பஞ்ச பூதங்களும், பிரபஞ்சமும்...

பஞ்ச பூதங்களும், பிரபஞ்சமும்... ஆரூர் சுந்தரசேகர்.

பஞ்ச பூதங்களின் மொத்த உருவே இப்பிரபஞ்சம்.

“ஆகாசாத் வாயு: வாயோரக்னி: அக்னேராப: அத்ப்ய: ப்ருதிவீ” என்கிறது உபநிஷதம்.

உலகில் சிருஷ்டிக்கு அடிப்படை இந்த ஐந்துமே ஆகும்

அதாவது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் பஞ்ச பூதங்கள்.

இதேபோல மனித உடலும் ஐம் பூதங்களால் ஆன சிறிய பிரபஞ்சம் என்கிறார்கள் சித்தர்கள். இதைத்தான் திருமூலர் தன்பாடலில்,

“அண்டத்திலுள்ளதே பிண்டம் பிண்டத்திலுள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே அறிந்துதான் பார்க்கும் போது” என குறிப்பிட்டுள்ளார்.

“பரமாய சக்தியுள் பஞ்சமா பூதம்
தரமாறில் தோன்றும் பிறப்பு” என்கிறார் ஒளவையார்.

பஞ்சபூதங்கள் என அழைக்கப்படும் நீர், நிலம், நெருப்பு, காற்று,ஆகாயம் ஆகிய ஐந்து தன்மைகள் ஒன்றிணைந்தே இப்பிரபஞ்சம் தோன்றியுள்ளது. கரு நிலையில் உள்ள உண்மை சக்தி தன்னை வெளிப்படுத்துவதற்காக பஞ்சபூதங்களாக உருமாறுகிறது. இதன் கலவை மாறின் புதிய புதிய பிறப்புகள் தோன்றுகிறது என்று ஒளவையார் பாடியுள்ளார்.

“நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்” என்கிறது தொல்காப்பியம்

“ரகு பிறந்தவுடன் ஐம்பூதங்களும் புதுப்பொலிவு எய்தின” என்று இரகுவம்சம் என்னும் நூலில் மகாகவி காளிதாசர் கூறியுள்ளார்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சித்தர்களால் தொகுத்து தத்துவங்களாகவும் விதிகளாகவும் வழங்கியது பஞ்சபூதத் தத்துவம். அவை...

பிருத்வி தத்துவம் (நிலம்)

ஆப தத்துவம் (நீர்)

தேஜ் தத்துவம் (நெருப்பு)

வாயு தத்துவம் (காற்று)

ஆகாஷ தத்துவம் (ஆகாயம்)

இந்த ஐந்து அடிப்படை தத்துவங்களே மனித உடலில் மட்டும் அல்லாது இந்த உலகில் உள்ள அசையும், அசையாப் பொருட்கள் அதாவது தாவரங்கள், விலங்குள், மலை, கடல் என அனைத்துப் பொருட்களின் தோற்றத்திற்கும் அடிப்படையாக அமைந்துள்ளன.

இந்த ஐந்தும் வாழ்க்கைக்கும் வாழ்வின் ஆதாரத்திற்கும் இன்றியமையாதவை. அதனால்தான் சித்தர்கள் இந்த உடலே ஒரு கோயில் என்றும் இதனுள் உறையும் ஆத்மாவே இறைவன் என்று கூறினார்கள். இதற்கு மூலமான சிவபெருமானே பஞ்ச தத்துவங்கள் கொண்டு பஞ்ச பூதத்தலங்கள் எனப்படும் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, காளஹஸ்தி, சிதம்பரம், திருவானைக்காவல் ஆகிய ஸ்தலங்களில் பஞ்சபூதங்களின் சாட்சியாகவும் காட்சியாகவும் அருள்பாலிக்கின்றார்.

நிலம்:

ஐம் பூதங்களில் முதன்மையானதாக நிலம் விளங்குவது குறிப்பிடத்தக்கது. நிலத்தை பூமி, மண், பிருத்திவி என்று அழைக்கின்றனர்.

‘‘மண்மகள், நிலமகள், நிலமடந்தை, பூமகள், பூமித்தாய்’’ போன்ற சொற்கள் நிலத்தினை சம்பந்தப் படுத்தி பெண்களின் பெருமையை கூறுகிறார்கள்

மண்ணில் பிறந்த அனைத்தும் மண்ணுக்குள்ளேயே மக்குவது பெரிய வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்துகிறது.

காஞ்சிபுரத்தில், பார்வதி தேவி பூமியிலிருந்து மண் எடுத்து, பிடித்த லிங்கமே இத்தலத்தில் ஏகாம்பரேஸ்வரராக அருள்வதால் இது பூமி தலமாகக் கொண்டாடப்படுகிறது.

