சென்னை வேளச்சேரியில் ஹரி, ஹரன் கோயில்கள்!!

சென்னை வேளச்சேரியில் ஹரி, ஹரன் கோயில்கள்!! ஆரூர். சுந்தரசேகர். 

20200525150141908.jpeg

புராணங்களில் ஹரியும், ஹரனும் ஒன்றே என்று பல சம்பவங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. 
ஒருமுறை சோமுகாசுரன் எனும் அரக்கன் பிரம்மாவின் சத்தியலோகம் சென்று, நான்கு வேதங்களையும் கவர்ந்து
கடலுக்கு அடியில் கொண்டு சென்று சேற்றில் மறைத்து வைத்தான். இதனால் படைப்புத் தொழில் நின்று போகவே பிரம்மா மகா விஷ்ணுவிடம் முறையிட்டார். மகாவிஷ்ணு, மச்சவதாரம் எடுத்து சோமுகாசுரனை அழித்து நான்கு வேதங்களையும் மீட்டு வந்து பிரம்மாவிடம் ஒப்படைத்தார். 
அசுரனிடம் இருந்ததால் நான்கு வேதங்களும் தங்களுக்கு தோஷம் ஏற்பட்டு விட்டதாக வருந்தி பிரம்மனிடம் கூறினார்கள். பிரம்மாவின் ஆலோசனைப்படி, தோஷங்கள் நீங்குவதற்காக, சிவபெருமானை நோக்கி நான்கு வேதங்களும் கடும் தவம் புரிந்தன. வேதங்களின் வழிபாட்டில் மகிழ்வுற்ற சிவபெருமான் காட்சி தந்து, வேதங்களுக்கு ஏற்பட்ட தோஷம் நீக்கி அருள் புரிந்தார். இதனால் வேதங்கள் மீண்டும் புனிதமாயின. வேதங்கள் வழிபட்ட இடம் வேதஸ்ரேணி. இதுவே இத்தலத்தின் புராணப்பெயர். தமிழில் வேதநாராயணபுரம் என்றும் அழைக்கப்பட்டது. வேதங்கள் வேள்வி நடத்தியதால் இந்த இடம் வேள்விச்சேரி ஆனதாகவும் இதுவே நாளடைவில் மருவி வேளச்சேரி என்று ஆனதாகவும்
கூறப்படுகிறது.

இத்தகைய பெருமை வாய்ந்த வேளச்சேரியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஹரி, ஹரன் கோயில்களான ஸ்ரீதண்டீஸ்வரர், ஶ்ரீயோகா நரசிம்மர் கோயில்களை தரிசனம் செய்வோம்.

ஸ்ரீதண்டீஸ்வரர் கோயில்:

20200525150231706.jpeg
துவாரபயுகத்தில் மார்க்கண்டேயனின் பதினாறு வயதில் ஆயுள் முடியும் காலம் வரவே, உயிரைப் பறிக்க எமன் பாசக்கயிறை வீசினான். மார்க்கண்டேயன் திருக்கடையூர் தலத்துக்குள் சென்று சிவலிங்கத்தை கட்டிப்பிடித்துக் கொண்டான். கயிறு லிங்கம் மீது பட்டவுடன் சிவபெருமான் வெளிப்பட்டு எமனின் பதவியையும் அவன் வைத்திருந்த தண்டத்தையும் பறித்தார். பின் எமன் வேதங்கள் தவம் புரிந்து புண்ணியம் அடைந்த வேதஸ்ரேணி வந்து, எம தீர்த்தத்தை உருவாக்கி சிவபெருமானை வேண்ட எமனுக்கு ஈஸ்வரன் காட்சி கொடுத்து அவனது தண்டத்தையும் திருப்பி அளித்தார். இதனால் இந்த ஸ்தல ஈஸ்வரருக்கு தண்டீஸ்வரர் எனும் திருநாமம் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். 
சோழ மன்னர்கள் தொண்டை மண்டலத்தில் கட்டிய முதல் சிவாலயம் என்ற பெருமையும், புராணப் பெருமையும் கொண்டது. இங்கு ஶ்ரீதண்டீசுவரர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றார். இவரின் பழமையான பெயர் தண்டபாணீஸ்வரர் என்பதாகும். இங்கு தை முதல் தேதியில் சூரிய கதிர்கள் சிவலிங்கம் மீது விழுகிறது. அம்பாள் ஸ்ரீகருணாம்பிகை தெற்கு நோக்கி காட்சித் தருகிறார். அம்பாள் சந்நிதியில் அப்பைய தீட்சிதர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்ரம் இருக்கிறது. மற்றும் சரஸ்வதிக்குத் தனி சந்நிதி உள்ளது. இங்கு சிவாம்சமான வீரபத்திரர், கைகளில் மான், மழு தாங்கி, அமர்ந்த திருக்கோலத்தில் அற்புதமாகக் காட்சி தருகிறார். ஶ்ரீதண்டீஸ்வரர் எதிரேயுள்ள நந்தி தலை சாய்த்து அமைந்திருப்பதும் இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பாகும்.  
இந்த தண்டீஸ்வரரைத் தரிசனம் செய்து வணங்குபவர்கள், நீண்ட ஆயுளோடு, நோய் நொடியில்லாமல் வாழலாம் என்பது ஐதீகம். எமன் இத்தலத்தில் மீண்டும் தன் தண்டம் திரும்பப் பெற்றதால், பதவி இழந்தவர்கள் இங்கு வழிபட இழந்த பதவியை மீண்டும் பெறலாம். இக்கோயிலில் சஷ்டியப்த பூர்த்தி (அறுபது) சதாபிஷேகம் (எண்பது) போன்ற வைபவங்கள் நடைபெறுகின்றன. இதைத்தவிர ஆயுள் விருத்திக்கான ஹோமங்கள் உள்பட எல்லா வகை ஹோமங்களும் இங்கு செய்யப்படுகின்றன.
இவ்வாலயத்தின் ஸ்தலமரம் வில்வம். ஸ்தலத்தீர்த்தம், கோயிலுக்கு மேற்கு திசையில் எமன் உருவாக்கிய எம தீர்த்தம். இதற்கு சிவகங்கை திருக்குளம் என்ற பெயரும் உண்டு.

