சென்னையில் திரிசக்தி தரிசனம்!!!



சென்னையில் திரிசக்தி தரிசனம்!!! - ஆரூர். சுந்தரசேகர்.
பராசக்தியிலிருந்து ஆதிசக்தியும், ஆதிசக்தியிலிருந்து இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியா சக்திகளும் தோன்றி உலகை உருவாக்கி, இயக்கி இறுதியில் வீடு பேறு அருள்புரிவதாக தேவிபாகவதம் கூறுகிறது.

இச்சா சக்தி - விருப்பங்களை நிறைவேற்றுபவர், சௌந்தர்யத்தின் வாழ்விடம், அமைதிக்கான ஆதாரம், நமக்கு சௌபாக்கியங்களை தருபவர்...

ஞான சக்தி - அறிவு, சகல வித்தைகளிலும் நமக்கு வெற்றி தருபவர், கவிதையாக, காவியமாக, சங்கீதமாக அருள்பாலிப்பவர்.

கிரியா சக்தி - வாழ்க்கை வளம்பெற செய்பவர், ஒளிமயமான வாழ்க்கையை நமக்கு அமைத்துக் கொடுப்பவர், செல்வம், புகழ் தந்து சுகமான வாழ்வருளுவர்.

இந்த மூன்று சக்திகளுக்கான கோயில்கள் சென்னையில் மேலூர், திருவொற்றியூர், திருமுல்லைவாயில் ஆகிய ஸ்தலங்களில் முக்கோண புள்ளிப்போல அமைந்துள்ளன. மூன்று திருவுருவங்களும் ஒரே ஸ்தபதியால் செய்யப்பட்டதால் இந்த மூன்று கோயில்களில் அம்மன்கள் ஒரே மாதிரியாக இருக்கிறது.

மூன்று சக்திகளையும் ஒன்றன் பின் ஒன்றாக ஒரே நாளில், குறிப்பாக ஒரு பௌர்ணமியில், முடிந்தால் ஒரு வெள்ளிக்கிழமை வரும் ஒரு பௌர்ணமியில் தரிசனம் பெறுவது சிறப்பானதாக கருதப்படுகிறது.

மீஞ்சூர் அருகே மேலூரிலுள்ள திருவுடை அம்மனைக் காலையிலும் திருவொற்றியூரில் உள்ள வடிவுடை அம்மனை உச்சியிலும், வட திருமுல்லைவாயிலிலுள்ள கொடியிடை அம்மனை மாலையிலும் விரதம் இருந்து வழிபட்டால், காசி - இராமேஸ்வரம் சென்று வந்த பலன் கிடைக்கும்.

மேலூர் ஶ்ரீ திருவுடையம்மன்:

மேலூரில் ஸ்ரீ திருமணங்கீஸ்வரருக்கு உடனுறை திருவுடையம்மனாக முப்பெரும் தேவியரில் மூத்தவராக மகாசக்தியாக விளங்குகிறார். இது சிவாலயமாக இருந்தாலும், இங்கு அம்மனின் பெயரிலேயே இக்கோயில் புகழடைந்திருக்கிறது. இச்சா சக்தியான இந்த அம்மனுக்கு மஞ்சள் - குங்குமக் காப்பு, மலர் ஆடை அலங்காரம் செய்து வேண்டிக் கொண்டால் மங்களக் காரியங்கள் கைகூடும். ஆறு வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீ திருவுடையம்மனை வணங்கி வருபவர்களுக்கு திருமண தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். புத்திர பாக்கியம் இல்லாதோர் ஸ்ரீதிருவுடையம்மனை ஆறு வாரம் அபிஷேகம் செய்து வழிபடுவோருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். ஆறு வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீதிருவுடையம்மனை வணங்கும் மாணவ-மாணவிகள் படிப்பிலும், அறிவிலும், சிறந்து வாழ்க்கையில் உயர்வடைவார்கள்.

மஞ்சள் புடவை அணிவித்து மாம்பழங்களை நைவேத்தியம் செய்து சிறப்பு பிரார்த்தனை செய்யலாம்.

கோயிலுக்கு செல்லும் வழி:

இந்த கோயிலுக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து உள்ளூர் ரயில்கள் மீஞ்சூர் வழியாக செல்கின்றன. மீஞ்சூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ தூரத்தில் கோயில் உள்ளது. ரயில் நிலையத்திலிருந்து, கோயிலுக்கு ஷேர் ஆட்டோக்கள் உள்ளன. சென்னை கோயம்பேட்டிலிருந்து மிஞ்சூருக்கு பேருந்துகள் இருக்கின்றன, மேலூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து கோயில் சுமார் ஒரு கி.மீ தூரத்தில் உள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 07.30 முதல் 11.30 வரை

மாலை 04.30 முதல் 07.30 வரை

பௌர்ணமி தினங்களில் காலை முதல் இரவு வரை முழுவதும் திறந்திருக்கும்.

