சகல சௌபாக்கியங்கள் அருளும் சக்தி வாய்ந்த சப்த கன்னிகள் !!


சகல சௌபாக்கியங்கள் அருளும் சக்தி வாய்ந்த சப்த கன்னிகள் !! ஆரூர் சுந்தரசேகர். 

சப்த கன்னிகள்

பாரத தேசத்தில் பழங்காலம் தொட்டு சக்தி வழிபாடு இருந்துவருகிறது. சப்த கன்னியர் அல்லது சப்த மாதாக்கள் வழிபாடு என்பது அம்பிகை வழிபாட்டின் அங்கமாகக் காணப்படுகின்ற கிராமிய தெய்வ வழிபாடு ஆகும்.
அன்னை ஆதிபராசக்தியின் சக்திகளாக அவதரித்தவர்களே ‘பிராம்ஹி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னியர்கள். இவர்களே சப்த கன்னியர் என்றும் சப்த மாதாக்கள் என்றும் சப்த மாத்திரிகைகள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
ரிக் வேதம், மார்க்கண்டேய புராணம், காளிதாசரின் குமார சம்பவம், விஷ்ணு தர்மோர்தர புராணம், தேவி பாகவதம் போன்றவற்றில் கன்னிமார்களை பற்றி கூறப்பட்டுள்ளன.
கி.பி 510 ஆம் ஆண்டில் சப்தகன்னியர்கள் வழிபாடு சிறப்புற்று இருந்ததாக கல்வெட்டுக்களிலும், இலக்கியங்களிலும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தங்கள் குலதெய்வம் எது என்று தெரியாமல் இருப்பார்கள். சப்த கன்னியரை வழிபட்டு பலன் பெறலாம்.

சப்த கன்னிகள் உருவான வரலாறு: 
சண்டன், முண்டன் என்ற அரக்கர்கள் தவம் செய்து பிரம்மனிடம் “பெண்ணின் கருவில் தோன்றாத கன்னித்தன்மை வாய்ந்த ஒரு பெண்ணால் மட்டுமே தங்களுக்கு மரணம் உண்டாக வேண்டும்” என்ற அரிய வரம் ஒன்றை பெறார்கள். அந்த வரத்தை வாங்கிய அரக்கர்கள் தங்களை யாராலும் அழிக்க முடியாது என்ற மமதையில், மக்களுக்கும், தேவர்களுக்கும் சொல்லமுடியாத அளவுக்கு கொடுமைகளை செய்தார்கள். அவர்கள் பெற்ற வரத்தின் காரணமாக, மும்மூர்த்திகளாலும் அவர்களை அழிக்க இயலவில்லை.  
இந்த அரக்கர்களின் அக்கிரமங்கள் எல்லை கடந்து போக, அவர்களை அழிக்க வேண்டி அன்னை பராசக்தி “பிராம்ஹி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராஹி, இந்திராணி, சாமுண்டி” என்ற சப்த கன்னியர்களை உருவாக்கினார். அவர்கள் சிவன், விஷ்ணு, பிரம்மா, முருகன், வராக மூர்த்தி, யமன் என ஒவ்வொருவரின் அம்சமாக உருவானவர்கள். இவர்கள் அசுரக்கூட்டத்தை அழித்து, அன்னை பராசக்தியின் ஆசியைப் பெற்றனர். 

ஶ்ரீபிராம்ஹி:
படைப்புக் கடவுளான பிரம்மாவின் அம்சமாகத் தோன்றியவர் என்பதால் பிராம்ஹி என்று பெயர் பெற்றார். பிரம்ம அம்சம் என்பதால், நான்கு முகங்கள், நான்கு கரங்கள். கமண்டலம், அக்ஷய மாலையைப பின்னிரு கரங்களில் ஏந்தி முன்னிரு கைகளில் அபயவரதம் காட்டுவார். ருத்திராக்ஷ மாலை தரித்து அன்னவாகனத்தில் அமர்ந்திருப்பவர். கல்விக்கு அதிபதியான சரஸ்வதியின் அம்சமாவார். மான் தோல் அணிந்திருப்பவள். ஞானம் தந்து அஞ்ஞானம் நீக்குபவர். உயிர்களைப் படைக்கும் சக்தியும் படைத்தவர், மற்றும் தோல் வியாதிகளைத் தீர்ப்பவர்.
பிராம்ஹி காயத்ரி 108 முறை ஜபித்தால் ஞாபக மறதி நீங்கும், கல்வி தேர்வு, அரசு வேலைகளுக்கான தேர்வு ஆகியவற்றில் வெற்றி நிச்சயம் கிட்டும். 

