பதினெண் சித்தர்கள் தரிசனம் காண்போம்!!

பதினெண் சித்தர்கள் தரிசனம் காண்போம்!! 
ஆரூர்.சுந்தரசேகர்.

‘சித்தர்’ என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். நமது கோரிக்கைகளை இறைவனை அடைய ஒரு கருவியாக இருப்பவர்கள் சித்தர்கள். சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கள் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் ஆவர்.


சித் - அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள். அறிவு படைத்தவர்கள் சித்தர்கள். சித்தம் என்றால் அறிவு; சித்து என்றால் என்றும் நிலைத்திருக்கும் பேரறிவு; சித்தர்கள் என்றால் நிறைமொழி மாந்தர் என்னும் அறிஞர்கள் என்றும் பொருள்படுவதாக பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன.


எண்ணற்ற சித்தர்கள் தமிழகத்தில் வாழ்ந்ததாகப் பல வரலாற்று நூல்கள் எடுத்துரைத்துள்ளன. நாம் அறிந்தும், அறியாமலும் எப்பொழுதும் அவர்கள் நம்மிடையே வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
வைத்தியம், வான சாஸ்திரம், மாந்திரீகம், இரசவாதம், சூத்திர சாஸ்திரம், யோகம் போன்ற நுட்பமான விஷயங்கள் பற்றிய நூல்களை இயற்றியவர்கள் சித்தர்கள் ஆவர்.


இப்படி பெருமைமிகு சித்தர்களில், பதினெட்டு சித்தர்கள் தலையாய சித்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களை பதினெண் சித்தர்கள் என்றும் அழைக்கின்றோம். இவர்களை நினைத்துப் போற்றினால் இவர்களின் அருளும், அதன் மூலம் இறையருளும் நமக்குக் கிடைக்கும். இவர்களின் ஜீவசமாதிகளுக்கு சென்று வணங்கினால், நமக்கு உள்ள எல்லா தோஷங்களும் விலகும். தீய சக்திகள் நம்மை நெருங்காது, மனம் அமைதி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
அந்த பதினெண் சித்தர்கள் ஜீவசமாதி உள்ள ஸ்தலங்கள் மற்றும் அவர்களது வாழ்க்கை குறிப்புகளைக் காண்போம்.

இன்று பல பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் மூலவருக்கு அருகிலேயே சித்தர்கள் சன்னதி இருக்க காணலாம். சித்தர்கள் யோக சமாதி அடைந்த இடங்கள் மகிமை பெற்ற திருத்தலங்களாக விளங்குகின்றன. எனவே, சித்தர்கள் பாதத்தைச் சரணடைவோம். சீரும் சிறப்புமாய் வாழ்வோம்.

1. அகத்தியர்:

சித்தர்-சித்த வைத்தியம் என்றாலே உடனே நம் நினைவுக்கு வருபவர் அகத்திய மாமுனி தான். பல சித்த மருத்துவ முறைகளை வழங்கியவர். அகத்தியர் சித்தர்கெல்லாம் சித்தராக அருள்பாலித்தவர். தமிழ் முனி, கும்ப முனி என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டார். அகத்தியர் வெண்பா, அகத்தியர் வைத்திய ரத்னாகரம், போன்ற நூல்களை இயற்றியுள்ளார். கடுந்தவமியற்றி பல சித்திகளை பெற்றார். தமிழ் இலக்கிய விதிமுறையான அகத்தியம் எனும் நூலை எழுதினார். அகத்தியர் மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் 4-யுகம், 48 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். சிவபெருமானரே இவருடைய குரு ஆவார்.


போகர், மச்சமுனி இவரின் சீடர்களாவர். அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

ஓம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!!

2. திருமூலர்:

இவர் வாழ்ந்த காலம் கி.மு. 5000 வருடங்களுக்கு முந்தையது. இவரால் அருளப்பட்ட திருமந்திரம் தமிழ் ஆகம நூல் என்று அழைக்கப்படுகிறது. இந்நூலுக்கு இவர் திருமந்திர மாலை என்ற பெயர். இதனை தமிழ் மூவாயிரம் என்றும் அழைக்கின்றனர். “ஒன்றே குலம் ஒருவனே தேவன்,” என்றருளிய மகா ஞானி ஆவார். திருமூலர் புரட்டாசி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் 3000 வருடம் 13 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். சிதம்பரம் நடராஜ பெருமான் கோவிலில் ஜீவசமாதி அடைந்தார்.


