நல்ல இல்வாழ்க்கை அமைந்திட செய்யும் திருச்சத்திமுற்றம்!! ஆரூர் சுந்தரசேகர்.
நல்ல இல்வாழ்க்கை அமைந்திட செய்யும் திருச்சத்திமுற்றம்!!
ஆரூர் சுந்தரசேகர்.

எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் அதை தீர்த்து வைப்பதற்கென்று தனித்துவம் வாய்ந்த கோயில்கள் ஒவ்வொன்றுக்கும் இருக்கும் போது, மனதார விரும்பியவர்களையும், விதிவசத்தால் பிரிந்தவர்களையும் ஒன்று சேர்ப்பதற்கென்றே ஒரு கோயில் தஞ்சை மாவட்டத்திலுள்ள திருச்சத்திமுற்றம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இச்சிவத்தலத்தின் மூலவர் சிவக்கொழுந்தீசர். (சக்திவனேஸ்வரர்) இவருக்கு தழுவக்குழைந்த நாதர் என்ற பெயரும் உண்டு. அம்பாள் பெரியநாயகி அம்மன்.
இத்திருக்கோயில் திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில்இருபத்திஇரண்டாவது சிவ ஸ்தலமாகும்.
தேவாரப்பதிகம்
“வெம்மை நமன்தமர் மிக்குவிரவி விழுப்பதன்முன் இம்மைஉன் தாள்என்றன் நெஞ்சத்து எழுதிவை யீங்கிகழில் அம்மை அடியேற்கு அருளுதி என்பதிங்கு யாரறிவார் செம்மை தருசத்தி முற்றத்து உறையுஞ் சிவக்கொழுந்தே”. -திருநாவுக்கரசர்
வள்ளலார் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "ஓவாது சித்தம் உற்ற யோகம் செழும்பொழிலில் பூவை செயும் சத்திமுற்றம் மேவும் சதாசிவமே" என்று போற்றி உள்ளார்.
புகழ்பெற்ற திருப்புகழை பாடிய அருணகிரிநாதர் இந்த கோவிலின் முருகனைப் புகழ்ந்து பாடல்களைப் பாடியுள்ளார்.
இங்கு உமையவள் எம்பெருமானை தழுவி முத்தமிட்டார் என்கிறது ஸ்தல புராணம். சக்தி முத்தமிட்ட தலம் ஆதலால் `திருச்சக்திமுத்தம்' அல்லது `திருச்சத்திமுற்றம்' எனப்படுகிறது. அம்பாளும், சிவபெருமாளும் ஆலிங்கனம் செய்வதால் இங்கு வேண்டுதல் செய்ய, தான் விரும்பியவரையே மணமுடிப்பார்கள், பிரிந்த கணவன், மனைவி சேர்வார்கள் என்பது ஐதீகம். இக்கோயில் கருத்தொற்றுமைக்கான பரிகாரத் தலமாகும்.
காதல் என்பது ஒருவரை ஒருவர் நேசிப்பது, விரும்புவது. அன்பு செலுத்துவது. பிரியம் வைப்பது. பாசம் வைப்பது. இதற்கு பெயர்தான் காதல் என நம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் வருவது மட்டும் காதல் இல்லை. தாய் பிள்ளைகளிடம் வைக்கும் பாசம். சகோதரன் சகோதரியிடம் வைக்கும் பிரியம். ஒருவன் ஆண் அல்லது பெண் நண்பரிடம் வைக்கும் நேசம், ஒரு ஆண் ஒரு பெண்ணை மனதார விரும்புவது இப்படிப்பட்ட எல்லாமே காதல் தான். பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே பாசம் இல்லாமல் தவிப்பவர்களும், சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் இடையே பிரியம் இல்லாமல் வருத்தப்படுவர்களும். நண்பர்களுக்கிடையே நேசம் இல்லாமல் கவலைப்படுபவர்களும், ஒற்றுமையில்லையே என நினைப்பவர்களும் சென்று வழிபட வேண்டிய கோயில் ஆகும்
ஒற்றைக் காலை தரையில் ஊன்றி மற்றொரு பாதத்தை ஆவுடையார் மீது மடக்கி வைத்தபடி அதேசமயம் சிவபெருமான் திருமேனி மீது, பாதம் படாமல் கட்டியணைத்தபடி திருக்கோலம் பூண்டிருக்கிறார் அம்பாள். அன்னையும் இறைவனும் காதலோடு தழுவியபடி காட்சியளிப்பதால் இங்கு வேண்டுதல் செய்யக் காதல் கைகூடும். பிரிந்த கணவன், மனைவி இணைவர் என்பது ஐதீகம்.

