மகான் போளூர் ஶ்ரீ விட்டோபா ஸ்வாமிகள்.
மகான் போளூர் ஶ்ரீ விட்டோபா ஸ்வாமிகள்.
எத்தனையோ மகான்கள் நம் பாரத பூமியில் அவதரித்து மக்களின் நலன் ஒன்றையே தமது குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்திருக்கின்றனர். அவர்கள் தம்மை நாடி வரும் மக்களின் வல்வினைகளைப் போக்கி நல்வாழ்வு சிறக்க வழிவகை செய்திருக்கின்றனர்.
பல மகான்கள் எங்கெங்கோ அவதரித்து அதிகம் வெளியே தெரியாமலும் இருந்திருக்கிறார்கள். எந்நேரமும் இறை சிந்தனையிலேயே மூழ்கிருந்த அவர்கள் நாளடைவில் ஒரு இறைநிலையை எட்டி அபரிமிதமான இறை சக்தியுடன் திகழ்ந்தார்கள். அப்படிப்பட்ட மகான்களின் வரிசையில் ஓர் அதிசய மகானாக தோன்றியவரே மகான் ஸ்ரீ விட்டோபா சுவாமிகள்
இவர் மகான் ரமணர்,மகான் சேஷாத்திரி ஸ்வாமிகள் வாழ்ந்த காலத்தில் திருவண்ணாமலைக்கு அருகே போளூரில் வாழ்ந்தவர்.
மகானின் பால பருவம்:
சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த மராத்தியர் ஆன கொண்டல்ராவ் லிங்கார் எனப்படும் தையல்கலையை தொழிலாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது மனைவி புஸிபாய். இவர்களுக்கு மகான் விட்டோபா மகனாகப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் தோதா.
தந்தை கொண்டல்ராவ் பஜனை செய்வதில் அதிக ஈடுபாடு கொண்டு தாமே சொந்தமாக பஜனை மடம் கட்டி, தினமும் அங்கு சென்று பஜனை செய்வது வழக்கமாக கொண்டிருந்தார். இவரது நான்கு வயதில் தாயார் புஸிபாய் காலமானார் . குழந்தையை வளர்க்கவேண்டும் என்பதற்காக கொண்டல்ராவ் மறுமணம் செய்து கொண்டார் .
இளம் வயதில் மகான் யாரிடமும் அதிகமாகப் பேசமாட்டார். பெரும்பாலும் தந்தையின் பஜனை மடத்தில் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு தியானத்தில் ஈடு பட்டிருப்பது போல் மௌனமாகவே இருப்பார். எப்போதாவது கைகளால் தாளம் போட்டுக் கொண்டு, “விட்டோபா விட்டோபா ஜயஜய விட்டோபா” என்று வாய்விட்டுப் பாடி பஜனை செய்வார் . மகனின் நிலை யைக் கண்ட ராவ் அவனை பத்து வயது வரை பள்ளிக்கு அனுப்பவில்லை. ஆனாலும், படிப்பு வேண்டுமே என்பதற்காக மகனைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார் ராவ்.
பள்ளிக்கு சென்றும், விட்டோபா மௌனமாகவே இருந்தார். சில சமயம் தாளம் போட்டுக் கொண்டே பஜனை பாடலை முணுமுணுப்பார் . ஆசிரியர் நடத்தும் பாடங்களில் அவருடைய நாட்டம் செல்ல வில்லை . ஆசிரியரும் எத்தனையோ சொல்லியும், தண்டித்தும் விட்டோபாவை மாற்ற முடியவில்லை. முடிவில் அவர் பள்ளியை விட்டு வீட்டுக்கு அனுப்பப் பட்டார் . நான்கு ஆண்டுகள் பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது .
பதினான்கு வயது இளைஞனான விட்டோபா பசி , தாகம் இவற்றைப் பொருட்படுத்தாது , எப்பொழுதும் பித்தனைப் போல் தலைவிரிகோலமாக கடைத்தெரு போன்ற பல இடங்களை சுற்றி வந்தார். ஆனால் அவரது மனதில் கடவுளின் பக்தி நிறைந்திருந்தது. சிறிது நாள் கழித்து, குடும்ப வாழ்க்கையில் பற்றில்லாமல் பெற்றோரை விட்டுப் பிரிந்து சென்னையை விட்டு வெளியேறினார்.
