ஆனந்தத்தை அள்ளி தரும் க்ஷேத்திரபாலபுரம் ஶ்ரீஆனந்த கால பைரவர் கோயில்.
ஆனந்தத்தை அள்ளி தரும் க்ஷேத்திரபாலபுரம் ஶ்ரீஆனந்த கால பைரவர் கோயில்.
ஆரூர் சுந்தரசேகர்.

சிவ பெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவரும்,
சனீஸ்வர பகவானுக்கு குருவாக விளங்குபவரும் பைரவர் ஆவார். பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள். பைரவ உருவங்களில் பல உண்டு என்றாலும் பிரதானமானவராகக் கருதப்படுபவர் கால பைரவர். காசியில் கால பைரவர் பிரதானமாக வணங்கப்படுகிறார்.
பைரவர் பொதுவாக எல்லா ஆலங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையிலே நாய் வாகனத்துடன் காட்சி தருவார்.
காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்வார்கள். அதேபோல ஆலயத்தின் மற்ற திருச்சந்நிதிகளை பூட்டிச் சாவியை பைரவர் பாதத்தில் வைத்து விட்டு அதன்பின் வெளிக் கதவை பூட்டிச் சாவியை எடுத்துச் செல்லும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.
சாதாரணமாக அனைத்து பைரவருக்கு பல கோயில்களில் பரிவார சன்னிதிகள் இருந்தாலும், அவருக்கென்று பழைமை வாய்ந்த தனிக்கோவில் நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கும் கும்பகோணத்துக்கும் இடையில் உள்ள குத்தாலம் தாலுக்காவில் க்ஷேத்திரபாலபுரம் எனும் சிற்றூரில் இருக்கிறது. காசியைப் போலவே கால பைரவருக்கான க்ஷேத்திரபாலபுரத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட கோயில் ஆகும்.
இந்த கோயிலில் பைரவரே பிரதான தெய்வம். அவருக்கு மட்டுமே அனைத்து முக்கிய பூஜைகளும் நடைபெறுகின்றன.
இங்கு ஆனந்த கால பைரவராக அருள்பாலிக்கிறார். அவருக்கு நாய் வாகனம் இல்லை. கரத்தில் சூலத்தை ஏந்தி, சிரித்த முகத்துடன் தாமரை மலர் மீது நின்ற கோலத்தில் ஆனந்தமாக காட்சி தருகிறார்.
ஸ்தல வரலாறு:
ஆதியில் சிவபெருமானுக்கு ஐந்து தலைகள் இருந்தன. அதே போன்று பிரம்மா தனக்கும் ஐந்து தலைகள் இருப்பதால், தானே சிறந்தவர் என்ற ஆணவம் கொண்டார். பிரம்மனின் ஆணவத்தை அடக்க எண்ணிய சிவபெருமான் பைரவரை தோற்றுவித்தார். பைரவர் பிரம்மதேவரின் ஒரு தலையைக்கொய்து, அவரிடமிருந்த அகந்தையை அகற்றினார். ஆனால், பிரம்மதேவரின் தலையைக் கொய்ததால் பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டுவிட்டது. தனது தோஷம் நீங்க அருளுமாறு சிவனிடம் வேண்டினார் பைரவர். “சிவபெருமானும் பைரவரை பூலோகத்தில் தோஷம் நீங்க பிட்க்ஷை எடுத்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்” என்றும் கூறினார். அவ்வாறு பூலோகம் சென்று பிட்க்ஷை பெற்று வருகையில் குடந்தை அருகே உள்ள திருவலஞ்சுழியில் பல ஆண்டுகளாக பைரவரை தொல்லைப்படுத்தி வந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. பின், அங்குள்ள ஸ்வேத விநாயகரை வேண்டிக் கொள்ள பைரவர் முன் விநாயகர் தோன்றினார். பைரவர் கையில் இருந்த சூலாயுதத்தை கிழக்கு திசை நோக்கி வீசும் படியும். அது விழும் இடத்தில் கோயில் கொள்ளும்படியும் விநாயகர் அருள, பைரவரும், தன் கையில் இருந்த சூலாயுதத்தை கிழக்கு நோக்கி எறிந்தார். சூலம் விழுந்த இடத்திலேயே கோயில் கொண்டார். கால பைரவர் அந்த ஸ்தலத்தின் காவலராக இருப்பதால், க்ஷேத்திரபாலகர் என அழைக்கப்பட்டார். அவரது பெயரே அந்த ஊருக்கும் ஏற்பட்டு க்ஷேத்திரபாலபுரம் என அழைக்கப்படலாயிற்று. இக்கோயில் காசிக்கும் மேலானது என்று ஸ்தல புராணம் கூறுகின்றது.
இந்த ஸ்தலத்தில் வந்து பிரம்மா, இந்திரன், நவக்கிரகங்கள் போன்றவர்கள் பூஜித்து துதித்ததாக ஐதீகம்.
பஞ்சபாண்டவர்களும் இங்கு வந்து பைரவரை பூஜித்து உள்ளார்கள்.
