திருவாரூர் மகான் ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள்

திருவாரூர் மகான் ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள்
ஆரூர். சுந்தரசேகர்.
        இறைவன் பொதுவாக மகான் வடிவில் அவதரித்து நமக்கு அருள் புரிகின்றார் என்பது சான்றோர்களின் அனுபவம். மகான்களின் வாழ்க்கை அனைத்தும் அற்புதங்கள் நிறைந்ததே.         
   மகான்கள் ஒரு கட்டத்தில் ஜீவசமாதி ஆனாலும் அவர்கள் அரூபமாக எங்கும் வியாபித்து தங்களது அருளை பக்தர்களுக்கு வழங்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது கண்கண்ட உண்மை.
    "திருவாரூரில் பிறக்க முக்தி" என்று புகழப்படும் திருவாரூரில் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி கோயிலும், கமலாலயத் திருக்குளமும்,    திருவாரூர் தேரழகு என்ற பெருமையும் பெற்ற ஸ்தலமாகும். இதே திருவாரூருக்கு இன்னோரு மகிமையும் இருக்கிறது. அதுதான் மகான் குரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள் இங்கே ஜீவசமாதி கொண்டுள்ள மடாலயம் ஆகும்.
   மகான் தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள் என்பவர் இளம் பிராயத்திலேயே இறையருளால் ஞானத்தை பெற்று தன்னை நாடி வருபவர்களின் வியாதிகளை குணப்படுத்தியும், விரக்தியடனும் வாழ்ந்தவர்களை மகிழ்ச்சியுடன் வாழ அருளியுள்ளார்.
    மகான் தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள் புகைப்படங்கள்  இல்லை என்பதனால் மகான் தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள் ஒரு ஆசனத்தில் புலித்தோலின் மேல் வலக்கால் சற்று நீண்டு தரையில் பதிந்திருக்கும்படி அமர்ந்து வலக்கால் மேல் தன் இடக்காலை வைத்து, இடக்கை வலது தொடையைத் தொட்டும், வலக்கை சின்முத்திரை காண்பித்து அமர்ந்திருப்பது போன்ற ஒரு திருவுருவ படத்தை பக்தர்கள் வணங்கி வருகிறார்கள். 

மகான் அவதாரம்:
  திருச்சிராப்பள்ளி மாநகருக்கு அருகில் உள்ள கீழாலத்தூர் எனும் சிற்றூரில் வசித்த சிவசிதம்பரம் பிள்ளை மற்றும் மீனாம்பிகை தம்பதியருக்கு மக்கட்பேறு அமையவில்லை. இத்தம்பதியினருக்கு மகப்பேறு கிடைக்கவில்லை என்ற மனக்குறை நீண்ட நாட்களாக இருந்து வந்தது.
  அண்ணாமலையார் மீது அதீத பக்தி கொண்ட இத்தம்பதியினர் தங்கள் மனக்குறையை தீர்க்க வேண்டி ஜோதி ஸ்வரூபமாக அருளும் திருவண்ணாமலைக்குச் சென்று சிறிது காலம் தங்கி வழிபட்டு வந்தனர். ஒரு நாள் அவர்கள் இருவரும் கிரிவலப்பாதை வலம் வந்து ஈசனை மனமுருகி வணங்கினர். அன்று இரவில் இருவர் கனவிலும் தோன்றிய அண்ணாமலையார், தாமே அவர்களுக்கு  மகனாக பிறப்பதாக அருளினார்.  இன்ப அதிர்ச்சியுடன் காலையில் எழுந்த தம்பதி, நேராக கோயிலுக்குள் சென்று அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்மனையும் தரிசித்து நன்றி கூறிவிட்டுத் தங்கள் ஊருக்குத் திரும்பினர்.
      திருவண்ணாமலை ஈசனின் வாக்கிற்கிணங்க மீனாம்பிகை அம்மையார் ஆண் மகவை ஈன்றெடுத்தார். ஈசனின் அருளால் பிறந்தமையால், 'அருணாசலம்' என்று பெயர் சூட்டினர். குழந்தை நன்றாகவே வளர்ந்து வந்து சிறு வயது முதலே தியானத்தில் திளைத்தது. இவர்தான் பின்னாளில் மகான் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள் என அறியப்பட்டார்

