சென்னை திருநீர்மலையில் நான்கு திருக்கோலத்தில் பெருமாள் தரிசனம்!!

சென்னை திருநீர்மலையில் நான்கு திருக்கோலத்தில் பெருமாள் தரிசனம்!! ஆரூர்.சுந்தரசேகர்.
மகாவிஷ்ணு திருநறையூரிலே நின்ற திருக்கோலமாகவும், திருவாலியிலே நரசிங்க உருவிலும் திருக்குடந்தையில் பள்ளி கொண்ட திருக்கோலமாகவும், திருக்கோவலூரில் உலகளந்த திருவடியாகவும் காட்சியளிப்பதை சென்னையில் பல்லாவரம் அருகில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருநீர்மலையில் ஓரே இடத்தில் காணலாம்.

இங்கு நின்ற கோலத்தில் நீர் வண்ணப் பெருமாள், இருந்த கோலத்தில் சாந்த நரசிம்மர், கிடந்த கோலத்தில் அரங்கநாதப் பெருமாள், நடந்த கோலத்தில் உலகளந்த பெருமாளாக (த்ரிவிக்ரமன்) அருள் புரிகின்றார்.

திருநீர்மலையில் உள்ள பெருமாளை தரிசித்தால், நான்கு திவ்ய தேசங்களான நாச்சியார்கோவில், திருவாலி, திருக்குடந்தை , திருக்கோவிலூர் ஆகிய திருத்தலங்களை வணங்கிய பலன் கிடைக்கும் என்று திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் திருவரங்கம், வடவேங்கடம், திருக்கோட்டியூர் ஆகிய தலங்களோடு இத்தலத்தையும் இணைத்து பூதத்தாழ்வாரும், இந்த திவ்ய தேசத்தை மங்களாசாசனம் செய்திருக்கிறார்.

“ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரங்கள்” என தானாக தோன்றிய எட்டு பெருமாள் தலங்கள் சிறப்பானதாக கருதப்படுகிறது. அவை ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), திருப்பதி, வட மாநில கோயில்களான சாளக்கிராமம், நைமிசாரண்யம், புஷ்கரம், நாராயணபுரம் ஆகிய ஏழும் மற்றும் எட்டாவதாக திருநீர்மலையும் ஆகும். இது மலைக் கோயில் ஆனதால் பௌர்ணமி தோறும் இங்கு கிரிவலம் வருவது விசேஷம்.

ஒரே ஸ்தலத்தில் நான்கு பெருமாள்:

இங்கு, பெருமாளை நான்கு திருக்கோலங்களில் (நின்ற, இருந்த, கிடந்த, நடந்த) தரிசிக்கலாம். நீர்வண்ணப்பெருமாள் மலையடிவாரத்திலுள்ள கோயிலிலும், 250 படிகளை ஏறிச் சென்றால், மலைக்கோயிலில் அரங்கநாதர், நரசிம்மர், உலகளந்த பெருமாள் ஆகியோரையும் தரிசிக்கலாம்.

நின்ற திருக்கோலத்தில் நீர்வண்ணப்பெருமாள்:

அடிவாரக் கோவிலில் உள்ள மூலவர் நீர்வண்ணப்பெருமாள், தாமரைமலர் பீடத்தில் அபய ஹஸ்த முத்திரைகளுடன் மார்பில் சாளகிராம மாலையுடன், கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். தாயார் அணிமாமலர் மங்கை, தனி சந்நிதியில் அருள் புரிகின்றார். நீர் சூழ்ந்த மலையின் மத்தியில் இருந்ததால் இவருக்கு, “நீர்வண்ணப்பெருமாள்” என்றும், ஸ்தலத்திற்கு “திருநீர்மலை” என்றும் பெயர் உண்டாயிற்று. நீல நிற மேனி ஆனதால் இவருக்கு “நீலவண்ணப்பெருமாள்” என்ற பெயரும் உண்டு.

இராமாயணம் எழுதிய வால்மீகி மகரிஷிக்கு, இராமபிரானை, திருமணக் கோலத்தில் தரிசிக்க வேண்டும் என்று எண்ணி இத்தலத்து பெருமானை வேண்டித் தவமிருந்தார். பெருமாள் அவருக்கு சீதா, இலட்சுமணன், பரதன், சத்ருக்கனன் ஆகியோருடன் இராமனாக திருமணக் கோலத்தில் காட்சி தந்தார். அப்போது வால்மீகி, தனக்கு காட்டிய தரிசனப்படியே நிரந்தரமாக அங்கேயே தங்கும்படி வேண்டினார். பெருமாளும் அவ்வாறே அருள் புரிந்தார். இக்கோயிலில் இராமபிரானுக்கும் தனி சன்னதி இருக்கிறது. இவரது சன்னதியில், சுவாமியை வணங்கியபடி வால்மீகி காட்சி தருகிறார்.