காயத்ரி மந்திரம்
"ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே
தேவர்ணாயை தீமஹி
தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்."

ஶ்ரீமஹேஸ்வரி
மஹேஸ்வரனாகிய சிவபெருமான் அம்சமாகத் தோன்றிவர். அம்பிகையின் தோளில் இருந்து உருவானவர் மகேஸ்வரி. முக்கண்களும், ஜடாமகுடமும் உடையவள். மகுடத்தில் பிறை நிலவும், பாம்பும் அமையப்பெற்றிருப்பது சிறப்பு. நாற்கரங்களுள் மூன்றில் மான், மழு, உடுக்கை தரித்து மற்றொரு கரத்தால் அபயம் காட்டியருளும் தோற்றத்தை உடையவர். எருதை வாகனமாகவும், கொடியாகவும் கொண்டவர். 
இவரை வழிபட்டால், நமது கோபத்தைப் போக்கி சாந்த குணத்தை அருளக்கூடியவர், மற்றும் மகேஸ்வரி பித்தத்தை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டவர்.
மஹேஸ்வரி காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வந்தால் கோபம் நீங்கி, சாந்தம் பெறலாம்.

காயத்ரி மந்திரம்
"ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்."

ஶ்ரீவைஷ்ணவி
மகாவிஷ்ணுவின் அம்சமாக தோன்றியவர் வைஷ்ணவி. நீல நிறத் திருமேனியும், அழகிய முகமும் கொண்டு அருள்பாலிப்பவர். மஞ்சள் நிறத்தில் விஷ்ணுவுக்குரிய பீதாம்பரம் என்ற ஆடையை அணிந்து, கௌஸ்துவம் என்னும் மாலையைத் தரித்தவர். நான்கு கரங்களில் முதல் இரு கரங்கள் அபய, வரத முத்திரை காட்டுகின்றன. மற்ற இரு கரங்கள் சங்கு, சக்கரம் தாங்கி நிற்கின்றன. கருடனை வாகனமாகவும், கொடியாகவும் கொண்டவர். `நாராயணி’ என்றும் அழைக்கப்படுகிறார். 
செல்வம், செல்வாக்கு இவற்றை அள்ளி வழங்குபவர். குறிப்பாக தங்கம் அளவின்றி கிடைத்திட வைஷ்ணவி வழிபாடு மிக அவசியமாகும், மற்றும் விஷக்கடிகள் குணமாகவும், தோல் தொடர்பான பிணிகள் நீங்கவும் வைஷ்ணவியை வணங்கலாம். 
வைஷ்ணவி காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்து, வைஷ்ணவியை வழிபாடு செய்து வந்தால், சகல ஐஸ்வரியங்களும் நமது இல்லம் தேடி வரும்.

காயத்ரி மந்திரம்
"ஓம் ச்யாம வர்ணாய வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்."

ஶ்ரீகௌமாரி
முருகனின் அம்சமாகத் தோன்றியவர் கௌமாரி. முருகனின் அம்சமாகத் தோன்றியதால் வீரமும் தீரமும் மிக்கவர். கௌமாரி. சஷ்டி, தேவசேனா என பெயர்கொண்டவர். மனோபலத்தையும், உற்சாகத்தையும் குன்றாத இளமையையும் தரவல்லவர். இவரை வேண்டினால் சந்தானபாக்யம் கிட்டும். செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், வீடு, மனை தொடர்பான சிக்கல் உள்ளவர்களும் இந்த கன்னியை வணங்கலாம், மற்றும் உஷ்ண சம்பந்தமான நோய்கள் இவரை வழிபட்டால் அகலும். 
கௌமாரி காயத்ரி மந்திரத்தை, தினமும் 108 முறை பாராயணம் செய்து வந்தால், குழந்தைப் பேறு விரைவில் கிடைக்கும் என்பது ஐதீகம்.

காயத்ரி மந்திரம்
"ஓம் சிகி வாஹனாயை வித்மஹே
சக்தி ஹஸ்தாயை தீமஹி
தன்னோ கெளமாரி ப்ரசோதயாத்."

