மகான் நெரூர் ஶ்ரீ சதாசிவபிரம்மேந்திர ஸ்வாமிகள்.

மகான் நெரூர் ஶ்ரீ சதாசிவபிரம்மேந்திர ஸ்வாமிகள்.
ஆரூர். சுந்தரசேகர்.
     மறைந்தும், மறையாமல் சூட்சும வடிவில் அருள் செய்பவர்கள்தான் மகான்கள் என்று போற்றப்படுகிறார்கள்.  தான் வேறு, பிரம்மம் வேறு என்ற வேறுபாடு எதுவும் இல்லாமல், தானே அதுவாகவும், அதுவே தானாகவும் மாறி, இந்த உலகில் வாழ்ந்தாலும் அது குறித்த பிரக்ஞை எதுவுமில்லாமல் வாழ்ந்து, மறைந்த மகான்கள் எத்தனையோ பேர்.
    அவர்களில் ஜீவசமாதியான 'நெரூர் சதாசிவ பிரம்மேந்திர ஸ்வாமிகள்' இன்றும் சூட்சும வடிவில் நம்மோடு வாழும் அதிசயிக்கத்தக்க மகான். வாழும்போதே பிரம்மத்தை உணர்ந்து அருள் செய்தவர். ஶ்ரீ காஞ்சிகாமகோடி ஐம்பத்தேழாவது பீடாதிபதி பரமசிவேந்திர ஸரஸ்வதி மற்றும் ஶ்ரீதர வெங்கடேச அய்யாவாள் ஆகியோர்களின் சமகாலத்தில் வாழ்ந்தவர்.
   இவர் மானஸ ஸஞ்சரரே.. பஜரே ரகுவீரம்.. போன்ற இனிய எளிய அற்புதமான கர்நாடக இசை கீர்த்தனைகளை  இயற்றியவர் ஆவார்.

மகானின் அவதாரம்:
    மக்களுக்கு நல்வழி காட்ட காலந்தோறும் அவதரித்து வரும் மகான்களில் ஒருவராக 17-ஆம் நூற்றாண்டில் தோன்றியவர் ஶ்ரீ சதாசிவபிரம்மேந்திர ஸ்வாமிகள்
  மதுரையில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்த இவரின் தந்தை சோமநாத அவதானியார், தாயார் பார்வதி அம்மையார் ஆவார். சதாசிவ பிரமேந்திரரின் இயற்பெயர் சிவராமகிருஷ்ணன் என்பதாகும். இராமேஸ்வரத்தில் குடிகொண்டிருக்கும் இராமநாத சுவாமியின் அருளால் பிறந்த இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சிவராமன் என்பது. அவர்களது குலதெய்வமான கிருஷ்ண பகவானின் பெயரையும் இணைத்து சிவராம கிருஷ்ணன் என்று அழைக்கப் பெற்றார். இவர் இளம் வயதிலேயே வேதம், புராணம், இதிகாசம், உபநிடதம், சாஸ்திரம் போன்றவற்றில் சிறந்த புலமை பெற்றார். இவரது தந்தை சோமநாத அவதானியார் இல்லறத்தைத் துறந்து இமயம் சென்றுவிடவே, தாயார் பார்வதியின் ஆதரவில் வளர்ந்து வந்தார். அவரது தாயார் பால்ய வயதிலேயே அவருக்கு விவாகம் செய்துவைத்தார். ஆனால் சிவராம கிருஷ்ணனின் மனமோ துறவறத்தை நாடியது. 

சிவராம கிருஷ்ணன் “சதாசிவ பிரம்மேந்திரர்” ஆனார்:
    சிவராம கிருஷ்ணன் லௌகீக வாழ்வை வெறுத்து கும்பகோணம் அருகிலுள்ள திருவிசலூர் ஶ்ரீதர வெங்கடேச அய்யாவாள் அவர்களிடம் சென்று வேதாந்த பாடம் பயின்றார்.  பின்பு ஶ்ரீ காஞ்சிகாமகோடி ஐம்பத்தேழாவது பீடாதிபதி ஶ்ரீ பரமசிவேந்திர ஸரஸ்வதி அவர்களால் ஈர்க்கப்பட்டு ஸ்வாமிகளிடம் சகல வேத சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தார். அங்கே இவரது அறிவு மேலும் சுடர்விட்டுப் பிரகாசித்தது. இவரது ஞானத்தைக் கண்டு, ஶ்ரீ காஞ்சிகாமகோடி பீடாதிபதி ஶ்ரீ பரமசிவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் இவருக்கு ‘சதாசிவ பிரம்மேந்திரர்’ என்ற தீக்ஷா நாமத்தைச் சூட்டியருளினார்.
    சதாசிவ பிரமேந்திரரின் திறமைகளைக் கேள்விப்பட்ட மைசூர் மகாராஜா, அவரை சமஸ்தான வித்வானாக்கிக் கொண்டார். அவர், தன் வாதத் திறமையினால், சமஸ்தானத்தின் மற்ற வித்வான்கள் அனைவரையும் தோற்கடித்தார்.
     ஒரு முறை ஶ்ரீ பரமசிவேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் இவரை அழைத்து ஊர் வாயெல்லாம் அடக்க கற்றுக் கொண்ட நீ உன் வாயை அடக்க கற்றுக் கொள்ளவில்லையே என்று கூறியுள்ளார். உடனே மைசூர் மகாராஜா சமஸ்தான வித்வான் பதவியை துறந்து, இனி பேசுவதில்லை என்று முடிவு செய்து மௌனத்தை கடைப்பிடித்து கடும் தவம் செய்து ஞானநிலையை அடைந்தார். அதுமுதல், சதா பிரம்ம நிலையில் லயித்திருப்பது சதாசிவ பிரமேந்திரரின் வழக்கமானது. உறக்கம், உணவு எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை. ஆடைகளைத் துறந்து அவதூத கோலத்தில் நடமாடத் தொடங்கினார்.

