சனிதோஷ நிவர்த்தி செய்யும் திருநறையூர் மங்கள சனீஸ்வரர்!! ஆரூர் சுந்தரசேகர்.

 சனிதோஷ நிவர்த்தி செய்யும் திருநறையூர் மங்கள சனீஸ்வரர்!!

ஆரூர் சுந்தரசேகர்.

20201123232916853.jpeg

நவகிரகங்களுக்குள் கருணைக் கடலாய் விளங்கும் தெய்வம் சனீஸ்வர பகவான் ஆவார். நவகிரகங்களில் இவருக்கு மட்டுமே ஈஸ்வர பட்டம் கிடைத்துள்ளது. அந்த அளவிற்கு சக்திவாய்ந்தவர். சூரியபகவானுக்கும் சாயாதேவிக்கும் மைந்தனான இவர், தொட்டில் குழந்தையாக இருந்த பொழுதே இருகரங்கள் கூப்பி சிவபெருமானை வணங்கியவர் என்ற பெருமை கொண்டவர்.
மனிதர்கள் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அவர்களுக்கு நல்லதையோ, கெட்டதையோ அளிக்கிறார். இவர் "ஆயுள்காரகர்' எனப்படுகிறார்."சனைச்சரன்' (மெதுவாகச் சஞ்சரிப்பவன்) என்ற பெயரும் உண்டு, மற்றும் மந்தன், காரி, முடவன் ஆகிய பட்டப் பெயர்களும் இவருக்கு உள்ளது.  
நவகிரகங்களில் சனிபகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவார். இவரே ஒருவரின் வாழ்வில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்துவார் என்பது ஜோதிட நம்பிக்கை.  
சனியைப் போல கொடுப்பாரும் இல்லை; அவரைப் போல கெடுப்பாரும் இல்லை' என்றொரு சொல் வழக்கு உண்டு. இதனால், சனீஸ்வரர் என்றால் பயப்படுகின்றோம். ஆனால் இவர் பாவ புண்ணியங்களை அடிப்படையாகக் கொண்டு ஒருவரின் வாழ்க்கையில் நீதிபதி போல செயல்பட்டு அதற்கேற்ற பலன்களை தருபவர். இவர் நம் கர்ம வினைகளுக்கு ஏற்ப சோதனை கொடுத்து நம்மை திருத்தி, நல்வழிப்படுத்தி நமக்கு நன்மை மட்டுமே செய்பவர். ஆனால் மக்கள் இதை சரியாகப் புரிந்துகொள்ளாமல், இவரைக்கண்டு பயப்படுகிறார்கள்.
சனிஸ்வரர் பெரும்பாலும் அனைத்து சிவாலயங்களிலும் நவகிரகங்களில் ஒருவராகவும் சில ஆலயங்களில் தனிச்சந்நிதி கொண்டும் அருள்பாலிப்பவர். 

20201123233053121.jpeg

திருநறையூர் ஸ்ரீ பர்வதவர்தினி சமேத இராமநாத சுவாமி திருக்கோயிலில் எங்கும் காணக்கிடைக்காத சனீஸ்வரர் தனி சந்நிதியில் தனது இரண்டு தேவியரான மாந்தாதேவி, ஜேஷ்டதேவியுடனும் தனது புதல்வர்களான காலத்தை நிர்ணயிக்கும் குளிகன், ஆயுளை நிர்ணயிக்கும் மாந்தி ஆகியோருடன் குடும்ப சமேதராக அருள்பாலிக்கின்றார். இந்த கோயில் சனிதோஷ நிவர்த்தி ஸ்தலமாகும். எனவே சனிதிசை, கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி உள்ளவர்கள் செல்ல வேண்டிய கோயில்ஆகும். 

