ஆலயங்களில் அபிஷேகங்களும், அதன் பலன்களும்...

ஆலயங்களில் அபிஷேகங்களும், அதன் பலன்களும்...
ஆரூர் சுந்தரசேகர்

இறைவழிபாட்டிற்காகவும், மன நிம்மதி கிடைக்கும் என்றும் கோயில் செல்லும் வழக்கம் அனைவருக்கும் உண்டு. நமது முன்னோர்கள் கூற்றுப்படி எந்தெந்த பருவத்தில் என்னென்ன கிடைக்கிறதோ, அதை வைத்து இறைவனை இயற்கையோடு இயற்கையாக வழிபட்டு வருகிறோம். அதில் அபிஷேகங்கள், ஆராதனைகள், நைவேத்தியங்கள் என்று நாம் செய்கின்றோம்.

நாம் கோவிலுக்கு சென்றால் மன நிம்மதியுடன், நேர்மறையான எண்ணங்கள் அதிகரிக்கிறது. அறிவியல் பூர்வமாக யோசித்துப் பார்த்தால், தினமும் அபிஷேகம் செய்கையில் கோவிலின் சுற்றுப்புறத்திலுள்ள காற்று மண்டலம் குளிர்ச்சி அடைந்து, எதிர் மின்னோட்டம் அதிகரிக்கின்றது.

ஈரப்பதமும் எதிர் மின்னோட்டமும் இருக்கும் இடத்தில் ஆக்சிஜன் அதிகமாக வெளிப்படும் . சுத்தமான ஆக்சிஜனை சுவாசிக்கையில் இதயத்துடிப்பு சீராகும் . ரத்த ஓட்டமும் சமநிலை அடையும். உடல் ஆரோக்கியத்துக்கும் ஆலய வழிபாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது இதிலிருந்து தெரிகின்றது. ஆண்டவனின் அருளாற்றலை அதிகரிக்கச் செய்யக்கூடிய அற்புதமான செயல், அபிஷேகம். உங்களால் இயன்றபோதெல்லாம் அபிஷேக நேரத்தில் கோயிலுக்குள் இருந்தாலே போதும், உங்கள் வாழ்வில் நன்மைகள் வந்து சேரும்.

அபிஷேகத்திற்கு உகந்த நாட்கள்:

ஒவ்வொரு தெய்வத்துக்கும் அபிஷேகம் செய்வதற்கு உகந்த நாளை முன்னோர்கள் கூறியுள்ளனர்..

ஞாயிற்றுக்கிழமைகளில் விநாயகருக்கும், நவக்கிரகங்களுக்கும் அபிஷேகம் செய்யலாம்.

திங்கட்கிழமை சிவனுக்கும்,

செவ்வாய்க்கிழமை முருகனுக்கும்,

புதன்கிழமை பெருமாளுக்கும்,

வியாழக்கிழமை தெட்சிணாமூர்த்திக்கும்,

வெள்ளிக்கிழமை அம்பாளுக்கும்,

சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கும் அபிஷேகம் செய்யலாம்.

அபிஷேகப் பொருட்களும் அதன் பலன்களும்:

நாம் பல அபிஷேகங்களை, அதன் பலன்கள் என்னவென்று தெரியாமலேயே செய்கிறோம். எந்த வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகங்கள் செய்து பிரார்த்தித்தால், என்னென்ன பலாபலன்களைத் தந்தருள்வார் என்று பார்ப்போம்..

சுத்தமான தண்ணீர் அபிஷேகம் - காரிய சித்தி உண்டாகும்.

நல்லெண்ணைய் அபிஷேகம் - வீட்டு பிரச்னைகள் தீரும்.

பால் அபிஷேகம் - ஆயுள் அதிகரிக்கும்.

பசுந்தயிர் அபிஷேகம் - குழந்தை பாக்யத்தை உண்டாக்கும்.

பஞ்சாமிருத அபிஷேகம் - உடல் நலம் மட்டுமல்லாமல், செல்வமும் பெருகும்.

நெய் அபிஷேகம் - மனம் அமைதி பெற்று முக்தி கிடைக்கும்.

தேன் அபிஷேகம் - வாழ்வு இனிமையாகும்.

மாப்பொடி அபிஷேகம் - கடன் தொல்லை தீரும்.

இளநீர் அபிஷேகம் - குடும்பம் ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும் அமையும்..