இவருடைய குரு நந்தி தேவர் ஆவார். திருமாளிகைத் தேவர் காலங்கி நாதர், கஞ்சமலையார், இந்திரன், சந்திரன், பிரம்மன், ருத்திரன் உள்ளிட்ட ஏழு சித்தர்கள் திருமூலரின் சீர்மிகு சீடர்கள் ஆவர்.

ஓம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி!!

3. போகர்:


பழனி மலையில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் மூலவரை நவபாஷானங்களை கொண்டு செய்து வைத்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
இவர், போகர் நிகண்டு, போகர் ஏழாயிரம், போகர் கற்பம், போகர் வாசியோகம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார். இரசவாதியாகவும், தத்துவ ஞானியாகவும் அனைவராலும் போற்றபடுகின்றார்.


போகர் வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் 300 ஆண்டுகள், 18 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். இவர் பழனி மலையில் சமாதி அடைந்தார்.
இவருடைய குரு அகஸ்தியரும் காளங்கி நாதரும் ஆவார்கள். கொங்கணவர், கருவூரார், புலிப்பாணி, இடைக்காடர் ஆகியோர் இவரின் சீடர்களாவர்.

ஓம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி!!

4. இடைக்காடர்:


இவர் திருமாலின் அவதாரமாக கருதப்படுகிறார். இவர் இடைக்காடு எனும் ஊரில் வாழ்ந்தவர். இவர் வருடாதி, மருத்துவம், தத்துவப் பாடல்கள், ஞானசூத்திரம் எழுபது ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவரது பாடல்கள் உலக இயல்பினை, நிலையாமையை, உணர்ந்து இறைவன் அருளை நாடும் என்ற பொது அடிப்படைக் கருத்தைக் கொண்டது. இவர் தன் “வருடாதி வெண்பா” என்னும் நூலில், இந்த 60 வருடங்களுக்கும் மழை, வெய்யில் மற்றும் காலநிலை எப்படி இருக்கும் என்பதை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே எழுதியிருக்கிறார்.


இடைக்காடர் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் 600 ஆண்டுகள், 18 நாட்கள் வாழ்ந்திருக்கிறார்.
இவர் திருவண்ணாமலையில் சமாதியடைந்தார்.
இவருடைய குரு போகர் மற்றும் கருவூரார் ஆவார்கள். குதம்பை சித்தர், அழுகுணி சித்தர் ஆகியோர் இவரின் சீடர்களாவர்.

ஓம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி!!

5. கமலமுனி:

இவருக்கு பிரம்மனே எல்லா வகைச் சித்துகளையும் நேரில் வந்து உபதேசித்தார் என்று கூறுவர். “கமலமுனி முந்நூறு” என்னும் மருத்துவ நூல், ரேகை சாஸ்திரம் முதலிய நூல்களை இவர் எழுதியதாக கூறப்படுகிறது. இவர் யோக ஞானத்தால் அஷ்டமா சித்திகளை பெற்றவர். சித்தர்களில் மிகவும் ஆற்றல் வாய்ந்தவர்.

கமலமுனி வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் 4000 ஆண்டுகள், 48 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். இவர் திருவாரூரில் சமாதியடைந்ததாக சொல்லப்படுகிறது.
போகர் இவருடைய குரு ஆவார். குதம்பை சித்தர், அழுகுணி சித்தர் ஆகியோர் இவரின் சீடர்களாவர்.

ஓம் ஶ்ரீ கமலமுனி திருவடிகள் போற்றி!!

6. கருவூரார்:


தஞ்சை பெரிய கோவில் உருவாகியதில் இவருக்கு பெரும்பங்கு உண்டு. நெல்லையப்பரும், காந்திமதியம்மையாரும் இவருக்கு நடனக்காட்சி காட்டியருளியுள்ளனர். கருவூரார் வாத இலக்கியம், வைத்தியம் ஐநூறு, யோக ஞானம் ஐநூறு, கருவூரார் பலதிரட்டு, பூஜா விதி, குருநூல் சூத்திரம், பூரண ஞானம், கற்ப விதி, மெய்ச் சுருக்கம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.