ஸ்தல அமைப்பு: 

ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் பழமையான அருள்மிகு இராமநாதர் திருக்கோயில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டதாகும். இக்கோயிலின் கோபுர வாயில் கிழக்கு நோக்கி உள்ளது. மூலவர் அருள்மிகு இராமநாத சுவாமி கிழக்கு முகமாகவும், அம்பாள் பார்வதவர்தினி தெற்கு முகமாக நோக்கியும் அருள்புரிகின்றனர். இராமேஸ்வரத்தை தரிசிக்க முடியாத பல பக்தர்கள், தங்கள் பரிகாரங்களை இங்கேயே செய்கிறார்கள்.
இந்த கோயிலில், மூலவருக்கு பலி பீடமோ, த்வஜஸ்தம்பமோ கிடையாது. ஆனால், ஆனால் இங்கு தனி சந்நிதியில் சனீஸ்வரருக்கு ஆகமவிதிப்படி இரும்பினால் ஆன த்வஜஸ்தம்பம், பலி பீடம், மற்றும் சந்நிதி முன் காக வாகனமும் அமைந்துள்ளது. இந்த சனீஸ்வர சந்நிதியை வலம் வருவதற்கு பிரகாரம் உள்ளது. இங்கு சனீஸ்வரர் தனது இருதேவியரான மாந்தாதேவி, ஜேஷ்டதேவியுடன் மற்றும் தனது இரண்டு குமாரர்களான மாந்தி, குளிகன் ஆகியோருடன் குடும்ப சமேதராக அருள்பாலிக்கின்றார். ஸ்ரீ ராமபிரானின் தந்தையான தசரத சக்கரவர்த்தி இவர்களை வணங்கியபடி நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். 
பிரகாரத்தில் விநாயகர், வள்ளி மற்றும் தேவசேனருடன் சுப்பிரமணியர், கஜலட்சுமி, அண்ணாமலையார், பிரம்மா, துர்காதேவி, சண்டிகேஸ்வரர், ஹனுமந்த லிங்கம் மற்றும் நவக்கிரக சந்நிதியும் உள்ளது. இங்கு ரிஷப வாகனத்தில் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி பகவான் ரிஷப வாகனத்தில் அமர்ந்தபடி காட்சி தருவது சிறப்பாகும்
ஸ்தல விருட்சம் : எருக்கு 
ஸ்தல தீர்த்தம் : இராமதீர்த்தம். 

20201123233211178.jpeg

ஸ்தல வரலாறு:
அயோத்தியை ஆண்ட தசரத சக்ரவர்த்தி தன்னை பாதித்திருக்கும் பிணி தீர இங்கு இருக்கும் புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, சிவபெருமானையும், சனி பகவானையும் வழிபட்டு நிவாரணம் பெற்றதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. அதேபோல் ஸ்ரீஇராமரும் இராவண வதம் முடிந்த பிறகு, அயோத்தி திரும்புகையில் தந்தை வழிபட்ட இத்தலத்திற்கு வந்து புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, மண்ணால் லிங்கம் செய்து வழிபட்டிருக்கிறார். அனுமனும் இவ்வாலய சிறப்புணர்ந்து இங்கு சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து, சிவ வழிபாடு செய்திருக்கிறார். அந்த லிங்கம் ‘ஹனுமந்த லிங்கம்’ என்கிற பெயரில் அழைக்கப்படுவதாக ஸ்தல வரலாறு கூறுகின்றது.
இந்த ஹனுமந்த லிங்கம் பிரகாரத்தில் அமைந்திருக்கின்றது. 

