தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..
"தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..!"
ஆரூர் சுந்தரசேகர்.
'தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை' என்பது சான்றோர் வாக்கு. ஒரு குழந்தையின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் தந்தை எனும் நிலையிலிருப்பவரின் பங்களிப்பு முக்கியமானது.
அப்பா என்ற வார்த்தையில் தான் எத்தனை மந்திரங்கள். தந்தை என்பவர் ஆயிரம் ஆசான்களுக்கு சமம். தன் குழந்தைகளுக்கு ஆலோசனை கூறுவதில் தொடங்கி, அனுபவ பாடங்களை போதித்து சிறந்த வழிகாட்டியாக எத்தனை பொறுப்புகள். 'தந்தை சொல்மிக்க மந்திரமில்லை' என்னும் ஔவையின் வாக்கில் எவ்வளவு உண்மை. உழைப்பு, சேமிப்பு, தன்னம்பிக்கையின் ஊற்று தந்தை என்றால் மிகையாகாது.
தாயும் தந்தையும் ஒருவனுக்குத் தன் இரண்டு கண்களைப் போல் மதிப்புமிக்கோர் ஆவர். பெற்றெடுத்த பிள்ளையைச் சீராட்டி வளர்த்து நல்லொழுக்கம் கற்பித்துக் கல்வியைப் போதித்து தன்னைவிடச் சிறந்தவனாய் உயர வேண்டுமென நினைப்பவர் தந்தை.
தாயின் சிறப்பைப் பற்றிப் பல்வேறு நூல்களிலும் கட்டுரைகளிலும் படித்திருக்கலாம். ஆனால் ஒரு தந்தையின் சிறப்பையும் உயர்வையும் நீங்கள் அரிதாகவே படித்திருப்பீர்கள். அல்லது படிக்காமல்கூட இருக்கலாம். காரணம், தந்தையின் உயர்வு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வேர்களுக்கு எதற்கு விளம்பரம்? என்று கூறுவார்கள். ஓங்கி வளர்ந்து, தழைத்து, காயோடும் கனியோடும் காட்சிதரும் ஒரு விருட்சத்தைத் தாங்கி நிற்பது அதன் ஆணிவேர்தான். அதுபோல் ஒரு குடும்பத்தின் தலைவனாக இருந்து, அக்குடும்பத்தைச் சீரான முறையில் நடத்தி வருபவன் தந்தை எனும் பொறுப்பில் உள்ளவன்தான் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால்தான் தந்தையின் சிறப்பை யாரும் பேசுவதில்லை.
“தந்தை”
தோளில் குடும்பத்தையும்- கையில் பிள்ளைகளையும்- இதயத்தில் சுகத்தையும், சோகத்தையும் சுமக்கும் நடமாடும் சுமைதாங்கி.
கம்பீரமாக வலம் வந்து குடும்ப உறவு என்ற புதிய அத்தியாயத்துக்கு முகவரி எழுதியவர்.
தன் பசியை மறந்து குடும்பத்தின் பசி தீர்க்க உழைத்து மகிழ்பவர்! சுகத்தை கொண்டாட முடியாமலும், சோகத்தை சொல்ல முடியாமலும் நெஞ்சாங் கூட்டுக்குள் மறைத்து கொண்டு குடும்ப கூட்டை கட்டிக்காக்கும் அற்புதமானவர்.
ஒரு நல்ல தந்தை ஆயிரம் ஆசிரியருக்கு சமமானவர். ஒவ்வொரு தந்தையும் குழந்தையினுடைய முதல் கதாநாயகன் என்பது உலகறிந்த உண்மை. நாம் வாழும் உலகில் ஒரு நல்ல மனிதன் கிடைத்திருக்கிறான் என்றால் அவனுக்கு பின்னால் ஒரு பொறுப்பு மிக்க தந்தையின் கடும் உழைப்பும், தியாகமும் இருக்கிறது என அர்த்தம்.
