பித்ரு தோஷம் நீக்கும் நென்மேலி ஸ்ரார்த்த ஸம்ரக்ஷண நாராயணர் திருக்கோயில் ஆரூர் சுந்தரசேகர்.
பித்ரு தோஷம் நீக்கும் நென்மேலி ஸ்ரார்த்த ஸம்ரக்ஷண நாராயணர் திருக்கோயில்
ஆரூர் சுந்தரசேகர்.

நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும். மற்றும் பித்ரு தோஷம் என்பது நாம் நம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினாலும், நமது முன்னோர்கள் செய்த பாவங்களினாலும் ஏற்படுகிறது. பித்ரு தோஷம் இருந்தால், வாழ்வில் முன்னேற்றம் ஏற்படாது. இதற்கு ஒரே வழி அதற்கான தோஷ நிவர்த்தி செய்வது தான்… பித்ரு தோஷ நிவர்த்திக்கு காசி, ராமேஸ்வரம் தான் செல்ல வேண்டும் என்பதில்லை. செங்கல்பட்டு அருகில் நென்மேலி என்ற திருத்தலம் அமைந்துள்ளது. காசிக்கு நிகரான க்ஷேத்ரம் என்றும் சௌலப்ய கயா என்று கூறப்படுகிறது.
சாதாரணமாக திவசம், திதி, ஸ்ரார்த்தம் என்று பலவிதமாக அழைக்கப்படும் முன்னோர்களுக்குச் செய்யும் கிரியைகள் அனைத்தும் அபர காரியங்கள் எனப்படும் சுபமற்ற காரியங்களாக சொல்வர். ஆனால், நென்மேலி எனும் ஸ்தலத்தில் ஸ்ராத்தம் (திதி) சுபம் எனும் நல்ல கிரியையாக செய்யப்படுகிறது. ஏனெனில், அதைச் செய்பவரே பெருமாளாக இருப்பதால் அதை சுப ஸ்ரார்த்தம் என்கிறார்கள். காசி, கயா, ராமேஸ்வரம் முதலான புண்ணிய க்ஷேத்திரங்களில் ஸ்ரார்த்தம் செய்த பலன், நென்மேலி தலத்துக்கு வந்து ஸ்ரார்த்தம் செய்தால் கிடைக்கும் என்கிறார்கள் பெரியோர்கள்.
இத்தலம் செங்கல்பட்டில் இருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையில், செங்கல்பட்டில் இருந்து 7வது கிலோமீட்டரில் உள்ளது. இந்த கிராமத்தின் மத்தியில் ஸ்ரார்த்த சம்ரட்சண பெருமாள் எனும் பெயரோடு ஸ்ரீலக்ஷ்மி நாராயணப் பெருமாள் அருள்பாலிக்கிறார்.
இங்கே மூலவரின் திருநாமம் ஸ்ரீலக்ஷ்மி நாராயணப் பெருமாள். இந்தக் கோவிலில் உள்ள உற்சவ மூர்த்தி, ஸ்ரார்த்த ஸம்ரட்சண நாராயணர் எனும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள், பித்ரு சாபம் உள்ளவர்கள், வீட்டில் அகால மரணம் அடைந்தவர்கள், துர்மரணம் தோஷம் உள்ளவர்களின் குடும்பத்தார், இங்கு வந்து ஸ்ரார்த்தம் செய்வது மிகவும் சிறப்பானது.
இங்கு, தினமும் ஸ்ரார்த்த காரியங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக, அமாவாசை, பஞ்சமி, ஏகாதசி முதலான புண்ணிய திதிகளில் இங்கு வந்து ஸ்ரார்த்தம் செய்வது கூடுதல் விசேஷமாக கருதப்படுகின்றது.
ஸ்தல அமைப்பு:
இது சிறிய கோயிலாக இருந்தாலும் பெருமாள் சக்தி மிக்கவர். கருவறையில் ஸ்ரீலக்ஷ்மி தாயாரை தன் மடியில் அமர்த்தியபடி நாராயணர் அருள்புரிகின்றார். இங்கு தாயாருக்கு தனி சந்நதி இல்லை என்றாலும் சாளக்கிராம வடிவில் தாயார் அருள்பாலிக்கிறார். மற்றும் இந்த ஸ்தலத்தின் சிறப்பு ஸ்ரார்த்த ஸம்ரக்ஷண பெருமாள் உற்சவ மூர்த்தியாக எழுந்தருளியுள்ளது. உற்சவர் தான் இங்கு முன்னோர்களுக்காக ஸ்ரார்த்தம் செய்து வைக்கின்றார் என்பது ஐதீகம்.
இந்தலத்தின் திருக்குளம், அர்க்ய புஷ்கரணி மற்றும் ஜீயர் குளம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஸ்தல வரலாறு:
இக்கோயில் சுமார் 800 வருடப் பழைமை வாய்ந்தது என்றும், மூலவர் சுயம்புத் திருமேனி என்கிறது ஸ்தல புராணம். இன்றைய நென்மேலி கிராமம், அந்தக் காலத்தில் புண்டரீக நல்லூர் என அழைக்கப்பட்டது. அதாவது பிண்டம் வைத்த நல்லூர் எனப்பட்டது. இதற்கு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது.
