நினைத்த காரியங்களை நிறைவேற்றும் தேவதானம் ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோயில். ஆரூர் சுந்தரசேகர்.
நினைத்த காரியங்களை நிறைவேற்றும் தேவதானம் ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோயில்.
ஆரூர் சுந்தரசேகர்.

சென்னைக்கு மிக அருகிலேயே ஒரு ஸ்ரீரங்கம் (வட ஸ்ரீரங்கம்) இருப்பது பலருக்கு தெரியாது. சுமார் 1,000 வருடகாலம் பழமை வாய்ந்த கோவிலில் ஸ்ரீ ரங்கநாதர் பள்ளி கொண்ட கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.
ஆதிசேஷன் மேல் சயன கோலத்தில் நெல் அளக்கும் மரக்காலை (படி போன்ற ஒரு பெரிய அளவு) தலைக்கு உயரமாக வைத்துக்கொண்டு ஆனந்தமாக சயனித்திருக்கிறார். இவரை தரிசனம் செய்ய இங்கு வரிசை கிடையாது, சிறப்பு கட்டணம் கிடையாது, அருகே நின்று ஸ்ரீ ரங்கநாதரை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தரிசனம் செய்யலாம்.
இந்த கோயில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில், தேவதானம் என்று ஒரு கிராமத்தில் உள்ளது.
தேவதானம் என்ற பெயர் வர காரணம் :
இந்திரன் தேவர்களுக்கு பரிசளித்த இடம் இது என்பதால் இவ்விடம் “தேவதானம்” என பெயர்பெற்றது. மற்றும் தேவர்கள் இவ்விடத்தில் ஸ்ரீ ரங்கநாதரை வழிபட்டதால் இவ்விடம் தேவதானம் என பெயர்பெற்றதாகவும் குறிப்புகள் உள்ளன.
ஸ்தல வரலாறு:
சாளுக்கிய மன்னன் தென்னிந்தியாவின் மீது படையெடுத்த போது, திருச்சியில் காவிரி ஆற்றங்கரையில் உள்ள ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் சயனித்திருக்கும் கோலத்தைக் கண்ட பிறகு ரங்கநாதரின் உருவம் மட்டும் அவன் கண்ணில் இருந்து மறையவில்லை. இதைப் போன்று வேறு எங்காவது பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டேயிருந்தது.
இந்த கிராமத்திற்கு சாளுக்கிய மன்னன் வந்தபோது, அங்கு உள்ள ஏரிக்கரையின் மேல் நின்று பார்த்ததும் அந்த இடம் முழுவதும் நெல் விளையும் பூமியாக, ஸ்ரீரங்கத்தைப் போலவே எங்கும் பசுமையாக தென்பட்டது. அதனால் இதனை ஸ்ரீரங்கம் என்றே மனதில் எண்ணிக்கொண்டான். அப்போது அங்கு ஒரு விவசாயி கதிர் அடிக்கும் களத்தில் போடப்பட்டிருந்த நெல் மணிகளை மரக்கால் கொண்டு அளந்து கொண்டிருந்தான். திடீரென அந்த விவசாயி காணாமல் போனான். இதனைக் கண்ட மன்னன், விவசாயியைத் தேடினான். களைப்பின் காரணமாக மரக்காலை தலைக்கு வைத்தபடி அந்த விவசாயி ஓரிடத்தில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தான்.
அங்கு சென்ற மன்னனுக்கு, சயனக் கோலத்தில் ஶ்ரீரங்கநாதரே காட்சி கொடுத்து மறைந்தார். இதனால் ஆனந்தம் அடைந்த மன்னன், அங்கேயே பெருமாளுக்கு ஒரு ஆலயம் அமைக்க முடிவு செய்தான்.
ஸ்ரீரங்கத்தை விட பெரியதாக பெருமாளை உருவாக்கி கோவில் எழுப்பத் திட்டமிட்டான்.
