சங்கடங்கள் தீர்க்கும் சின்னாளப்பட்டி சதுர்முக முருகன்!! ஆரூர் சுந்தரசேகர்.
சங்கடங்கள் தீர்க்கும் சின்னாளப்பட்டி சதுர்முக முருகன்!!
ஆரூர் சுந்தரசேகர்.

திண்டுக்கல்லில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் கண்டாங்கி சேலைக்கு பெயர் பெற்ற சின்னாளப்பட்டி என்ற ஊர் உள்ளது. பண்டைய காலத்தில் ‘சின்னாள்பட்டி’ என்று இந்த ஊர் அழைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஊரில், நான்கு முகங்களுடன் கூடிய பழமையான சதுர்முக முருகன் கோயில் உள்ளது. நான்கு முகங்களுடன் முருகப்பெருமான் காட்சி தரும் ஒரே ஸ்தலம் இதுவாகும். இப்படி நான்கு முகங்களுடன் முருகக் கடவுளைத் தரிசிப்பதும் மிகவும் விசேஷம்.
‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாததால் பிரம்மனை முருகப் பெருமான் சிறையில் அடைத்தார். இதனால் படைப்புத் தொழில் பாதிக்கப்பட்டது. பின்னர் முருகப்பெருமானே படைப்புத் தொழிலை மேற்கொண்டார். அதை நினைவுகூரும் வகையில் இங்கே, முருக பெருமான் நான்கு முகங்களாக சதுர்முகத்துடன் இருப்பதாக ஸ்தல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்தல அமைப்பு:
இக்கோயிலின் இராஜ கோபுர வாயில் தெற்கு நோக்கி உள்ளது . இதனை அடுத்து முன் மண்டபம் , மகா மண்டபம் , அர்த்த மண்டபம் உள்ளது. பின்னர் அதனை தொடர்ந்து கருவறை அமைந்துள்ளது. கருவறையில் மூலவரான சிவசுப்ரமணிய சுவாமி, வள்ளி - தெய்வானையுடன் அருள்புரிகின்றார். இவரது வலது கரத்தில் சங்கு முத்திரையும் , இடது கரத்தில் சக்கர முத்திரையும் உள்ளது. மார்பில்,கவுரி சங்கரர் ருத்ராட்சம் சூடப்பட்டுள்ளது.
பிராகாரத்தில் கன்னிமூலையில் ஸ்ரீகணபதியும் வாயுமூலையில் ஸ்ரீதண்டாயுதபாணியும் ஈசான்ய மூலையில் ஸ்ரீபைரவரும் இங்கு சந்நிதி கொண்டிருப்பது சிறப்பாகும். மற்றும் பாலசுப்பிரமணியர் , குக்குட சுப்பிரமணியர் , சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, நவக்கிரக சந்நிதிகளும் உள்ளன.
மகா மண்டபத்தில் முருகப்பெருமான் நான்கு முகங்களுடன் சதுர்முக முருகனாக மயில் மீது அமர்ந்து தென் திசை நோக்கி காட்சியளிக்கிறார். அருகில் பாலதிரிபுரசுந்தரி அம்பிகையும், விஸ்வாமித்திரர் காட்சியளிக்கிறார்கள்.
வெளி பிராகாரத்தில் வைஷ்ணவி தேவிக்கும், சதுர்முக ஆஞ்சநேயருக்கும் தனி சந்நிதிகள் உள்ளன.
இக்கோயிலின் ஸ்தல விருட்சமாக வேங்கை மரம் உள்ளது.