திருவிழாக்கள்:
தமிழ்ப் புத்தாண்டு, சித்திரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆனி உத்திரம், ஆடிப்பூரம், நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், சோமவார கார்த்திகை சங்காபிஷேகம், ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, பங்குனி உத்திரம் மற்றும் மாதக் கிருத்திகை, பிரதோஷங்களும் இங்கு வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

கோயில் திறந்திருக்கும் நேரம்: 
காலை 06.00 முதல் பகல்11.00 மணி வரை மாலை 04.30 முதல் இரவு 8.30 மணி வரை

கோயிலுக்கு செல்லும் வழி:
சென்னை மாநகரில், சைதாப்பேட்டைக்குத் தெற்கே சுமார் 3 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. தென்சென்னையின் முக்கியப் பகுதியான வேளச்சேரிக்கு, ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன. சென்னை கடற்கரை - வேளச்சேரி மெட்ரோ ரெயில் வசதியும் உள்ளது.

ஶ்ரீயோகா நரசிம்மர் கோயில்: 

20200525150618354.jpeg
நாளை என்பது இல்லை நரசிம்மரிடத்தில்... நமது வேண்டுதல் வேண்டிய உடனேயே அருளுபவர் நரசிம்மர். மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் பிரகலாதர் நினைத்த நேரத்தில் தோன்றி அருள் புரிந்தவர்
இந்த கோயில் தண்டீஸ்வரர் கோயிலுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. 
பிரம்மனும், சப்தரிஷிகளும் சேர்ந்து நடத்திய யாகத்தில் தோன்றியவர் இந்த யோக நரசிம்மர். இவர் சுமார் நான்கு அடி உயரத்துடன் நான்கு திருக்கரங்களுடன் மேற்கு திசையை பார்த்தவாறு மிக அழகான கண்களுடன், கம்பிரமான தோற்றத்துடன் யோக நிலையில் அருள் செய்கிறார். அவரது மேல் இரண்டு கைகளில் சங்கு மற்றும் சக்கரம் உள்ளது. அவரது கீழ் இரண்டு கைகள் இரண்டு முழங்கால்களில் ஒரு யோக தோரணையில் வைத்துள்ளார். 
இந்த கோயில் 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. இக்கோயிலில் இங்கு யோக நரசிம்மர் சந்நிதிக்கு எதிரே கருடாழ்வாருக்கு பதிலாக பிரகலாதர் வணங்கிக்கொண்டிருக்கிறார். ஸ்ரீ அமிர்தபலவல்லித்தாயார் வலது புறத்தில் தனிச் சந்நிதியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இங்கு ஸ்ரீவேதநாராயண பெருமாள் வலது கையில் பிரயோக சக்ரத்துடன் தனி சந்நிதியில் காட்சியளிக்கிறார். இக்கோயிலில் சக்கரத்தாழ்வார், கோதண்டராமர் மற்றும் ஆஞ்சனேயர் ஆகியவர்களுக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன. 
இங்குள்ள யோக நரசிம்மரை வணங்குவதால் கர்மாவினால் ஏற்படும் அனைத்து துன்பங்களும் போகும் என்பது ஐதீகம். 

திருவிழாக்கள்:
நரசிம்ம ஜெயந்தி இந்த கோவிலில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 
ஒவ்வொரு மாதமும் ஸ்வாதி நக்ஷத்திரத்தில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம். சித்திரை ஸ்வாதி ப்ரம்மோத்ஸவம், வைகாசி ஸ்வாதி வசந்தோத்ஸவம், ஆனி ஸ்வாதி ஜேஷ்டாபிஷேகம், ஆடி ஆண்டாள் திருக்கல்யாணம், புரட்டாசி அன்னக்கூடை, கார்த்திகை பவித்ரோத்ஸவம், மார்கழி மாத தினசரி பூஜைகள், தை கனு உத்ஸவம், பங்குனி தாயார் ப்ரம்மோத்ஸவம் பங்குனி உத்திரம் திருக்கல்யாணம் முதலியன சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன.

கோயில் திறந்திருக்கும் நேரம்: 
காலை 07.00 முதல் பகல்10.30 மணி வரை மாலை 05.00 முதல் இரவு 8.30 மணி வரை (விசேஷ காலங்களில் கோயில் திறந்திருக்கும் நேரம் மாறுதலுக்கு உட்பட்டது)

கோயிலுக்கு செல்லும் வழி: 
விஜய நகர் பேருந்து நிலையத்தில் இருந்து தண்டீஸ்வரர் கோயில் செல்லும் வழியில் உள்ளது .

நாமும் வேளச்சேரி சென்று ஹரி, ஹரன் கோயில்களான ஸ்ரீதண்டீஸ்வரர் கோயில், ஶ்ரீயோகா நரசிம்மர் கோயிலை தரிசித்து நற்பலன்களை பெறுவோம்!!
ஓம் நமசிவாய!... ஓம் நமோ நாராயணாய!!

Comments

Popular posts from this blog

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..

உண்மை பக்தி எது ?

ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்...