கரும்புச்சாறு அபிஷேகம் - பிணிகள் அகன்று, ஆரோக்கியம் பெருகும்.

மஞ்சள் பொடி அபிஷேகம் - பிறரை வசியமாக்கும் வசீகரம் நமக்கு கிட்டும்.

சந்தன அபிஷேகம் - எட்டுவித செல்வங்களும் கிடைக்கும்.

பஞ்சகவ்ய அபிஷேகம் (பால், நெய், தயிர், சாணம், கோமியம் கலந்தகலவை) - பாவங்கள் போக்கும்.

நெல்லி முள்ளிப் பொடி அபிஷேகம் - நம்மை பிடித்திருக்கும் நோய்கள் நீங்கும்.

வாழைப்பழம் அபிஷேகம் - உணவு மற்றும் வாணிபப் பயிர்கள் செழித்து வளரும்.

எலுமிச்சை சாறு அபிஷேகம் - மனதில் தோன்றும் இனம்புரியாத பயம் நீங்கும்.

அன்னாபிஷேகம் - ராஜ வாழ்க்கை கிட்டும்.

தேன், பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம், கரும்புச்சாறு, நெய், அரிசி, மாவு, நல்லெண்ணை, திருமஞ்சனம், புனிதநீர், பஞ்சாமிர்தம் ஆகிய பதிமூன்று பொருட்களை கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்வதால் நம்மை ஆட்டிப்படைக்கும் அனைத்து பிரச்னைகளும் தீரும்.

அபிஷேகத்துக்குப் பயன்படுத்தும் தண்ணீரில் சுத்த கந்த திரவியங்களான பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ, வெட்டி வேர் ஆகியவற்றை கலந்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

சிவப்பெருமான் அபிஷேகப் பிரியர்:

சிவபெருமான் ஒரு அபிஷேகப் பிரியர். ஒவ்வொரு வகையான அபிஷேகங்களால் சிவபெருமானை வணங்கிப் பிரார்த்தித்தால், ஒவ்வொரு பலாபலன்களைத் தந்தருள்வார்.

சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யும்போது... மேல் உள்ள ஈசான முகத்துக்குத்தான் முதலில் அபிஷேகம் செய்வார்கள். லிங்க பாணத்துக்கு கீழ் உள்ள பகுதியை ஆவுடையார் எனப்படும் அம்பாள் பாகம் என்பதால் ஆவுடையார் மீது ஆடை சார்த்திதான் அபிஷேகம் செய்வார்கள். சிவலிங்கம் பிரபஞ்ச ஆற்றலை கொண்டிருக்கும். அந்த லிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய.. செய்ய.. நம்மிடம் உள்ள தீய எண்ணங்கள் நீங்கி, புத்துணர்ச்சி உண்டாகும். எனவே அபிஷேகம் நடத்தப்படும்போது, நாம் பிரகாரத்தை வலம் வரக்கூடாது.

சிவபெருமான் குளிர்ச்சியை விரும்புபவர். அதனால்தான் அவர் தலையில் கங்கையை சூடி, பனிமலையான கயிலையில் வீற்றிருக்கிறார். அக்னி நட்சத்திர காலத்தில் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்வது நற்பலன்களை தரும் மற்றும் கோடை வெம்மையால் ஏற்படும் நோய் தாக்குதல்களில் இருந்தும் அவர் நம்மை காத்திடுவார். சிவனுக்கு, கார்த்திகை மாதங்களில் நடக்கும் சங்காபிஷேகத்தை பார்ப்பது பெரும் புண்ணியத்தை தரும். வலம்புரி சங்கு அபிஷேகம் பன்மடங்கு அதிக பலன்களை தரும்.

சிவராத்திரியன்று சிவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்கள்..

முதல் சாமம்: பஞ்சகவ்ய அபிஷேகம்.

இரண்டாம் சாமம்: சர்க்கரை, பால் , தயிர் , நெய் கலந்த பஞ்சாமிர்தம் அபிஷேகம்.

மூன்றாம் சாமம்: தேன் அபிஷேகம்.

நான்காம் சாமம்: கரும்புச்சாறு அபிஷேகம்.