ஸ்தல வரலாறு:
பிரம்மரிஷி பட்டம் பெறும் நோக்கமாகக் கொண்டு கடும்தவம் செய்து கொண்டிருந்தார் விஸ்வாமித்திரர். அப்போது விஸ்வாமித்ரர் முன்பாக சிறுமி வடிவில் தோன்றிய பாலதிரிபுரசுந்தரி அம்பிகை குங்குமப்பொட்டு வைக்கும்படி கேட்க, அந்த சிறுமியின் நெற்றியில் விஸ்வாமித்திரர் குங்குமப் பொட்டு வைத்தார். அவர் குங்குமம் இட்டதை சரிபார்ப்பதற்காக , அருகே இருந்த குளத்து நீரில் தன் பிம்பத்தைப் பார்த்தாள் சிறுமி வடிவில் இருந்த பாலதிரிபுரசுந்தரி, குளத்தை அவள் குனிந்து பார்த்த சமயத்தில் குங்குமப் பொட்டின் துகள்கள் நீரில் விழுந்தன. இதனையடுத்து அந்தக் குளத்தில் இருந்து சதுர்முக முருகன் தோன்றினார். “இந்த சதுர்முக முருகனே நீ வேண்டும் வரத்தை அருள்வான்’’ என்று விஸ்வாமித்ரரிடம் தெரிவித்து விட்டு அந்த சிறுமி மறைந்தாள். சதுர்முக முருகனும், சிறிது தொலைவில் உள்ள கோயிலுக்கு வரும்படி தெரிவித்து விட்டு மறைந்தார். விஸ்வாமித்திரரும் அருகில் உள்ள அந்த கோயிலுக்கு சென்றார். அங்கு பாலதிரிபுரசுந்தரியும், சதுர்முக முருகனும், ஒன்றாக காட்சியளிப்பதை பார்த்து மகிழ்ந்தார். பின் இறையருளைப் பெற தவம் புரியாமல் எதை எதையோ வேண்டி தவம் செய்தேன் என்று வருந்தினார். அப்போது அங்கு வந்த வசிஷ்டர், விஸ்வாமித்ரருக்கு ‘பிரம்மரிஷி’ பட்டம் வழங்கி ஆசீர்வதித்தார் என்கிறது ஸ்தல வரலாறு.

ஸ்தலபெருமை:
இத்திருத்தலத்தில் செவ்வாய்கிழமைகளில் காலை சரியாக எட்டு மணிக்கு சதுர்முக முருகனுக்கு பசும்பாலில் குங்குமப்பூ மற்றும் குங்குமம் கலந்த “செம்பால் அபிஷேகம்” செய்வது இத்தலத்தின் சிறப்பு. செவ்வாய்க்கிழமைகளில், குங்குமமும் பாலும் கலந்து அபிஷேகம் செய்தால், செவ்வாய் தோஷம் நீங்கும்; சத்ரு பயம் விலகும், திருமணத்தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர் என்பது ஐதீகம். மற்றும் இங்கே உள்ள ஸ்ரீபாலதிரிபுரசுந்தரிக்கு புடவை சார்த்தி, செவ்வரளி மலர்கள் சூட்டி வழிபட்டால், கல்வியும் ஞானமும் பெறலாம்.
நேர்த்திக்கடன்:
வேண்டுதல் நிறைவேறியவர்கள், சதுர்முக முருகனுக்கு பாலாபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாற்றியும் வழிபாடு செய்கிறார்கள்.
திருவிழாக்கள்:
வைகாசி மாத விசாக நட்சத்திர தினம் இவரது ஜென்ம நட்சத்திர தினமாக கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாத கார்த்திகைத் திருநாள் முருகப் பெருமானின் விசேட தினமாக கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாத கந்த சஷ்டியில் சூரசம்ஹாரம், திருக்கல்யாணம், இதைதவிர தைப்பூசம், பங்குனி உத்திரம் மிக முக்கியமான விழாகள் ஆகும்
மாதாந்தோறும் பிரதோஷம், கிருத்திகை, சஷ்டி உள்ளிட்டவை விசேஷ தினங்களாகும். வளர்பிறை அஷ்டமி தினத்தன்று இங்குள்ள பைரவருக்கு சிறப்பு பூஜையும் நடக்கிறது.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 11 மணி வரை , மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
கோயிலுக்கு செல்லும் வழி:
பழனி - மதுரை மார்க்கம்
செம்பட்டியில் இறங்கி 7A, 9F, 9H டவுன் பஸ் உள்ளது. ஆஞ்சநேயர் கோயில் நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.
செம்பட்டியிலிருந்து ஷேர் ஆட்டோக்கள் உள்ளன.
திண்டுக்கல் - மதுரை மார்க்கம்.
காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் (Gandhigram Rural University) அடுத்த நிறுத்தத்தில் (சின்னாளப்பட்டி பிரிவு)இறங்க வேண்டும். அங்கிருந்து ஆட்டோக்கள் உள்ளன.
டவுன் பஸ் வசதியும் உள்ளது.(7A, 9, 9C, 9D, 9F, 9H)
மேலும் விபரங்களுக்கு
கோயில் நிர்வாகத்தினர்: திரு. குணசேகரன். +91 9944619232,
திரு. பாபு. +91 9944059802
புலவர் பூ. அரங்கசாமி அவர்கள் சின்னாளப்பட்டி சதுர்முக முருகனை பற்றிய பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது.
நாமும் சங்கடங்கள் தீர்க்கும் சின்னாளப்பட்டி சதுர்முக முருகனை தரிசித்து நற்பலன்களை பெறுவோம்!!
கந்தனுக்கு அரோகரா... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
Comments
Post a Comment