ஸ்தல புராணம்:
ஒருமுறை பார்வதிதேவி பூலோகத்தில் இத்தலத்திற்கு வந்து காவிரிக்கரையில் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து ஈசனை நினைத்து தவம் இருந்தார். சிவபெருமான் அன்னையை சோதிக்க காவிரியில் வெள்ளம் வருமாறு செய்தார். அப்போது வெள்ளம் லிங்கத்தை அடித்துச் சென்று விடாமல் இறுகத் தழுவினார். பின்பு இத்தலத்திலேயே சிவபெருமானை நோக்கி ஒற்றைக்காலில் நின்று கடும் தவம் மேற்கொண்டார்.
அம்பிகையை மேலும் சோதிக்கும் வகையில் ஜோதி ரூபனாக, தீப்பிழம்பாக சிவபெருமான் காட்சி தந்தார். தீப்பிழம்பாக எழுந்து நிற்பது ஈசனே என்று உணர்ந்த அம்பிகை மகிழ்ந்து, ஈசனே ஜோதி, ஜோதியே சிவம் என்று தீப்பிழம்பையே தழுவி ஆனந்தப்பட்டார். உடனே ஈசன் மகிழ்ந்து அன்னைக்கு அருள் பாலித்து, தன்னுடன் சேர்த்துக் கொண்டார். இத்தலத்தில் அம்பாள் தழுவி முத்தமிட்டதாக ஸ்தல புராணம் கூறுகின்றது, உமையாள் தழுவி முத்தமிட்டதால் “சக்தி முத்தம்” என்பது பிற்காலத்தில் மருவி “சத்திமுற்றம்” என்று ஆகி உள்ளது. குடும்பத்தில் பிரச்னைகள் நெருப்பென தாக்கினாலும், அதை தம்பதியர் தங்கள் மானசீக அன்பினால் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையே இத்தல வரலாறு அறிவுறுத்துகின்றது. மூலவர் சிவக்கொழுந்தீசர் கருவறையின் நுழைவு வாயிலின் வ்லதுபுறம் அம்பிகை சிவனை தழுவியபடி காட்சி கொடுக்கும் சந்நிதி உள்ளது. அதன் பின்னாலேயே அம்பாள் ஒற்றைக் காலில் தவம் இருந்த இத்திருக்கோலத்தை வேறெந்த ஆலயத்திலும் காண முடியாத சிறப்பாகும்.

ஸ்தல அமைப்பு:
இத்திருக்கோயில் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை இராஜகோபுரத்துடன், இரண்டு பிராகாரங்களுடன் அமைந்துள்ளது. கோபுர வாயிலில் வல்லப கணபதி அருளுகின்றார். முதல் கோபுர வாயிலைக் கடந்தால் பெரிய வெளிப் பிரகாரத்தைக் காணலாம். கொடிமரம், பலிபீடம், நந்திஸ்வரரை கடந்து சென்றால் இரண்டாங் கோபுர வாயிலில் விநாயகர் முருகன் சந்நிதிகள் உள்ளன. மூலவர் சிவக்கொழுந்தீசர் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி கருவறையில் மிகப்பெரிய சிவலிங்கத் திருமேனியாக
காட்சி கொடுக்கிறார். அவரது திருமேனியில், நன்றாகப் பார்க்கும் வண்ணம் மூன்று தீச்சுடர்கள் புடைத்துத் தெரிகின்றன. கருவறை பிரகாரத்தில் கருவறையைச் சுற்றிலும் அருகிலுள்ள கோஷ்டத்திலும் விநாயகர், நடராஜர், அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, சண்டிகேஸ்வரர், ஆறு திருமுகமும், பன்னிரு திருக்கரங்களும் கொண்ட முருகர் வள்ளி, தெய்வானை சமேதராய் மயில் மீது அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார், மற்றும் கஜலெட்சுமி, மூன்று லிங்கங்கள் காணப்படுகின்றன.
மூலவர் சிவக்கொழுந்தீசர் கருவறையின் நுழைவாயிலின் வலதுபுறம் அம்பாள் சிவனை தழுவிய கோலத்தில் ஒரு சந்நிதி உள்ளது. அம்பாள் ஒற்றைக் காலைத் தரையில் ஊன்றி, மற்றொரு காலை ஆவுடையாரின் மீது மடக்கி வைத்து, தன் இரு கைகளாலும் சிவலிங்கத்தைத் தழுவி நிற்கும் இத்திருக்கோலம் வேறெந்த ஆலயத்திலும் காண முடியாத சிறப்பாகும். முன்மண்டபத்தில் அப்பர், ஞானசம்பந்தர், பைரவர், சந்திரன், சூரியன், நாகர்கள் உள்ளனர். பெரியநாயகி அம்மன் சன்னதி கருவறையின் இடப்புறம் தெற்கு நோக்கி தனி சந்நிதியாக அமைந்துள்ளது.