பிள்ளைகளின் பழக்க வழக்கம், பண்புக்கு அப்பா தான் ரோல் மாடல் அப்பாவின் அன்பு ஆழமானது. சில சமயங்களில், அந்த அன்பு ரகசியமாகி விடுகிறது. ஒரு சில நேரங்களில் தந்தையிடமிருந்து திட்டு, கோபம், கண்டிப்பு என்று இருந்தாலும் அவை தான் எதிர்கால வாழ்க்கைக்கு பாடம். இதனால் கண்டிப்பானவர், வளைந்து கொடுக்காதவர் என்று பெயர்.
அலுவலக வேலைப்பளு, மன அழுத்தம், உடற்கூறுவலிகள், சமூகப் பிரச்சனைகள், சுற்றுப்புற இடர்பாடுகள் இவைஎல்லாம் சகித்துக்கொண்டு தன் நலன் முக்கியம் அல்ல, தன்குடும்பம், தாய், தந்தை, மனைவி, மக்கள் நலன் ஒன்றே போதும்என்றும் வாழ்பவர்
தந்தையானவன் இரும்பு உள்ளத்தையும், உடலையும் கொண்டவன் என்று தானே நாம் எண்ணி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
பொதுவாக தாயானவள் நெஞ்சில் வைத்துதான் பிள்ளையை கொஞ்சுவாள். ஆனால் தகப்பன் தன் தோளில் ஏற்றி வைத்து பிள்ளையை கொஞ்சுவான். ஏன் தெரியுமா? அப்போது தன் பிள்ளை தன்னைவிட உயரத்தில் இருக்கும், தான் பார்க்காத உலகத்தையும் தன் பிள்ளை பார்த்து விட வேண்டும் என்பதன் பால அர்த்தம்தான் அது..
பிரசவ அறையின் வாசல் முதல், தன் பிள்ளையை கல்லூரி சேர்க்கும் வரை கால் கடுக்க காத்திருப்பவர் தான் தந்தை. தன் குழந்தைகள் வண்ண வண்ண சட்டைகள் அணிய தம் வாழ்வின் பெருவாரியான நாட்களில் கந்தை சட்டையும், பனியனுமே அணிந்திருப்பார். தமக்கு ஆடை வாங்கும்போது விலையையும், குழந்தைகளுக்கு வாங்கும்போது தரத்தையும் பார்ப்பவர்.
தன் மகனோ, மகளோ வளர்ந்து பெரியவனான பிறகும் சிறு பிள்ளையாகவே பார்க்கிறார்.
'நான்பட்ட கஷ்டம் என் பிள்ளைங்க படக்கூடாது' என பாடுபடும் தந்தைக்கு நாம் கொடுக்கும் விலை மதிப்பற்ற பரிசு அன்பான வார்த்தைகளே.
வாழ்க்கையில் தந்தை என்ற பட்டத்தை பெற்ற பிறகு அவர் இழப்பது ஏராளம்.
ஆனால் பெறுவது...........?
‘நல்ல அப்பா’ என்று தன் பிள்ளைகள் ஒரு வார்த்தை சொன்னால் போதும்..... உலகையே வென்று விட்டதாக அவர்களுக்கு அப்படி ஒரு சந்தோஷம். மெழுகுவர்த்தியாய் தன்னையே அழித்து குடும்பத்துக்காக வெளிச்சம் கொடுக்கும் தியாக திருஉருவங்கள் அப்பாக்கள்!
அப்பாவை போற்றுவோம் வணங்குவோம்
தந்தையின் அருமையை..!! நேசிப்போம் மனதில் வைப்போம்
அருமை. உங்கள் அப்பா..... எஙகளுக்கு ஒரு படி மேலே..... அது...... பெரியப்பா..... 🙏
ReplyDeleteGood narration Anna. He is seeing and blessing us always even now.
ReplyDelete