சென்னையிலேயே - "அறுபடை வீடு முருகனை தரிசனம் செய்வோம்"!!

சென்னையிலேயே - "அறுபடை வீடு முருகனை தரிசனம் செய்வோம்"!! - ஆரூர். சுந்தரசேகர்.
தமிழகத்தின் தென் பகுதியில் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, பழமுதிர்ச்சோலை தமிழகத்தின் மத்திய பகுதியில் சுவாமி மலை, தமிழகத்தின் வட பகுதியில் திருத்தணி என்பன முருகனின் ஆறுபடை வீடுகளாகப் புகழப் பெறுகின்றன.

இவற்றில் திருப்பரங்குன்றம் - மூலாதாரம், திருச்செந்தூர் - சுவாதிட்டானம், பழனி - மணிபூரகம், சுவாமிமலை - அநாகதம், திருத்தணி - விசுத்தி, பழமுதிர்ச்சோலை - ஆக்ஞை என உடற் சக்கரங்கங்களை குறிப்பதாக ஐதீகம்.

முருகப்பெருமானுக்கு முகங்கள் ஆறு. முருகனின் படை வீடுகள் ஆறு. முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்கள் ஆறு. சரவணபவ என்ற முருகப்பெருமானின் திருமந்திரமும் ஆறு.

‘முருகா’ என்று மனமுருகிச் சொன்னாலே முருகனின் திருவருள் நம்மை நாடி வரும்.

திருப்பரங்குன்றம்...

இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. இக்கோயிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள முருகனை வழிபட்டால் திருமணம் நடைபெறும்.

திருச்செந்தூர்...

சூரபத்மனைப் போரில் வென்ற இடமாகும். நாழிக்கிணறு என்ற தீர்த்தம் இங்கு உள்ளது. இங்கு முருகப்பெருமானை வழிபட வியாதி, பகை ஆகியன நீங்கும். மனம் தெளிவுறும்.

பழனி...

ஞானப்பழம் கிடைக்காத காரணத்தால் முருகர் கோபம் கொண்டு ஆண்டியின் கோலம் பூண்டு இந்த திருத்தலத்தில் தங்கிவிட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது. இங்குள்ள முருகனின் சிலை நவபாஷானத்தால் ஆனது. அதனால்தான் அந்த முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பால், பஞ்சாமிர்தம், விபூதி ஆகியவற்றை உட்கொண்டால் உடல் நலம் பெறும் என்பது ஐதீகம்

பழனி ஆண்டவரை வழிபட்டால் தெளிந்த ஞானம் கிடைக்கும்.

சுவாமிமலை...

இங்கு முருகன் தனது தந்தை சிவபெருமானுக்கு குருவாக இருந்து பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்ததாக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இங்குள்ள சுவாமி நாதரை வழிபட்டால் அறிவு, சுகவாழ்வு, மகிழ்வு ஆகியன கிடைக்கும்.

திருத்தணி...

நம்பிராஜனுடன் முருகன் போரிட்ட கோபம் தணிய நின்ற மலையே தணிகை மலை ஆகும். அதுவே திருத்தணி என்று போற்றப்படுகிறது. முருகன் வள்ளியைத் திருமணம் செய்து கொண்ட இடம் இதுவாகும். திருத்தணி முருகனை வழிபட்டால் மனதில் எழும் கோபம் தணியும்.

பழமுதிர்சோலை...

இத்தலத்தில் முருகன் வயோதிகனாகத் தோன்றி நக்கீரனுக்குக் காட்சியளித்த இடம். ஒளவைப்பாட்டிக்கு நாவல்பழத்தை உதிர்த்து கொடுத்த இடம் இதுவாகும். இங்குள்ள முருகனை வழிபட்டால் பொன், பொருள், வருமானம் பெருகும்.

சென்னை பெசன்ட் நகர் ஆறுபடைவீடு முருகன் கோயில்:

இந்த அறுபடை வீடு முருகன் கோவில்களை ஒரே இடத்தில் தரிசிக்கும் வகையில் சென்னை பெசன்ட் நகர் கலாஷேத்திரா காலனியில் ஒரு அறுபடைவீடு முருகன் கோவில் உள்ளது.