நிலத்தை பற்றிய பழமொழிகள்...

“மண்ணும் பெண்ணும் ஒண்ணு” (பொறுமைக் குணத்தை காட்டுகிறது).

“தின்ன மண்ணுக்குச் சோகை” (தவறு செய்பவன் தண்டனையில் இருந்து தப்ப முடியாது).

நமது உடலில் எலும்பு, தோல், நரம்பு, தசை, முடி இவை அனைத்தும் மனித உடம்பின் மண் கூற்றினை கொண்டவை.

நீர்:

உலக வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாக நீர் விளங்குகிறது. நீரினை புனல் என்று அழைக்கின்றனர். இந்நீரை, ‘அமிர்தம்’ என்று குறிப்பிடுவர். நீருக்கு குணம், மணம், நிறம், உருவம், எதுவுமில்லை. எதில் கொள்கிறோமோ அதன் வடிவத்தில் இருக்கும். நீரின் குணம் பொருட்களை தூய்மைப்படுத்துவது. கங்கை, காவிரி போன்ற ஆறுகளை இந்துக்களின் புனிதமானவைகளானதால், இந்த ஆறுகளில் முழுகி குளிப்பதினால் செய்த பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். மற்றும் தானம், சத்தியம் செய்யும் போது நீரை தாரை வார்த்து சாட்சியாக வைத்து செய்கின்றனர்.

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கருவறையில் லிங்கத்தின் அடிப்பாகத்தில் நீருற்று ஏற்பட்டு அதன் இடையில் ஈசன் எழுந்தருளி நீரின் தத்துவத்தை உணர்த்தியுள்ளார்.

நீர் பற்றிய பழமொழிகள்:

தாயைப் பழித்தாலும் தண்ணீரை பழிக்கக்கூடாது என்ற பழமொழி மூலம் நீர் என்ற பூதத்தின் சிறப்பு தெரியவருகின்றது.

“நீரடித்து நீர் விலாகாது” உறவுகள் விட்டுக் கொடுத்து நீர்போல் சேர்ந்து வாழவேண்டும் என இந்த பழமொழி எடுத்துரைக்கின்றது.

“உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பான்” தவறு செய்து வாழ்பவன் நிச்சயமாக தண்டனையை அனுபவிப்பான் என்பதை, இந்த பழமொழி எடுத்துரைக்கிறது.

உடலான ஜீவனுக்கு நீர் ஆதாரம். இரத்தம், சிறுநீர், மூளை, கொழுப்பு ஆகியன நீரின் தன்மை கொண்டவை.

காற்று:

காற்று உயிர் வாழ்க்கைக்கு முக்கியமானதாக விளங்குகின்றது. காற்று எவ்வளவு இன்றியமையாதது என்பதை நாம் இழுக்கும், விடும் மூச்சே நமக்கு ஒவ்வொரு கணமும் உணர்த்துகிறது. ஒருவரது மூக்கில் இருந்து மூச்சுக் காற்று வரவில்லை என்றால் அவர் உயிர் பிரிந்தது என்று அர்த்தம்.

காற்றினை வளி, உயிர்வளி (ஆக்ஸிஜன்) என்றும் கூறுவர்.

காளஹஸ்தியில் சிவபெருமான் காற்றையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் காளஹஸ்தீஸ்வரராக காற்றின் தத்துவத்தை விளக்கி அருளுகின்றார்.

காற்றை பற்றிய பழமொழிகள்:

“காற்றுள்ள போதே தூற்றிக் கொள்” நல்லவற்றைச் செய்து புண்ணியத்தினைத் தேடிக்கொள் என்பதனை இந்த பழமொழி கூறுகின்றது.

“ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்”

“ஆடியில காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும்” ஆடியில் காற்றின் வேகத்தை, வேகத்தைப் பொறுத்தே அடுத்து வரும் ஐப்பசி மாதத்தில் நன்கு மழை பொழியும் என்ற பழமொழி வாயிலாக நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.

நாம் ஓடுதல், நடத்தல், நிற்ப்பது, உட்காருவது, படுப்பது காற்றின் கூற்றினை கொண்டவை.

நெருப்பு:

ஐம்பூதங்களுள் மிகவும் வெப்பத் தன்மை வாய்ந்தது நெருப்பாகும். இந்நெருப்பினைத் தீ, அக்னி, தேயு என அழைக்கின்றனர். யாகத்தின் போது அக்னியின் பங்கு சிறப்பானது. யாகத்தில் போடப்படும் பொருட்களை அக்னி தேவர்களுக்கும் இறந்த முன்னோர்களுக்கும் கொண்டு செல்கிறது என்பது ஐதீகம்.

