அஷ்டதிக் பாலகர்களின் வழிபாட்டு பலன்கள்!!

அஷ்டதிக் பாலகர்களின் வழிபாட்டு பலன்கள்!!
ஆரூர் சுந்தரசேகர்.

நம்மைச் சுற்றி எட்டு திசைகளிலும் இருந்து கொண்டு, பூமியில் நாம் செய்யும் நல்ல காரியங்களையும், தீய காரியங்களையும் அஷ்டதிக் பாலகர்கள் கண்காணித்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்கிறது வேதங்கள்.

அஷ்டம் என்றால் எட்டு என்று பொருள், திக் என்றால் திசை எனவே அஷ்டதிக் என்று அழைக்கப்படுகிறது.

கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு ஆகியவற்றையே அஷ்டதிக் என்கிறோம். இந்த அஷ்டதிக் அதிபதிகளான இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோர் பூமியை காத்து அருள் புரிகின்றனர்.

அஷ்டதிக்கு பாலகர்களை ‘எண்திசை நாயகர்கள்’ என்றும் அழைக்கிறோம். இவர்களை வணங்கினால், சகல சௌபாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.

அஷ்டதிக் பாலகர்களை ஓவியங்களாகவும், சிலைவடிவிலும் கோபுரங்கள், கோயில் மூலஸ்தான வாயில்கள், கோயில் பிரகார சுவர்கள், கோயில் மேற்கூரைகள் போன்றவற்றில் காணலாம்.

பண்டைய தமிழர்களின் கட்டிடக் கலைகள், வழிபாட்டு முறைகள், வாழ்வியல் நடைமுறைகள் எல்லாம் இதனையொட்டியே அமைந்திருந்தன என்பதற்கான பல சான்றுகள் கிடைத்துள்ளன.

இனி ஒவ்வொரு அஷ்டதிக் பாலகர்களை பற்றிக் காண்போம்.

இந்திரன்:

இவர் கிழக்கு திசைக்கு அதிபதி.
இவரே அஷ்டதிக்கு பாலகர்களின் தலைவர்
இவரது மனைவி பெயர் இந்திராணி.
இவரின் வாகனம் ஐராவதம் என்னும் வெள்ளை யானை.
இவரின் ஆயுதம் மின்னலைப் போன்ற வலிமையுள்ள வஜ்ராயுதம்.
இவர் தேவலோகத்தின் அரசன் ஆவார்.
இவர் ஐஸ்வர்யங்களை வாரிவழங்கி ஆரோக்கியம் அளிப்பவர்.

இந்திர காயத்ரி மந்திரம்:

“ஓம் சஹஸ்ர நேத்ராய வித்மஹே வஜ்ர ஹஸ்தாய தீமஹி தந்நோ இந்திர ப்ரசோதயாத்.”

அக்னி:

இவர் தென்கிழக்கு திசைக்கு அதிபதி.
இவரே நெருப்பிற்கான அதிகாரம் உடையவர்.
இவரது மனைவி பெயர் சுவாகா தேவி.
இவரின் வாகனம் ஆட்டுக்கிடா.
இவரின் ஆயுதம் தீ ஜூவாலையுடன் கூடிய வேல். வேள்வின்போது இடப்படும் நிவேதானப் பொருட்களை அக்னி மற்ற தெய்வங்களுக்கு எடுத்துச் செல்வதாக ஐதீகம்
இவர் உடலுக்கு ஒளியையும் வனப்பையையும் தருபவர்.

அக்னி காயத்ரி மந்திரம்:

“ஓம் மஹா ஜ்வாலாய வித்மஹே அக்னி தேவாய தீமஹி தந்நோ அக்னி ப்ரசோதயாத்.”

எமன்:

இவர் தெற்கு திசைக்கு அதிபதி.
இவர் தரும தேவன், காலதேவன், எமதர்மராஜா என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
இவரது மனைவி பெயர் குபேர ஜாயை.
இவரின் வாகனம் எருமைக் கிடா.
இவரின் ஆயுதம் சக்தி வாய்ந்த பாசக்கயிறு.
இவர் தேவர்களுள் மிகவும் மதி நுட்பம் மிகுந்தவர்.
இவர் மக்களின் வாழ்நாள் முடியும் நேரத்தை கணக்கிட்டு, அவரது உயிரை பறிக்கும் பணியைச் செய்து வருகிறார்.
இவர் தீவினையால் வரும் துன்பத்தை அகற்றி நல்வினை பயன்களைக் கொடுப்பவர்.

எமன் காயத்ரி மந்திரம்:

“ஓம் சூர்ய புத்ராய வித்மஹே மஹாகாளாய தீமஹி தந்நோ யம ப்ரசோதயாத்.”