திருவொற்றியூர் வடிவுடை அம்மன்:

திருவொற்றியூரில், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடை அம்மனாக ஞானசக்தியாக, தனது பக்தர்கள் இவ்வுலகில், ஞானமும், அதிக அறிவுடையவர்களாகவும் திகழ அருள்புரிகின்றார். ஞான சக்தியான இந்த அம்மனுக்கு மஞ்சள் - குங்குமக் காப்பு, மலர் ஆடை அலங்காரம் செய்து வேண்டிக் கொண்டால் நல்ல மணவாழ்க்கை அமையும்.

உச்சிக் காலை பூஜையின் போது, சிவப்பு நிற புடவை அணிவித்து பலாப்பழத்தை அம்மனுக்கு நைவேதியம் செய்ய, பக்தர்கள் வேண்டுவன அனைத்தும் நிறைவேற அருள் புரிகின்றார். பட்டினத்தார், காளமேகம், அருணகிரிநாதர், தியாகயர், முத்துசுவாமி தீட்சிதர் ஆகியோர் அம்மனைப் பற்றி பல பாடல்களையும், கீர்த்தனைகளையும் பாடியுள்ளனர்.

கோயிலுக்கு செல்லும் வழி:

இந்த கோயில் சென்னை பாரிஸிலிருந்து ஏழு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சென்னை ‘உயர்நீதி மன்றப்’ பகுதியிலிருந்து திருவொற்றியூருக்கு நகரப் பேருந்து செல்கிறது, இப்பேருந்தில் ஏறி, காலடிப்பேட்டையை அடுத்து, ‘தேரடி நிறுத்தத்தில்’ இறங்கி செல்லவேண்டும்.

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 06:00 முதல் 12:00 வரை

மாலை 04:00 முதல் 08:00 வரை

பௌர்ணமி தினங்களில் காலை முதல் இரவு வரை முழுவதும் திறந்திருக்கும்.

திருமுல்லைவாயல் ஶ்ரீ கொடியிடை அம்மன்:

திருமுல்லைவாயல், ஶ்ரீ மாசிலாமணீயீஸ்வரர் உடனுறை கொடியிடை அம்மனாக முப்பெரும் சக்திகளில் கிரியா சக்தியாக நம் செயல்கள் யாவும் வெற்றியடைய அருள்பாலிக்கின்றார். அம்மனை குளிர்விக்கும் வகையில் தினமும் அம்மனுக்கு சந்தன காப்பு செய்யப்படுகிறது.

குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள் நீங்கி ஒற்றுமையுடன் வாழ பச்சை நிறப் புடவை அணிவித்து வாழைப்பழங்கள் நைவேத்தியம் செய்து சிறப்பு பிரார்த்தனை செய்யலாம். இக் கோயில் இராமலிங்க வள்ளலார், சுந்தரர், அருணகிரிநாதர் பாடி வழிபட்ட ஸ்தலம்.

இருபத்தி ஏழு நட்சத்திரங்களும் கொடியிடை நாயகியை வணங்கிய ஸ்தலமாகும். இந்திராணி இத்தலத்து அம்மனை வழிபட்டு இந்திரனை மீளப்பெற்றதாக ஐதீகம்.

கேட்டாலே முக்தி தரும் இத்தலத்தில், கொடியிடை அம்மனை நவக்கிரகங்களும் வணங்கியதால், இங்கு நவக்கிரகங்களுக்குத் தனி சன்னிதி கிடையாது.

கோயிலுக்கு செல்லும் வழி:

இக்கோயில் சென்னை - அரக்கோணம் செல்லும் ரயில் பாதையில் உள்ள திருமுல்லைவாயில் நிறுத்தத்தில் இறங்கி ஒரு கி.மீ செல்ல வேண்டும். சென்னை அம்பத்தூரில் இருந்து சுமார் மூன்று கி.மீ. தொலைவில் உள்ளது. அம்பத்தூரிலிருந்து இங்கு செல்ல பேருந்துகள் உள்ளன.

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 06:30 முதல் 12:30 வரை

மாலை 04:00 முதல் 08:00 வரை

பௌர்ணமி தினங்களில் காலை முதல் இரவு வரை முழுவதும் திறந்திருக்கும்.

பௌர்ணமி என்றதும் அனைவருக்கும் கிரிவலம் தான் நினைவுக்கு வரும். ஆனால் பௌர்ணமி கிரிவலத்துக்கு மட்டுமல்ல, அம்மன் ஆலயங்களில் வழிபாடு செய்யவும் மிக உகந்த நாளாகும்.

சென்னையில் நிறைய அம்மன் கோயில்கள் இருந்தாலும், பௌர்ணமி அன்று ஒரே நாளில் வழிபட வேண்டிய இந்த மூன்று அம்மன் ஆலயங்கள் மிகவும் முக்கியமானவைகள் ஆகும்.

நாமும் இந்த கோயிலகளுக்கு சென்று நற்பலன்களை பெறுவோம்..

ஓம் சக்தி... பராசக்தி...

Comments

Popular posts from this blog

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..

உண்மை பக்தி எது ?

ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்...