திருவண்ணாமலையில் நெருப்பின் வடிவாய் இருக்கும் சிவபெருமான். அருணாசலேஸ்வரராக எழுந்தருளி நெருப்பின் தத்துவத்தை உணர்த்துகிறார்.

நெருப்பை பற்றிய பழமொழிகள்:

“நெருப்பில்லாமல் புகையுமா?” ஒரு பொருள் இருந்தால் மட்டுமே கருத்தானது தோன்ற முடியும் என்ற பழமொழி மூலம் நமது முன்னோர் கூறியிருக்கிறார்கள்.

“நெருப்பை மடியில் கட்டின மாதிரி இருக்கிறது” இதில் நெருப்பு என்பது குறியீடாக வைத்து சொல்லப்பட்டுள்ளது.

நம் உடலில் உணவு, தூக்கம், அச்சம், சேர்க்கை, சோம்பல் முதலியவை நெருப்பின் கூறாகும்.

ஆகாயம்:

ஆகாயம் மற்ற நான்கு பூதங்களான காற்று, தீ, நீர் மற்றும் மண் ஆகியவைகள் தோன்றக் காரணமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனை முடிவில்லாத பேரண்டம், வெட்டவெளி என்றும் அழைப்பார்கள். ஆகாயம் பல்வேறு வியக்கத் தக்க நிகழ்வுகளைத் தன்னிடத்தே நாள்தோறும் நிகழ்த்தி வருகின்றது.

சில உபநிடதங்கள் ஆகாயம் ஒரு உருவமற்ற, குணங்களற்ற, எதனுடனும் சேர்க்கை இல்லாத காரணத்தினாலும், வெற்றிடம் என்பதாலும் பிரம்ம தத்துவத்திற்கு எடுத்துக்காடாக ஆகாயத்தை கூறுகிறது.

பேரண்டத்தையும், இனங்காண முடியாத ரகசியங்களையும் தன்னுள்ளே அடக்கியவரான பரமேஸ்வரன் சிதம்பரத்தில் திருமூலநாதராக எழுந்தருளி ஆகாயத்தின் தத்துவத்தை உணர்த்துகிறார்.

ஆகாயம் பற்றிய பழமொழிகள்:

“வானம் நினைத்தால் மழை
மனிதன் நினைத்தால் வினை” வானம் அனைவருக்கும் நன்மை தரக்கூடிய மழையைத் தந்து உலகைக் காப்பாற்றுகிறது என்று இந்த பழமொழி எடுத்துக்கூறுகின்றது.

“கூரைஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானத்தில் ஏறி
வைகுண்டம் போனானாம்” என்ற பழமொழி சிறிய வேலையையே செய்ய இயலதவன் எவ்வாறு பெரிய வேலைகளை செய்வான் என எடுத்துரைக்கின்றது.

நம்முடைய உடலில் ஏற்படும் காமம், குரோதம், ஈயாமை, மோகம், கொழுப்பு ஆகியன ஆகாயத்தின் கூறுகளாகும்.

பஞ்ச பூத ஆலய சிறப்பு:

காஞ்சிபுரம் மண் (ப்ருத்வீ) : ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் (ப்ருத்வீ லிங்கம்),

திருவானைக்காவல் நீர்: ஜம்புகேஸ்வரர் ஆலயம் (அப்பு லிங்கம்),

திருவண்ணாமலை நெருப்பு: அருணாச்சலேஸ்வரர் ஆலயம் (அக்னி லிங்கம்),

காளஹஸ்தி காற்று: காளஹஸ்தீஸ்வரர் ஆலயம் (வாயு லிங்கம்),

சிதம்பரம் ஆகாயம்: நடராஜர் ஆலயம் (ஆகாச லிங்கம்)

ஆகிய இந்த பஞ்சபூத ஸ்தலங்களை கிட்டத்தட்ட ஒரே நேர்க்கோட்டில் எந்தவித அறிவியல் உபகரணங்கள் இல்லாமல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் அமைத்துள்ளனர் என்பது ஒரு சிறப்பம்சமாகும்.

பஞ்ச பூதங்களை வழிபட்டால் பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்ட மனித உடல் தூய்மை அடையும். உடல் தூய்மை அடைந்தால் மனித இதயத்தில் உறையும் இறைவனை தரிசனம் செய்ய இயலும்.

நாமும் அவ்வாறே செய்து நற்பலன்களை அடைவோம்!

Comments

Popular posts from this blog

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..

உண்மை பக்தி எது ?

ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்...