“நீயே நான்; நானே நீ”
     சிவசிதம்பரம் பிள்ளையும்  மீனாம்பிகையும் அடுத்த   இரண்டாண்டுகள் கழித்து நமச்சிவாயம் என்ற புத்திரனையும் பெற்றார்கள். இரு குழந்தைகளையும் பாராட்டி, சீராட்டி வளர்த்து வந்தனர். மூத்த மகனாகிய அருணாசலம் ஐந்து வயதாகியும் பேச்சு வரவில்லை. சில நேரங்களில் பத்மாசனம் போட்டு நிஷ்டையில் இருப்பான். சில நேரங்களில் மௌனம் அனுஷ்டித்து எதையோவெறித்துப் பார்த்தபடி இருப்பான். இதனால் அருணாசலத்தின் நிலைமை பார்த்து அண்ணாமலையார்  ஏன் இந்த சோதனையை தங்களுக்கு அளித்தார் என்று கவலைப்பட்டனர். இப்படி இருக்கும்போது ஒருநாள் அவர்களது வீட்டுக்கு சிவனடியார் ஒருவர் வந்தார். சிவசிதம்பரம் பிள்ளை வந்திருந்த சிவனடியாரிடம் ”எனது மூத்தமகன் அருணாசலத்திற்கு பேச்சு வராமல் இருக்கிறது” ஏன் ஸ்வாமி ? என்று கேட்டார். அந்தக் குழந்தையைப் பார்க்கலாமா? என்று கேட்ட சிவனடியாரை வீட்டின் உள்ளே அழைத்துச்சென்ற சிவசிதம்பரம் பிள்ளை அருணாசலத்தைக் காட்டினார். “இந்தக் குழந்தை தெய்வ அனுக்கிரகத்தால் பிறந்து இந்த உலகத்தில் உள்ளோர் நற்கதி அடைவதற்காக அண்ணா மலையாரின் திருஅவதாரமே” இப்போது உங்கள் மகனிடம் பேசிப் பாருங்களேன் என்றார். சிவசிதம்பரம் பிள்ளையோ குரல் தழுதழுக்க, ''குழந்தாய் அருணாசலம் பேசப்பா... உன் மழலை மொழி கேட்க நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்'' என்றார். அவ்வளவுதான். ஐந்து வருடங்களாகப் பேசாமல் இருந்த அருணாசலம், முதன் முதலாகப் பேசியது ''சும்மா இருக்கின்றேன்.'' என்று முதல் முறையாக தன் திருவாய் மலர்ந்து தெரிவித்தான்.அப்போது சிவனடியார்அச்சிறுவனைப் பார்த்து, “சும்மா இருக்கின்ற நீ யார்? “ என்று கேள்வி கேட்டார். அதற்கு ஞானக்குழந்தையான அருணாசலம் மூடிய விழிகளைத் திறவாமல் ” நீயே நான்; நானே நீ” என பதிலுரைத்தான். நீ கூறியது உண்மைதான், என்று சொன்னபடி சிவனடியார் அங்கிருந்து விடை பெற்றார். சிவசிதம்பரம் பிள்ளையும்  மீனாம்பிகையும் பெருமகிழ்ச்சி  அடைந்தனர்.

