நோய் நிவர்த்தியும் மன நிம்மதியும் அருளும் ஐயங்கார்குளம் ஶ்ரீ சஞ்ஜீவிராயர் (அனுமன்) கோயில் ஆரூர் சுந்தரசேகர்.

நோய் நிவர்த்தியும் மன நிம்மதியும் அருளும் ஐயங்கார்குளம் ஶ்ரீ சஞ்ஜீவிராயர் (அனுமன்) கோயில்

ஆரூர் சுந்தரசேகர்.

20210028160251835.jpeg


பக்திக்கும், பட்டுக்கும் பெயர் பெற்ற காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள ஐயங்கார்குளத்தில் சிறிய திருவடியான அனுமானுக்கு பழைமை வாய்ந்த அதிகம் அறியப்படாத தனி திருக்கோயிலாக ஶ்ரீ சஞ்ஜீவிராயர் (அனுமன்) கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் வடக்கு திசை பார்த்தவாறு சுயம்புவாகத் தோன்றியவர் சஞ்ஜீவிராய அனுமன். இவருக்கு இங்கும் மட்டும்தான் இவ்வளவு பெரிய தனிக் கோயில் இருக்கிறது.
பல கோயில்களில் அனுமனுக்கு உட்புறம் தனிச்சந்நதி இருக்கும். சில தனி ஆலயங்களில் அனுமனே விஸ்வரூபனாக இருப்பதால், அந்த உயரத்துக்கும் மேலே கோபுரம் எழுப்புவது இயலாததாக இருக்கும். ஆனால் இந்த கோயில் மூன்றுநிலை ராஜகோபுரம், மூன்று விமானங்கள், மூன்று பிரகாரத்துடன் அமைந்துள்ளது. இந்த கோவிலின் மூலவராக சஞ்ஜீவிராயர் (அனுமன்) வீற்றிருக்கிறார். அவருக்கு எதிரே இராமன் சீதை மற்றும் இலட்சுமணர் உள்ளனர். இந்த கோயில் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 
திரேதா யுகத்தின் போது, இராமபிரானுக்கும் இராவணனுக்கும் இலங்கையில் நிகழ்ந்த போரில் இராவணனின் புதல்வனான இந்திரஜித் ஏவிய நாகபாசத்தால் இலட்சுமணன் மூர்ச்சையடைந்தான். மயக்கமடைந்த இலட்சுமணனை உயிர்ப்பிக்க அனுமன் தெய்வீக மூலிகைகள் நிறைந்த சஞ்சீவ மலையை எடுத்துச் சென்றபோது இந்த ஸ்தலத்தில் சிறிது நேரம் தங்கியிருந்து பிறகு சஞ்சீவி மலையை எடுத்துச் சென்றார். அந்த மலையில் இருந்து ஒரு சிறு பகுதி இத்தலத்தில் விழுந்ததாக சொல்லப்படுகிறது. சஞ்சீவி மலையின் ஒரு பகுதி விழுந்த இடம் என்பதால், அதன் மருத்துவ குணங்கள் காற்றில் கலந்து, இத்தலத்தில் நிலைபெற்று இன்றளவும் பரிமளிக்கின்றன. 