“விட்டோபா, விட்டோபா”
சென்னையை விட்டு வெளியேறிய மகான் வேலூர், திருவண்ணாமலை பகுதிகளில் யாருடனும் பேசாமல் மௌனமாக சுற்றித் திரிந்தார். யாரேனும் அழைத்து உணவு அளித்தால் உண்பார்,அவர் யாரையும் உணவுக்காக நாடுவதில்லை. கோயில் மேடை, வீட்டுத் திண்ணை, தெரு முனை போன்றவற்றில் விருப்பு வெறுப்பு உணர்வின்றி அங்கேயே தங்கி, தூங்க செய்வார். சதா பிரம்மத்தில் லயித்திருந்ததால், தான், தனது என்ற எண்ணமும் உடல் உணர்வுமுமற்ற நிலையில் இருந்து வந்தார்.
ஒரு நாள் போளூரை அடுத்த திருச்சூர் கிராமத்தை வந்தடைந்தார். அந்த கிராமத்து இளைஞர்கள், விட்டோபாவின் உருவம் கண்டு ஏளனம் செய்தனர். ஆனால், அவர்களிடமும் விட்டோபா பேசவில்லை. ஊருக்குப் புதிதாக வந்துள்ள இளைஞரை எப்படியாவது பேச வைக்க சிலர் முயற்சித்தனர். அவருடைய இரு கன்னங்களையும் இடுக்கி போன்ற ஆயுதத்தால் பலமாக அழுத்தினர். வலி தாங்க முடியாத மகான் “ஹரே விட்டோபா, ஹரே விட்டோபா” என்று பாண்டுரங்க விட்டலரின் நாமத்தை சொல்லிக்கொண்டு தன்னை காயபடுத்தியவர்களை காத்தருளும்படி வேண்டிக் கொண்டார். பின் மகானின் மகிமை அறிந்து அவரை வணங்கி தங்களை மன்னிக்குமாறு வேண்டினார்கள். மகானும் அவர்களை மன்னிக்கும் பாவனையில் பதில் ஏதும் பேசாமல் அந்த ஊரை விட்டுச் சென்று விட்டார். “விட்டோபா, விட்டோபா” என கூறியதால், அன்று முதல் அவர் “மகான் ஶ்ரீ விட்டோபா சுவாமிகள்” என்று அழைக்கப்பட்டார்.ஆனால் அந்த காயத்தால் உண்டான வடு அவரை விட்டு கடைசிவரை மறையவே இல்லை.
மகான் போளூர் ஶ்ரீ விட்டோபா ஸ்வாமிகளின் அற்புதங்கள்:
சிரஸ்ததார் கை வலி குணமடைந்தது:
விட்டோபா திருச்சூரை விட்டு போளூர் வந்தடைந்தார். போளூரில் சிரஸ்ததாராகப் பணியாற்றி வந்த அதிகாரியின் மனைவி ஒரு நாள் விட்டோபாவைக் கண்டவுடன், அவர் ஒரு பெரிய மகான் என்று உணர்ந்து அவருக்குத் தினமும் உணவளிக்க முடிவு செய்து அதன்படி உணவு அளித்து வந்தாள். தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மகான் விட்டோபா அவளுடைய வீட்டு வாசலில் நின்று கையைத் தட்டுவார் . அந்த ஓசையைக் கேட்டவுடன் அந்த அம்மையார் உணவு கொண்டு வந்து கொடுத்து மகிழ்வாள். இது தொடர்ந்து நடந்து வந்தது . ஆனால் இந்த இந்த விஷயம் அவர் கணவருக்கு தெரியாது.
ஒரு நாள் சிரஸ்ததார் அவர் வீட்டில் இருந்த சமயம், மகான் விட்டோபா வாசலில்வந்து நின்று கைதட்டினார்.விஷயம் தெரியாத சிரஸ்ததார் யாரோ ஒரு பைத்தியக் காரன் என்று நினைத்து ஒரு பிரம்பைக் காட்டி மிரட்டி மகான் விட்டோபாவை விரட்டிவிட்டார். இதையறியாத அவருடைய மனைவி விட்டோபா சுவாமிகள் வராத காரணம் தெரியாமல் கவலைப்பட்டு கொண்டிருந்தாள். பின்பு வழக்கம் போல் அலுவலகம் சென்ற சிரஸ்ததார் பேனாவை எடுத்து எழுத முயன்றபோது அவரது வலது கை செயலற்றுப் போய் விட்டது. நேரம் ஆக ஆக வலி அதிகரித்துக் கொண்டே போனது. அதிகாரியை அலுவலக பணியாட்கள் வண்டியில் ஏற்றி வீட்டுக்கு அழைத்து வந்தனர். கணவரின் நிலை கண்ட மனைவி அதிர்ந்து போனாள்.
ஒரு பைத்தியக்காரன் வீட்டு வாசலில் நின்று கையைத் தட்டியதாகவும் , அவனை தன் பிரம்பைக் கொண்டு அதட்டி விரட்டி விட்ட செய்தியை சிரஸ்ததார் சொல்லக் கேட்ட அவருடைய மனைவி இதைக் கேட்டு பதறினாள்.
