கரும்பு போல் வாழ்க்கை இனிக்க கரும்பாயிரம் பிள்ளையாரை தரிசிப்போம்!!
கரும்பு போல் வாழ்க்கை இனிக்க கரும்பாயிரம் பிள்ளையாரை தரிசிப்போம்!!
ஆரூர் சுந்தரசேகர்.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் -கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா .
- ஔவையார் அருளிய விநாயகர் அகவல்
கோவில் நகரம், கலைகளின் நகரம் என்றெல்லாம் அழைக்கப்படும் கோயில்கள் நிறைந்த கும்பகோணத்தில் கரும்பாயிரம் பிள்ளையார் குறிப்பிடத்தக்கவர். கும்பகோணம் நகரத்தின் மூத்த பிள்ளையாராக கரும்பாயிரம் பிள்ளையார் கருதப்படுகிறார்.
இக்கோயில் கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதியில் ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு வடமேற்கு திசையில் வராஹ தீர்த்தக் கரையில் அமர்ந்து கரும்பாயிரம் பிள்ளையார் அருள்பாலிக்கின்றார். முன்னொரு காலத்தில் வராஹப் பிள்ளையார் என்றும் இப்போது கரும்பாயிரம் பிள்ளையார் என்றும் அழைக்கப்படுகின்றார்
தற்போது இந்தக் கோயில் புதுப்பொலிவோடு திகழ்கின்றது.
கும்பகோணத்திற்கு வந்து செல்லும் பக்தர்களும் இக்கோயிலின் பெருமையையும், அருள் வளமையையும் கேள்வியுற்று தரிசித்துச் செல்கின்றனர்.
இந்த பிள்ளையார் கோயிலில் ஆகம விதிகளின் படி, வேதம் முழங்கிட நாள் தவறாது வழிபாடுகள் நடக்கின்றன. இந்த பிள்ளையாரை வணங்கி வந்தால் தீராத வினைகளும் நிச்சயம் தீரும். வெற்றி மேல் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.
அதே போல இந்த கோயிலில் செய்யும் சேவை சிறு புல் அளவாக இருந்தாலும் சரி, வண்டி வண்டியாக திருப்பிக் கொட்டிக் கொடுத்து விடுவார். கரும்பாயிரம் பிள்ளையார் உலகோர் அனைவருக்கும் நல்வாழ்வு அளித்து பக்தர்களின் வாழ்வை அடிக்கரும்பு இனிப்பாக மாற்றிடுவார்
ஸ்தல வரலாறு:
கும்பகோணத்திற்கு ஆதியில் வராஹபுரி என்று பெயர் இருந்தது. ஒரு சமயம் ஹிரண்யாட்சகன் என்ற அசுரன் பூமாதேவியை பாதாள உலகத்துக்குக் கொண்டு சென்றுவிட்டான். அப்போது மகாவிஷ்ணுவானவர் வராஹ அவதாரம் எடுத்து செல்வதற்கு முன் கும்பேஸ்வரர் கோவிலுக்கு வடக்கில் ‘பூவராஹ தீர்த்தம்’ என்னும் குளத்தை அமைத்து அதன் கரையில் பிள்ளையாரை பிரதிஷ்டை செய்து தீர்த்ததில் நீராடி பிள்ளையாரை வேண்டிக் கொண்ட பிறகே பூமாதேவியை ஹிரண்யாட்சனிடமிருந்து மீட்டார். அதனால் இந்தப் பிள்ளையார் வராஹப் பிள்ளையார் என்ற திருநாமத்துடன் அழைக்கப்பட்டார் . ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு வரலாற்றுச் சம்பவம் காரணமாக, இந்த பிள்ளையார் கரும்பாயிரம் பிள்ளையார் என்று இனிமையுடன் அழைக்கப்பட்டு வருகிறார்.
