மகான் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள்.
மகான் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள்.
நமது நாட்டில் எத்தனை எத்தனை மகான்கள். இந்த புனித பூமியில் அவர்கள் அவதரிக்க நாம் புண்ணியம் செய்து இருக்க வேண்டும். மகான்களின் வாழ்க்கை அனைத்தும் அற்புதங்கள் நிறைந்தது.
உலகின் அருள் இயக்கம் அனைத்தும் மகான்களின் செயலால் நிகழ்ந்தமையால் ஆண்டவனும் அருள் நிரம்பிய மகானும் ஒன்றே என கருதப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது சம்பிரதாயம் மகான்களை கட்டுப்படுத்தாது. அதோடு ஒரு மகான் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவராக மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மகான் நிலையை அடைந்த பின்பு அவர் தனிப்பட்ட ஒரு மதத்தை சார்ந்தவர் என்ற நிலையைக் கடந்து ஒவ்வொரு ஜீவனுள்ளும் கடவுளை, அதாவது ஆத்மாவைக் காணும் நிலையை அடைகிறார்.
மகான் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்றாலும், இறை நிலையின் அற்புதமான பேராற்றலை உணர்ந்த பின் எல்லா அடையாளங்களையும் துறந்தார். ஜாதி, மதம், இனம் - இவற்றுக்கு அப்பாற்பட்டு விளங்கினார். "படே" என்றால் பெரிய என்று பொருள். ஆதலால் மக்கள் இவரை ஸ்ரீ படே சாஹிப்” என்று அழைத்தனர். இவர் மகிழ மரத்தின் அடியில் அமர்ந்து வைத்தியம் செய்வார். மக்கள் குறைகளை கேட்டு தீராத நோய்களை தீர்த்து வைக்கும் வல்லமை கொண்டவர். பச்சிலைகளை அரைத்து கொடுத்தும், சிரசில் கைவைத்தும் அவர்களது நோய்களை குணப்படுத்துவார். விபூதியை பிரசாதமாக கொடுப்பார்.
நதிமூலம் ரிஷிமூலம்
மகான் படே சாஹிப் எங்கே, எப்போது பிறந்தார்? அவரது பூர்வீகம் என்ன- தாய் தந்தை யார், அவருடைய அவதார தினம் எது, உண்மைப் பெயர் போன்ற தகவல்கள் தெரியவில்லை. நடுத்தர உயரம். தலையில் சிவப்பு நிறத்தில் ஒரு குல்லாய். இடுப்பில் ஒரு அரையாடை, அருள் பொங்கும் முகம் கருணை ததும்பும் விழிகள் சதா ஏதேனும் மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டிருக்கும் வாய் என அவரது தோற்றம் மக்களுக்கு வியப்பைத் தந்தது. மகானோ, மகா மௌனியாய் விளங்கிய இவர் எவரிடமும் எதுவும் பேச மாட்டார்.
பல வெளிநாடுகளில் இருந்துவிட்டு மக்களின் நோய்களைத் தீர்த்த மகான் இந்தியா வந்த பின்னர் பாண்டிச்சேரியை அடுத்த திருக்கனூரில் சில ஆண்டுகள் தங்கி உள்ளார். திருக்கனூரிலிருந்து கண்டமங்கலம் அருகே உள்ள சின்னபாபு சமுத்திரதிற்கு இடையிடையே சென்று வருவார். பிறகு சின்னபாபு சமுத்திரத்திலேயே தங்கி, அவரை நாடி வருபவர்களுக்கு விபூதி கொடுத்தே பல தீர்க்க முடியாது என்று கைவிடப்பட்ட நோய்களையும் குணப்படுத்தியுள்ளார் .
மக்களின் நோயினை நீக்கிய மகான்:
மகான் அவர்கள் ஒரு தும்புரு வீணையுடன் மகிழ மரத்தின் அடியில் அமர்ந்து தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவார். வியாதியின் அவஸ்தையுடன் தன்னிடம் வருபவர்களுக்கு விபூதி பிரசாதம் கொடுத்து ஆசிர்வதித்து அனுப்புவார். அவர் தன் அருகில் பச்சிலைகள் போடப்பட்ட நீரினை ஒரு மண் கலயத்தில் வைத்திருப்பார், அருகில் சிறு பானை மற்றும் கொட்டாங்கச்சிகளும் இருக்கும். சிலருக்கு மகான் தன் கையால் ஒரு சிறு கொட்டாங்கச்சியில் நீரை அளிப்பார். அதை அருந்தியதுமே அவர்களுக்கு இருந்த நோய்கள் விலகி விடும். சிலரை அருகே உள்ள மகிழ மரத்தைச் சுற்றி வரும் படி ஜாடையால் சொல்வார், அதன் படி சுற்றும் மக்கள் அனைவருக்கும் நோய் நீங்க பெற்று, மகிழ்ச்சி அடைவார்கள். மகான் படே சாஹிப்பிடம் வந்தாலே, வியாதிகள் குணமாகிறது என்ற பேச்சு எங்கெங்கும் பரவி, அவர் வாழ்ந்த காலத்தில் தினமும் ஏராளமானோர் அவரைத் தரிசித்து அருள் பெற்றுச் சென்றனர்.