இக்கோயில் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான காஞ்சி மகா பெரியவாளின் அருளுக்கிணங்க டாக்டர் அழகப்பா அழகப்பனின் முயற்சியால், பத்மஸ்ரீ முத்தையா ஸ்தபதியின் கைவண்ணத்தால் கட்டப்பட்டுள்ளது. இங்கு அறுபடை வீட்டு முருகன் அனைவருக்குமே தனித்தனியாக சன்னிதிகள் உள்ளன. இக்கோயிலுக்கு 1995-ல் குடமுழுக்கு செய்யப்பட்டது. இந்த சுற்றுவட்டாரத்தில் அறுபடை முருகன் கோயில் வரப்போவதை சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மகான் பாம்பன் குமரகுரு சுவாமிகள் ஏற்கனவே கணித்துள்ளார்.

மகானின் ஜீவ சமாதியும் இந்த கோயிலிலிருந்து சுமார் 1.5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

இந்த கோயில் பெசன்ட் நகர் கடற்கரை அருகில் அமைந்துள்ளது. கோயிலினுள் நுழைந்ததும் மிகப் பெரிய கல்லால் ஆன வேல் உள்ளது. அதனை அடுத்திருப்பது சுவாமிநாத சுவாமி சந்நிதி. அதன் பின்னால் திருத்தணி முருகன் காட்சி தருகிறார். நடுவில் மகா வல்லப கணபதியின் சந்நிதி உள்ளது. அவர் நியூயார்க் விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். தொடர்ந்து பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை சந்நிதிகள் அறுபடை வீடுகளில் இருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. மற்றும் நவக்கிரகம். பைரவர் சந்நிதியும் அமைந்துள்ளது. இதைத் தவிர இடும்பனுக்கும் ஒரு சிறு சன்னதியும் உள்ளது.

இந்தக் கோயிலின் சிறப்பு, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருத்தணி, பழநி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை ஆகிய ஸ்தலங்களில் உள்ளது போலவே இங்கும் முருகப் பெருமானின் திருவிக்கிரகங்கள் உள்ளன. மற்றொரு சிறப்பு என்னவென்றல் திருவிக்கிரகங்கள் அதே திசையில் இங்கும் காணப்படுகின்றன.

அறுபடை வீடுகளுக்குச் செல்ல இயலாதவர்கள், இங்கே வந்து அறுபடை முருகனை தரிசித்துச் செல்கின்றனர்.

சென்னை பெசன்ட் நகர் அறுபடை முருகன் ஆலயத்திற்குச் சென்று தரிசனம் செய்தால் ஆறுபடை வீடுகளுக்கும் சென்ற பலன் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

திருவிழாக்கள்:

இங்கு ஸ்கந்த சஷ்டி, தைப் பூசம், பங்குனி உத்திரம் ஆடிக்கிருத்திகை, திருக்கார்த்திகை ஆகியன சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இங்கும் காவடி, பால் குடம் போன்றவை எடுக்கப்படுகின்றன. சண்முகார்ச்சனை, சத்ரு சம்ஹார திரிசதி, சஷ்டியில் வேல்மாறல் பாராயணம், தேய்பிறை அஷ்டமி, பிரதோஷம் சிறப்பாக நடைபெறுகின்றன. மற்றும், இங்கு பக்தர்களின் வேண்டுகோளின் பேரில் ஸ்கந்த ஹோமம், ருத்ர ஹோமம், கணபதி ஹோமம் போன்ற ஹோமங்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.

கோயில் திறந்திருக்கும் நேரம்:

இக்கோவில் காலை 06.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையிலும், மாலை 04.00 மணி முதல் 09.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

“ஓராறு முகமும் ஈராறு கரமும், தீராத வினை தன்னைத் தீர்க்கும் துன்பம் வாராத நிலை தன்னைச் சேர்க்கும்”.

முருகா சரணம்! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!!


Comments

Popular posts from this blog

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..

உண்மை பக்தி எது ?

ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்...