ஓம்” என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாமல் சிறை பட்ட பிரம்மா சிவனால் விடுவிக்கப்பட்டார். தவறு செய்த பிரம்மா மீண்டும் படைக்கும் தொழிலைப் பெற முடிவு செய்து இத்தலத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, சிவலிங்கத்தின் நான்கு பக்கமும் சிவமுகத்தை உருவாக்கி,சிவலிங்க அபிஷேகத்திற்காக தீர்த்தம் ஒன்றை உருவாக்கினார். பிரம்மன் உருவாக்கிய தீர்த்தம் என்பதால் அதற்கு "பிரம்ம தீர்த்தம்" என்ற பெயர் ஏற்பட்டது. நான்கு முகங்களைக் கொண்டவர் என்பதால், சதுர்முக லிங்கம் எனப்பட்டது. இந்த லிங்கமே இங்கு வழிபாட்டில் இருந்து வந்தது. பிற்காலத்தில், இரண்டாம் சுந்தர பாண்டியன், சோழநாட்டுப் பாணியையும், பாண்டியநாட்டுப் பாணியையும் கலந்து ஒரு கோயில் எழுப்பபட்டது. 

பின்பு மூலஸ்தானத்தில் பிரம்மாண்டமான ஆவுடையாருடன் கூடிய லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவரை “விருத்தபுரீஸ்வரர்” என அழைத்தனர். “விருத்தம்” என்றால் “பழமை.” இவர் “பழம்பதிநாதர்” என்றும் அழைக்கப்படுகிறார். பிரம்மாவே வணங்கிய தலம் என்பதால், இது மிகப்பழமையான ஸ்தலமாக கருதப்படுகிறது. 

இங்குள்ள சிவலிங்கத்தின் ஆவுடையை வேறு எந்த கோவிலிலும் பார்க்க முடியாத அளவிற்கு மிக பெரிதாக அமைந்துள்ளது.

இதுவே இத்தலத்தில் மிகச்சிறந்த சிறப்பம்சமாகும். தஞ்சை பிரஹதீஸ்வரருக்கு அடுத்தபடி பெரிதாக உள்ள லிங்கம் இதுவாகும். திருப்புனவாசல் கோயிலில் லிங்கம் 9 அடி உயரமே உடையதென்றாலும் , ஆவுடையார் 82.5 அடி சுற்றளவு கொண்டதாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இது தஞ்சை மற்றும் கங்கைகொண்டசோழபுரத்தை விட பெரியது . இதனால், ஆவுடையாருக்கு வஸ்திரம் அணிவிக்கும் போது, ஒருவர் பிடித்துக் கொள்ள இன்னொருவர் ஆவுடையாரை சுற்றி வந்து கட்டி விடுவார் . லிங்கத்திற்கு 3 முழமும், ஆவுடைக்கு 30 முழமும் வேட்டிகட்டப்படுகிறது. "மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று " என்ற வாசகம் இத்தலத்து இறைவனைப் பற்றியதாகும். கேட்டதை கொடுக்கும் இந்த ஸ்தல சிவபெருமானுக்கு வேட்டியும் துண்டும் தனியாக நெய்து காணிக்கையாக செலுத்துகிறார்கள்.

இந்த கோவிலில் நான்கு தல விருட்சங்கள் உள்ளது, ஒவ்வொரு யுகத்திற்கும் ஒன்று என்ற அடிப்படையில்,கிருதா யுகத்தில் வஜ்ரவனம் என்ற பெயரில் சதுரக்கள்ளியும், திரேதாயுகத்தில் பிரமம்புரம் என்ற பெயரில் குருந்தமரமும், துவாபரயுகத்தில் விருத்தகாசி என்ற பெயரில் மகிழமரமும்,கலியுகத்தில் பழம்பதி என்ற பெயரில் புன்னை மரமும் தல விருட்சமாக இருந்ததால், இந்த நான்கும், நான்கு வேதங்களாக பாவித்து வணங்கப்படுகின்றன. 

இக்கோவிலுக்கு தெற்கே பாம்பாறும்,கோவிலுக்கு எதிரே மூன்று கிலோமீட்டர் தொலைவில் கடலும் உள்ளது.கடல் மற்றும் ஆற்றுப்புனலில் (வாசலில்) ஊர் அமைந்ததால் திருப்புனவாசல் எனப் பெயர் பெற்றது.

சிவாயநம!! திருச்சிற்றம்பலம்!!!

Comments

Popular posts from this blog

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..

உண்மை பக்தி எது ?

ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்...