ஶ்ரீவாராஹி
சப்த கன்னியர்களுள் மிகவும் மாறுபட்ட தோற்றத்தையும், அதிக சக்தியையும் கொண்டவர் வாராஹி. வராஹ வடிவம் தாங்கி பூமியை மீட்ட திருமாலின் அம்சமாகத் தோன்றிவரே வாராஹி தேவி. மிருக பலமும், தெய்வ குணமும் ஒன்றாகச் சேர்ந்த அமையப் பெற்றவர். அம்பிகையின் அம்சமாக பிறந்ததால், இவர் சிவன்,ஹரி,சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவர். எதையும் அடக்க வல்லவர். பின்னிரு கைகளில் கலப்பை, உலக்கை ஏந்தியிருப்பாள். முன்னிரு கைகளும் அபய வரத ஹஸ்தம் கொண்டு அருள்பாலிப்பவர். கறுப்பு நிறமானவர். இவர் எருமையை வாகனமாகக் கொண்டிருப்பார். எதிரிகளை வெல்லவும், தடைகளை அகற்றவும் உதவி செய்பவர். வராகியை வணங்குபவர்களுக்கு துன்பமே வாராது என்பது மக்களின் நம்பிக்கை. முற்காலத்தில் மன்னர்கள், போருக்குச் செல்லுமுன் பகைவர்களை அழிக்கவும் வெற்றி பெறவும் வாராஹி தேவியை வழிபட்டுச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். 
வாராஹி காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வந்தால், ஒருவரது வாழ்வில் விடாது துரத்தும் துன்பங்கள் கூட விலகி ஓடும்.

காயத்ரி மந்திரம்
"ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்."

ஶ்ரீஇந்திராணி
இந்திரனின் அம்சமாகத் தோன்றியவள் இந்திராணி. தலையில் இரத்தினங்கள் ஒளிவிடும் மகுடம் தரித்தவர், வெண்மை நிறமான யானை மேல் அமர்ந்து காட்சி அளிப்பார். இவருக்கு மாஹேந்திரி, ஐந்திரி தேவி என்ற பெயர்களும் உண்டு. நான்கு கரங்களில் ஒரு கரம் அபய ஹஸ்தமாகவும், மற்ற கரங்களில் வஜ்ரம், சூலம், கதை ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் காட்சி அளிக்கிறார். இவர் வாழ்க்கைத்துணை, சொத்து சுகம் தருபவர், மற்றும் சத்ரு, யம பயம் போக்குபவர். 
இந்திராணி காயத்ரி மந்திரத்தை உச்சரித்து, இந்திராணியை வழிபாடு செய்து வந்தால் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணமும், கணவன்-மனைவிக்குள் ஒற்றுமையும் ஏற்படும்.

காயத்ரி மந்திரம்
"ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்."

ஶ்ரீசாமுண்டி:
ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பத்திரகாளி தன்னுடைய கோரமுகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனார்.
மூன்று சிரங்கள், பதினாறு கைகளில் பதினாறு விதமான ஆயுதங்கள் தாங்கி யானைத் தோலால் ஆன ஆடை அணிந்து காட்சி அளிக்கிறார். சப்த கன்னிகைகளில் சர்வ சக்திகளையும் கொண்டிருப்பவர். மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் தேவர்களுக்கும் வரங்களை வழங்கும் ஆற்றல் பெற்றவர். கறுப்பு நிறமானவர். பயங்கரமான தோற்றம் கொண்டவர். இறந்த மனித உடலை இருக்கையாகக் கொண்டவர். பாம்புகளை உடலில் அணிந்திருப்பார்.
இவரை வழிபட்டால்,எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பதோடு, எடுத்த காரியத்தில் வெற்றியும், சொத்தைப் பாதுகாக்கும் வல்லமையையும் வழங்குவார், மற்றும் சகலவிதமான சுகத்தையும், தைரியத்தையும், வெற்றியையும் அருள்பவர்.
சாமுண்டி காயத்ரி மந்திரத்தை தினமும் உச்சரித்து, வழிபட்டால், எதிரிகள் பயம் விலகும். நம் வாழ்க்கைக்கு தேவையானவை அனைத்தும் வந்து சேரும். எடுத்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.

காயத்ரி மந்திரம்
"ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே
சூலஹஸ்தாயை தீமஹி
தன்னோ சாமுண்ட ப்ரசோதயாத் ."

மக்களைக் காக்கும் இந்த சப்த கன்னியர்கள், கிராம தெய்வங்களாக பல்வேறு பெயர்களில் இருந்து கொண்டு அருள் புரிகின்றனர். சகல சம்பத்துகளையும் அளித்து, சர்வ வியாதிகளையும் போக்கும் சப்த மாதர்களை நாம் வணங்கி சகல நலமும் வளமும் பெறுவோம்.

ஓம் சக்தி!! பராசக்தி!!!

Comments

Popular posts from this blog

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..

உண்மை பக்தி எது ?

ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்...