ஶ்ரீமத்வாச்சாரியாரியாரும்... உடுப்பி கிருஷ்ணர் கோயிலும்... -
ஶ்ரீமத்வாச்சாரியாரியாரும்... உடுப்பி கிருஷ்ணர் கோயிலும்... - ஆரூர்.சுந்தரசேகர்.
நம் நாட்டில் எத்தனையோ மகான்கள் தோன்றி ஞானத்தேடலில் ஈடுபட்டு பல தத்துவ விளக்கங்களை கொடுத்துள்ளனர். அத்வைத்திற்கு ஆதிசங்கரரைப் போல், விசிஷ்டாத்வைத்திற்கு ஶ்ரீராமனுஜரைப் போல், த்வைத கொள்கைகளை பரப்புவதற்கு அவதாரம் எடுத்தவர் ஶ்ரீமத்வாச்சாரியாரியார். “மத்வர்” என்ற சொல்லுக்கு “யாராலும் வெல்ல முடியாதவர்” என்ற பொருள் உண்டு. இவர் உடல் பலத்திலும், மந்திர சக்தியிலும், சூட்சும செய்கைகளிலும் கைதேர்ந்தவர். ஆஞ்சநேயர், பீமன் இவர்களுக்கு பிறகு வாயு பகவான் அவதாரமாக உதித்தவராக மத்வர் கருதப்படுகிறார்.
இறைவனிடம் பயபக்தியுடன் இருப்பதும், அனைவரிடமும், அனைத்து ஜீவராசிகளிடமும் அன்பு செலுத்துவதும், தன் கடமைகளை பணிவுடன் செய்வதும், வாழ்க்கையில் நற்பணிகள் செய்து அர்ப்பணிப்பதே வாழ்வின் தத்துவம் என்று மக்களுக்கு எடுத்துச் சொல்லி இருக்கிறார். இவரது தத்துவங்களை பின்பற்றியவர்களை மாத்வர் என்று அழைக்கப்பட்டனர்.
ஶ்ரீமத்வாச்சாரியாரியார் அவதாரம்:
கி.பி 1238 விளம்பி ஆண்டு விஜயதசமியன்று கர்நாடக மாகாணத்தில் உடுப்பிக்கு அருகில் உள்ள பாஜகக்ஷத்திரம் என்ற சிற்றூரில் வேதவதி - மத்யகேஹ பட்டர் தம்பதியருக்கு மகனாக அவதரித்தார். குழந்தைக்கு பெற்றோர் வைத்த பெயர் வாசுதேவன். அவர் ஆறு வயது சிறுவனாக இருந்தபோது மத்யகேஹ பட்டர் வாங்கியிருந்த கடனை திரும்பக் கேட்டு ஒருவன் அவரது வீட்டிற்கு வந்தான். அந்தச் சமயத்தில் மத்யகேஹ பட்டர் ஊரில் இல்லை. கடன் கொடுத்தவன் கடனை திருப்பி கொடுக்கும்படி தொந்தரவு செய்தான். இதனை பார்த்த வாசுதேவன் சமையலறைக்குச் சென்று தனது சிறு கைகளால் புளியங்கொட்டைகளை அள்ளிக் கொண்டு வந்து ‘உனக்கு பணம்தானே வேண்டும், இதோ வாங்கிக் கொள்’ என்று கடன்காரன் கையில் கொடுத்தான். அந்த புளியங்கொட்டைகள் எல்லாம் தங்க காசுகளாக மாறி மின்னியது. இதைப் பார்த்த அவரது தாய் ஒரு ஜோதிடரிடம் வாசுதேவனது கைரேகைளை பார்க்கச் சொன்னார், கைரேகைகளை பார்த்த ஜோதிடர் திகைப்படைந்து. அவரது அன்னை வேதவதியிடம் “அம்மா உங்கள் மகன் ஓர் அவதார புருஷர். வருங்காலத்தில் சிறந்த ஞானியாக பாரதம் முழுவதும் வலம் வந்து ஒளி வீசுவார்” என்றார். இவருக்கு சிறுவயதில் நீச்சல், ஓட்டம் போன்றவற்றில் ஆர்வம் அதிகம். ஏழாவது வயதில் வாசுதேவனுக்கு உபநயனம் செய்வித்து குருகுலத்துக்கு அனுப்பினர். பதினாறாம் வயதில் வீட்டைத் துறந்து, அச்சுதப்பிரக்ஞர் என்பவரை குருவாக ஏற்றுக்கொண்டு வேதங்களையும், அத்வைத கொள்கைகளையும் படித்து சிறந்து விளங்கினார் அவருக்கு அச்சுதப்பிரக்ஞர் “பூர்ணபிரக்ஞர்” என்று பட்டம் கொடுத்தார்.
ஸ்ரீமத்வாச்சார்யர் இயற்றிய நூல்கள்:
ஸ்ரீமத்வாச்சார்யர் பகவத்கீதை, உபநிஷத்துகள், பிரும்ம சூத்திரம் ஆகிய மூன்றிற்கும் விரிவான உரைகள் எழுதினார்.
அதில் த்வைத தத்துவத்தை விளக்கியுள்ளார். தசபிரகரணங்கள், உபநிஷத் விளக்கங்கள், ரிக்வேத விளக்கம், அனுவியாக்கியானம் முதலான மொத்தம் முப்பத்தி ஏழு நூல்கள் எழுதி உள்ளார். இந்த நூல்களுக்கு சர்வ மூலக்கிரந்தங்கள் என்று பெயர்.