ஸ்தல வரலாறு: 
காஞ்சிபுரம் - வந்தவாசி வழித்தடத்தில் பாலாற்றங்கரையில் இந்த கோயிலை கி.பி. 1585-1614ல் விஜயநகரை ஆண்ட வேங்கடபதி என்ற மன்னனின் அமைச்சராகப் பணி புரிந்த லட்சுமி குமார தாதாச்சாரியரால் கட்டப்பட்டுள்ளது . 
ஒருசமயம் அளவற்ற பொன் பொருளோடு இவ்வூர் வழியே இவர், பயணம் செய்தபோது வழிப்பறிக்கொள்ளையர்கள் சூழ்ந்து கொண்டார்கள். ஆபத்தில் காக்க வேண்டி, இராம பக்தரான குமார தாதாச்சாரியார் உடனே இராம நாமத்தை ஜபிக்க தொடங்கினார். சிறிது நேரத்தில் அந்த இடத்தை நோக்கி ஒரு குரங்கு பட்டாளமே வந்து கொள்ளையர்களைத் தாக்கித் துரத்தின, தப்பித்தோம் பிழைத்தோம் என்று திருடர்கள் தப்பிச் சென்று விட்டனர். லட்சுமி குமார தாதாச்சாரியரின் மனம் ஆஞ்சநேயரின் மீதுள்ள பரம பக்தியால் உருகியது. உடனே,அனுமனுக்காக ஒரு கோவில் கட்டுவதற்கு சபதம் செய்து இங்கு சஞ்ஜீவிராய அனுமன் கோயில் கட்டியுள்ளார்.. அங்கு ஆஞ்சநேய சுவாமிக்கு பிரமாண்டமான திருக்குளம் வெட்டினார், இதுதான் இன்று தாதசமுத்திரம், அய்யங்கார்குளம் குளம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. மிக அற்புதமாக ஆஞ்சநேய சுவாமிக்கு திருச்சந்நதியையும் அமைத்தார். பின்பு, ஸ்ரீஹனுமத்விம்சதி எனும் அழகிய ஸ்தோத்திர பாடல்களை அருளிச் செய்தார். இத்தலத்து அனுமரை வழிபடுவது இராமபிரானின் பாதங்களை வணங்குவதற்கு ஒப்பானது என அப்பாடல்களில் குறிப்பிடுகின்றார். இந்தப் பாடல்களை பக்தியுடன் சொல்பவர்களுக்கு நீண்ட ஆயுளுடன் பதினாறு பேறுகளையும் பெற்று வாழ்வார்கள் என்று இப்பாடலில் கூறப்பட்டுள்ளது.

20210028161600173.jpeg


தாதசமுத்திரம் என்கிற ஐயங்கார்குளம்:
இக்கோயிலின் பின்புறத்தில் படித்துறையுடன் கூடிய பிரம்மாண்டமான குளம் உள்ளது. பார்ப்பதற்கு ஏரி போல் காணப்படும் இந்தக் குளம் சுமார் 133 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது. ஐயங்கார்குளம் என இந்த ஊருக்குப் பெயர் வருவதற்கு இந்தக் குளம்தான் காரணம். இந்தக் குளத்தை லட்சுமி குமார தாதாச்சாரியரால் வெட்டியதால் அவர் பெயரைத் தாங்கி இந்தக் கிராமத்துக்கு ‘ஐயங்கார்குளம்’ என்று பெயர் வந்ததாகக் கூறுகிறார்கள். இந்தக் குளத்துக்கு ‘தாத சமுத்திரம்’ என்று இன்னொரு பெயரும் இருக்கிறது. இக்குளத்து நீருக்கு சஞ்சீவி மலையின் மருத்துவ குணங்கள் உண்டு என்பதால், இதில் குளித்து எழுபவரின் நோய் நீங்கும் என்பது ஐதீகம்.

20210028161406323.jpeg


ஸ்தல அமைப்பு: 
இந்த ஶ்ரீ சஞ்ஜீவிராய ஆஞ்சநேயர் திருக்கோயில், மூன்று இராஜகோபுரங்கள், மூன்று சுற்றுப் பிராகாரங்கள், மூன்று விமானங்களை கொண்டது. திருக்கோயிலின் நுழைவாயில் மூன்று நிலை இராஜகோபுரத்துடன் தெற்கு நோக்கிய படி அமைந்துள்ளது. நுழைவாயில் முன்பாக ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட அழகிய நான்கு கல் தூண்களைக் கொண்ட உயர்ந்த மண்டபம் அமைந்துள்ளது. நுழைவாயிலின் வலதுபுறமும் இடதுபுறமும் சிற்பத் தூண்கள் வரிசையாக அமைய பெற்ற நீண்ட மண்டபம் உள்ளது. உட்பிராகாரம் கடந்து மகா மண்டபம் ஐம்பது தூண்களுடன் அமைந்திருக்கின்றது. அடுத்து அர்த்த மண்டபம் இருபத்தைந்து தூண்களுடனும் திகழ்கின்றன. அர்த்த மண்டபத்தின் வெளிப்புறச் சுவரில் ஆஞ்சநேயரின் இருபது ஸ்லோகங்களும் கல்வெட்டுகளாக உள்ளன. அர்த்த மண்டபத்தின் உட்புறக் கூரையின் கீழ் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தாலும், அவை இன்று சிதிலமடைந்துள்ளன. அர்த்த மண்டபத்தின் மேற் கூரை மூலைகளில் பெரிய அளவிலான கல்வளையங்கள் காணப்படுகின்றன. இவற்றில் மிகச்சில மட்டுமே தற்போது முழுமையாக உள்ளன.
அர்த்த மண்டபத்தை அடுத்து கருவறையில், மூலவரான சஞ்ஜீவிராயர் இரு கரங்களையும் கூப்பி வணங்கிய கோலத்தில் அயோத்தி உள்ள வடக்கு திசை நோக்கி இராமபிரானை தொழுதபடி காட்சி தருகின்றார். இவருக்கு எதிரே ஶ்ரீசீதா சமேதராக இராமபிரான், இலட்சுமணருடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.  
வெளிப்பிரகாரத்தில் மிகப்பெரிய கல் மேடை காணப்படுகிறது. இது அக்காலத்தில் அன்னதானம் தயாரிப்பதற்காக பயன்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஆறடிக்கு மேல் உயரமுள்ள கருடாழ்வார் வடக்கு நோக்கி வணங்கிய நிலையில், திறந்த வெளியில் காட்சி தருகின்றார். 