மகான் ஶ்ரீசதாசிவபிரம்மேந்திர ஸ்வாமிகளின் அற்புதங்கள்:
புன்னை நல்லூர் மாரியம்மன்:
     ஒரு சமயம் தஞ்சையை ஆண்டு வந்த சரபோஜி மன்னன் திருச்சி சமயபுரம் மாரியம்மனை தரிசிக்க வருவதாய் வேண்டிக்கொள்ள “நீ ஏன் சமயபுரம் வருகிறாய், இங்கேயே நான் புன்னைவனக்காட்டில் இருக்கிறேனே அங்கேயே ஒரு கோவில் கட்டி வழிபடு” என கனவில் அம்மன் கூறியதும்,  புன்னைவனக்காட்டிற்கு வந்த மன்னர் அங்கு ஒரு புற்றுமட்டும் இருப்பதை கண்டு திகைத்து நின்றார். அப்போது புன்னைவனக்காட்டில் மகான் ஶ்ரீசதாசிவபிரம்மேந்திர ஸ்வாமிகள் யோக நிஷ்டையில் அமர்ந்திருந்தார். நிஷ்டையில் இருந்து கண் விழித்த மகானிடம் கனவின் விவரத்தைக்கூறினார். விஷயத்தை புரிந்துகொண்ட ஶ்ரீசதாசிவபிரம்மேந்திர ஸ்வாமிகளும் மன்னனைப் புனுகு, ஜவ்வாது, சந்தனம் ஆகியவற்றைக் கொண்டுவருமாறு பணிக்க, மன்னனும் அவ்வாறே அந்தப் பொருட்களைத் தருவித்தார். அவற்றை அங்கிருந்த மண்ணுடன் சேர்த்துப் பிசைந்து மாரியம்மனின் உருவை உருவாக்கினார். அந்த இடத்திலேயே ஜன ஆகர்ஷண யந்திரம் ஒன்றை எழுதி அங்கு வைத்தார். பின்பு மன்னனை  வழிபாடு நடத்தும்படி சொல்ல மன்னனும் அவ்வாறே வழிபட்டான். அவர் உருவாக்கிய அந்தக்கோவில புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் என பிரசித்தி பெற்று வேண்டுதல் தலமாக தஞ்சையில் புகழ்பெற்று விளங்குகிறது. இக்கோவிலில் உள்ள மாரியம்மனின் திருமேனி புற்று மண்ணால் ஆனதால் அபிஷேகம் செய்யமாட்டார்கள்; புனுகு மட்டுமே சாற்றுவார்கள்...

வெட்டப்பட்ட கை ஒன்று சேர்ந்தது:
   ஒரு முறை சதாசிவ பிரமேந்திரர் பயணத்தின் போது வழியில் உடல்,மனம் என்ற உணர்வின்றி தான் எல்லையற்ற பிரமம் என்கிற ஏகாந்த உணர்வில் அவதூத் கோலத்தில் ஒரு நவாபின்  அரண்மனைக்குள் நுழைந்து விட்டார். பிரமேந்திரரைப் பற்றி அறியாத நவாப், கடுங் கோபத்துடன் மகானின் கையை வெட்டிவிட்டார். கை வெட்டப்பட்டு ரத்தம் வந்து கொண்டிருந்த போதும் சிறிதும் சலனப்படாத பிரமேந்திரர் தான் சரீரமல்ல என்ற ஏகாந்த உணர்வில் இருந்ததால், தன் கை வெட்டுப்பட்டதை கூட உணராமல் சென்று கொண்டே இருந்தார். திகைத்துப் போன நவாப் அந்த வெட்டப்பட்ட கையை எடுத்துக் கொண்டு ஓடி தனது தவறுக்காக மன்னிப்பு கேட்டார். அந்தக் கையை அவரிடம் இருந்து வாங்கி மீண்டும் பொருத்திக் கொண்டு அவர் போய்க் கொண்டே இருந்தார்.