கருவூரார் சித்திரை மாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் 300 ஆண்டுகள் 42 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். இவரது சமாதி கருவூரில் (தற்போதைய கரூர்) உள்ளது.
போகர் இவருடைய குரு ஆவார். இடைக்காடர் இவரின் சீடராவார்.

ஓம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி!!

7. கோரக்கர்:


கோரக்கர் இறப்பில்லா மகாயோகி என்றும் அவர் ஆதிநாதனான ஈசனிடம் பாடம் கேட்டு நாத சைவத்தைத் தோற்றுவித்ததாக புராணங்கள் கூறுகின்றன.
வட நாட்டில் “நவநாத சித்தர்” என்ற சித்தர்கள் தொகுதியின் தலைமை சித்தராக இவரை போற்றுகின்றனர்.
சந்திரரேகை இருநூறு, கோரக்கர் கண்ணசூத்திரம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.

கோரக்கர் கார்த்திகை மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் 880 ஆண்டுகள், 11 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். நாகை அருகே உள்ள வடக்கு பொய்கைநல்லூர் என்ற ஊரில் அவரது ஜீவசமாதி ஆலயம் அமைந்துள்ளது.
இவருடைய குரு தத்தாத்ரேயர், மச்சமுனி ஆவார்கள். நாகர்ஜூனா என்பவர் இவரின் சீடராவார்.

ஓம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி!!

8. குதம்பை:


இவர் ஞான மார்க்கத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர். இவரது பாடலில் “குதம்பாய்” என்று பலமுறை வரும். “குதம்பை” என்று விளித்துப்பாடல் இசைத்ததாலேயே இவருக்கு இந்த பெயர் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இவர் காதில் குதம்பை என்ற ஆபரணத்தை அணிந்திருந்ததால் ‘குதம்பை சித்தர்’ என்ற சிறப்புப் பெயராலேயே அழைக்கப்பட்டார். இவர் தம் அனுபவங்களை 32 பாடல்களாக பாடியுள்ளார். அந்தப் பாடல்கள் தான் குதம்பைச் சித்தர் பாடல்களாக உள்ளன.

குதம்பை சித்தர் ஆடி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் 1800 ஆண்டுகள், 16 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். இவர் மாயவரத்தில் சமாதியடைந்தார். இவருடைய குரு இடைக்காடர், அழுக்காணி சித்தர் ஆவார்கள். இவரது சமாதி மயிலாடுதுறையில் உள்ளது.

ஓம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி!!

9. பாம்பாட்டி:

இவர் தன் தவவலிமையால் சிவபெருமானின் ஆட்டத்தைக் காண்பவர் என்பதால் இவர் கூறும் பாடல் யாவற்றிலும் “ஆடு பாம்பே” என பாம்பை முன்னிறுத்தி பாடல்கள் இயற்றியுள்ளதால் இவர் பாம்பாட்டி சித்தர் என அழைக்கபடுகிறார். பாம்புகளை கையாளுவதில் திறன் கொண்டவர் என்பதால் பாம்பாட்டிச் சித்தர் என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். யோக நெறியில் குண்டலினி என்பதை பாம்பு என்ற குறியீட்டினால் குறிப்பிடுவதால், குண்டலினி யோகத்தில் சிறந்தவர் ஆதலால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்ற மாற்று கருத்தும் இருக்கின்றது. வாழ்வின் நிலையாமை, உடலின் தன்மை, உறவின் தன்மை, உலகமாயை, நிலையானவை எவை, நிலையற்றவை எவை என்று பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார். பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள், சித்தராரூடம், பாம்பாட்டி சித்தர் வைத்திய சாத்திரம் ஆகியன இவர் எழுதிய பாடல்களாகும்.

பாம்பாட்டி சித்தர் கார்த்திகை மாதம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் 123 ஆண்டுகள், 32 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். இவர் சங்கரன்கோயிலில் சமாதியடைந்தார். இவருடைய குரு சட்டைமுனி சித்தர் ஆவார். இவரது ஜீவசமாதி சங்கரன்கோவிலில் உள்ளது.