ஸ்தல கட்டிடக்கலைப் பெருமை: 
இந்தக் கோயில் விஜயநகர மன்னர்களின் கட்டிடக் கலைக்குச் சான்றாகத் திகழ்கின்றது. இக்கோயில் கருங்கற்களை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி, சுண்ணாம்பு சேர்க்காமல் கட்டப்பட்ட கோயில் என்று சொல்லப்படுகிறது.இதற்கு கற்றளி முறை என்பதாகும். ஒரே கல்லில் வடித்த தூண்கள் நான்கும் தாங்கும் மண்டபம் இதற்கு மேலும் பெருமை சேர்க்கின்றது. இவ்வாலயத்தை ஒட்டி அமைந்துள்ள பிரம்மாண்ட திருக்குளத்தின் வடக்கே நடவாவிக் கிணறு என்ற சிறப்பு வாய்ந்த கிணறு அமைந்துள்ளது. இது ஒரு அபூர்வ கட்டிட அமைப்பாகும். 

20210028161507653.jpeg


நடவாவிக் கிணறு:
ஐயங்கார்குளத்தின் வடக்குக் கரையின் பின்புறம் கலையம்சத்துடன் எப்போதும் வற்றாத நடவாவிக் கிணறு அமைந்துள்ளது. தரைக்குக் கீழே படியிறங்கிச் செல்லும் விதமாக அமைந்துள்ளது. முதலில் ஒரு சிறிய அளவு கொண்ட வளைவைக் கொண்டுள்ளது, வளைவின் மேலே ஒரு கஜலட்சுமியும் கிணற்றின் நாலா புறங்களிலும் உள்ள பக்கவாட்டுக் கற்களில் சப்தகன்னிகளின் சிலைகள் காட்சி தருகின்றன. இந்தக் கிணற்றுக்குள் செல்ல 21 படிக்கட்டுகள் அமைக்கப் பட்டுள்ளன. சுமார் 80 அடி நீளமும், 30 அடி அகலமும் கொண்ட இக்கிணறு, சுமார் 25 அடி ஆழத்தில் உள்ளது. கீழே சென்றதும், பாதாளத்தில் சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கருங்கல்லில் அமைந்த பதினாறு கால் மண்டபம் 25 அடி நீளமும் 25 அடி அகலமும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அற்புதமாக அமைந்துள்ள நடைவாவி பாதாளக் கிணற்றைச் சுற்றி பிராகாரமும் இருக்கின்றது. 

கோயில் திருவிழாக்கள்: 
இத்திருகோயிலில் அனுமன் ஜெயந்தியும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சித்திரை மூல நட்சத்திரத்தில் சந்தனக்காப்பும், ஐப்பசி மூல நட்சத்திரத்தில் புஷ்பாங்கியும், மார்கழி மூல நட்சத்திரத்தில் அதாவது அனுமன் பிறந்த நாளில் வெண்ணெய்க் காப்பும் சுவாமி புறப்பாடு போன்றவை இங்கு விசேஷம். நவராத்திரி விழா இங்கு சிறப்பாக நடத்தப்படும். இங்கு நடைபெறும் சித்ரா பௌர்ணமி விழா மிகவும் பிரசித்திப் பெற்றது.