உடனே நேபாளத்தில் உள்ள கண்டகி நதிக்கரையிலிருந்து சாளக்கிராம கற்கள் வரவழைக்கப்பட்டு சுண்ணாம்புக் கலவையில் அவைகளை சேர்த்து ஸ்ரீரங்கம் ரங்கநாதரை விட மிக பிரமாண்டமாகவும் பதினெட்டரை அடி நீளமும் ஐந்தடி உயரமும் கொண்டு சுதை பிம்ப சிலையை உருவாக்கினான். தனக்கு இறைவன் காட்சி கொடுத்த இடத்தில் ஆலயத்தை கட்டி, ரங்கநாதரை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக ஸ்தல புராணம் கூறுகிறது.

ஸ்தல அமைப்பு :
ஆலயத்தைச் சுற்றிலும் நான்கு புறமும் மதில் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. சிறிய ராஜகோபுர நுழைவாயில் வழியாக உள்ளே நுழைந்ததும், பலி பீடம், கொடி மரம், எதிரே பெருமாளை வணங்கியபடி கருடாழ்வார் உள்ளார், அடுத்து ஆஞ்சநேயர் அமர்ந்திருக்கிறார். இவர்களை வழிபட்டு உள்ளே சென்றால், கருவறைக்கு வெளியே இருபுறமும் ஜெயன், விஜயன் என்கிற துவார பாலகர்கள் இருக்கிறார்கள்.
கருவறையில் பிரம்மாண்டமான அரங்கநாதர். ஐந்து தலை ஆதிசேஷன். மூன்று மடிப்புகளாக தனது உடலை படுக்கையாக அமைத்துக் கொண்டிருக்கிறார். கிழக்கு நோக்கிய திருமுகம். எல்லோருக்கும் நெல் அளந்து கொடுத்து களைத்து அளந்த மரக்கால் படியை தலைக்கு வைத்தவாறு வலது கையை தலைக்கு கீழே அழகாக மடித்து. இடது கையை நீட்டியபடி யோக சயன நிலையில் பதினெட்டரை அடி நீளமும் ஐந்தடி உயரமும் கொண்டு வசீகரத் தோற்றத்துடன் பக்தர்களுக்கு தரிசனம் தந்து அருள் புரிகிறார். பெருமாளின் திருவடிக்கும் திருமுடிக் கிரீடத்திற்கும் தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது. இவரது நாபியின் மீது பிரம்மா உள்ளார். இறைவனின் பாதித்திற்கு அருகில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் இருவரும் அமர்ந்து, களைப்பில் இருக்கும் பெருமாளுக்கு சேவை செய்து கொண்டிருக்கின்றனர். பெருமாளின் திருவடியை தும்புறு மகரிஷியும், பக்த ஆஞ்சநேயரும் அமர்ந்த நிலையில் வணங்கிக் கொண்டியிருக்கிறார்கள்.
இந்த அரங்கநாதர் திருமேனி முழுதும் சாளக்ராம கற்களால் வடித்த சுதை விக்ரஹம் என்பதால் அபிஷேகம் இல்லை. ஆண்டுக்கு ஒரு முறை தைலகாப்பு மட்டும் சாத்தப்படும். அருகில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஸமேத ரங்கநாதர் உற்சவ விக்ரகங்கள் உள்ளன. இங்கு உற்சவருக்கே அபிஷேகம் செய்யப்படுகிறது.
கருவரைக்கு வெளியே ஸ்ரீ மணவாள மாமுனிகள், விஷவக்சேனர், பன்னிரு ஆழ்வார்கள், ஸ்ரீ வேதாந்த தேசிகன், ஸ்ரீ இராமாநுஜர் மற்றும் ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி ஆகியோரின் திருவுருவச் சிலைகள் உள்ளன.
