ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்...
ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்...
ஆரூர் சுந்தரசேகர்.
நந்தி பகவானை வளர்பிறை தேய்பிறை திரயோதசி திதிகளில் பிரதோஷம் வேளையில் வழிபடுவது அனைவருக்கும் தெரியும்.
நந்தி என்றாலே ஆனந்தம் என்ற பொருள் உண்டு. அதற்கேற்ப எல்லோரையும் ஆனந்தமாக வைத்திருப்பார்.
நந்தியின் நிறம் வெள்ளை, வெண்மை என்பது தூய்மையைக் குறிப்பது. அறமாகிய தர்மத்தின் நிறமும் வெண்மையே. நந்தி தூய்மையும் தர்மமும் நிறைந்தது.
' ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப...' என்னும் பாடல் புறநானூற்றின் கடவுள் வாழ்த்தாக அமைந்திருக்கிறது. ‘சிவபெருமானின் வாகனமான காளை தூய்மையான வெள்ளை நிறமும், சிறப்பு மிகு பெருமையும் கொண்டது என்பது இதன் பொருளாகும்.
“செம்பொருள் ஆகமத்திறம் தெரிந்து
நம் பவமறுத்த நந்திவானவர்”
எனும் செய்யுளிலிருந்து சிவாகமத்தை சிவபெருமானிடமிருந்து நேரடியாகத் தெளிந்து உலகத்தவர்களுக்கு அருளியவர் நந்தி தான் என்பது தெளிவாகின்றது.
சிவபெருமான் திருநடனம் புரிகையில் நந்திதேவர் மத்தளம் வாசித்ததாக சிவபுராணம் கூறுகிறது.
சிவபெருமான் நாட்டியக் கலையைப் பிரும்மாவுக்கு கற்றுக் கொடுக்க அம்முறையை அறிந்த நந்தி பரத முனிவருக்கு கற்றுக் கொடுத்ததாக அபிநய தர்ப்பணம் என்ற பரத நாட்டிய நூல் கூறுகிறது.
திருமூலருக்கு குருவாக இருந்த நந்தி பெருமான்தான் ஒன்பது வேத ஆகமங்களை விளக்கி அருளியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவபெருமான் நந்தி புராணத்தில் நானும் நந்தியும் வேறல்ல, ஒருவரே என்று கூறுகிறார். நந்தியைத் தொழுவது சிவபெருமானைத் தொழுவதற்கு சமமானது ஆகும்.
சிவன் கோயில்களில் உள்ள ஐந்து நந்திகள்:
சிவன் கோயில்களில் சிவ ஆகமங்களின் அடிப்படையில் ஐந்து நந்திகளும் இடம்பெற்றிருக்கின்றன.
அவை பின்வருமாறு...
கைலாய நந்தி:
இவர் அனைத்து சிவாலங்களிலும் மூலவருக்கு அருகே இருப்பார். கைலாயத்தில் சிவபெருமானுக்கு அருகே எப்போதும் இருப்பதனால் இவருக்கு கைலாய நந்தி என்ற பெயர்.
அவதார நந்தி:
அவதார நந்தி என்பது சிவாலயங்களில் கைலாய நந்திக்கு அடுத்து இருப்பதாகும். சிவபெருமானுக்கு வாகனமாக திருமாலே நந்தியாக மாறியதால் இந்த நந்தியை விஷ்ணு அவதார நந்தி என்றும், விஷ்ணு நந்தி என்றும் அழைக்கின்றார்கள்.
அதிகார நந்தி:
அதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் மூன்றாவதாக காணலாம். கைலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்திக்கு, சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக உள்ளமையினால் அதிகார நந்தி என்ற பெயர் வந்தது.
சாதாரண நந்தி
சாதாரண நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் நான்காவதாக இருக்கும். ஐந்து நந்திக்கும் குறைவான சிவாலயங்களில் இந்த நந்தி அமைக்கப்பெறுவதில்லை.
மஹா (பெரிய) நந்தி:
பெரிய நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் நுழைவுவாயிலில் காணப்பெறும் நந்தியாவார். கைலாயத்தின் விஸ்வரூபத்தில் எந்நேரத்திலும் காவலனாக இந்த நந்தி இருப்பார். அதன் காரணமாக இவரை மஹா நந்தி என்றும் விஸ்வரூப நந்தி என்றும் அழைக்கின்றனர்.
