ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் அரசர் கோயில் “ஶ்ரீபெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள்” திருக்கோயில். ஆரூர் சுந்தரசேகர்.

 ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் அரசர் கோயில் “ஶ்ரீபெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள்” திருக்கோயில்.

ஆரூர் சுந்தரசேகர். 

20210118165850724.jpeg


நமது நாட்டில் எண்ணற்ற கோயில்கள் இருக்கின்றன. எவ்வளவோ கோயில்கள் இருந்தும் அதிகம் அறியப்படாத கோயில்கள் பல உள்ளன. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில் அமைந்துள்ள ஶ்ரீபெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் அருள்பாலிக்கும் அரசர்கோவிலும் அதில் ஒன்று.

இக்கோயில் சுமார் 1500 - 2000 ஆண்டுகள் பழமையான கோயில் ஆகும். இப்போது புதுப்பொலிவுடன் காட்சி தருகிறது .

இக்கோயிலில் இராஜ இராஜேஸ்வரிக்கும், மகா காளிக்கும் தாய், தந்தைக்குரிய அம்சத்துடன் ஶ்ரீபெருந்தேவி தாயாரும் வரதராஜ பெருமாளும் இருப்பதாக ஐதீகம்.

இங்கு ஶ்ரீபெருந்தேவி தாயார் மிகவும் விசேஷமானவர். இங்கு தாயாருக்கு ஆசனமாக சக்தி பீடம், சரஸ்வதி பீடம், சிம்ம வாகனம், ஸ்ரீயந்திரம். மஹா லெக்ஷ்மி பீடம் உள்ளது. இதன் மேல் பத்மாசனத்தில் தாயார் வலது காலில் ஆறு விரலுடன் அமர்ந்து இருக்கின்றார். மற்றுமொரு ஒரு அற்புதமான விஷயம், இவர் முழு சந்திர, சூரிய பிரபையோடு இங்கு மட்டும்தான் காட்சி அளிக்கின்றார். இவர் அறுபது லட்சுமிகளையும் அங்கமாக கொண்டவர்.

இவர் தன்னை வணங்குபவர்களுக்கு வாழ்நாள் வெற்றியை தரக்கூடியவர், இங்கு வந்து வணங்குபவர்களுக்கு வீடு, கல்யாணம், குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும்.


ஸ்தல புராணம்: 

சுக்கிரனின் பிரார்த்தனை ஸ்தலம்

தாயார் காலில் உள்ள ஆறாவது விரல் சுக்கிரன். இந்த தாயார் சுக்ரனையே தனது ஆணைக்குட்பட்டு செயல் பட வைக்கும் தன ஆகர்ஷண லக்ஷ்மியாக அருள் பாலிக்கிறாள். பிரதி வெள்ளிக்கிழமை சுக்கிரன் இங்கே வந்து தாயாரை வழிபடுகிறார் என்பது ஐதீகம்.

குபேரன் பூஜை செய்த ஸ்தலம்

குபேரன் இராவணனுடன் போர் செய்து செல்வத்தை இழந்தும், கண் பார்வை இழந்த போது, இந்த ஸ்தலத்திற்கு வந்து ஐப்பசி மாத அமாவாசையில் இருந்து, பஞ்சமி திதி வரை ஒவ்வொரு நாளும், லட்சுமிக்கு குபேரன் பூஜை பண்ணியதால், பெருந்தேவி தாயாரும் வரதராஜ பெருமாளும் குபேரனுக்கு கண் பார்வையையும், இழந்த செல்வத்தையும் கொடுத்து குபேரபுரியை உருவாக்கி கொடுத்தார்கள்.

அக்ஷய திருதியை உருவான ஸ்தலம் 

பார்வதி பரமேஸ்வரர் திருக்கல்யாணத்தின் போது பிரம்மனின் ஒரு தலையை சிவபெருமான் கொய்ததால் அங்ககீனம் ஏற்பட்ட பிரம்ம தேவரால் படைக்கும் தொழிலை செய்ய முடியவில்லை, அதனால் இங்கு வந்து பூஜை செய்து சித்திரை மாதம் திருதியை அன்று அக்ஷயா என்ற வார்த்தை சொல்லி பாப விமோர்சனம் பெற்ற ஸ்தலம் இது. சித்திரை மாதம் திருதியை அன்று அக்ஷயா என்ற வார்த்தை சொல்லி பாவ விமோர்சனம் பெற்றதால் அக்ஷய திருதியை இத்தலத்தில் தான் உருவாயிற்று.