ஓம் ஶ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி!!

10. சட்டைமுனி:


இவர் ஈழ நாட்டில் பிறந்ததாக கூறப்படுகிறது. போகரின் சீடரான இவர் வேதியியலில் சிறந்து விளங்கினார். வேதியியல் குறித்து வாத காவியம் எனும் நூலை இயற்றினார். எப்போதும் கம்பளத்தில் மேலாடை அணிந்ததால் சட்டைமுனி எனப்பட்டார். இவர் சட்டைமுனி நிகண்டு 1200, வாதகாவியம் 1000, சரக்குவைப்பு 500, நவரத்தின வைப்பு 500, வாக்டம் 200, முன்ஞானம் பின் ஞானம் 200, கற்பம் 100, உண்மை விளக்கம் 51 உள்ளிட்ட 14 நூல்கள் இயற்றியுள்ளார்.

சட்டைமுனி சித்தர் ஆவணி மாதம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் 800 ஆண்டுகள், 14 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். இவர் திருவரங்கத்தில் சமாதியடைந்தார். போகர் இவருடைய குரு ஆவார். சுந்தரானந்தர், பாம்பாட்டி சித்தர் ஆகியோர் இவரின் சீடர்களாவர்.

ஓம் ஶ்ரீ சட்டைமுனி சுவாமியே போற்றி!!

11. சிவவாக்கியர்:


“சிவ சிவ” என்று சொல்லியபடி இவர் பிறந்ததால் சிவவாக்கியர் என அழைக்கப்படுகிறார். வைத்தியம், வாதம், யோகம், ஞானம் பற்றி பாடல் இயற்றியுள்ளார். இவர் தன் அனுபவங்களைப் பாடல்களாக எழுதினார். இவரால் இயற்றப்பட்ட பாடல் ‘சிவவாக்கியம்’ என்று அழைக்கப்படுகிறது. நாடிப் பரீட்சை என்னும் நூலும் சிவவாக்கியாரல் எழுதப்பட்டது என்று சொல்லப் படுகிறது.

இவர் வாழ்ந்த காலமும் தெளிவாய்த் தெரியவில்லை. இவரது காலம், கி.பி.9ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என கருதப்படுகிறது. போகர் தனது சப்த காண்டத்தில் சிவவாக்கியார் தை மாத மக நட்சத்திரத்தில் பிறந்ததாகச் சொல்லியிருக்கிறார். சிவவாக்கியருக்கு கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் திருக்கோவிலில் ஜீவசமாதி உள்ளது.

ஓம் ஶ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி!!

12. சுந்தரானந்தர்:


இவர் அழகான தோற்றத்தைக் கொண்டிருந்ததால் சுந்தரானந்தர் என்று அழைக்கப்பட்டார். இவருக்கு வல்லப சித்தர் என்கிற பெயரும் உண்டு. அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சதுரகிரியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டவர்.
ஜோதிடத்தில் மற்றும் வைத்தியத்தில் சிறந்து விளங்கிய இவர், அது சம்பந்தமான பல நூல்களை இயற்றியுள்ளார். வைத்திய திரட்டு, காவியம், விஷ நிவாரணி, வாக்கிய சூத்திரம், கேசரி, சுத்த ஞானம், தீட்சா விதி, அதிசய காரணம், சிவயோக ஞானம், மூப்பு, தாண்டகம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.


சுந்தரானந்தர் ஆவணி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் 800 ஆண்டுகள், 28 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். இவர் மதுரையில் சமாதியடைந்ததாக சொல்லப் படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இவருக்கு தனி சந்நிதி அமைந்திருக்கிறது. இவருடைய குரு சட்டமுனி மற்றும் கொங்கணவர் ஆவார்கள். குதம்பை சித்தர், அழுகுணி சித்தர் ஆகியோர் இவரின் சீடர்களாவர்.

ஓம் ஶ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி!!