ஸ்தல அமைப்பு:
இந்த கோயில் மேற்கு நோக்கிய ஒரு சிறிய கோயிலானாலும் அதிக சக்தி வாய்ந்த கோயிலாகும். ஏகதள விமானத்தின் எட்டுத் திசைகளிலும் நந்திகள் அமைந்துள்ளன. மகாமண்டபத்தின் வடபுறம் ஸ்வேத விநாயகர் அருள்பாலிக்கிறார். கருவறையில் பைரவர் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றதால் ஆனந்தமாகக் காணப்படுகிறார். விரிந்த சடை மேல் நோக்கி இருக்க, நான்கு கரங்களிலும் கபாலம், சூலம், பாசம், டமருகம் தாங்கி மேற்கு திசை நோக்கி நாய் வாகனம் இல்லாமல் அருள்பாலிக்கிறார். மூலவரின் முன்னே நந்தியும், பலிபீடமும் இருக்க, மண்டபத்தின் தெற்கே அபிஷேகக் கிணறு உள்ளது. இந்த ஸ்தலத்தில் பைரவரே பிரதான தெய்வம். அவருக்கு மட்டுமே அனைத்து முக்கிய பூஜைகளும் நடைபெறுகின்றன. கணபதி, முருகன், சூலினி (செல்லியம்மன்), சாஸ்தா (ஐயப்பன்) ஆகியோருக்கு சிறு சிறு சந்நிதிகள் உள்ளன.
ஸ்தல தீர்த்த சிறப்பு:
க்ஷேத்திரபாலபுரத்தில் சூலதீர்த்தம், கணேச தீர்த்தம், காவிரி தீர்த்தம், சக்கர தீர்த்தம், ஸ்கந்ததீர்த்தம் ஆகிய ஐந்து புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. ஆலயத்தின் வடக்குப் புறத்தில் உள்ள காவிரி தீர்த்தத்தை ‘சங்கு முக தீர்த்தம்’ என்று அழைக்கிறார்கள். அதற்குக் காரணம் அது சங்கு வடிவில் அமைந்து இருக்கின்றது.
காவிரி தீர்த்தத்தில் (சங்குமுகம்) ஒருநாள் நீராடினால், காசி தீர்த்தத்தில் மூன்று நாள் நீராடிய பலன் கிட்டும் என்று தலபுராணம் கூறுகிறது. கோயிலின் இடதுபுறத்தில் உள்ள சூல தீர்த்தத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் வந்து சேரும்.
தீப வழிபாட்டு சிறப்பு:
இந்த கோயிலின் மகத்துவம் என்னவென்றால் இங்குள்ள பைரவருக்கு பாவக்காயில் எண்ணை ஊற்றி விளக்கு ஏற்றி அவரை வழிபடுவதுதான். பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இங்கு பாவக்காய் மற்றும் பூசணிக்காயில் எண்ணை ஊற்றி விளக்கேற்றி வழிபடுவது இந்த ஆலயத்தில் இருந்துதான் துவங்கி உள்ளதாகக் கூறுகிறார்கள்.
ஆனந்த கால பைரவர் தன்னை நாடி வந்து குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும், நோய் விலக வேண்டும், குழந்தை பிறக்க வேண்டும் என்ற பிரார்த்தனைகளை முன்வைத்து பாவக்காய் அல்லது பூசணிக்காயில் எண்ணை நிரப்பி தீபம் ஏற்றி வழிபடுபவர்களுக்கு வேண்டி கொண்டவாறு அருள் புரிகிறார்.
பல்வேறு இடங்களில் இருந்தும் தொடர்ந்து ஒன்பது வாரம் இந்த ஆலயத்துக்கு தமது வேண்டுகோளுடன் வந்து பாவக்காய் அல்லது பூசணிக்காயில் எண்ணை தீபம் ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.
கோயில் திருவிழாக்கள்:
சித்ரா பவுர்ணமியில் காவடி உற்சவமும், கார்த்திகை கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று சந்தனக்காப்பு வைபவமும் மிகச் சிறப்பாக நடைபெறும். மற்றும் தேய்பிறை மற்றும் வளர்பிறை அஷ்டமி திதிகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் விசேஷ தினங்களாகும். தினந்தோறும் மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை நடைபெறுகிறது.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
தினமும் காலை : 9.30 மணி முதல் 11.00 மணி வரை ஒரு கால பூஜை மட்டும், ஞாயிற்று கிழமைகளில் 9.30 மணி முதல் 12.30 மணி வரை மாலை: 4.30 மணி முதல் 8.00 மணி வரை திறந்திருக்கும். தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி தினங்களில் காலை 8.00 மணிமுதல் இரவு 8.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
மேலும் விபரங்களுக்கு:
ஶ்ரீ குப்புசாமி குருக்கள் - 0436 4235428
கோயிலுக்கு செல்லும் வழி:
மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில், மயிலாடுதுறையில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் க்ஷேத்திரபாலபுரம் என்ற ஊரில் ஆனந்த கால பைரவர் கோயில் அமைந்துள்ளது.
மயிலாடுதுறையில் இருந்து நகர பஸ் வசதி உண்டு. கோமல் ரோடு பஸ் நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து 100 மீட்டர் தூரம் நடந்து சென்றால் கோயிலை அடையலாம். மயிலாடுதுறையில் இருந்து டவுன் பஸ் வசதியும் உண்டு. மயிலாடுதுறை அல்லது கும்பகோணத்தில் இருந்து பேருந்தில் சென்று க்ஷேத்திரபாலபுரம் பேருந்து நிலையத்தில் இறங்க வேண்டும்.
காசிக்கு செல்ல முடியாதவர்கள் இந்த ஸ்தலத்தில் உள்ள காலபைரவரை வணங்கினால் காசிக்கு சென்ற பலன் கிடைக்கும்.
இந்த ஆனந்த கால பைரவரை வணங்குவதால் வாழ்வில் ஆனந்தத்தை அள்ளி தருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
நாமும் ஆனந்தத்தை அள்ளி தரும் க்ஷேத்திரபாலபுரம் ஆனந்த கால பைரவர் கோயில் சென்று அவரை வணங்கி நற்பலன்களைப் பெறுவோம்!!
Comments
Post a Comment