புதன், சனி பகவான் மோட்ச ஸ்தலம்

சனி பகவான் இங்கு பூஜை செய்து, மோட்சம் அடைந்த ஸ்தலம். அதேபோல் புதனும் இங்கே பெருமாளை வணங்கி மோட்சம் அடைந்ததாக ஐதீகம்.

சீதா பிராட்டியார் வரமாக கிடைத்த ஸ்தலம்

புனித யாத்திரை சென்று கொண்டிருந்த ஜனக மகாராஜா இத்தலத்து பெருமாளையும் தாயாரையும் தரிசித்து பூஜித்ததாகவும், ஜனகர் இங்கு பூஜை பண்ணியதால் அவருக்கு சீதா பிராட்டியார் வரமாக கிடைத்ததாகவும் ஐதீகம்.

அகத்தியர் வழிபட்ட ஸ்தலம்

அகத்தியர் இந்த கோயிலுக்கு வந்து நிறைய பரிகாரங்கள், பூஜைகள் பற்றி நிறைய சொல்லி இருக்கிறார். அதன்படி செய்தால், சௌக்கியமாக, சந்தோஷமாக வாழ வழி வகுக்கும். உலகத்திலேயே அபூர்வமான நிறைய விஷயங்கள் உள்ள கோவில் இது.

அரசா்கோயில் கல்வெட்டுகள்:

அரசா்கோயில் ஶ்ரீவரதராஜப் பெருமானின் புராதனப் பெருமைகளை எடுத்துரைக்கும் ஆறு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மூன்றாம் ராஜராஜன், சுந்தர பாண்டியன், விஜயநகர பேரரசர்கள், ஜடாவர்மன், ஆகியோர் கோயிலுக்கு திருப்பணி செய்ததை கல்வெட்டுக்கள் தெரிவிப்பது மட்டுமல்லாமல் தொன்மையையும் வெளிப்படுத்துகின்றன. கல்வெட்டுகளில் இத்தலம் “திருவரசூா் எம்பெருமான் கோயில்” எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.

கோவிலின் வடமேற்கே தென்புறச் சுவரில் காணப்படும் மூன்றாம் ராஜராஜனின் கல்வெட்டு (கி.பி.1237), வடபுறச் சுவரில் காணப்படும் கல்வெட்டு, தென்புறச் சுவரில் காணப்படும் முதலாம் சுந்தர பாண்டியனின் (கி.பி. 1259) கல்வெட்டு, வடமேற்குச் சுவரில் அமைந்துள்ள இரண்டாம் சுந்தர பாண்டியனின் (கி.பி. 1291) கல்வெட்டு, படைவீடைத் தலைநகராகக் கொண்ட ராஜ நாராயண சம்புவராயர் (கி.பி. 1352) கல்வெட்டு, ஆஞ்சநேயர் கோவிலில் அமைந்துள்ள விஜயநகர பேரரசர் கல்வெட்டு போன்றவை இத்தலத்தின் தொன்மையை வெளிப்படுத்துகின்றன.

இந்தக் கல்வெட்டுகளின் வாயிலாக நிலக்கொடை, பசுதானம், வரிவிலக்கு என பல்வேறு செய்திகளை அறிய முடிகிறது. இதன்மூலம் இந்தத் திருக்கோவில், மன்னர்கள் காலத்திலேயே முக்கியத்துவம் பெற்ற திருக்கோவிலாகத் திகழ்ந்ததையும் அறிய முடிகிறது. மூன்றாம் ராஜராஜன் காலத்தில் சிறப்புற்று இருந்த இந்த கோயில், பின்னர் பழுதடைந்து மூன்றாம் ராஜ நாராயண சம்புவராயனின் ஆட்சி காலத்தில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு புனரமைப்பு செய்யப்பட்டிருக்கிறது.