சித்ரா பௌர்ணமி திருவிழா:
சித்ரா பௌர்ணமி திருவிழா இங்கு விசேஷமாக கொண்டாடப்படுகிறது. அன்றும் மறுநாளும் குளத்தின் பின்புறமுள்ள நடவாவிக் கிணற்றில் இவ்விழா நடைபெறும். எப்போதும் நீரில் மூழ்கி இருக்கும் நடவாவிக் கிணற்றில் இருக்கும் நீரை மோட்டார் கொண்டு வெளியேற்றுகின்றனர். நீரை வெளியேற்றிய பிறகு கிணற்றில் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளும் இராம லட்சுமணர் சீதையும் எழுந்தருளும் விழாவும் குறிப்பிடத்தக்கவையாகும். சித்ரா பவுர்ணமி அன்று காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலிலிருந்து உற்சவ மூர்த்தி இங்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கிணற்றுக்குள் உள்ள மண்டபத்தில் எழுந்தருள்வார். இங்கு சுமார் 500 பக்தர்கள் வரை இறைவனை வணங்கும் அளவிற்கு இடம் உள்ளது. தீபாராதனை முடிந்து மூன்று முறை வலம் வந்து பூமிக்கு வரும் வரதராஜர் அருகில் உள்ள பாலாற்றில் திருமஞ்சனம் முடிந்து, இரவு முழுக்கக் காட்சி தந்து, காஞ்சிபுரம் திரும்புவார். 
மறுநாள் இராமர், இலட்சுமணர், சீதை ஆகியோர் இக்கிணற்றில் எழுந்தருள்வார்கள். அதன்பின், திருவிழா முடிந்த ஓரிரு நாளில் கிணற்று நீர் ஊற்றுப் பெருக்கெடுத்து மண்டபத்தையும் கிணற்றையும் நிரப்பி விடும். 

வழிபாட்டுச் சிறப்பு:
இந்த ஸ்தலத்தில் அனுமன் சிறிது நேரம் தங்கியிருந்து பிறகு சஞ்சீவி மலையை எடுத்துச் சென்றதால் இத்தலம் புனிதமாக கருதப்படுகிறது. ஶ்ரீ சஞ்ஜீவிராயர் அருளால் இவ்வூரில் இதுநாள் வரை எவருக்கும் விஷப் பூச்சிகள் கடித்து எந்த பாதிப்பும், உடல் பிரச்சினைகளும் ஏற்பட்டதில்லை என்று நம்பப்படுகிறது. இந்த ஆலயத்தில் சிறிது நேரம் அமர்ந்தாலும்கூட நோய் நிவர்த்தியும் மன நிம்மதியும் வெகு எளிதில் கைகூடுகிறது என்பது ஐதீகம்.
இங்கு வழிபட்டுச் சென்றால் கைவிட்டுப் போன பொருள் நிச்சயமாகத் திரும்பக் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

கோயில் திறந்திருக்கும் நேரம்: 
தினமும் காலை : 06.30 மணி முதல் 12.00 மணி வரை. 
மாலை: 4.30 மணி முதல் 7.30 மணி வரை திறந்திருக்கும்.

கோயிலுக்கு செல்லும் வழி: 
காஞ்சிபுரம், கலவை நெடுஞ்சாலையில், காஞ்சிபுரத்திலிருந்து  
ஏழு கி.மீ தொலைவில் ஐயங்கார்குளம் உள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து பேருந்து, ஆட்டோ வசதிகள் அதிக அளவில் உள்ளன. சித்ரா பௌர்ணமி போன்ற விழாக் காலத்தில் இரவு முழுக்க ஷேர் ஆட்டோ வசதி உண்டு. 
நாமும் நோய் நிவர்த்தியும் மன நிம்மதியும் அருளும் காஞ்சிபுரம் அருகிலுள்ள ஐயங்கார்குளம் ஶ்ரீ சஞ்ஜீவிராயர் (அனுமன்) கோயில் சென்று அவரை வணங்கி நற்பலன்களைப் பெறுவோம்!!

Comments

Popular posts from this blog

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..

உண்மை பக்தி எது ?

ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்...