“நிஷ்டதார்யம்” எனப்படும் உளிபடாத அற்புதமான சிலைக்கல்:
இமயமலையின் அடிவாரத்தில் சுமார் 2000 அடி கீழே புதைத்திருந்த “நிஷ்டதார்யம்”எனப்படும் உளிபடாத கல்லை மகான்அவர்கள் தனது ஆழ்நிலை தியானத்தின் மூலம் கண்டறிந்து, அதனை இறையருளால் வெளிக் கொணர்ந்து அழகிய லிங்கமாக உருவாக்கி, தம்மை நாடி வரும் மக்கள் வழிபடுவதற்காக, தாம் வசித்த இடத்திற்கு அருகிலேயே அருணாசலேஸ்வரர் ஆலயமாகப் பிரதிஷ்டை செய்தார், மற்றும் இங்கு இவர் கையால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அற்புத விநாயகர் சிலை அளவில்லா அருளை வாரி வழங்கி வருகின்றார். இங்குள்ள சிவனை வழிபட்டால் திருவண்ணாமலை சென்ற பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மகான் படே சாஹிபின் அற்புதங்கள்:
பாம்புக்கு மோட்சம் அளித்தல்:
ஒருநாள் கருநாகம் ஒன்று மகானின் பாதத்தை தீண்டியது. சிறிது நேரத்தில் விஷம் உடல் முழுவதும் பரவி நீல நிறத்தில் காணப்பட்டார். அதைக்கண்ட மக்கள் நடுநடுங்கினார்கள். என்ன நடக்குமோ என்று புலம்பினார்கள். ஆனால் மகான் எவ்வித உணர்ச்சியும் இன்றி இருந்தார். அங்கு உள்ள பிள்ளையார் கோவிலுக்கு சென்றார். வினாயகரை வணங்கினார். அப்போது அவரை தீண்டிய கருநாகம் மெதுவாக கோவிலுக்குள் நுழைந்தது. பக்கத்தில் உள்ளவர்கள் அலறியடித்துக்கொண்டு எழுந்தார்கள். மகான் நிஷ்டையில் நிலைத்திருந்தார். அந்த கருநாகம் யாரையும் ஒன்றும் செய்யவில்லை. அவரை மூன்று முறை வலம் வந்தது. அது தீண்டி இடத்தில வாய் வைத்து விஷத்தை உறிஞ்சிய உடன் விநாயகப் பெருமானை வலம் வந்து, மகானின் தலை மேல் படம் எடுத்தது. பின் இறங்கி மூன்று முறை தன் தலையால் அவரின் பாதத்தில் வணங்கி, அவர் பாதத்தில் தன் உயிரை விட்டது. அந்த நாகத்திற்கு மகான் ஆசீர்வாதம் செய்து மோட்சம் அளித்தார். அந்த கருநாகத்திற்கு தன் கைகளாலே இறுதி சடங்குகளை செய்து முடித்தார். மக்கள் இந்த நிகழ்வினை ஆச்சரியத்துடன் பார்த்தனர். மேலும் அந்த ஊர் மக்களுக்கு விஷம் தீண்டாதபடியும், தீண்டினாலும் உடலில் ஏறாத படியும் விஷ ஜந்துக்களுக்கு ஆணை இட்டு அங்குள்ள மக்களை ஆசிர்வதித்தார்.