20210118171340283.jpeg

ஸ்தல அமைப்பு: 

இத்திருக்கோயில் பாலாற்றங்கரையில் “அரசா் கோயில்” என்னும் கிராமத்தில் ராஜகோபுரம் இல்லாமல் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கோயில் முகப்பைக் கடந்து உள்ளே சென்றால் பலி பீடம், கொடி மரத்துக்கான மேடையும் காணப்படுகிறது. அடுத்து, கருடாழ்வார் சன்னிதி, கிழக்கு முகமாய் காணப் படுகிறது. கருடாழ்வார் சன்னிதியின் எதிரே 24 தூண்கள் கொண்ட அழகிய மகா மண்டபம் ஒன்று உள்ளது. கருவரையில் பிரளவ கோஷ விமானத்தில் வரதராஜர் உபய நாச்சியாருடன் சேவை சாதிக்கிற திருக்கோலம் காணப்படுகிறது. இங்கே கருவறையிலே இரண்டு பெருமாள்கள் உள்ளனர். ஒருவர் மேற்கு நோக்கி இருப்பார், மேற்கு முகமாக இருக்கிற பெருமாளுடைய திருக்கையிலே கமலத்தோட வரத ஹஸ்தத்துடன் திருக்காட்சி தருகிறார். பெருமாளுக்கு ரெண்டு பக்கமும் உபய நாச்சியார் (ஸ்ரீதேவி, பூதேவி) இருக்கின்றனர். ஆனால் இங்கே மூவரையும் ஒன்றாக பார்க்க முடியாது. தலையை வலது பக்கம் சாய்ந்து பார்த்தால் பெருமாளோட ஸ்ரீதேவி தெரிவார்கள். இடது பக்கம் சாய்ந்து பார்த்தால் பெருமாளோட பூதேவி தெரிவார்கள். நேராக பெருமாளைப் பார்தால் பெருமாள் மட்டும் தெரிவார். இன்னொரு பெருமாள் கிழக்கு நோக்கி இருப்பார். இந்த பெருமாளை நாம் பன்னிரெண்டு வருஷத்துக்கு ஒருமுறைதான் தரிசிக்க முடியும்.

வெளி பிரகாரத்தில் இடதுபுறம் வாஸ்து விமானத்தில் கிழக்குநோக்கிய ஆண்டாள் சந்நிதி, வலதுபுறம் சுக்கிர விமானத்தில் கிழக்கு நோக்கிய பெருந்தேவி தாயார் சந்நிதி இருக்கின்றன.

வலது புறம் தாயார் தனிக் கோயில் கொண்டு அருள்கிறார். இத்தல சம்பிரதாயப்படி முதலில் தாயாரையே தரிசிக்க வேண்டும். கிழக்குப் பார்த்த சந்நிதி. தனிக் கோயில் போல் அழகாகக் காட்சி தருகிறது. சந்நிதிக்குள் நுழைந்து தாயாரை தரிசிக்கும் முன் ஓர் இசை மண்டபம். இங்குள்ள தூண்கள் ஒவ்வொன்றையும், விரலால் சுண்டினால் இசை எழும்புகிறது. மிகுந்த கலை நயத்துடன் இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. தவிர, இங்குள்ள ஒரு சிறு துளையில் குச்சி ஒன்றை உள்ளே செருகினால், மறுபக்கம் வெளி வரும்போது குச்சி நான்கு பாகங்களாகப் பிளந்து வருகிறது. இது நான்கு வேதங்களைக் குறிக்கும் அம்சம் ஆகும். தாயார் கருவறை மண்டபத்துக்கு வெளியே வலப் பக்கம் அக்ஷய பாத்திர கணபதி தரிசனம் தருகிறார். ஶ்ரீபெருந்தேவி தாயார் சந்நிதிக்கு வெளியில் இடப்புறம் தலையில் பலாப்பழம் ஏந்திய பலாப்பழ சித்தர் ஒருவரின் சிற்பம் உள்ளது. இந்த தாயாருக்கு பலாப்பழம் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் அந்த சித்தர் தினமும் அதனை அன்னைக்கு நைவேத்தியம் செய்வாராம். இப்போதும் அபிஷேக காலங்களில், சில சந்தர்ப்பங்களில் பலாப் பழத்தால் அபிஷேகம் செய்து பின் பக்தர்களுக்கு பிரசாதமாக தருகிறார்கள்.