பள்ளிக்குச் சென்றது மூன்று மாத காலமே:
    தனது சகோதரன் நமசிவாயம் பள்ளிக்குச் செல்வதைப் பார்த்த தானும் பள்ளிக்கு செல்ல ஆசைப்பட்ட அருணாச்சலம் தந்தையிடம் அனுமதி பெற்று பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தார்.
   பள்ளிக்குச் சென்ற  அருணாச்சலம் இதர மாணவர்களைப் போல் அன்றி எப்பொழுதும் ஏதாவது சுவடிகளைத் தனக்கு முன்பாக வைத்துக் கொண்டு, அதன் மீது தன் மனதை செலுத்திக் கொண்டு இருந்தார். சில நேரம் கண்களை மூடி தியானம் செய்து நிஷ்டையில் ஆழ்ந்து விடுவார். சந்தேகப்பட்ட ஆசிரியர், அவரது கல்வி அறிவை சோதிக்க எண்ணிய ஆசிரியர் பாடத்திலிருந்து சில கேள்விகளைக் கேட்க கேள்வி அனைத்திற்கும் உடனுக்குடன் பதிலளித்தார். ஆசிரியர் அருணாச்சலத்தின் புத்திக்கூர்மையை கண்டு வியந்தார். அதன் பிறகு,  அருணாச்சலத்தின் மேல், ஆசிரியருக்கு மதிப்பு கூடியது.
  ஒருநாள் பள்ளியில் உடன் பயின்ற சிறுவன் ஒருவனை பாம்பு கடித்து விட்டது. அவன் விஷம் ஏறி மயக்கமடைந்தான். அச்சிறுவனின் தாய் அருகிலுள்ள வைத்தியரிடம் பரிசோதனை செய்தபோது சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தார். தன் மகனின் மரணத்தால் கலக்கமடைந்த அந்த தாய் தன்னையும் மாய்த்துக்கொள்ள துணிந்தாள். நடப்பதை பார்த்துக்கொண்டிருந்த அருணாச்சலம், தாயிடம் “உங்களுடைய மகனை நான் உயிர்ப்பித்து எழுப்பித் தருகிறேன்” என்று கூறி,அருகிலிருந்த பிரம்பை எடுத்து “சுந்தரம்.. எழுந்திரு” என்று அவனது தலையில் லேசாக தட்டியவுடன் அச்சிறுவன் தூக்கத்தில் இருந்து விழித்தவன் போல உயிர்பெற்றெழுந்தான். அருணாச்சலத்தின் மகிமையை அறிந்த மக்களுக்கு அவர் மேல் பக்தி மேலும் பல மடங்காகிற்று.
  இதே போன்ற மற்றொரு சம்பவம் இன்னொரு நாளும் நிகழ்ந்தது.
ஒரு நாள், வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார் அவரைப் பார்த்து, ''உங்கள் குழந்தை, வீட்டுத் திண்ணையில் இருந்து கீழே விழுந்து கை முறிந்து விட்டது. உடனே போய்ப் பாருங்கள்'' என்றார். ஆசிரியர் பதற்றத்துடன் வீட்டுக்கு ஓடினார். வழியிலேயே அவரது வீட்டு வேலையாள் ஓடி வந்து,அருணாச்சலம் சொன்ன அதே விஷயத்தைக் கூறினான். உடனே, இருவரும் ஓடிச் சென்று குழந்தைக்கு வேண்டிய சிகிச்சைகளை செய்தனர். பின் பள்ளிக்கு வந்த ஆசிரியர்,  அருணாச்சலத்தின் முன் வணங்கியபடி நின்றார். ஆசிரியரை அவரது இருக்கையில் அமருமாறு எவ்வளவோ கேட்டுக் கொண்டும், ''மரியாதைக்கும் அபாரமான ஞானத்துக்கும் உரியவரான தங்களின் முன்னால் நான் அமர்ந்திருப்பது தகாது'' என்று மறுத்தார் ஆசிரியர். இந்த நிலை தொடர்ந்ததால், அவர் பள்ளிக்குச் செல்வதையே நிறுத்தி விட்டார். எனவே அவர், பள்ளிக்குச் சென்றது வெறும் மூன்று மாத காலமே!
மகானின் அற்புதங்கள் தொடர்ந்தது:
     கீழாலத்தூர் அருகிலுள்ள ஒரு சிற்றூரில் மகான் இருந்தபோது, ஆராவமுத ஐயங்கார், லட்சுமி அம்மாள் கனவில் ஸ்ரீஅரங்கநாத பெருமாள் ஒரு நாள் கனவில் தோன்றி, மகானின் அடையாளங்களைச் சொல்லி, 'அந்த மகானின் அனுக்கிரஹத்தால் உங்களுக்குக் குழந்தை பிறக்கும்' என ஆசீர்வதித்தார். அவர்களும் மகானை வந்து தரிசித்ததினால்  அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அவ்வப்போது இருவரும் குழந்தையுடன் வந்து  மகானை சந்தித்து ஆசி பெற்றுத் திரும்புவார்கள்.
   ஒரு நாள், குழந்தை நன்றாக தூங்கிக்கொண்டிருந்ததால், குழந்தையை தனியாக வீட்டில் விட்டுவிட்டு இருவரும் மகானை தரிசிக்க வந்திருந்தனர். தன்னைத் தரிசிக்க வந்த தம்பதியரை, ''உங்கள் வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது குழந்தையை தனியாக விட்டு வந்துள்ளீர்கள். விரைவாகச் சென்று குழந்தையைக் காப்பாற்றுங்கள். பயப்பட வேண்டாம்”. என்றார். இதையடுத்து, தம்பதியர் வீட்டை நோக்கி ஓடினார்கள்.  இந்த நேரத்தில், மகான் சொல்லியபடி பூட்டப்பட்ட அவரது வீட்டினுள் நெருப்பு எரிந்து கொண்டிருப்பதை பார்த்த கிராம மக்கள் வீட்டின் உள்ளே எப்படிச் செல்வது என்று நினைத்த போது, உடலெங்கும் திருநீறு பூசிய ஒரு சாமியார் அந்தத் தீயின் மத்தியில் வீட்டுக்குள் சென்று,  தூங்கிக்கொண்டிருந்த குழந்தையைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்து அங்கே இருந்த ஒரு பெண்ணிடம் குழந்தையை கொடுத்து விட்டு மறைந்து போனார். ஐயங்கார் தம்பதியர் வேகமாக தங்கள் வீட்டிற்கு வந்ததும், அந்த பெண்மணி குழந்தையை அவர்களிடம் தந்து, ஒரு சாமியார் வந்து குழந்தையைக் காப்பாற்றி, தன்னிடம் கொடுத்துச் சென்றதையும் கூறினாள்.
    அப்போதுதான் ஐயங்கார் தம்பதியர் நடந்த சம்பவத்தை உணர்ந்தனர். தங்கள் வீட்டுக்கு வந்து, தன் அருளால் பிறந்த குழந்தையை மகான் காப்பாற்றி இருக்கிறார் என்பதை அறிந்து, இருந்த இடத்தில் இருந்தே அவருக்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்கள். அதோடு, வைணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்த அந்தக் குழந்தைக்கு, மகானின் பெயரான 'அருணாசலம்' என்பதையே சூட்டினர். 
  மகான் கீழாலத்தூரிலிருந்து புறப்பட்டு நீலப்பாடி, சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, திருப்பதி முதலிய தலங்களுக்குச் சென்று ஆங்காங்கே பல அற்புதச் செயல்களை நிகழ்த்தினார். திருப்பதியில் இருந்து புறப்பட்டு சென்னையை அடைந்தார். திருவொற்றியூரில் பட்டினத்தாரின் சமாதி அருகே சில நாட்கள் இருந்து வந்தார். புத்தி ஸ்வாதீனம் இல்லாத ஒரு பெண் இங்கே மகானின் அருளால் நலம் பெற்றாள். பின் திருவொற்றியூரில் இருந்து புறப்பட்ட ஸ்வாமிகள் மயிலாப்பூர், திருக்கழுக்குன்றம், சிதம்பரம், காரைக் கால், நாகப்பட்டினம் என்று பயணித்தார். நாகப்பட்டினத்தில் சில காலம் தங்கி இருந்தார். அங்கு மகானுக்கு தினமும் தன் வீட்டில் இருந்து உணவு கொடுத்து வந்தவரின் மகனை பாம்பு தீண்டி இறந்தவனை மீண்டும் உயிர்ப்பித்தார் இத்தகவல்கள் அறிந்து பலரும் அவரின் அருள் பெற தேடி வந்தனர்.  நாகப்பட்டினத்தில் புறப்பட்டு திருவாரூர் வன்மீகபுரத்தை அடைந்து, அங்கே சோமநாத ஸ்வாமி கோயிலில் தங்கி, அருகே உள்ள ஓடம் போக்கி ஆற்றின் படுகையிலும், ஆற்றங்கரையில் உள்ள மரங்களின் அடியிலும் தவம் இருந்து நாட்களைக் கழித்தார்.