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மகான்:
    ஒருமுறை சதாசிவ பிரம்மேந்திரர் கொடுமுடி அருகே காவிரி ஆற்றங்கரையில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த போது ஆற்றில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி மகானை அடித்துச் சென்றுவிட்டது. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் வெள்ளத்தினால் அவர் அடித்துச் செல்லப்பட்டு விட்டார் என்றே மக்கள் கருதினர். பின்னர் சில மாதங்கள் கழித்து, வீடு கட்ட மணல் எடுப்பதற்காக வந்த சிலர் ஆற்றின் ஒருபுறத்தில் தோண்டினர். அப்போது திடீரென மண்வெட்டியில் இருந்து ரத்தமாக வந்ததைக் கண்டு அஞ்சிய அவர்கள் மேலும் தோண்டிப் பார்த்த போது, உள்ளே கண்களை மூடிய அமர்ந்த நிலையில் சதாசிவ பிரமேந்திரர் தவம் செய்துகொண்டிருந்தார். அவர் தலை மீது மண்வெட்டி பட்டு, அந்தக் காயத்திலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. உடனே மக்கள் அங்கு கூடி, கதறினர். அதனை கேட்டுக் கண் விழித்த மகான், எதுவும் நடக்காதது போல் அவ்விடம் விட்டுச் சென்றுவிட்டார்.

மகானின் மந்திர தீக்ஷை:
புதுக்கோட்டையை அடுத்த திருவரங்குளம் காட்டுப் பகுதியில் மகான் ஒருமுறை சென்று கொண்டிருந்தார். மகானைப் பற்றிக் கேள்விப்பட்ட புதுக்கோட்டை மன்னராக இருந்த விஜய ரகுநாத தொண்டைமான் அவரைத் தன் அரண்மனைக்கு அழைத்து கௌரவிக்க விரும்பினார். தன் ஆட்சி எல்லைக்குள்ளே இருந்த அந்த மகானை தானே நேரில் சென்று அழைத்தார். மௌன விரதம் மேற்கொண்டிருந்த சதாசிவ பிரம்மேந்திரர் ஒன்றுமே பேசாமல் அமைதியாக இருந்தார். அவர் அரண்மனைக்கு எல்லாம் வர மாட்டார் என்பதைப் புரிந்து கொண்ட மன்னர் பின் ஒருநாள், “என்னுடன் வராவிட்டாலும் பரவாயில்லை எனக்கு நீங்கள் மந்திர தீக்ஷை அளித்தால் போதும்” என மகானை வணங்கினர். அவரும், மணலில் தக்ஷிணாமூர்த்தி மந்திரத்தை எழுதிக் காண்பித்தார். அம்மந்திரத்தையே தனக்கான உபதேசமாகக் கொண்ட மன்னர், அவர் கைப்பட்ட அம்மணலை தமது மேல் ஆடையில்  சேகரித்துக் கொண்டு அரண்மனைக்குச் சென்றார். அவர் வரைந்து காட்டிய அக்ஷரங்களைக் கொண்டு ஒரு யந்திரம் ஸ்தாபித்து, அம்மணலை ஒரு தங்கச் சிமிழுக்குள் வைத்து பூஜை செய்து வரலானார். (இன்றளவும் புதுக்கோட்டை அரண்மனையில் அந்தச் சிமிழ் பாதுகாக்கப்பட்டு, பூஜை செய்யப்பட்டு வருகிறது.)

மகான் எழுதிய ஞானப் புத்தகங்களும், பாடல்களும்:
     இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவராகக் கருதப்படும் இம்மகான் மானஸ ஸஞ்சரரே, ஸர்வம் ப்ரம்ம மயம், பிபரே ராமரஸம், ப்ரூஹி முகுந்தேதி போன்ற பல புகழ்பெற்ற கீர்த்தனைகளையும், பிரம்ம சூத்ர வ்ருத்தி, ப்ரம்ம தத்வ பிரகாசிகா, யோக சுத்தாகரா, ஆத்ம வித்ய விலாஸம் போன்ற பல நூல்களையும் எழுதியிருக்கிறார். பல அத்வைத நூல்களை இயற்றினார். பிரம்ம சூத்திரம், பதஞ்சலியின் யோக சூத்திரங்கள், பகவத் கீதை ஆகியவற்றிற்கு அருமையான உரைகளும் எழுதினார். மகான் ஶ்ரீசதாசிவபிரம்மேந்திர ஸ்வாமிகள் இயற்றிய சாஸ்திரங்களும் கீர்த்தனங்களும் அநேகம். இவர் பத்தொன்பது ஞானப் புத்தகங்களும், பல பாடல்களும் எழுதினார்.