எல்லா கோயில்களிலும் சுவாமி சன்னதிக்கு எதிரில் இராஜகோபுரம், பலிபீடம், கொடிமரம் ஆகியன ஒரே வரிசையில் இருக்கும். ஆனால், இங்கு பலிபீடம், கொடிமரம் இரண்டும் ராஜகோபுரத்திலிருந்து விலகித் தனியே உள்ளது. வால்மீகிக்காக இராமராகவும், நீர்வண்ணப் பெருமாளாகவும் மகாவிஷ்ணு காட்சி தந்ததால், இவ்விரு மூர்த்திகளுக்கும் முக்கியத்துவம் தருவதற்காக இராமர் சன்னதி எதிரில் இராஜகோபுரமும், நீர்வண்ணப்பெருமாள் எதிரில் கொடிமரமும் அமைக்கப்பட்டுள்ளன.

இருந்த திருக்கோலத்தில் நரசிம்மர்:

மலைமேல் கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் நரசிம்மர் அருளுகிறார். இங்கு நரசிம்மரை சாந்தமான, பால ரூபத்தில் தரிசிக்கலாம். இரணியனை சம்ஹாரம் செய்ய நரசிம்ம அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, உக்கிரமாக இருந்தார். இந்த அவதாரத்தை கண்டு பிரகலாதன் பயப்பட்டதால் மகாவிஷ்ணு பிரகலாதனுக்காக உக்கிர ரூபத்தை மாற்றி, அவனைப் போலவே பால ரூபத்தில் தரிசனம் தந்தார். இவரை “பால நரசிம்மர்” என்கின்றனர். சந்நிதியில் இவருக்கு பின்புறம் நரசிம்மர், சுயரூபத்துடன் இரண்டு கரங்களுடன் காட்சி தருகிறார். இடக்கை ஆட்காட்டி விரலை உயர்த்திக் காட்டுகிறார். இவரிடம் சங்கு, சக்கரம் இல்லை. இக்கோவிலில் பால வடிவம் மற்றும் சுயரூபம் என இரண்டு வடிவங்களில் நரசிம்மரைத் தரிசித்து நற்பலன்களை பெறலாம்.

கிடந்த திருக்கோலத்தில் அரங்கநாதப் பெருமாள்:

மலைமேல் கிழக்கு நோக்கி மாணிக்க சயனத் திருக்கோலத்தில் அரங்கநாதப் பெருமாளை இங்கு தரிசிக்கலாம். ஸ்ரீரங்கத்தில் மகாவிஷ்ணுவை சயனக்கோலத்தில் தரிசித்த பிருகு முனிவர், மார்க்கண்டேய மகரிஷி இருவரும் தங்கள் இருப்பிடத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, திருநீர்மலை அருகே வரும்போது அவர்களுக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்த மகாவிஷ்ணுவின் சயனக்கோல தரிசனம் மீண்டும் ஒருமுறை கிடைக்க வேண்டுமென்றும் மற்றும் இத்தலத்தில் தங்களுக்கு அந்த திருக்கோலத்தைக் காட்ட வேண்டும் என்றும் விருப்பப்பட்டனர். உடனே மகாவிஷ்ணு “மாணிக்க சயனத்தில்” அரங்கநாதராக இங்குள்ள மலையில் காட்சி கொடுத்தார்.

இவரே இங்கு மலைக்கோயில் மூலவராகவும், அவருக்கு நேர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஆதிசேஷனின் குடையின் கீழ் சயன திருக்கோலத்தில் ஸ்ரீரங்கநாதராய் அருள் புரிகின்றார். அவருடைய தொப்புள் கொடியில் பிரம்மா தாமரை மலரில் அமர்ந்திருக்கும் திருக்கோலத்துடனும் அருகில் பிருகு, மார்க்கண்டேயர் இருவரும் இருக்கின்றனர். இங்கு அரங்க நாதருக்கு அபிஷேகம் கிடையாது. வருடத்தில் ஒருமுறை கார்த்திகை மாதத்தில் தைலக்காப்பு மட்டும் செய்யப்படுகிறது.