அருணாசலம் ஸ்வாமிகள் மகான் 'தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள் ஆனார்:
     சித்தூர் மாவட்டத்தில் வசித்து வந்த சோமநாத முதலியார் பெரும் செல்வந்தர். வயிறு சம்பந்தமான நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார். எந்த மருத்துவமும் பலனளிக்கவில்லை என்பதால் சிவபக்தரான இவர் தில்லை நடராஜ பெருமானைத் தரிசிக்க சிதம்பரம் வந்து சேர்ந்தார். அங்கு வந்தும் அவரது நோயின் தாக்கம் மிக அதிகமானது. வேதனையைத் தாங்க இயலாததால் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து நடராஜப் பெருமானின் சந்நிதி அடைந்தார். இரவு பூஜை முடிந்து தீக்ஷிதர்கள் சன்னதியைப் பூட்டிவிட்டு வெளியேறியதும், தூண் மறைவில் இருந்த முதலியார் வெளியே வந்து, மடியில் வைத்திருந்த கத்தியை எடுத்துக் கழுத்தை அறுத்துத் தற்கொலை செய்ய முயன்றபோது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. கருவறையிலிருந்து ஓர் அசரீரி வாக்கு கேட்டது, சோமநாதா “உனது நோய் இங்கே குணமாகாது. திருவாரூருக்குச் சென்று தட்சிணாமூர்த்தியிடம் பிரார்த்தனை செய்தால் அந்தக் கணமே குணமாவாய்” என்று ஒலித்தது. மனம் மகிழ்ந்த முதலியார் மறு நாள் காலை திருவாரூர் நோக்கிப் புறப்பட்டு, தியாகராஜ பெருமானின் கோயில் அடைந்தார். அங்குள்ள தட்சிணாமூர்த்தி சந்நிதியில் அபிஷேக ஆராதனைகள் செய்தார். அன்று இரவு திருக்கோயில் பிரகாரத்தில் அமர்ந்து தியானித்தார். எனினும் நோயின் கடுமை சிறிதளவும் குறையவில்லை. அப்படியே உறங்கிவிட்டார். அப்போது நடராஜ பெருமான் அவரது கனவில் தோன்றி அப்பனே, “நான் சொன்ன தட்சிணாமூர்த்தி ஓடம் போக்கி ஆற்றின் படுகையில் அவதூத் கோலத்தில் திரிகிறான்; அவனிடம் செல்வாயாக!” என்று அருளினார்.அதன்படி அடுத்த நாள் காலையில் அலைந்து திரிந்து நடராஜ பெருமான் கனவில் சொன்ன தட்சிணாமூர்த்தியைக் (மகானை) ஒரு வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டிருந்ததை கண்டு மகிழ்ந்து, அவரது திருவடிகளில் விழுந்து வணங்கினார். தம்மை வணங்கிய முதலியாரை பார்த்த மகான், “உன்னை நடேசன் என்னிடம் அனுப்பி வைத்தானோ?” என்று கேட்டு தன் கையிலிருந்த அன்னத்தை அவருக்கு ஊட்டி விட்டார். அன்னத்தை உட்கொண்ட முதலியாரின் தீராத வயிற்று நோய் இருந்த இடம் தெரியாமல் போயிற்று. நோய் நீங்கிய சோமநாத முதலியார் மகானை பிரிய மனமின்றி அவருக்குத் தொடர்ந்து பணிவிடைகள் செய்து வந்தார். தில்லை நடராஜ பெருமானால் தட்சிணாமூர்த்தி என்று குறிப்பிடப்பட்டதால் அருணாசலம் என்ற பெயர் மாறி அன்று முதல் மகான் “தட்சிணாமூர்த்தி சுவாமிகள்” என்றே வழங்கப்படலானார். 
    அண்ணாமலையாரின் சொரூபத்தின் வடிவமாக அவதாரம் செய்த மகான் ஶ்ரீதட்சிணாமூர்த்தி சுவாமிகள் மீது மானசீகமான நம்பிக்கை கொண்டு அவர் திருவடிகளில் சரணடைந்தவர்களை பல இன்னல்களிலிருந்து காப்பாற்றி அருள்புரிந்துள்ளார். அவரது திருவடிகளில் பணிந்து நோய் நிவாரணம், புத்திர பாக்கியம், கல்விச்செல்வம், திருமணப்பேறு மற்றும் வறுமை நீங்கி வளம் பெற்றவர்கள் ஏராளம்.