ஸ்தல தீர்த்தம்:
இத்தலத்திற்கு சூல தீர்த்தம், பாற்குளம் என இரு தீர்த்தங்கள் அமைந்துள்ளன. கோயிலுக்கு வெளியே உள்ள சூலதீர்த்தம் மிகவும் விசேஷமானது. இது சூரிய புஷ்கரணி என்றும் அழைக்கப்படுகிறது. இதில் நீராடினால் சகல தோஷங்களும் நீங்கும். அருகில் உள்ள அரிச்சந்திரபுரம் என்னும் ஊரில் உள்ள பாற்குளத்தில் ரதசப்தமி அன்று தீர்த்தவாரி விழா நடைபெறும்.
ஸ்தல சிறப்புகள்:
இங்கு பார்வதி, அகத்தியர், ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர், ராமலிங்க அடிகள் ஆகியோர் வழிபட்டுள்ளனர். திருநாவுக்கரசருக்கு இறைவன் தன் திருவடி தரிசனம் தந்த ஸ்தலம். திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு அடியார்களுடன் வந்தபோது வெயில் அதிகமாக இருந்ததால், அவருக்கு முத்துப்பந்தல் அமைத்து அழைத்து வருக என்று சிவபெருமானே கட்டளையிட்ட சிறப்புடைய தலம்.
இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. செங்கற்களால் கட்டப்பட்டிருந்த இக்கோவிலை கற்கோவிலாக மாற்றியவர் சோழ வம்சத்தைச் சேர்ந்த செம்பியன் மாதேவி ஆவார். முதலாம் ராஜராஜ சோழன் காலத்திலும் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. முதலாம் ராஜராஜ சோழன், மூன்றாம் குலோத்துங்க சோழன் மற்றும் விஜயநகர அரசர்கள் காலத்திய கல்வெட்டுகள் இக்கோயிலில் காணப்படுகின்றன.
நாராய்! நாராய்! செங்கால் நாராய்!" என்று நாரைவிடு தூது பாடிய சத்திமுற்றுப்புலவர் இவ்வூரைச் சேர்ந்தவர்.
பிரார்த்தனை ஸ்தலம்:
இத்தலம் திருமணத் தடை நீக்கும் பரிகார ஸ்தலமாகும்.
சக்தி தழுவிய ஈசனை திருமணமாகாத ஆண்களும், பெண்களும் திங்கள்கிழமைகளில் வந்து வணங்கினால் தோஷங்களும், தடைகளும் நீங்கி விரும்பியவர்களுடன் இல்வாழ்க்கை அமையும். கணவன் மனைவி உறவு பலப்படவும், விதிவசத்தால் பிரிந்து போன தம்பதியரும் இங்கு வந்து வணங்கினால் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. குழந்தை பிறப்பு மற்றும் முந்தைய ஜன்ம பாவங்களிலிருந்து விடுபட பக்தர்களும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
மேலும், அமாவாசை, பௌர்ணமி காலங்களில் வழிபடுவது அதிக பலன்களைக் கொடுக்கும். மேற்கண்ட பிரார்த்தனை நிறைவேறியதும் பக்தர்கள் சக்திவனேஸ்வருக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரங்களை சாற்றுகின்றனர்
கோயில் விழாக்கள்:
சிவாலயத்தின் அனைத்து விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
தை மாதம் ரத சப்தமி, ஆனி முதல் நாளில் திருஞானசம்பந்தர் முத்து பந்தல், ஆனி திருமஞ்சனம், ஆடிப் பூரம், ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி, புராட்டசி மாதம் நவராத்திரி
ஐப்பசி மாதம் ஸ்கந்த ஷஷ்டி மற்றும் அன்னாபிஷேகம், திருகார்த்திகை, மார்கழி திருவாதிரை மற்றும் மாசி சிவராத்திரி ஆகியவை கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்கள். இதைதவிர கார்த்திகை சோம வாரம் (திங்கள்), பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி ஆகியவையும் தவறாமல் கடைபிடிக்கப்படுகின்றன. கோயிலில் பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகளும், ஆலய வலமும் நடைபெறுகின்றன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை : 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை: 4.00 மணி முதல் 8.00 மணி வரை திறந்திருக்கும்
மேலும் விபரங்களுக்கு:
திரு. முத்துகிருஷ்ணன் - +91 9345043455, +91 9443678575
கோயிலுக்கு செல்லும் வழி:
கும்பகோணத்திற்கு தென்மேற்கே 8 கி.மீ. தொலைவிலும், தாராசுரத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பட்டீஸ்வரம் கோவிலுக்கு மிக அருகில் இக்கோவில் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து டவுன் பேருந்துகள் செல்கின்றன. மேலும், கும்பகோணம் மற்றும் தாராசுரத்திலிருந்து இருந்து மினி பஸ்கள் கிடைக்கின்றன.
திருச்சத்திமுற்றம் சக்தி தழுவிய ஈசனை தரிசித்து அனைத்து வளங்களையும் பெற்று வாழ்வோமாக!
Comments
Post a Comment