இங்கு ஶ்ரீபெருந்தேவி தாயார் மேலிரு கரங்கள் தாமரை மலர்களை ஏந்தியிருக்க, கீழிரு கரங்கள் அபய-வரத முத்திரைகள் காட்ட பத்மாசனத்தில் பரப்ரம்ம ஸ்வரூபிணியாக அமர்ந்திருக்கிறார். இடது கரத்துக்குக் கீழே வலது பாதம் பத்மாசனமாக மடித்து வைத்த நிலையில் இருக்கிறது. வலது பாதத்தில் சுண்டு விரலை அடுத்து அழகான ஆறாவது விரல் உள்ளது. இது ஒரு அபூர்வ அமைப்பாகும். இந்த ஆறுவிரல்கள் உள்ள பாதத்தை தரிசிப்பவர்களுக்கு ஶ்ரீபெருந்தேவி தாயார் வாழ்க்கையில் எல்லா வசதிகளையும் தருகிறார் என்பது ஐதீகம். தாயாரின் கருவறை கோஷ்டங்களில் யோகநரசிம்மமூர்த்தி, குபேரன், காளிங்கநர்த்தன கண்ணன், பரமபதநாதர், திரிவிக்ரமர் ஆகிய பெருமாளின் அம்சங்களே தேவிக்கு காவலாக வீற்றருள்புரிகின்றனர். இந்த மூர்த்திகள், திருப்பணி செய்ய பூமியை தோண்டியபோது கிடைத்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து பெருமாள் தரிசனம். மூலவர் விக்கிரகங்களுக்கு முன்னால் உற்சவர் விக்கிரகங்கள். ஶ்ரீதேவி- பூதேவி சமேத வரதராஜ பெருமாள் மற்றும் ஶ்ரீபெருந்தேவி தாயார் திருமேனிகள் உள்ளன. மூலவரைப் போலவே உற்சவர் பெருமாளின் விரல் இடுக்கிலும் ஒரு தாமரை மொட்டு, தாயாரின் உற்சவ விக்கிரகத்தில் வலது கை, சிறப்பான நயத்துடன் காட்சியளிக்கிறது. அதாவது சுண்டு விரலின் கீழ் மேட்டில் சக்கரம்; மோதிர விரலுக்குக் கீழ் அதிர்ஷ்ட மேடு; மணிக்கட்டு- உள்ளங்கையில் துவங்கி நடுவிரல் நுனி வரை பயணிக்கும் மூல சக்தி ரேகை. சுட்டு விரலின் கீழ் சக்கரம். கட்டை விரலின் கீழே உள்ள மேட்டில் அருகம்புல். எதிரே சூலம். இத்தனை சக்திகளும் ஒருங்கே இணைய பெற்று இந்தத் தாயார் நமக்கு அருளிக் கொண்டிருக்கிறார். பெருமாள் சன்னிதியில் விஷ்வக்சேனர், மணவாள மாமுனிகள், வேதாந்த தேசிகன் ஆகியோர் உற்சவர் கோலத்தில் இருக்கிறார்கள். கருவறையில் அழகிய லட்சுமி நரசிம்மர் உற்சவத் திருமேனியும் இருக்கிறது.

இந்த கோயில் வைகானச ஆகம கோயில்

கோயிலின் ஸ்தல விருக்ஷம் அரசமரம். 

20210118171438671.jpeg

ஸ்தல சிறப்பு: 

அரசர் கோவில் வரதராஜப் பெருமாளை, பிரம்மா தவமிருந்து வழிபட்டதால் பூலோக வைகுண்டம் என்ற சிறப்புப் பெயரை இத்தலம் பெற்றுள்ளது.