மகான் ஜீவசமாதி அடைதல் 
   மகான் ஶ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள் முடிந்தது! முடிந்தது! முற்றிலும் முடிந்தது!..'' - எனத் திருவாய் மொழிந்து நிஷ்டையில் அமர்ந்தார். அன்றிலிருந்து எட்டாம் நாள் மன்மத வருடம் ( 1835 ஆம் ஆண்டு )ஆவணி மாதம் பன்னிரெண்டாம் தேதி, புதன் கிழமை திருதியை திதி உத்திர நட்சத்திரம் கூடிய தினத்தில் சரியாக பகல் 12.00 மணிக்கு சுற்றிலும் பக்தர்கள் கூட்டம் சூழ்ந்திருக்க மகான் ஜீவசமாதி அடைந்தார் அப்போது, அமிர்த வர்ஷம் போல சந்தன மழைத் துளிகள் வீழ்ந்தன. அதன் இனிய வாசம் எங்கும் பரவி காற்றில் கலந்தது. மகானின் திருமேனிக்கு ஆகம விதிகளின்படி அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் செய்து ஆலயத்தில் ஏற்கெனவே அமைக்கப்பட்ட சமாதிக் குகையில் அவரது திருமேனியை எழுந்தருளச் செய்தனர். 
    அன்று முதல் இன்று வரை சுவாமிகள் அதிஷ்டானத்தில் பிரவேசித்த பகல் 12.00 மணிக்கு உச்சிகால பூஜையும் இரவு 8.00 மணிக்கு சாயரக்ஷை பூஜையும் தவறாது நடைபெற்று வருகிறது. கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக இன்றும் இந்த அதிஷ்டானத்தில் இருந்தபடி பக்தர்களின் வேண்டுதல்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.