ஐந்து மிகப்பெரிய நந்திகள்:
பல பெருமைகளை உடைய நந்திதேவருக்கு உலகம் முழுவதும் பல இடங்களில் சிலைகள் உள்ளன.
இந்தியாவில், புகழ்பெற்ற நந்திகள் ஏராளம் குறிப்பாக, தென்னிந்தியாவில் நந்திகள் அமைந்துள்ள கோயில்கள் நிறைய உண்டு. சிவபெருமான் ஆலயங்கள் என்றாலே சிறிய அளவிலான நந்தியாவது அமைந்திருக்கும்.
இந்தியாவில் உள்ள ஐந்து மிகப்பெரிய நந்தி சிலைகளைப் பற்றி இங்கு காண்போம்.
1. பிரகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர்.
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் அமைந்திருக்கும் இந்த நந்தி சிலை நாயக்கர்களால் கட்டப்பட்டது. இந்தச் சிலை 13 அடி உயரமும், 16 அடி நீளமும் கொண்டது.
2. வீரபத்ரர் கோயில், லேபாக்ஷி
ஆந்திரப்பிரதேச மாநிலம் லேபாக்ஷியில் விஜயநகர மன்னர்களால் 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வீரபத்ரர் ஆலயத்தில் இந்த நந்தி சிலை அமைந்திருக்கிறது. இந்த நந்திதான் இந்தியாவிலேயே மிகப்பெரிய நந்தி சிலையாக கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் உலகின் மிகப்பெரிய ஒற்றைக்கல் நந்தியாகவும் இது அறியப்படுகிறது. இச்சிலை 15 அடி உயரமும், 27 அடி நீளமும் கொண்டது.
3. சாமுண்டி மலை, மைசூர்
மைசூரில் உள்ள சாமுண்டி மலையில் 1664-ஆம் ஆண்டு இந்த மிகப்பெரிய நந்தி நிர்மாணிக்கப்பட்டது. இது 15 அடி உயரமும், 24 அடி நீளமும் கொண்டது.
4. பசவனகுடி பெங்களூர்
பெங்களூரின் தென்பகுதியில் உள்ள பசவனகுடியில் இந்த நந்தி சிலை அமைந்துள்ளது. இந்தக் கோயில் இருக்கும் இச்சிலை 15 அடி உயரமும், 20 அடி நீளமும் கொண்டது.
5. ஹோய்சாலேஸ்வரர் கோவில்
ஹலேபீடு ஹோய்சாலேஸ்வரர் கோவில் 12-ஆம் நூற்றாண்டில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு பாதியிலேயே நின்று போனது. இந்தக் கோயிலில் 14 அடி உயரம் கொண்ட இரண்டு ஒற்றைக்கல் நந்தி சிலைகள் காணப்படுகின்றன.
சிவ தரிசனத்திற்காக விலகிய நந்திகள்:
நந்தனாருக்காக விலகிய நந்தி
திருப்புன்கூர் என்னும் ஊரில் உள்ள சிவன் கோயிலில் நந்தனாரை அந்தக் காலத்தில் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்காததால் அவர் கோவிலுக்கு வெளியே இருந்து சிவபெருமானைத் தரிசிக்க விரும்பினார். நந்தனார் சிவபெருமானை வேண்டிட, தாம் இருந்த இடத்திலிருந்து சற்று விலகி அமர்ந்தாராம் நந்திகேஸ்வரன். இந்தத் தலத்தில் ஏழு அடி உயரமுள்ள நந்தி, சிவபெருமான் சந்நிதிக்கு நேராக இல்லாமல் சற்று விலகி இருப்பதைக் காணலாம்.
ஞானசம்பந்தருக்காக விலகியிருக்கும் நந்திகள்
பட்டீஸ்வரம், திருப்பூந்துருத்தி சிவாலயங்களில் ஞானசம்பந்தர் சிவபெருமானை நன்கு தரிசிக்கும் வண்ணம் நந்தி சற்று நகர்ந்தே இருக்கும்.