ஜீவ சமாதியான மகான்:
   பல்வேறு அற்புதங்கள் புரிந்து, பலரது ஆன்ம ஞானம் சிறக்கக் காரணமாக இருந்த மகான் ஶ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் தன் வாழ்வு கடைசிக் கட்டத்தை நெருங்குவதை உணர்ந்தார். அவருடன் இருந்த அவரது பக்தர்களிடம் தனது சமாதியை கரூரை அடுத்த நெரூரில் அமைக்கும்படி எழுதிக் காட்டினார். நெரூர் வந்து சேர்ந்த ஶ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர்  தனது பக்தர்களான புதுக்கோட்டை மகாராஜா, மைசூர் மகாராஜா, தஞ்சாவூர் மகாராஜா ஆகியோரை அழைத்து “இங்கு குழி அமையுங்கள். நான் உட்கார்ந்ததும் விபூதி, உப்பு, மஞ்சள் தூள், செங்கற்பொடி போட்டு மூடிவிடுங்கள். ஒன்பதாம் நாள் சிரசின் மேல் வில்வ விருட்சம் தோன்றும். பன்னிரெண்டாம் நாள் காசியிலிருந்து ஒருவர் சிவலிங்கம் கொண்டு வருவார். அதை பன்னிரெண்டு  அடிக்கு கிழக்கு பக்கமாக வைத்து கோயில் எழுப்புங்கள் என்று அருளியபடி 1753ஆம் ஆண்டில் சித்திரை மாதம் தசமி திதி அன்று ஜீவ சமாதியானார்.
    அவர் சொன்னபடி அவர் சமாதியடைந்த ஒன்பதாம் நாள் அவர் சமாதியின் மீது ஒரு வில்வ மரம் துளிர்விட்டு எழுந்தது. அவர் முன்பே தெரிவித்திருந்தபடி பன்னிரெண்டாம் நாள் காசியிலிருந்து ஒரு பிரம்மச்சாரி ஒரு சிவலிங்கம் கொண்டு வந்திருந்தார். அந்த சிவலிங்கத்தை ஶ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவசமாதிக்கு பன்னிரெண்டு அடி தள்ளி சமாதிக்குக் கிழக்காக வைத்து லிங்கம் பிரதிஷ்ட செய்யப்பட்டது.

மகான் ஸ்ரீ சதாசிவபிரம்மேந்திர ஸ்வாமிகள் அதிஷ்டானம்:
   மிக சக்தி வாய்ந்த மகான் ஸ்ரீ  சதாசிவபிரம்மேந்திர ஸ்வாமிகள் அதிஷ்டானத்தில் வேண்டிக் கொள்பவர்களுக்கு அமைதியும், செல்வமும் பரிபூரணமாக கிடைப்பதால் மக்கள் பக்தியுடன் வந்த வண்ணம் உள்ளனர். 

இங்கு பெளர்ணமி பூஜை, ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு பூஜை, சித்திரை மாத குரு வார பூஜை போன்றவைகள் மிக சிறப்பாக கொண்டாப்படுகிறது.
    நாம சங்கீர்த்தனம் என்றாலே சதாசிவ பிரம்மேந்திரர்தான் நினைவில் வருவார். ஒவ்வொரு வருஷமும் நெரூரில் வைகாசி சுக்ல பஞ்சமி அன்று தொடங்கி சுக்ல தசமி வரை தொடர்ந்து வைதீக முறையில் உற்சவம், ஆராதனைகள் நடைபெறும். முக்கிய ஆராதனை அன்று நாமசங்கீர்த்தனம் தொடர்ந்து ஒலிக்க, பக்தர்களுக்கு அன்னதானமும், பக்தர்கள் சாப்பிட்ட இலையில் வேண்டுதல் செய்து கொண்ட பக்தர்களின் அங்கப் பிரதக்ஷிணமும் நடைபெறும். 
    கேட்டை நட்சத்திரகாரர்களுக்கு இந்த அதிஷ்டானம் ஒரு சிறந்த பரிகாரஸ்தலமாகும். 
   காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் மற்றும் சிருங்கேரி சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் ஆகியோரும் இங்கு வழிபாடு செய்துள்ளார்கள்.

   மகான் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் அதிஷ்டானம்:
கரூரில் இருந்து பஞ்சமாதேவி செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் கரையில் நெரூரில் உள்ளது .
மகான் சதாசிவப் பிரம்மேந்திரரின் பாதம் பணிந்து குருவருளும் திருவருளும் பெறுவோம்!!!

Comments

Popular posts from this blog

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..

உண்மை பக்தி எது ?

ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்...