கால்கள் செயலிழந்த சிறுவன் நடந்தான்:
ஒருமுறை கட்டிலில் படுத்திருந்த ஒரு சிறுவனை கட்டிலோடு நான்கு பக்தர்கள் தூக்கி கொண்டு வந்தனர் மகானின் அருகில் வந்ததும் கட்டிலை இறக்க முற்பட்டனர். இதனை கண்ட மகான் கோபத்துடன் பக்கத்திலிருந்த ஒரு கம்பினை எடுத்து வந்தவர்களை விரட்டத் தொடங்கினார், அவர்களும் பயந்து போய் கட்டிலை அப்படியே போட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர். கட்டிலில் படுத்திருந்த சிறுவனும் பயந்து எழுந்து ஒடினான். மகானும் அந்த சிறுவனை துரத்திக்கொண்டு ஓடினார்,அவனும் வேகமாக ஓட ஆரம்பித்தான் ஒரு கட்டத்திற்கு மேல் மகான் அமைதியாக அருகில் உள்ள மரத்தடியில் அமர்ந்து விட்டார் மகான் ஏன் இப்படி துரத்தினார் என்று புரியாமல் சிறுவனை அழைத்து வந்த பக்தர்கள் திரும்பிப் பார்த்தார்கள். பிறந்தது முதல் இதுவரை நடக்கவே நடக்காத கால்கள் செயலிழந்த சிறுவனும் அவர்கள் பின்னே ஓடி வருவதை கண்டு ஆச்சரியத்துடன் மிக்க மகிழ்ச்சியும் அடைந்தனர். சிறுவனை குணப்படுத்தவே மகானிடம் தூக்கி கொண்டு வந்தனர் தங்களிடம் கோபப்படுவது போல் நடித்து சிறுவனின் குறையைப் போக்கிய மகானின் கால்களில் விழுந்து வணங்கினர்.
குழந்தைகளிடம் பிரியம்:
மகான் குழந்தைகளிடம் மீது அதிக பிரியமாக நடந்துகொள்வார். சில நேரங்களில் சிறு குழந்தைகளிடம் கையிலும் ஒரு பிடி மண்ணை அள்ளிக் கொடுத்துக் கையை மூடச் சொல்வார். பின் குழந்தைகளும் அவ்வாறே செய்து விட்டு கையை திறந்து பார்க்க பல வண்ணங்களில் மிட்டாய்கள் இருக்கும். குழந்தைகளும் மிட்டாய்களை குதூகலமாக எடுத்துச் செல்வார்கள். மேலும் சில சமயங்களில் சிறிய பள்ளத்தை தோண்டி அதில் அமர்ந்து கொள்வார், தம்மீது மணலைப் போட்டு மூடச் சொல்வார். மூடியபின் வேறோர் இடத்திலிருந்து எழுந்து வருவார். குழந்தைகள் கை தட்டி மகிழ்வர்.
இதேபோல மகான் படே சாஹிப்பின் பல அற்புதங்களால் நிறைய பக்தர்கள் பலனடைந்துள்ளனர்.
ஜீவசமாதி ஆன மகான் ஸ்ரீ படேசாஹிப்:
நிறைய அற்புதங்களை நிகழ்த்தி மக்களுக்குப் பல்வேறு நன்மைகளைப் புரிந்த மகான் இறைவனோடு கலப்பதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டார். 1868ம் ஆண்டு, பிப்ரவரி 12ம் தேதி செவ்வாய்க்கிழமை ஆயில்ய நட்சத்திரம் கூடிய தினத்தன்று மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்த சில குழந்தைகளை அழைத்து, அருகிலிருந்த மணற்குவியலைக் கொண்டு தம்மை மூடுமாறு சொல்லி விட்டு அருகில் உள்ள பள்ளத்தில் போய் அமர்ந்து கொண்டார். எப்போதும் போல் தம்மீது மணலைப் போட்டு மூடச் சொன்னதால் ஏதாவது விளையாட்டுக் காண்பிக்கப் போகிறார் என நினைத்தவாறே மணலைக் கொட்டிக் குழியை மூடினர். ஆனால் மகான் வெளியே வரவில்லை. அப்போது அந்தக் குழியிலிருந்து மகானின் கை மட்டும் வெளியே வந்தது, அதில் நிறைய மிட்டாய்கள் இருந்தன. அவற்றை எடுத்துக்கொண்ட குழந்தைகள் ஊருக்குள் போய் பெரியவர்களிடம் நடந்ததைக் கூறினர். அவர்கள் வந்து பார்த்த போது மகான் ஜீவசமாதி ஆகி விட்டதை உணர்ந்தனர்.
மகானின் சமாதி ஆலயம்:
மகனின் புகழ்பெற்ற இச்சமாதி ஆலயம் விழுப்புரம் - பாண்டிச்சேரி சாலையில் (கண்டமங்கலம் வழி) சின்னபாபு சமுத்திரம் என்ற ஊரில் அமைந்துள்ளது. பேருந்தில் செல்பவர்கள் கண்டமங்கலத்தில் இறங்கி அங்கிருந்து மூன்று கி.மீ. தூரத்தில் உள்ள சின்னபாபு சமுத்திரத்தைப் பேருந்து அல்லது ஆட்டோவில் சென்று அடையலாம்.