கரும்பாயிரம் பிள்ளையார் பெயர் அவர் காரணம்:
ஒரு முறை கும்பேஸ்வரரை தரிசிக்க வந்த முனிவர்களுடன் ஒரு கரும்பு வியாபாரியும் ஆயிரம் கரும்புகளுடன் வராஹ தீர்த்தக் கரையில் வந்து தங்கினான். அங்கிருந்த பிள்ளையார் அந்தண பாலகனாக வேடம் கொண்டு அந்த வியாபாரியிடம் சென்று தனக்கு ஒரு கரும்பு கொடுக்கும்படி கேட்டார். ஆனால் வியாபாரி கரும்பு கொடுக்க மறுக்கவே பாலகன் ஒரு கரும்பைப் பிடித்து இழுக்க அதனால் கோபங்கொண்ட வியாபாரி, பாலகனை அடிப்பதற்குத் துரத்திக்கொண்டு செல்ல, அப்போது அந்த பாலகன் வராஹப் பிள்ளையார் கோயிலுக்குள் ஓடி மறைந்துவிட்டார். அந்த சமயத்தில் இன்னொரு ஆச்சரியமும் நிகழ்ந்தது. தித்திக்கும் சுவையுடன் இருந்த கரும்பெல்லாம் சாறற்ற சக்கையாக மாறின. இதைக் கண்ட வியாபாரி அதிர்ந்து, ‘விநாயகப் பெருமானே!’ என்று அலறினான். தன்னையறியாது கோயிலுக்குள் சென்றான். அப்போது விநாயகர், அந்த ஆயிரம் கரும்புகளுக்கும் மீண்டும் சாற்றைக் கொடுத்தார். அது முதல் அவருக்கு கரும்பாயிரம் பிள்ளையார் என்ற பெயர் ஏற்பட்டது.
“அருகரும்புத் தரும்வியப்ப அவனியொரு
கோட்டுநுனி அமைத்துத் தீயோர்
திருகரும்புக் கிடங்கொடாச் செங்கண்வரி
கமும்கிழத் தேதே யென்று
வருகரும்புட் குலமுழக்கு மலர்க்கேழற்
புனற் கோட்டார் வணிகன் பாங்கர்
ஒருகரும்புக் காயிரங்கொண் டுறுகரும்பா
யிரக்களிற்றை உளங்கொள்வோமே” - திருக்குடந்தைப்புராணம்

ஸ்தல அமைப்பு:
கோயில் சிறிதானாலும் கீர்த்தி மிக்கது. கருவரையில் கம்பீரத்துடன் கரும்பாயிரம் பிள்ளையார் அருள்பாலிக்கின்றார். அவருக்கு எதிரில் அவரது வாகனமான மூஞ்சூறு அமைந்துள்ளது.
சந்நிதிகுள் அவரது வலது புறத்தில் நவகன்னிகைகளும், இடது புறத்தில் பூரண புஷ்கலாம்பிகை சமேத ஐயனாரும் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். தென்புறத்தில் ஶ்ரீகாசி விஸ்வநாதர், ஶ்ரீகாசி விசாலாட்சி, ஶ்ரீபாலதண்டாயுதபாணி, ஶ்ரீசண்டிகேஸ்வரர், ஶ்ரீகுரு பகவான் ஆகியோர் தனி சந்நிதியிலிருந்து வேண்டியதை அருள்கின்றனர். வடகிழக்கு மூலையில் நவக்கிரக சந்நிதி அமைந்துள்ளது.
நேர்த்திக்கடன் :
பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறியதும் பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை சாற்றியும் , சிதறு காய் உடைத்தும் , கரும்பை காணிக்கையாகவும் செலுத்துகின்றனர்.
கோயில் திருவிழாக்கள்:
விநாயகர் சதுர்த்தி , சங்கடஹர சதுர்த்தி மிக சிறப்பான முறையில் நடைபெறுகின்றது.

கருப்பஞ்சோலை:
ஆண்டுதோறும் பொங்கல் விழாவின்போது பக்தர்கள் கரும்புகளை நேர்த்திக்கடனாக வழங்குவார்கள். அந்த கரும்புகளை கொண்டு கோயில் முற்றத்தில் கருப்பஞ்சோலை(கரும்பு சோலை) அமைத்து, பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கும். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்வார்கள். மறு நாள் பக்தர்களுக்கு அந்த கரும்புகளை பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கின்றனர். கரும்பு போல் வாழ்க்கை இனிக்க இந்தப் பிள்ளையாரை வணங்கி வளம் பெறலாம்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை : 5.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை: 3.00 மணி முதல் 7.00 மணி வரை திறந்திருக்கும்
கோயிலுக்கு செல்லும் வழி:
இந்த கோயில் கும்பகோணம் இரயில் நிலையத்திலிருந்தும், கும்பகோணம் பஸ் நிலையத்திலிருந்தும் சுமார் 3 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. கும்பகோணம் இந்தியாவின் பிற பகுதிகளுடன் சாலை மற்றும் இரயில் மார்க்கம் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் செல்பவர்கள் இந்தப் பிள்ளையாரை தரிசித்தால் வாழ்க்கை கரும்பு போல் இனிப்பாக மாறும் என்பது நிச்சயம்!
Comments
Post a Comment