திருவிளையாடல் புராணம் தந்த பரஞ்சோதி முனிவர்...

திருவிளையாடல் புராணம் தந்த பரஞ்சோதி முனிவர்... - ஆரூர் சுந்தரசேகர்.
 
தமிழ் மொழியில் உள்ள புராணங்களுள் மூன்றினை சிவபெருமானின் மூன்று கண்களாகப் போற்றுகின்றனர்.

சேக்கிழாரின் பெரியபுராணம் சிவனின் வலக்கண்ணாகவும், பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம் இடது கண்ணாகவும், கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணம் சிவனின் நெற்றிக் கண்ணுடன் போற்றி சிறப்பிக்கப்படுகின்றன. திருவிளையாடல் புராணத்தில், சிவபெருமானே பூலோகத்திற்கு வந்து திருவிளையாடல்கள் செய்ததாக அமைந்துள்ளது. இந்த புராணம் மதுரை மாநகரில் சிவபெருமான் நிகழ்த்திய அறுபத்து நான்கு திருவிளையாடல்களை பற்றிக் கூறுகிறது.

மதுரை பற்றி பல புராணங்கள் இருந்தாலும், மிகுந்த சிறப்பைக் கொண்டது திருவிளையாடல் புராணம் மட்டுமே. வியாசர் இயற்றிய வடமொழி நூலான ஸ்கந்த புராணத்தில் உள்ள ஹாலாஸ்ய மகாத்மியத்தை பின்பற்றியே இந்நூல் எழுதப்பட்டது என ஒரு கருத்தும் உள்ளது.

பரஞ்சோதி முனிவர் யார்?

பரஞ்சோதி என்ற பெயருடன் தமிழகத்தில் புகழுடன் விளங்கியவர்கள் இருவர். ஒருவர் பெரிய புராணத்தில் கூறப்படும் அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவரான சிறுதொண்டராகிய பரஞ்சோதியார். மற்றவர் திருவிளையாடல் புராணம் இயற்றிய பரஞ்சோதி முனிவர். இவர் சோழவளநாட்டில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வேதாரண்யம் எனப்படும் திருமறைக்காட்டில் 16 ஆம் நூற்றாண்டில் சுத்த சைவ வேளாளர் மரபில் மீனாட்சி சுந்தர தேசிகர் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். பரஞ்சோதி முனிவர் இளம் வயதில் தம் தந்தையிடம் இருந்து தமிழ், சமஸ்கிருதம், சித்தாந்த சாஸ்திரம், சைவ திருமுறைகள் ஆகியவற்றை கற்றுக்கொண்டார். சிவபெருமானிடத்தும், சிவனடியார்களிடத்தும் மிகுந்த பக்தி கொண்டவர். இவர் தமிழகத்திலுள்ள சிவபெருமானின் பல திருத்தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்து கொண்டிருந்தார். ஒருமுறை மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசித்து விட்டு மண்டபம் ஒன்றில் தங்கியிருந்த போது, அவரது கனவில் மதுரை மீனாட்சி அம்மன் தோன்றி, சிவபெருமானின் திருவிளையாடல்களை தமிழில் பாடும்படி சொன்னார். அன்னையின் திருக்காட்சியை கண்ட பரஞ்சோதி முனிவர் தெள்ளுதமிழில் பாடல்களை எழுதினார். அதுவே திருவிளையாடல் புராணம்.
கி.பி.16-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் மதுரை மாநகரை ஆண்ட வீரசேகர சோழன் என்பவர் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணத்தை மதுரையில் அரங்கேற்றினார்.

திருவிளையாடல் புராணம்:

“சத்தியாய் சிவமாகி தனிப்பர
முத்தியான முதலைத்துதி செய
சுத்தியாகிய சொற்பொருள் நல்குவ
சித்தியானை தன் செய்யபொற் பாதமே”
என்ற அழகிய விநாயகர் காப்பு செய்யுளுடன் தொடங்கி, திருவிளையாடல் புராணத்தை பரஞ்சோதி முனிவர் எழுதியுள்ளார். தொடர்ந்து மதுரையின் சிறப்பு, புராண வரலாறு ஆகிய முன்னுரைக்குப் பின், மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலுள்ள பொற்றாமரைக் குளத்தின் சிறப்பையும் எழுதியுள்ளார்.

திருவிளையாடல் புராணமானது மதுரைகாண்டம், கூடற்காண்டம், திருஆலவாய்காண்டம் என மூன்று காண்டங்களைக் கொண்டுள்ளது. மதுரைக்காண்டத்தில் பதினெட்டுப் படலங்களும், கூடற்காண்டத்தில் முப்பது படலங்களும், திருஆலவாய்காண்டத்தில் பதினாறு படலங்களும் உள்ளன. இந்நூலில் மொத்தம் மூவாயிரத்து முந்நூற்று அறுபத்து மூன்று விருத்தப்பாக்கள் உள்ளன.

இந்நூலில் மதுரைக்காண்டம் தொடங்குவதற்கு முன்னதாக கீழ்கண்ட காப்பிய உறுப்புகள் இடம் பெற்றுள்ளன...

1. காப்பு, 2.வாழ்த்து, 3. நூற்பயன், 4. கடவுள் வாழ்த்து, 5. பாயிரம், 6. அவையடக்கம், 7. திருநாட்டுச்சிறப்பு, 8. திருநகரச்சிறப்பு, 9. திருக்கையிலாயச்சிறப்பு, 10. புராணவரலாறு, 11. தலச் சிறப்பு, 12. தீர்த்தச் சிறப்பு, 13. மூர்த்திச் சிறப்பு, 14. பதிகம் ஆகியவை ஆகும்.

இவை 343 பாடல்களால் பாடப்பட்டுள்ளன. 344-வது செய்யுளில் இருந்து சிவபெருமானின் திருவிளையாடல் தொடங்குகிறது.

இந்திரன் பழி தீர்த்த படலம் முதல் வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம் வரை மதுரைக்காண்டத்தில் இடம் பெற்றுள்ளன.

நான் மாடக்கூடலான படலம் முதல் நாரைக்கு முத்தி கொடுத்த படலம் வரை கூடற்காண்டத்தில் உள்ளன.

திருவாலவாய் ஆக்கிய படலம் முதல் வன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம் வரை திருஆலவாய்காண்டத்தில் இடம் பெற்றுள்ளன.

மேலும், இவர் மதுரை அறுபத்து நான்கு திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா, மதுரை பதிற்றுப்பத்தந்தாதி, வேதாரணிய புராணம் ஆகிய பாடல்கள் இயற்றியுள்ளார்.

பரஞ்சோதி முனிவர் வேதாரண்யத்திற்கு அருகில் சேகல் என்ற மடப்புரத்தில் ஜீவசமாதி அடைந்தார். அவர் அடக்கமான இடம் அவரால் அமைக்கப்பட்ட சிவாலயத்தின் மூலையில், பிள்ளையார் கோவிலாக விமானத்துடன் காட்சி அளிக்கிறது.

Comments

Popular posts from this blog

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..

உண்மை பக்தி எது ?

ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்...