நவக்கிரகங்களில் அஷ்ட ஐஸ்வா்யங்களையும் சகல சம்பத்துக்களையும் அள்ளித்தரும் ஶ்ரீசுக்ரபகவான் இத்தலத்தில் வெள்ளிக் கிழமை தோறும் சூட்சும ரூபத்தில் எழுந்தருளி பெருமாளையும் தாயாரையும் வழிபடுவதாக ஐதீகம்.

மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் பாலாறு, அரசர் கோயில் ஸ்தலத்தில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்லும் அதிசயம் கொண்டதாக அமைந்துள்ளது. இது தட்சிண பிரவாகம் என்று அழைக்கப்படுகிறது. எனவே இந்த கோவிலில் நடத்தபெறும் பித்ரு தோஷ பரிகார பூஜையில் கலந்து கொண்டால், நம்முடைய பித்ரு தோஷம் விலகி, பித்ருக்களின் ஆசியை நாம் பெறலாம்.

இந்த கோவிலின் தாயார் சந்நிதி கோமுகத்திற்கு தொடர்ந்து ஆறு வெள்ளிகிழமைகளில் சுக்கிர ஓரையில் ( காலை 6 மணி முதல் 7 மணிக்குள்) தூய நீரால் சுத்தம் செய்து, மஞ்சள் தடவி, குங்குமம், பூ, வெற்றிலை பாக்கு பழம் வைத்து எண்ணிய காரியம் நிறைவேற வேண்டி வணங்கினால் நல்ல செய்தி வரும்.

தாயார் சந்நிதியில் காணப்படும் சடாரியின் மேல் பக்கமும் தாயாரின் வலது திருவடியில் ஆறு விரல்கள் உள்ளன.

தாயார் சன்னிதியின் முன்மண்டபம் சிற்பக் கலைநயம் மிக்கதாகும். அமர்ந்த நிலையில் உள்ள சிறிய யாழிகளின் தலையில் இருந்து எண் பட்டையிலான கல்தூண்கள் ஐந்து அமைந்துள்ளன. இவற்றை பதினாறு பட்டைகள் கொண்ட தூண் ஒன்று உள்ளே நின்று இணைக்கிறது. அனைத்து தூண்களையும் இணைத்து ஒரே கல்லில் செதுக்கியுள்ள கலைநயம் போற்றத் தக்கதாகும். தாமரை இதழ்களோடு ஒவ்வொரு தூணுமே அமைந்துள்ளன. மண்டபத்தின் வலதுபுறம் உள்ள தூணின் உச்சியில் தாமரை இதழ்களில் குச்சி நுழையும் அளவிலான துளை ஒன்று காணப்படுகிறது. அதில் ஒரு சிறு ஈர்க்குச்சியை நுழைத்தால் மறுபுறம் உள்ள துளை வழியே அது நான்காகப் பிளந்து வெளிவருகிறது. இந்த அதிசயம் சிற்பியின் கைவண்ணத்தைப் பறைசாற்றுவதாகவே அமைந்துள்ளது.

சுக்கிரன் ஸ்தலம்

இங்குள்ள தாயாரை சுக்கிரன் வழிபட்டதால் இது சுக்கிரன் ஸ்தலம், சுக்கிரன் அதிர்ஷ்ட கிரகம், சுக்கிரன் வேலை வாய்ப்பு, கல்யாணம், குழந்தைகளையும், சுகபோக வாழ்க்கையும் அளிக்கக்கூடியவர். பொன், பொருள் ஆபரண சேர்க்கையை கொடுக்கக்கூடியவர். தொழிலில் முன்னேற்றத்தை கொடுக்கக்கூடியவர். எனவே ஶ்ரீ பெருந்தேவி தாயாரை வந்து வணங்கினால் சுக்கிரன் அனைத்தையும் தருவார் என்பது ஐதீகம்.