நந்திகேஸ்வரரின் வேறு பெயர்கள்:
ருத்ரன், தூயவன், சைலாதி, அக்னிரூபன், மிருதங்க வாத்யப்ரியன், சிவவாஹனன், தருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன், சிவப்ரியன், நந்தீசர், நந்தீஸ்வரர், நந்தியெம் பெருமான் என பல்வேறு பெயர்கள் உண்டு.
நந்தியை பிரதட்சணம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்:
மூன்று முறை பிரதட்சணம் செய்தால் - இஷ்டசித்தி
ஐந்து முறை பிரதட்சணம் செய்தால் - ஜெயம்
ஏழு முறை பிரதட்சணம் செய்தால் - சற்குணங்கள்
ஒன்பது முறை பிரதட்சணம் செய்தால் - புத்திரப் பிராப்தம்
பதினோரு முறை பிரதட்சணம் செய்தால் - ஆயுள் விருத்தி
பதிமூன்று முறை பிரதட்சணம் செய்தால் - பிரார்த்தனை சித்தி
பதினைந்து முறை பிரதட்சணம் செய்தால் - தனப்பிராப்தி
பதினேழு முறை பிரதட்சணம் செய்தால் - தன விருத்தி
நூற்றெட்டு முறை பிரதட்சணம் செய்தால் - அஸ்வமேதயாக பலன்
நந்தி காயத்ரி மந்திரம்:
ஓம் தத் புருஷாய வித்மஹே சக்ர துண்டாய தீமஹி
தந்நோ நந்தி ப்ரசோதயாத்
பொருள்:
பரம புருஷனாகிய நந்தி பெருமானே. உங்களை நித்தமும் வணங்குவதன் பலனாக என்னை காத்து என் மனதை தூய்மை படுத்த வேண்டுகிறேன்.
நந்திகேஸ்வரர் துதி:
நந்திஎம் பெருமான்தன்னை நாள் தோறும் வழிப்பட்டால்
புந்தியில் ஞானம் சேரும் புகழ் கல்வி தேடிவரும்
இவ்வுலக இன்பம்யாவும் இவரடி தொழ உண்டு!
அவ்வுலக அருளும்கூட அவர்துதி பாட உண்டு!
முற்பிறவி வினைகள்யாவும் தீயிட்ட மெழுகாகும்
நந்தியின் பார்வை பட நலங்கள்உடன் கிட்டும்!
ஈசனுக்கு எதிர் அமர்ந்து இறைஊஞ்சல் ஆட்டுவிக்கும்
நந்தீசர் நற்பாதம் நாம் தொழுவோமே!
நந்தி பகவானை வணங்குவதால் நமது மனதில் இருக்கும் தீமையானவை அனைத்தும் நீங்கி, உங்களின் கோரிக்கைகள், நல்லெண்ணங்கள், நியாயமான விருப்பங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற அருள்புரிவார் சிவபெருமானின் பரிபூரண அருளை பெறலாம். அதோடு வாழ்வில் எப்போதும் ஆனந்தம் நிலைத்திருக்கும், குருவின் ஆசி கிடைக்கும் மேலும் மனமானது அமைதிகொள்ளும்.
நந்தி பகவானுக்கு அருகம்புல் மாலையை சாற்றி, அரிசிமாவில் வெல்லம் கலந்து நைவேத்தியம் செய்து வழிபட்டால் நோய்கள் மற்றும் வறுமை நீங்கும். பிள்ளை பேரில்லாதவர்களுக்கு குழந்தைகள் பிறக்கும். வேலைவாய்ப்பு தேடுபவர்கள் தங்களுக்கு விருப்பமான வேலைகள் பெறுவார்கள்.
கோயில்களில் நந்தியை தரிசிக்காமல் சிவபெருமானை தரிசிக்க முடியாது. ஆனால் நந்தியை மட்டுமே தரிசனம் செய்தால் கூட சிவபெருமானை தரிசித்த முழுபலனும் கிட்டும். அதேபோல பரமேஸ்வரனிடம் வைக்கும் வேண்டுதல்களை நந்திகேஸ்வரரிடம் வைத்தால் போதும். அவர் அதை சிவபெருமானிடம் சேர்த்துவிடுவார் என்பது ஐதீகம்.
நந்திகேசுவரனே போற்றி
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
Comments
Post a Comment