நடந்த திருக்கோலத்தில் உலகளந்த பெருமாள்:

ஈரடியால் மூவுலகும் நடந்து, மூன்றாவது அடியை எங்கே வைப்பது எனக் கேட்பது போல திரிவிக்கிரம அவதார நிலையில் நடந்தவராகவும் கிழக்கு நோக்கியும் இங்கு அருள் புரிகின்றார்.

மூன்று அடி உயரமான வாமன அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, ஒருமுறை ஒரு கையில் தாழம்பூ குடையும், மற்றொரு கையில் கமண்டலம் கொண்டு, மகாபலி சக்கரவர்த்தி நடத்தும் வேள்வி சாலைக்குச் சென்றார். அப்போது மகாபலி அவரை வரவேற்று, அவருக்கு தானம் வழங்குவதாக தனது விருப்பத்தைச் சொன்னான்.

அந்த நேரத்தில் மகாவிஷ்ணு மகாபலியின் சிறப்பை உலகம் அறியவேண்டும் என்று முடிவு செய்து, எனக்கு “மூன்றடி மண் வேண்டும்” என்று கேட்டார்.

மகாபலி சக்கரவர்த்தி நீர் வார்த்து தானத்தை கொடுத்தான். பின்னர் ‘தங்களுக்கு உரிய நிலத்தை அளந்து எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று வாமனரை நோக்கி கூறினான். இதற்காகவே காத்திருந்த வாமனர், குள்ள உருவில் இருந்து வானுயரத்திற்கு உயர்ந்தார். இதைப் பார்த்து ஆச்சரியத்தில் மகாபலி சக்கரவர்த்தி மலைத்துப் போனான். உயர்ந்து நின்ற வாமனர் முதல் அடியைக் கொண்டு மண்ணுலகையும், இரண்டாம் அடியாக விண்ணுலகையும் அளந்தார். பின்னர் மகாபலியிடம், ‘நான் இரு உலகங்களையும் இரண்டு அடியில் அளந்து விட்டேன். மூன்றாவது அடியை எங்கே வைப்பது’ என்று கேட்டார். ‘இறைவா! மூன்றாவது அடியை என் தலை மீது வையுங்கள்’ என்று நிலத்தில் மண்டியிட்டு சிரம் தாழ்த்தி அமர்ந்தான். மகாவிஷ்ணுவும் தனது மூன்றாவது அடியை மகாபலியின் தலைமீது வைத்து, அவனை பாதாள உலகத்திற்கு தள்ளினார்.

‘மகாபலியே! உன் நல்லாட்சியால் உன் நாட்டை வளம் பெறச் செய்தாய். அதனால் நீ பெற்ற புண்ணியம் அனைத்தும் உனக்கு உயர்வைத் தந்தது. இப்போது நீ எனக்கு வழங்கிய தானத்தினால், இந்த உலகமே போற்றும் அளவுக்கு சிறப்புற்று இருப்பாய்’ என்று அருளினார்.

தீர்த்தங்கள்:

கும்பகோணத்திலுள்ள மகாமக குளத்தில் பத்தொன்பது தீர்த்தங்கள் சங்கமித்திருப்பதாக ஐதீகம். அதுபோல், இந்தக் கோயிலின் எதிரிலுள்ள திருக்குளத்தில் சித்த தீர்த்தம், சொர்ண தீர்த்தம், காருண்ய தீர்த்தம், க்ஷீர தீர்த்தம் என நான்கு தீர்த்தங்கள் சங்கமித்துள்ளன. இந்த திருக்குளம் மூன்று ஏக்கர் பரப்பளவில், நடுவில் நீராழி மண்டபத்துடன் உள்ளது.

கோயில் அமைவிடம்:

சென்னை பல்லாவரத்திலிருந்து ஐந்து கி.மீ. துரத்தில் அமைந்துள்ளது. அங்கிருந்து திருநீர்மலை வழியாக செல்லும் பஸ்களில் சென்றால் இக்கோயிலை அடையலாம்.

கோயில் திறந்திருக்கும் நேரம்:

இக்கோவில் காலை 8.00 முதல் 12.00 மணிவரையிலும், மாலை 4.00 முதல் 7.30மணிவரையிலும் திறந்திருக்கும்.

ஓம் நமோ நாராயணாய நமஹ!!

Comments

Popular posts from this blog

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..

உண்மை பக்தி எது ?

ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்...