உடனே விட்டோபா சுவாமிகள் இருந்த இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து , தன் கணவரை கூட அழைத்துச் சென்று அறியாமல் செய்த பிழையை மன்னித்து அருள்புரியும்படி கதறி வேண்டினாள்.மகான் விட்டோபா, "ஜா' என்று குரல் கொடுத்தார். அந்தக் கணமே சிரஸ்ததார் கை வலி குணமடைந்தது. அன்று முதல் சிரஸ்ததார் தம்பதிகள் விட்டோபா சுவாமிகளின் தீவிர பக்தர்களாக மாறினர். இந்த நிகழ்ச்சிக்குப்பின் மகானின் புகழ் மக்கள் மத்தியில் பரவத் தொடங்கியது.
சுப்பராய முதலியார் தீராத வயிற்று வலி குணமானது:
சென்னையில் வசித்து வந்த சுப்பராய முதலியார் என்பவர் தீராத வயிற்று வலியால் அவஸ்தைபட்டார். செய்யாத வைத்தியம் இல்லை,எவ்வளவோ செலவு செய்து வைத்தியம் செய்தும் நோய் குணமாகவில்லை.என்ன செய்வது என்பது அறியாதிருக்கும் போது அவரது நண்பர்கள் மகான் ஶ்ரீ விட்டோபா ஸ்வாமிகள் மகிமை பற்றி கூறினார்கள். அன்றிரவு மகானை நினைத்தபடி தன் நிலையை எண்ணி வருந்தியபடி தூங்கினார், இரவு அவருடைய கனவில் மகான் விட்டோபா தோன்றி “போளூருக்கு வா. நோய் குணமாகிவிடும்,'' என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். மறுநாள் காலையிலேயே சென்னையிலிருந்து புறப்பட்டு போளூர் வந்து மகானை தரிசனம் செய்து , தம் நோயைத் தீர்த்தருள வேண்டினார். மகானும் தனது இடது காலை நோயாளியின் வயிற்றில் வைத்தார். அந்த விநாடி முதல் சுப்பராய முதலியாருடைய வயிற்று வலி இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது.
காணாமல் போன மகான்
ஒரு மழை காலத்தில் விடாது அடைமழை பெய்ததால் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்தது. அப்போது கரையில் உட்கார்ந்திருந்த மகான் விட்டோபா ஸ்வாமிகளை வெள்ளம் அடித்துக் கொண்டு சென்று விட்டது. மழை நின்ற பிறகு மகானை காணாது பக்தர்கள் கவலையுடன் தேடத் துவங்கினர். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மகானை காணவில்லை. ஒரு நாள் சென்ற பின் நீர் வடியத் துவங்கிய பிறகு விட்டோபாவைத் தேடும் பணியில் மக்கள் ஈடு பட்டனர். ஒரு ஆழமான குழியில் அவர் கிடப்பதைக் கண்டனர். கழுத்துவரை மண்ணால் புதையுண்டபடி தலை மட்டும் வெளியில் நீட்டியிருந்தது. மகானைப் பார்த்த பக்தர்கள் விட்டோபாவின் உயிர் போய்விட்டதோ என்று அஞ்சி , பரபரப்பாக மண்ணைத் தோண்டி விட்டோபாவின் உடலை வெளியில் எடுத்தார்கள். மகான் ஶ்ரீ விட்டோபா தமது கண்களைத் திறந்து பார்க்க , அனைவரும் மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்தனர்.
மற்றொரு முறை பெரும் சூறாவளிக் காற்று அடித்ததில் மகான் தங்கும் கரையோரம் இருந்த பெரிய வாகை மரம் வேருடன் பெயர்ந்து, விட்டோபா சுவாமிகளின் மேல் விழுந்தது. அங்கு வந்த மக்கள், சுவாமிகள் இறந்துவிட்டார் என்று எண்ணி மரக் கிளைகளையும் அடிமரத்தையும் அவசர அவசரமாக வெட்டி மகானின் உடலை வெளியில் எடுத்தனர். மகானின் உடலில் சிறு காயமோ, ரத்தமோ வரவில்லை. என்ன ஆச்சரியம்! மகான் எதுவும் நடக்காதது போல சாதாரணமாக எழுந்து வருவதைக் கண்ட அனைவரும் வியப்படைந்தனர் .
தன் இறுதிக் காலம் வரையில் போளூரில் தங்கி கடுமையான மௌனவிரதத்தை கடைபிடித்துக் கொண்டு தனது பக்தர்களுக்கு செய்கை மூலம் மட்டுமே பதிலளித்தார். பல அற்புதங்களையும், விநோதங்களையும் நிகழ்த்தினார். மேலும் தனது பக்தர்களுக்கு விபூதி அளித்து தீராத நோய்களை தீர்த்துவைத்தார்.