வெளி பிரகாரத்தில் முதலில் ஸ்ரீ ரங்கநாயகி தாயார் சந்நிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அடுத்ததாக சக்கரத்தாழ்வார் சந்நிதி இருக்கிறது. அதற்கு அடுத்து இந்த கோயிலின் மிக பழைமையான புற்றுக்கோயில் உள்ளது. உள்ளூர் பக்தர்கள் அடிக்கடி வந்து பால் ஊற்றுகிறார்கள். பிறகு தனிச் சந்நிதியில் ஆண்டாள் அருள் புரிந்த நிலையில் உள்ளார்.
பெருமாளின் திருவடிக்கு நேராக சுவற்றின் வெளிப்புறத்தில் பெருமாளின் திருவடிகளை பக்தர்கள் கைகளில் தொட்டு கும்பிடுவதற்கு வசதியாகப் பொறிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீ ஆண்டாள் ஸந்நிதிக்கு நேராக கிழக்கில் பக்தஆஞ்சநேயர் ஸந்நிதி உள்ளது.
இங்கு ஸ்தல விருக்ஷமாக பாரிஜாத மரம் உள்ளது. கோயிலில் பாரிஜாதம் பூத்து குலுங்குவதால் எங்கும் பாரிஜாத நறுமணம் வீசுகின்றது.

தரிசன பலன்கள்:
இந்த ஸ்ரீரங்கநாத பெருமாளை அமாவாசை நாளன்றும், இதைத்தவிர வெள்ளிக்கிழமை, சனிக்கிழமைகளில் தொடர்ந்து 7 மற்றும் 11 வாரங்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், பணக் கஷ்டம் நீங்கும், திருமண தடை விலகும். குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு கிடைக்கும். நினைத்த காரியங்கள் நினைவேறும் என்பது ஐதீகம்.
இந்த ஆலயத்தை சுக்ர ஓரையில் வழிபடுவது மிகவும் விசேஷம்.
கோயில் விஷேச நாள்கள்:
இங்கு வைகுண்ட ஏகாதசி, தமிழ்ப்புத்தாண்டு மற்றும் மார்கழி மாத உற்சவம் போன்றவை சிறப்பாக நடைபெறுகிறது.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
தினமும் காலை : 07.00 மணி முதல் 11.00 மணி வரை
மாலை: 4.30 மணி முதல் 7.00 மணி வரை திறந்திருக்கும்..
மேலும் விபரங்களுக்கு:
ஶ்ரீ கோபிநாத் ராஜு – 09087475282
கோயிலுக்கு செல்லும் வழி:
மீஞ்சூர் இரயில் நிலையம் மார்க்கமாக:
சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து (எம்.ஜி.ஆர்.ரயில் நிலையம்) வடக்கே செல்லும் மார்க்கத்தில் 27 கி.மீ தொலைவில் உள்ளது. கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் இரயிலில் சென்று மீஞ்சூர் ரயில் நிலையம் அடையலாம்.
மீஞ்சூர் ரயில் நிலையத்திலிருந்து தேவதானம் 6 கி.மீ . தூரத்தில் உள்ளது.
மீஞ்சூர் ரயில் நிலையத்தில் ஷேர்ஆட்டோவில் செல்லலாம்.
பஸ் மூலம் செல்வதற்கு:
கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து மீஞ்சூர் செல்வதற்கு டவுன் பஸ் மற்றும் ரூட் பஸ்கள் உள்ளது.
மீஞ்சூர் பஸ் நிலையத்திலிருந்து தேவதானம் 7.5 கி.மீ . தூரத்தில் உள்ளது.
சென்னையிலிருந்து காரில் 1 மணி 30 நிமிட நேரத்தில் செல்லலாம்.
நினைத்த காரியங்களை நிறைவேற்றும் தேவதானம் ஸ்ரீ அரங்கநாத பெருமானை தரிசிப்போம் நல்ல பலன்களை பெறுவோம்.
Comments
Post a Comment