ஆலயங்களும் வித்தியாசமான விசேஷ அபிஷேகங்களும்:

அபிஷேகத்தினால், இறைவன் குளிர்ந்து அருள்புரிவதாக ஐதீகம். சில ஆலயங்களில் வித்தியாசமான அபிஷேகங்கள் இறைவனுக்கு செய்யப்படுகின்றன. அவற்றில் சில:

திருப்புறம்பியம் பிரளயங்காத்த விநாயகருக்கு ஆண்டு தோறும் விநாயக சதுர்த்தி தினத்தன்று, இரவு மட்டுமே குடம் குடமாக தேனால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதைத் தவிர மற்ற நாள்களில் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. அபிஷேகம் செய்யப்படும் தேன் முழுவதும் இந்த விநாயகர் திருமேனியில் உறிஞ்சப்படுவதும், அபிஷேக வேளையில், விநாயகர் செம்பவள மேனியராய் காட்சி தருவது வேறு எங்கும் காண முடியாதது.

தில்லைக்காளிக்கு தினமும் நல்லெண்ணெய் அபிஷேகம் மட்டுமே நடைபெறுகின்றது. காளி சாந்தம் அடையக்கூடாது என்பதற்காக உஷ்ணம் தரும் எண்ணையான நல்லெண்ணை மட்டுமே உபயோகிக்கின்றார்களாம். உடம்பு முழுவதும் மஞ்சளினால் ஆன குங்குமம் கொட்டப்பட்டு (அதைக் காப்பிடுதல் என்று கூறுகிறார்கள்), வெள்ளைப் புடவையால் உடல் மறைக்கப்பட்டு உள்ளது. கண்கள் மட்டும் ஜொலிக்கும் வகையில் வெள்ளை நிறத்தில் காட்சி தருகின்றது. தில்லை காளியை தரிசிப்பவர்கள் கண்டிப்பாக அவரின் உக்ரஹமான கண்களை உற்று நோக்கி அவரை வேண்டிக் கொண்டால் நற்பலன்கள் கிட்டும்.

திருச்சூர் வடக்கு நாத சுவாமிக்கு தினசரி நெய்யால் மட்டுமே அபிஷேகம். லிங்கத்தின் மேல் அபிஷேகம் செய்யப்பட்ட நெய்யை வாங்கிச் சாப்பிட்டால், நாள்பட்ட நோய்கள் தீரும். குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும். மாணவர்களுக்கு நினைவுத்திறன் அதிகரிக்கும்.

அருவியின் ஓசை கேட்டுக் கொண்டே இருப்பதால் குற்றாலநாதருக்கு தலைவலி வராமல் இருக்க காலையில் நாற்பத்திரண்டு வகையான மூலிகை சாற்றில் நல்லெண்ணெய் சேர்த்து தயாரித்த தைலத்தில் அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த அபிஷேகத் தைலம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. வாதநோய், வாத வலி, உடல் வலி, முதுகு வலி, தீராத தலைவலி, வயிற்று வலி, கண் வலி உள்ளவர்கள், இதனை தடவி சுகம் பெறுகிறார்கள்.

சென்னிமலை முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படும் தயிர், புளிப்பதில்லை என்பதே இந்த ஆலயத்தின் அதிசய நிகழ்வாகும்.

திருச்செந்தூரில் ஜெயந்திநாதர், சூரனை சம்ஹாரம் செய்தபின், பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுவார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும். அர்ச்சகர், கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார். இதை சாயாபிஷேகம் என்பர். “சாயா” என்றால் “நிழல்” எனப்பொருள். போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக இந்த அபிஷேகம் நடக்கும். இதை, முருகப்பெருமானே, கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம்.

திருநெய்த்தானம் நெய்யாடியப்பருக்கு நெய்யால் அபிஷேகம் ஆன பின்பு வெந்நீர் அபிஷேகம் செய்விப்பது இந்த ஸ்தலத்தின் சிறப்பாகும்.

ஸ்ரீசெஞ்சடைநாதர் சிவன் கோவிலில், திருவலஞ்சுழி எனும் வெள்ளை வாரணப் பிள்ளையார் கடல்நுரையாலானவர். அளவில் சிறியவர். இவருக்கு அபிஷேகம் கிடையாது. பச்சைக் கற்பூரம் மட்டுமே சாற்றுவர்.

நாமும் பல ஆலயங்களுக்கு சென்று அபிஷேகப் பொருட்களை கொடுத்து அபிஷேகத்தை பார்த்து பிறந்த பிறவியின் பயனைப் பெறுவோம்.

Comments

Popular posts from this blog

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..

உண்மை பக்தி எது ?

ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்...