இதோ விட்டோபா போகிறான்,இதோ விட்டோபா போகிறான்:
இப்படி அற்புதங்கள் பல நிகழ்த்திய விட்டோபா ஸ்வாமிகளுக்கு ஒரு நாள் ஜுரம் வந்தது. கை கால் வீங்கியது. அவர் சிறிதும் இதைப் பற்றி கவலையின்றி வழக்கம் போலவே இருந்தார். ஜுரம் நிற்கவில்லை. வைத்தியர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க நெருங்கியபோது அதை அவர் அனுமதிக்க வில்லை.
வேலு முதலியார் என்ற பக்தர் ''சுவாமி தாங்கள் அவஸ்தைப் படுவதை பார்க்க வேதனையாக இருக்கிறதே, யாரையும் சிகிச்சை செய்வதை அனுமதிப்பதில்லை... நீங்கள் எங்கள் வியாதியை போக்குகிறீர்கள், உங்கள் வியாதியை நீங்களே போக்கிக் கொள்ளக்கூடாதா? இன்னும் எத்தனை நாள் இப்படி அவஸ்தைப் படுவது, எங்களுக்கு மிகவும் கவலையாக இருக்கிறது'' என்று அழுதார். ஸ்வாமிகள் சிரித்துக் கொண்டு ''இந்த பூலோக வாழ்க்கை எனக்கு இன்னும் மூன்றே நாட்கள் தான். மூன்று இரவு கழிந்து அடுத்த விடியற்காலையில் எனது பயணம் புறப்பட்டு விடும்'' இந்தச் செய்தி எங்கும் பரவியது. எல்லா ஊரிலிருந்தும் பக்தர்கள் திரண்டு வந்தனர். மூன்று இரவு கழிந்தது. பக்தர்கள் ஸ்வாமிகளை ஒரு கட்டிடத்துக்கு தூக்கிக் கொண்டு சென்றார்கள். ஒரு சிறிய விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. எல்லோரும் தூங்காமல் கவலையோடு விழித்துக் கொண்டு இருந்தார்கள். விடியற்காலை எதோ சத்தம் கேட்டது. பார்த்தால் மெதுவாக சுவாமி விட்டோபா எழுந்து நடந்து வாசல் சுவற்றுக் கருகே போய் நின்று கொண்டார். மேலே பார்த்த அவர் அங்கேயே பத்மாசனம் போட்டு நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு கண்களை மூடி தியானம் செய்ய ஆரம்பித்தார். மகான் சொன்ன படியே காலை மணி ஐந்தாகிவிட்டது. பிரகாசமான ஒரு ஒளி திடீர் என்று அவரிடமிருந்து புறப்பட்டு வான் நோக்கி மேலே சென்றது. 1909-ஆம் ஆண்டு, ‘சாதாரண வருஷம்’, ஐப்பசி மாதம் எட்டாம் தேதி, புதன் கிழமை, திருவாதிரை நக்ஷத்திரம் கூடிய தினத்தில் மகான் முக்தியடைந்தார்.
அதேசமயம்தான் திருவண்ணாமலையில் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆகாயத்தைப் பார்த்தவராய், “இதோ விட்டோபா போகிறான், இதோ விட்டோபா போகிறான்.. எல்லோரும் பாருங்கோ'' என்று காலை 5 மணிக்கு உரக்கக் கத்தினார் .
மகான் விட்டோபா சுவாமிகளின் மகா சமாதி மடம்:
மகான் விட்டோபா சுவாமிகளின் மகா சமாதி மடம் திருவண்ணாமலையில் இருந்து முப்பத்து நான்கு கி.மீ தூரத்தில் உள்ள போளூரில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் குருபூஜை மற்றும் ஆராதனை சிறப்பான முறையில் தேவாரப் பாடல், திருமுறை, திருவாசகப் பாராயணம், சமய சொற்பொழிவு, சமாதி பூஜை, மகேஸ்வர பூஜை, ஜோதி தரிசனம், அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகளுடன் அவரது அடியார்களால் நடத்தப்படுகிறது.
இன்றைக்கும் போளூரில், குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் உடல் நலம் குன்றினால் விட்டோபா மகான் சமாதிக்கு சென்று அங்கு கொடுக்கும் விபூதியை இட்டுக்கொள்கின்றனர்.
நம்முடைய வேண்டுதலுக்கு அவர் இன்றும் ஜீவசமாதியிலிருந்து அருள்பாலித்து வருகின்றார். நாம் அவரை பக்தியுடன் வணங்குவோம்.
“ஓம் ஸ்ரீ விட்டோபா ஸ்வாமிகள் நமஹா”
Comments
Post a Comment