நிருதி:

இவர் தென்மேற்கு திசைக்கு அதிபதி.
இவரது மனைவி பெயர் கட்கி.
இவரின் வாகனம் பிரேதம்.
இவர் கட்கம் என்னும் வாளை ஆயுதமாகக் கொண்டிருப்பவர்.
இவர் எதிரிகளால் ஏற்படும் அச்சத்தை போக்கி வீரத்தை தருபவர்.

நிருதி காயத்ரி மந்திரம்:

“ஓம் நிசாசராய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி தந்நோ நிருதி ப்ரசோதயாத்.”

வருணன்:

இவர் மேற்கு திசைக்கு அதிபதி.
இவர் மழையின் கடவுள் என்று போற்றப்படுகிறார். ஆறு, குளம், ஏரி, கடல் உள்ளிட்ட நீர்நிலைகள் இவரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது.
இவரது மனைவி பெயர் வாருணி.
இவரின் வாகனம் மகரம் என்னும் மீன் ஆகும்.
இவரின் ஆயுதம் வருணாஸ்திரம்.
இவர் ஐவ‌கை நிலங்களில் ஒன்றான நெய்தல் நிலத்திற்கு உரிய தெய்வமாக வணங்கப்படுகிறார்.
இவர் மழை தந்து பயிர்களையும் உயிர்களையும் காப்பவர். இவரை வணங்கினால் சிறந்த அறிவாற்றலும், உடலில் வலுவும் உண்டாகும்.

வருண காயத்ரி மந்திரம்:

“ஓம் ஜல பிம்பாய வித்மஹே நிலப்புருஷாய தீமஹி தந்நோ வருண ப்ரசோதயாத்.”

வாயு:

இவர் வடமேற்கு திசைக்கு அதிபதி.
இவர் வடிவமற்றவர். மக்களின் உயிர் மூச்சு, பிராணனுக்கு ஆதாரமாக இருப்பவர்.
இவரது மனைவி பெயர் வாயு ஜாயை.
இவரின் வாகனம் அழகிய மான்.
இவரின் ஆயுதம் அங்குசம்.
இவர் உலக இயக்கத்திற்கு முக்கியமான காற்றிற்கான கடவுள் ஆவார். அனுமானும், பீமனும் வாயு புத்திரர்கள் என்று புராணங்கள் கூறுகின்றன.
இவர் நீண்ட ஆயுளையும் பலத்தையும் தருபவர்.

வாயு காயத்ரி மந்திரம்:

“ஓம் தத்புருஷாய வித்மஹே ரகசிய சஞ்சாரய தீமஹி தந்நோ வாயு ப்ரசோதயாத்."

குபேரன்:

இவர் வடக்கு திசைக்கு அதிபதி.
இவர் செல்வத்திற்கும் அதிபதி.
இவரது மனைவி பெயர் சித்திரலேகா.
இவரின் வாகனம் குதிரை.
இவரின் ஆயுதம் சக்தி வாய்ந்த கதை.
இவர் திருப்பதி ஏழுமலையானுக்கு கடன் கொடுத்ததாகவும் குபேர வழிபாடு செல்வத்தினை பெருக்கும் என்பது ஐதீகம். இவர் சகல செல்வங்களையும் தந்து, சுக போக வாழ்வு தருபவர்.

குபேர காயத்ரி மந்திரம்:

“ஓம் யக்க்ஷராஜாய வித்மஹே வைஸ்ரவணாய தீமஹி தந்நோ குபேர ப்ரசோதயாத்.”

ஈசானன்:

இவர் வடகிழக்கு திசைக்கு அதிபதி.
இவர் மங்கலத்தின் வடிவமாக பாவிக்கப்படுகிறார். சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்று ஈசானம் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது மனைவி பெயர் ஈசான ஜாயை.
இவரின் வாகனம் கம்பீரமான எருது.
இவரின் ஆயுதம் திரிசூலம்.
இவர் அறிவும் ஞானமும் அளிப்பவர்.

ஈசான்ய காயத்ரி மந்திரம்:

“ஓம் தத்புருஷாய வித்மஹே சிவ ரூபாய தீமஹி தந்நோ ரூத்ர ப்ரசோதயாத்.”

அஷ்டதிக் பாலகர் போற்றி துதி:

ஈசானியா போற்றி
வளம் தரும் குபேரனே போற்றி
உயிர் காக்கும் வாயு பகவானே போற்றி
பசுமை தரும் வருணனே போற்றி
அருள்மிகு நிருதி பகவானே போற்றி
தருமவான் மிருத்யு போற்றி
சுப அக்னி பகவானே போற்றி
உயர்வைத் தரும் இந்திரனே போற்றி
காக்கும் பிரம்மஸ்தான பகவானே
போற்றி போற்றி போற்றி!!

நாமும் அஷ்டதிக் பாலகர்களை வழிபட்டு எல்லாவளமும், நலமும் பெறுவோம்.

Comments

Popular posts from this blog

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..

உண்மை பக்தி எது ?

ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்...