பிரார்த்தனை ஸ்தலம்: 

இங்கு பெருமாள் கையிலே கமலத்துடன் மேற்கு முகமா இருப்பது மிகவும் விசேஷம். இவர் வெற்றிகளை அள்ளி கொடுக்கக்கூடியவர். உத்தியோகத்தில் பதவி உயர்வு, தொழிலில் நல்ல முன்னேற்றம், அரசியல்வாதிகளுக்கு பெரும் பதவி, போட்டித்தேர்வு எழுதக்கூடிய மாணவ, மாணவியருக்கு அதாவது டாக்டருக்கு படிக்க, (NEET exam போன்ற), டாக்டருக்கு படித்து விட்டு மேற்படிப்பு படிக்கிறவர்கள் இந்த பெருமாளை வணங்கினால் அவர்களுக்கு மதி நுட்பத்தை அளித்து அந்த போட்டிகளில் தேர்வு கொடுக்கக்கூடியவர். இங்கு வந்து வணங்கியவர்கள் மருத்துவத்துறையில் பெரிய பதவியில் உள்ளனர்.

அக்ஷய பாத்திர கணபதி

இந்த கோயிலில் சிவபெருமான் பிரதிஷ்டை செய்த அக்ஷய பாத்திர கணபதிக்கு அக்ஷய பாத்திரத்தை ஶ்ரீபெருந்தேவி தாயார் கொடுத்ததாகவும், பின்பு அதனை சூரியனுக்கு கொடுத்ததாகவும், சூரியன் அதனை திரௌபதி கொடுத்தாக ஐதீகம். இந்த பிள்ளையாரை கோர்ட் வழக்குகளில் வெற்றி பெறுவதற்கும், வழக்கறிஞர்கள் நீதிபதிகள் ஆவதற்கும் இங்கு வந்து வழிபடுகின்றனர்.

மூலிகை கருடன்:

இங்குள்ள கருடன் மூலிகைகளால் செய்யப்பட்டவர்.இவர் நமது உடலில் ஏற்படும் நோய், நொடிகள் எல்லாவற்றையும் போக்கக் கூடியவர்

ஹரிமர்ஹட அனுமான்:

இங்குள்ள அனுமார் நவகிரகங்கள் பூஜிக்கக் கூடிய சாந்த, பக்த ஆஞ்சநேய சுவாமி. அவருக்கு மறு பெயர் ஹரிமர்ஹட அனுமான். இங்குள்ள பெருமாள் தான்அனுமனுக்கு கலியுகம் முடிந்தவுடன் மோட்சம் கொடுப்பதற்கான சிலா ரூபங்கள், அடையாளங்கள் இங்கே உள்ளன.

விசேஷமான நாட்கள்:

இங்கு வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக் கிழமைகள் விசேஷமானவை.

வெள்ளிக்கிழமை: கல்யாணம், குழந்தை பாக்கியம், வியாபார அபிவிருத்திக்கும்,

செவ்வாய்கிழமை: வீடு, வாகனம் வாங்குவதற்கும், ஞாயிற்றுக்கிழமை: செய்தொழிலில் முன்னேற்றத்திற்கும், உத்தியோகத்தில் பதவி உயர்வுக்காகவும், அரசியல்வாதிகள் வெற்றி பெறுவதற்காகவும், அரசியலில் நிலைத்து இருக்கவும் வந்து வணங்குகின்றனர்.

விசேஷமான ஹோமங்கள்:

இங்கு தாயாருக்கு ஶ்ரீசுக்த ஹோமம் ரொம்ப விசேஷம். இந்த ஹோமம் பண்ணினால் தொழில் நன்கு அபிவிருத்தி ஆகும். இதேபோல் பெருமாளுக்கு மகா சாந்தி ஹோமம். இந்த ஹோமம் பண்ணினால் சந்தோஷமும், சமாதானமும் ஏற்படும். அதே மாதிரி விஷ்ணுபதி புண்ணிய காலம், வாஸ்து ஹோமம் இந்த நாலு ஹோமமும் இங்கு மிகவும் விஷேசம்.

இத்தலத்திற்கு வந்து நம்பிக்கையோடு எம்பெருமானையும் தாயாரையும் வழிபட நன்மைகள் மேலோங்கும்.