ஸ்தல பெருமை: 
இந்த இராமநாதர் திருக்கோயில் சனி பகவானுக்குரிய ஒரு சிறந்த பரிகாரக் கோவிலாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் இருக்கும் எந்தவிதமான சனிதோஷங்களையும் நீக்கவும், நீண்ட நாட்கள் நோய்கள் தீரவும், சகல ஐஸ்வரியங்கள் கிடைக்கவும் சிறந்த பரிகார ஸ்தலமாக இருக்கிறது. வேண்டுதல் நிறைவேறியவர்கள் ஸ்வாமிக்கும், அம்பாளுக்கும் வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
இங்குள்ள சனீஸ்வரருக்கு பாலபிஷேகம் செய்தால், உடம்பிலிருந்து வழியும் பால் (சனிஸ்வரரின் நிறமான) நீல வண்ணத்தை அடைகிறது. சனிப் பெயர்ச்சி அன்று வேறெங்கும் காண முடியாத உற்சவமூர்த்திக்கு திருக்கல்யாணமும், திருவீதி உலா வருவதும் சிறப்பு.
தமிழக தென் மாவட்டங்கள் மற்றும் கேரளா மக்கள் ஜாதகம் எழுதும் போது, மாந்திக்கு முக்கியத்துவம் தருவர். மாந்தி தோஷம் உள்ளோர், இங்கு வந்து மாந்திக்கு அர்ச்சனை செய்து, நிவாரணம் பெறுகின்றனர். 
இக்கோயிலில் உள்ள சிவலிங்கத்தின் மேல் சூரியனின் ஒளிக் கதிர்கள் ஏப்ரல் மாதத்தில் நேரடியாக விழுகின்றன. 

சனீஸ்வரர் வழிபாடு: 
சனிக்கிழமை தோறும் காலை 6 முதல் 7:30 மணிக்குள் மாந்திக்கும், 9 முதல் 10:30 மணிக்குள் சனி பகவானுக்கும் நடக்கும் அபிஷேகத்தைக் காண இங்கு வருபவர்களது எண்ணிக்கை அதிகம்.
இத்திருக்கோயிலில் குடும்பத்துடன் அருள்பாலிக்கும் சனீஸ்வரரை வணங்கி, நீல வர்ணத்தில் வஸ்திரம் சமர்ப்பித்து, அத்துடன் தேவிகளுக்கும் வஸ்திரம் சமர்ப்பித்து, பூமாலை அணிவித்து, நல்லெண்ணைய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், அனைத்து வித ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் ஜன்மச் சனி, ஏழரை சனி, அர்த்தாஷ்டமசனி, அஷ்டமசனி, மற்றும் சனி திசை ஆகிய அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி நன்மைகள் ஏற்படும்.

கோயில் திருவிழாக்கள்: 
பௌர்ணமி, சிவராத்திரி, பிரதோஷம். சனிப்பெயர்ச்சி காலங்களில் சிறப்பு பூஜை நடக்கிறது.

கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரை , மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். இதைதவிர

தினமும் குளிகை நேரத்தில் தரிசனத்திற்காக திறந்திருக்கும்

கோயிலுக்கு செல்லும் வழி: 

கும்பகோணம்-திருவாரூர் பஸ் பாதையில் கும்பகோணத்திலிருந்து எட்டு கி.மீ தொலைவில் உள்ள திருநறையூரில் ஶ்ரீ ராமநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து திருவாரூர், கொரடச்சேரி, நன்னிலம், நாகப்பட்டினம், இராவஞ்சேரி மற்றும் திருவிடச்சேரி செல்லும் அனைத்து பேருந்துகளும் திருநறையூர் வழியாக செல்கின்றன. 

மேலும் விபரங்களுக்கு
திரு. ஞானசேகர சிவாச்சாரியார் - 09442420420

சனி பகவான் கிரகஸ்துதி: 
நீலாஞ்ஜன ஸமாபாஸம் 
ரவிபுத்ரம் யமாக்ரஜம்! 
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் 
தம் நமாமி சனைச்சரம்!!

தமிழில்: 
சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா!!

சனி பகவான் காயத்ரி : 
காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி| தந்நோ மந்த: ப்ரசோதயாத்||

இந்த சனி பெயர்ச்சி நன்னாளில் திருநறையூர் குடும்ப சமேதராக உள்ள மங்கள சனீஸ்வரபகவானை தரிசித்து அனைத்து வளங்களையும் பெற்று வாழ்வோமாக!

Comments

Popular posts from this blog

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..

உண்மை பக்தி எது ?

ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்...