மகான் படே சாஹிப்பின் சமாதி எந்தவொரு திடப்பொருட்களாலும் மூடப்படவில்லை. இன்றும் அது மண்ணால் தான் மூடப்பட்ட நிலையில் தான் உள்ளது. மகான் சிவஸ்ரீ படேசாஹிப் ஒரு நாள் நிச்சயம் திரும்புவார் என்று மக்கள் நம்புகிறார்கள், சமாதியின் அருகே மகானின் திருவுருவப்படம் வைக்கப்பட்டுள்ளது, சமாதியின் முன்பு அணையா விளக்கு எப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது. காற்றிலும் மழையிலும் கூட அணைவதே இல்லை. மக்கள் சுற்றி வருவதற்கு விசாலமான இடம் உள்ளது. நிழல் தரும் மரங்கள் உண்டு. அவரின் மறைவுக்குப் பின் மகானின் மகத்துவத்தை உணர்ந்த மக்கள் சமாதிக்குத் தினமும் சென்று வருகிறார்கள். இங்கு சைவ முறைப்படி விபூதி கொடுத்தும், வைணவ முறைப்படி துளசி தீர்த்தம் அளித்தும், இஸ்லாமிய முறைப்படி மயிலிறகு கொண்டு ஓதி, சந்தனம் அளித்தும் என சர்வ சமய வழிபாடு நடைபெற்று வருகிறது. சமாதி ஆலயம் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவரது ஜீவ சமாதியில் பிரதி செவ்வாய்க்கிழமை மற்றும் ஆயில்ய நட்சத்திர தினங்களில் வழிபாடு சிறப்பாக இருக்கும். இந்த ஆலயத்தை அப்பிரதட்சிணமாகச் சுற்றி வரவேண்டும். அது போன்றே இங்குள்ள மகிழமரத்தையும் அப்பிரதிட்சிணமாகச் சுற்றி வரவேண்டும். தீபம் ஏற்றி வழிபடுதல் சிறந்ததாகக் கருதப்படுகிறது. பக்தர்கள் தங்கள் குறைகளைச் சமாதியின் முன் நின்று மனம் விட்டுச் சொல்லுகிறார்கள். கொடிய தொற்று மற்றும் தீராத நோய்களால் அவதியுறுவோர் படேசாகிப் ஜீவ சமாதியை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனம் செய்து, இயன்ற அளவு அன்னதானம், நீர்மோர், பானகம், பிஸ்கெட், பழ வகைகளை விநியோகம் செய்து ஏராளமானோர் பலன் பெற்றிருக்கின்றனர்.
இங்கு கையில் பச்சை கயிறு கட்டுவார்கள், தேங்காய் ஒன்றை பச்சை துணியில் மகான் ஜீவசமாதியில் வைத்து தருவார்கள் அதை வீட்டில், தொழில் செய்யும் இடத்தில் கட்டி வைத்தால் லட்சுமி கடாக்ஷ்ம் கிடைக்கும், தொழில் அபிவிருத்தி ஆகும். கண் திருஷ்டி ஏற்படாது என்பது ஐதீகம். இங்கு அனுமதி பெற்றுச் சித்தரின் ஜீவசமாதி ஆலயத்தில் இரவில் தங்கித் தங்கள் தீவினை போக்கி கொள்கின்றனர்.
ஆண்டுதோறும் மகான் படே சாஹிபிற்கு குருபூஜை மிகச் சிறப்பாக செய்யப்படுகின்றது. குருபூஜையன்று ஒரு பெரிய அண்டாவை வைத்து விடுகின்றனர். மக்கள், தங்கள் வசதிகேற்ப, தங்கள் வீட்டிலேயே சாதம் எடுத்து வந்து அந்த அண்டாவில் கொண்டு வந்து கொட்டி விடுகின்றனர் அதனை எல்லோருக்கும் அன்னதானமாக கொடுக்கின்றனர்.
ஒன்றே குலம், ஒருவனே தேவன் என மதஒருமைப்பாட்டைப் பேணிக் காக்கும் மகான் ஸ்ரீபடேசாஹிப் ஆவார்.
இன்றைக்கும் தன் ஜீவசமாதி தேடி வரும் பக்தர்களின் பிணியை அரூப உருவமாக இருந்து தீர்த்து வருகின்றார்.
Comments
Post a Comment