17ம் நூற்றாண்டில் ஆற்காடு நவாப் செங்கல்பட்டு உள்ளிட்ட பிரதேசத்தை ஆண்டு வந்தான். ஊருக்கு ஊர் திவான்களை நியமித்து அவர்கள் மூலம் வரி வசூல் செய்தான். அவர்களில் ஒருவர் யக்ஞநாராயண சர்மா. அவரது மனைவி, சரசவாணி. குழந்தை பாக்கியம் இல்லாத அவர்களுக்கு ஸ்ரீமந் நாராயணனிடம் உள்ள பக்தியால் அந்த நாராயணனையே தம் மகனாக எண்ணி வாழ்ந்தனர். நென்மேலியில் நாராயணன் கோயிலை நிர்மாணிக்கும் பணியை அந்த தம்பதியர் மேற்கொண்டனர். வசூலித்த அவர் பணத்தையெல்லாம் இந்த நென்மேலி பெருமாளுக்கே செலவு செய்தார்கள். இதனால், ஆற்காடு நவாப்பிடம் வரிப்பணத்தையெல்லாம் செலுத்தமுடியாத நிலை ஏற்பட்டது. இதை அறிந்த நவாப், யக்ஞநாராயண சர்மா தம்பதியருக்கு மரண தண்டனை விதித்தான். நவாபின் தண்டனையை ஏற்க விரும்பாத யக்ஞநாராயண சர்மா தம்பதியர் திருவிடந்தை என்னும் திவ்ய தேசத்து திருக்குளத்தில் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வதற்கு வந்தார்கள், தங்களுக்கு ஈமக் கடன்களை செய்ய வாரிசு இல்லையே என மன வருத்தத்துடன் மரணமடைந்தார்கள். பின்னர், அவர்கள் இருவருக்கும் பெருமாளே வந்து ஸ்ரார்த்தம் உள்ளிட்ட ஈமக்காரியங்களைச் செய்தார் என்கிறது ஸ்தல வரலாறு.
ஸ்தல பெருமை:
அன்றில் இருந்து இன்று வரை, பிள்ளை இல்லாதவர்களுக்கோ, அகால மரணம் அடைந்தவர்களுக்கோ, ஏதோவொரு சூழ்நிலையால், ஸ்ரார்த்தம் தடைப்பட்டு போயிருந்தவர்களுக்கோ, இந்தக் கோயிலில் ஸ்ரார்த்தம் செய்யப்படுகிறது. அதாவது இத்தலத்தில் ஸ்ரார்த்தம் செய்பவர்களுடன் ஸ்ரார்த்த ஸம்ரக்ஷண பெருமாளும் சேர்ந்து ஸ்ரார்த்தம் செய்வதாக ஐதீகம்.
இங்கே, ஆலயத்தில் பெருமாளின் திருப்பாதம் உள்ளது. அந்தப் பாதத்தைக் கொண்டுதான் ஸ்ரார்த்த காரியங்கள் செய்யப்படுகின்றன.

தினமும், குதப காலம் எனும் பித்ரு வேளையில் ( 12 மணி முதல் 1 மணி வரை ) ஒரு காலம் மட்டும் ஆராதனம் ஏற்று விரதமிருக்கிறார் பெருமாள். மற்ற நேரங்களில் எந்தவித பூஜையும் கிடையாது.
இந்த பெருமாளுக்கு வெண்பொங்கல், தயிர் சாதம் அதனுடன் பிரண்டையும் எள்ளும் சேர்ந்த துவையலும் நைவேத்தியம் செய்யப்படுகிறது. பின்னர் அதில் இருந்து பிண்டமாக எடுத்து, முன்னோருக்கு பிண்டம் வைத்து பூஜிக்கப்படுகிறது. அதன் ஒருபகுதியை இத்தலத்தில் ஸ்ரார்த்தம் செய்த பக்தர்களுக்கு அந்த பிரசாதத்தையே உணவாகவும் இன்னொரு பகுதி தானமாகவும் வழங்கப்படுகிறது.
இத்தலத்தில் ஸ்ரார்த்தம் பூஜை செய்வதற்கு முன்பதிவு செய்துவிட்டுச் செல்ல வேண்டும். ஸ்ரார்த்தம் முடிந்ததும் வழங்கப்படும் பிரசாதத்தை முன்கூட்டியே தயாரிக்க ஏதுவாக அன்பர்கள் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும் என்று ஆலய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
திருக்கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 9 மணி முதல்11 மணி வரை திறந்திருக்கும்.
(ஸ்ரார்த்தம் செய்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர்)
மேலும் விபரங்களுக்கு
திரு. சம்பத் பட்டாசாரியார்
Ph : 044-27420053
+91 9626283053
கோயிலுக்கு செல்லும் வழி:
செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் சாலையில் செங்கல்பட்டிலிருந்து சுமார் 7கி.மீ. மீட்டர் தொலைவில் நென்மேலி என்ற கிராமத்தில் லக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. சென்னை தாம்பரத்திலிருந்து பேருந்து வசதிகள் நிறைய உண்டு.
முன்னோர்களுக்காக ஸ்ரார்த்தம் செய்து வைக்கும் ஸ்ரார்த்த ஸம்ரக்ஷண பெருமாளை தரிசித்து, பித்ரு தோஷம் நீங்கி, பெருமாளின் அருளுடன் சந்ததி சிறக்க வாழ்வோம்!!
Comments
Post a Comment