மகான் ஶ்ரீகுரு தட்சிணாமூர்த்தி மடாலயம்:
     திருவாரூர் பேருந்து நிலையத்தில் இருந்து அரை கி.மீக்கும் குறைவான தொலைவிலேயே மடப்புரம் என்ற இடத்தில்  மகான் குரு தட்சிணாமூர்த்தி மடாலயம் உள்ளது. இந்த மடாலயம் ஒரு  கோயில் போலவே பலிபீடம், நந்தி பிராகாரம் என்று விஸ்தாரமாகவே அமைந்துள்ளது. இங்கு மகான் ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமி ஜீவசமாதியான இடத்தின் மேலே ஒரு சிவலிங்கம் ஸ்தாபிக்கப்பட்டு தினமும் வழிபாடுகள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு வியாழக்கிழமையும் இங்கு பெருந்திரளான கூட்டம் வருகிறது. பகல் முழுதும் பூஜைகளைத் தரிசித்து அன்று இரவு தங்கி மறுநாள் காலையில் புறப்பட்டுச் செல்லும் பக்தர்களும் இருக்கிறார்கள். ஆவணி மாத உத்திரத்தன்று குருபூஜை நடக்கிறது. வருடாந்திர வைபங்கள் அனைத்தும் இங்கு சிறப்பாக நடந்து வருகின்றன.
     மகான் ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள் பாதம் தொழுவோம்; திருவருள் பெறுவோம்!


Comments

Popular posts from this blog

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..

உண்மை பக்தி எது ?

ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்...