கோயில் திருவிழாக்கள்: 

சித்திரை தமிழ்ப்புத்தாண்டு, சித்ரா பௌர்ணமி, திருஊரல் விழா, ஆனித் திருமஞ்சனம், ஆடிப் பூரம், புரட்டாசி மூன்றாம் சனி, பங்குனி உத்திரம் என விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. வரலட்சுமி விரதத்தன்று இக்கோயில் விழாக்கோலம் கொள்கிறது. இங்கு சித்ரா பௌர்ணமி பாலாற்றில் நடைபெறும் திருஊரல் திருவிழா சிறப்பாக்கொண்டாடபடுகிறது.

திருஊரல் திருவிழா: 

சித்திரையின் வெப்பத்தைத் தணிக்க, பாலாறு தன்னையும், தன்னைச் சார்ந்த மக்களையும் குளிர்விப்பதாக இவ்விழா அமைந்துள்ளது. சித்திரையில் வரும் பௌர்ணமி அன்று காலை வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியோடு, லட்சுமி நாராயணபுரம், பூதூர் வழியே ஈசூர் சென்று அங்குள்ள பாலாற்றங்கரைக்கு எழுந்தருள்வார். அங்கே பெருமாளுக்குத் திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறும். பாலாற்றில் சுமார் 100 சதுர மீட்டர் மணல் திட்டு உருவாக்கப்பட்டு, அதைச் சுற்றி 2 மீட்டர் அகலத்தில் மணலை அகழ்ந்து எடுத்து நீர் சுரக்கச் செய்வார்கள். பெருமாள் மணல் திட்டில் வீற்றிருக்க, சக்கரத்தாழ்வார் அந்த நீரில் சுற்றி வந்தபின், தீப ஆராதனைகள் காட்டப்படும். பிறகு நிலவொளி முடிந்து, விடியும் வரை அங்கேயே காட்சி தருவார். விடியலில் மீண்டும் சக்கரத்தாழ்வார் நீரில் சுற்றி வருவார். அதன்பின் தீபாராதனைகள் முடிந்து பழையபடியே, அரசர் கோவில் வந்து சேர்வார். இவ்விழாவே திருஊரல் விழா என்று அழைக்கப்படுகிறது. இந்த விழாவைக் காண பல்வேறு ஊர்களில் இருந்தும், பல்லாயிரக்கணக்கானோர் திரள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோயில் திறந்திருக்கும் நேரம்: 

தினமும் காலை : 07.30 மணி முதல் 12.00 மணி வரை

மாலை: 4.00 மணி முதல் 7.30 மணி வரை திறந்திருக்கும்..

மேலும் விபரங்களுக்கு: 

இந்த கோயில், மதுராந்தகம் ஏரிக்காத்த இராமர் கோயில் இந்து அறநிலைத்துறையில் வருவதால் நிர்வாக சம்மந்தமாக நிர்வாக அலுவலர் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.
பூஜை, பரிகாரம் சம்மந்தமாக கோயில் பட்டாச்சாரியார் அவர்களை +91 9698510956 என்ற நம்பரில் தொடர்பு கொள்ளலாம்.

கோயிலுக்கு செல்லும் வழி: 

செங்கல்பட்டிலிருந்து 27 கி.மீ தொலைவில் உள்ள படாளம் கூட்டுச் சாலையின் கிழக்கே 7 கி.மீ. தொலைவிலும், தாம்பரம் – திண்டிவனம் ரெயில் மார்க்கத்தில் படாளம் ரெயில் நிலையத்திலிருந்து 4 கி.மீ. தொலைவிலும் இந்த அரசர் கோவில் என்ற ஊர் உள்ளது.
செங்கல்பட்டிலிருந்து மாநகர பேரூந்து, தனியார் பேரூந்து வசதி உள்ளது. படாளம் கூட்ரோட்டிலிருந்து ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் உள்ளன.

பழம்பெரும் அரசர்கோயில் ஶ்ரீபெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் திருக்கோயில் சென்று தரிசனம் செய்து அனைத்து ஐஸ்வர்யங்களையும் பெறுவோம்.

Comments

Popular posts from this blog

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..

உண்மை பக்தி எது ?

ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்...