ஒரு ஜீவன் கீழ்கண்ட மூன்று வழிகளால் உயர் ஞானம் பெற முடிகின்றது என்று ஸ்ரீமத்வாச்சார்யர் கூறுகிறார். அவை...
பிரத்யட்சம் - நேரடியனுபவமாகக் கண்டறிதல்.
அனுமானம் - ஒன்றை வைத்து ஒன்றை ஊகித்து உணர்தல்.
ஆகமம் - சான்றோர்களின் அனுபவமாகிய வேத நூல்களை படித்து அறிதல்.
ஸ்ரீமத்வாச்சார்யர் ஒரே நேரத்தில் அனுமனாக ராமருக்கும், பீமனாக கிருஷ்ணருக்கும், மத்வராக வேதவியாஸருக்கும் பூஜை செய்ததைப் பார்த்த இவருடைய சிஷ்யர் த்ரிவிக்ரிம பண்டிதாசாரியார் “ஹரி வாயுஸ்துதி” என்ற நூலை இயற்றினார். அதை பாராயணம் செய்தால் நமது அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை.
உடுப்பி கிருஷ்ணர் கோயில்:
ஶ்ரீமத்வாச்சாரியாரியார் கனவிலேயே ஒரு நாள் உடுப்பி கிருஷ்ணன் விக்ரஹம் தான் இருக்கும் இடம் பற்றிக் கூறி, அதனை மீட்டு உடுப்பியில் கோயில் கட்டி பிரதிஷ்டை செய்யும்படி கட்டளையிட்டார். அதன்படி ஒரு நாள், மல்பே கடற்கரையில் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் போது, ஒரு கப்பல் புயலில் ஆபத்துக்குள்ளாகியது.
கரையில் இருந்த மத்வர் தன் வஸ்திரத்தை காற்றில் அசைத்த பின், கப்பல் ஆபத்திலிருந்து தப்பி கரை சேர்ந்தது. இதனால் மகிழ்ந்த அக்கப்பலின் தலைவர் அவரை வணங்கி, நன்றி தெரிவித்து, தன்னிடமிருந்து ஏதாவது ஒரு பரிசு வாங்கிக் கொள்ளும்படி வற்புறுத்தினார். உடனே கப்பலின் அடித்தளத்தில் கோபி சந்தனத்தில் ஒரு பாறை இருப்பதாகவும், அது தனக்கு வேண்டும் என்றும் கூறினார். அவரும் அதனை எடுத்து கொடுத்து விட்டார். கோபிச்சந்தனத்தில் தன் கையை விட்டு சாளக்கிராமத்தினால் ஆன ஒரு அழகிய பாலகிருஷ்ண விக்கிரகத்தை வெளியே எடுத்தார் மத்வர்.
தானே அந்த அற்புதமான விக்கிரகத்தைத் தூக்கிக்கொண்டு சென்று உடுப்பியில் பிரதிஷ்டை செய்து 1285ம் ஆண்டு கிருஷ்ணர் கோயிலை நிறுவினார். அன்று ஸ்ரீகிருஷ்ணன் சன்னிதியில் ஶ்ரீமத்வாச்சாரியாரால் ஏற்றப்பட்ட ஒரு நெய் தீபம் இன்றும் அணையாமல் பாதுகாக்கப்படுகிறது.
உடுப்பியில் உள்ள கிருஷ்ணர் கோயில் தென்னிந்தியாவிலேயே மிகவும் புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலமாகும். இந்தக் கோயிலில் உள்ள விசேஷம் இங்கு கிருஷ்ண பகவானை ஒரு ஒன்பது துவாரங்கள் கொண்ட ஜன்னல் வழியாக தரிசனம் செய்கிறார்கள். இந்த தரிசனம் பக்தர்களுக்கு எல்லா வளத்தையும் கொடுக்கும் என்பது ஐதீகம்.
வாயுவாகவே மறைந்தார்:
1317ஆம் வருஷம் தை மாதம் சுக்லபக்ஷ நவமியில் தனது 79 வயதில் அனந்தேஸ்வரர் கோவிலில் தனது சிஷ்யர்களுக்கு ஶ்ரீமத்வாச்சாரியாரியார் உபநிடதம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தபோது, வானிலிருந்து மலர்மாரி பொழிந்து, அவரை மூடி ஒரு பூங்குன்று உருவானது. அந்த மலர்க் குவியலை விலக்கிப் பார்த்த போது அவரைக் காணவில்லை. வாயுவின் அவதாரமான அவர் வாயுவாகவே மறைந்து விட்டார். அவர் இன்றும் பத்ரிகாஸ்ரமத்தில் வேதவியாசர் அருகில் அமர்ந்து பாடம் கேட்பதாக முழுநம்பிக்கை.
உடுப்பியில் கோயிலுக்கு வெளியே நினைவு மண்டபத்தில் ஶ்ரீமத்வாச்சாரியாரியாரின் திருவுருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீமத்வாச்சாரியாரியாரை தினமும் தியானித்து அவர் அருள் பெறுவோம்!!
மத்வரின் மங்கலாசரண சுலோகம்:
அப்ரமம் பம்கரம் ஹிதம் அஜடம் விமலம்ஸதா
ஆனந்ததீர்த்த மதுலம் பஜே தாபத்ரயாபஹம்!!!
Comments
Post a Comment