13. கொங்கணர்:

கொங்கணர் சிறந்த அம்பிகை பக்தர். அம்பிகையை வழிபடும் முறையையும் மந்திரங்களையும் போகர் கொங்கணருக்கு உபதேசித்துள்ளார். கொங்கணர் வாதகாவியம் 3000, முக்காண்டங்கள் 1500, தனிக்குணம் 200, வாதசூத்திரம் 200, தண்டகம் 120, ஞான சைதன்னியம் 109, சரக்கு வைப்பு 111, கற்ப சூத்திரம் 100, வாலைக்கும்பி 100, ஞானமுக்காண்ட சூத்திரம் 80, ஞான வெண்பா சூத்திரம் 49, ஆதியந்த சூத்திரம் 45, முப்பு சூத்திரம் 40, உற்பத்தி ஞானம் 21, சுத்த ஞானம் 16 ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

கொங்கணர் சித்திரை மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் 800 ஆண்டுகள், 16 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். இவர் திருப்பதியில் ஜீவசமாதியடைந்தார்.
இவருடைய குரு போகர் மற்றும் பல மகான்களை சந்தித்து ஞானம் அடைந்தார்.

ஓம் ஶ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி!!

14.வான்மீகர்:


வடமொழியில் இராமாயணம் பாடிய வால்மீகி முனிவர் தான் தென்னகத்தில் வான்மீகர் என அழைக்கப்படுகின்றார். போகர் 7000 -எனும் நூலில் பாடல் 5834 ல் வான்மீகர் எழு நூறு ஆண்டுகள் மேற்பட்ட காலம் வாழ்ந்ததாகவும். உலகிற்கு இராமாயணத்தை தந்ததாகவும், தமிழ் புலமை மிக்கவர் என்றும், காய சித்திகொண்டு அகத்தூய்மையோடு வாழ்ந்தவர் என்றும் கூறுகின்றார்.

வான்மீகர் புரட்டாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் 700 ஆண்டுகள், 32 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். நாரதர் இவருடைய குரு ஆவார். வான்மிக சித்தர் தமிழ் நாட்டில் திருவாரூர் மாவட்டம் எட்டுக்குடியில் உள்ள முருகன் கோவிலில் ஜீவசமாதியடைந்தார். மேலும் இவரது மற்றொரு ஜீவசமாதி திருவான்மியூர் மருந்தீஸ்வரர் சன்னதியில் தீர்த்தகுளத்தின் அருகே சமாதி கொண்டுள்ளார்.

ஓம் ஶ்ரீ வான்மீகர் திருவடிகள் போற்றி!!

15. மச்சமுனி:


இவர் பிறக்கும் போதே சிவபெருமானின் உபதேசத்தோடு பிறந்தவர். நெடுங்காலம் யோக வழியில் தவம் மேற்கொண்டு அஷ்டமாசித்துக்கள் அனைத்தும் கைவரப் பெற்றார். மச்சமுனி சூத்திரம், மச்சமுனி தூல சூக்கும காரண ஞானம் 30, மச்சமுனி பெரு நூல் காவியம் 800, மச்சமுனி வைத்தியம் 800 , மச்சமுனி கடைக் காண்டம் 800, மச்சமுனி சரக்கு வைப்பு 800, மச்சமுனி திராவகம் 800, மச்சமுனி ஞான தீட்சை 50, மச்சமுனி தண்டகம் 100, மச்சமுனி தீட்சா விதி 100, மச்சமுனி முப்பு தீட்சை 80, மச்சமுனி குறு நூல் 800, மச்சமுனி ஞானம் 800, மச்சமுனி வேதாந்தம் 800, மச்சமுனி திருமந்திரம் 800, மச்சமுனி யோகம் 800, மச்சமுனி வகாரம் 800, மச்சமுனி நிகண்டு 400, மச்சமுனி கலை ஞானம் 800, மாயாஜால காண்டம் போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார்.

மச்சமுனி ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் 300 வருடம் 62 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். இவருடைய ஜீவசமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது. இவருடைய குரு அகஸ்தியர், புன்னக்கீசர், பாசுந்தர் ஆவார்கள். கோரக்கர் இவரின் சீடராவார்.

ஓம் ஶ்ரீ மச்சமுனி திருவடிகள் போற்றி!!

16. பதஞ்சலி:


இவர் பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றியவர் என்று கூறப்படுகிறது. இவர் ஆதி சேஷனின் அம்சமாக அவதரித்தார். வியாக்ர பாத்ருடன் தில்லையில் இருந்து சிவ தாண்டவம் கண்டவர். பதஞ்சலி யோக சூத்திரம் எனும் உயரிய நூலை இயற்றினார்.

இவர் பங்குனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் இராமேஸ்வரத்தில் ஜீவசமாதியடைந்ததாக சொல்லப் படுகிறது. இவருடைய குரு நந்திதேவர் ஆவார். கௌடபாதர் இவரின் சீடராவார்.

ஓம் ஶ்ரீ பதஞ்சலி முனிவர் திருவடிகள் போற்றி!!

17. இராமதேவர்:


பதினெட்டு சித்தர்களுள் ஒருவராக சிறப்பிக்கப்படும் இராமதேவர் நாகப்பட்டினத்தில் வாழ்ந்து வந்தார். அவரது உள்ளமெல்லாம் இறையுணர்வு எப்போதும் நிறைந்திருந்தது. வாசியோகம் பயின்ற ராமதேவர் அஷ்டமாசித்திகளை பெற்று வெளியிடங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் வெளி உலகங்களுக்கும் செல்லக் கூடிய சித்தியைப் பயின்றவர்.

அரபு நாடுகளில் ஏராளமான கற்ப மூலிகைகள் கிடைக்கும் என்றெண்ணி அடிக்கடி அரபு நாடுகளுக்குச் சென்று வந்தார். தமது ஞான சித்தியால் நபிகள் நாயகத்தின் ஆன்ம தரிசனம் பெற்றார். அதன் பின் பல நூல்களை அரபு மொழியிலேயே எழுதியதாக கூறப்படுகிறது. ஒரு சமயம் அங்கு வந்த போகர், இவருக்கு தரிசனம் அளித்தார். போகரின் ஆணைப்படி மெக்காவை விட்டு நீங்கி நாகை வந்து சட்டநாத பெருமானை வணங்கி, தாம் அரபு நாடுகளில் அறிந்தவற்றை தமிழில் நூலாக இயற்றினார்.

இராமதேவர் மாசி மாதம் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் 700 ஆண்டுகள், 6 நாட்கள் வாழ்ந்திருக்கிறார். இவருடைய குரு புலஸ்தியர், கருவூரார் ஆவார்கள். சட்டைமுனி, கொங்கணவர் ஆகியோர் இவரின் சீடர்களாவர். இராமதேவர் சித்தர் தமிழ் நாட்டில் மதுரை மாவட்டம் அழகர்மலையில் ஜீவசமாதியடைந்தார்.

ஓம் ஶ்ரீ இராமத்தேவர் திருவடிகள் போற்றி!!

18. தன்வந்திரி:


தன்வந்தரி இந்திய மருத்துவ விஞ்ஞானத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். இவர் திருமாலின் அம்சமாக போற்றப்படுவதுடன் பதினெட்டு சித்தர்களில் ஒருவராக கருதப்படுகிறார். முதல் சித்தரான நந்தீசரிடம் மருத்துவம் முதலான கலைகள் கற்றவர். சில காலம் வைத்தீஸ்வரன் கோயில் என்னுமிடத்தில் தமது சீடர்களுடன் வாழ்ந்து தவம் புரிந்தவர். இவருடைய நூல்கள் வைத்திய சிந்தாமணி, நாலுகண்ட ஜாலம், கலை, ஞானம், தைலம், கருக்கிடை, நிகண்டு முதலியவையாம்.

இவர் ஐப்பசி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் 800 ஆண்டுகள், 32 நாட்கள் வாழ்ந்திருக்கிறார்.
இவர் வைத்தீஸ்வரன்கோவிலில் ஜீவசமாதியடைந்ததாக சொல்லப் படுகிறது.

ஓம் ஶ்ரீ தன்வந்த்ரி திருவடிகள் போற்றி!!

அனைத்து சித்தர்களையும் வணங்கி அவர்களின் அருள் பெறுவோம்!!!

Comments

Popular posts from this blog

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..

உண்மை பக்தி எது ?

ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்...