வேளச்சேரி மகான் ஶ்ரீ சிதம்பர பெரிய சுவாமிகள்.
வேளச்சேரி மகான் ஶ்ரீ சிதம்பர பெரிய சுவாமிகள்.
எண்ணிலடங்கா இறை உணர்ந்த மகான்கள், இன்றும் தம் ஜீவசமாதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஜீவசமாதியின் முன் நின்று வணங்கினால் அவர்களின் அருளாசினையை பெற்றிடலாம்.
இருநூறு ஆண்டுக்கு முன், அப்போது, 'வேதஸ்ரேணி' என்றழைக்கப்பட்டு, தற்போது, வேளச்சேரி என்று அழைக்கப்படும் இடத்தில் உள்ள, தண்டீஸ்வரர் கோயிலுக்கு வந்து “சிந்தனைக்கெட்டாத சிவரூபத்தை கடின உழைப்பால் காண்” என்ற வாழ்க்கை போதனையை உலகுக்கு உணர்த்திய மகான், “வேளச்சேரி மகான்” என்றும் “சிதம்பர பெரிய சுவாமிகள்” என்று பக்தர்களால் போற்றப்படுகிறார்.
“வேதஸ்ரேணி எனும் வேளச்சேரி” வந்த சிதம்பர பெரிய சுவாமிகள்:
திருச்சிராப்பள்ளிக்கு அருகில் ஆரியம்பாக்கம் என்ற கிராமத்தில் முனியப்பர் மற்றும் பெரியநாயகி என்ற பணக்கார தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் சிதம்பர பெரிய சுவாமி, இவரது இயற்பெயர் வீராசாமி என்பதாகும். தனது ஏழாம் வயதில் பெற்றோரை விட்டு விலகி, துறவறம் மேற்கொண்டு தமது இல்லத்திலிருந்து வெளியேறினார். சிவத்தொண்டுகள் செய்வதில் பெரும் விருப்பம் கொண்டு பல சிவாலயங்களுக்குச் சென்றார்.
விருத்தாச்சலத்தில் சில காலம் தங்கி இருந்து, திருத்துருத்தி இந்திரபீடம் குமார தேவரின் பரம்பரையில் வந்த குழந்தைவேல் என்னும் குருவின் சீடரானார். விருத்தாசலத்தில் இருந்து, பல திருத்தலங்களை தரிசித்துவிட்டு, வேதஸ்ரேணி எனும் வேளச்சேரி வந்தடைந்தார்.
தண்டபாணீஸ்வரர் ஆலயத்தை புதுப்பிக்க அம்பாள் கட்டளை:
சிதம்பர பெரிய சுவாமிகள் சுமார் 1840-41-ல் சென்னையில் உள்ள வேளச்சேரிக்கு வந்தபோது இங்குள்ள தண்டீசுவரர் கோயில் பல ஆண்டுகளாகப் பராமரிப்பின்றி இருந்தது.
தண்டீஸ்வரர் கோயில் பற்றி குறிப்புகள்:
இந்த கோயிலில் உள்ள சிவலிங்கம் ஸ்வயம்புவாகும். சிவனின் பெயர் தண்டபாணீஸ்வரர், அம்பாளின் பெயர் கருணாம்பிகை. இந்த கோவிலில் பிள்ளையார், முருகர், துர்க்கை, சரஸ்வதி, லக்ஷ்மி, தட்சிணாமூர்த்தி, மற்றும் நவகிரக சந்நிதி உள்ளன. இது மிகவும் பழமையான கோவிலாகும்.
இந்த கோயிலின் விசேஷம் என்னவென்றால் மார்க்கண்டேயனின் உயிரை காப்பாற்ற திருக்கடையூர் ஸ்தலத்தில் எமன் பதவியையும் அவன் வைத்திருந்த தண்டத்தையும் ஈசன் கைப்பற்றினார். பின்பு, யமன் சிவனையெண்ணி தவம் செய்து, தன்னுடைய தண்டத்தை இந்த கோவிலில் தான் மீண்டும் பெற்றார். அதனால் தான் இந்த ஆலயத்தின் பெயர் தண்டீஸ்வரர் ஆலயம் என பெயர் பெற்றது. இந்த கோவிலில் யம தீர்த்தக் குளம் உள்ளது. இந்த கோவில் மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.
சிதம்பர பெரிய சுவாமிகள் தண்டீசுவரர் கோயிலுக்கு செல்லும் முன்பு இங்குள்ள குளத்தில் (எமதீர்த்தத்தில்) நீராடிவிட்டு வெளியே வந்தபோது, கரையில் ஒரு வயதான மூதாட்டி ஒருவர் எதிரில் வந்து, சுவாமிகளிடம் இந்த கோயிலை நீதான் சீர்படுத்தி புதுப்பிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டார். அன்று இரவு அவரது கனவில் அம்பாள் கருணாம்பிகைத் தாயார் தோன்றி, மூதாட்டியாக வந்தது தான்தான் என்றார். இதனை அம்பாளின் கட்டளையாக ஏற்று சிதம்பர பெரிய சுவாமிகளும் அருள்மிகு தண்டபாணீஸ்வரர் ஆலயத்தில் ஈசனை வணங்கி திருக்கோயிலை புதுப்பிக்க கட்டுமான பணிகளை செய்ய ஆரம்பித்தார்.
திருக்கோயில் கட்டுமான பணிகளை செய்யும்போது நடந்த அதிசயம்:
அருள்மிகு தண்டபாணீஸ்வரர் திருக்கோயிலை புதுப்பித்து கட்டுமான பணிகளை ஊர் மக்களின் உதவியுடன் துவங்கினார். கோயிலை புதுப்பிக்கும் கட்டுமான தொழிலாளர்களுக்கு, எப்படி ஊதியம் கொடுக்கப்போகிறோம் என்று கவலைகொண்டபோது சிவபெருமான் வேலைசெய்தவர்களுக்கு விபூதி வழங்குமாறு கட்டளையிட, அவ்வண்ணமே அவ் வேலையாட்களுக்கு விபூதி வழங்கினார், எல்லோரும் ஆச்சரியம் அடையும் வகையில் விபூதியை எடுத்து கையில் கொடுக்கும்போது அவரவர் உழைப்பிற்கேற்ற பணமாக மாறியது. இவர் இறைபணியை செய்யும்போது ஓய்விற்காக ஆழ்ந்த நித்திரையிலிருந்தபோது அவர்மீது சூரிய ஒளி படுவதை கண்ட நாகமொன்று அவ்வொளியை தடுத்து நிழல் கொடுத்தது. இந்த அதிசயத்தை கண்ட ஊர் மக்கள் வியந்து அவரை வணங்கினர். சிவபெருமானின் திருவருளால் வேளச்சேரியில் உள்ள ஸ்ரீ தண்டபாணீஸ்வரர் கோயில் சீரமைப்புப் பணிகள் சிறப்பாக ஸ்ரீ சிதம்பர பெரிய சுவாமிகளால் செய்து முடிக்கப்பட்டது. மேலும் நித்திய வழிபாட்டிற்காக வழி வகுத்தும், பிரமோற்சவம் நடத்தியும் மற்றும் ஒரு திருத்தேரையும் அமைத்தார். பிறகு இங்கு தமது கடமை முடிந்தது என்றும் மற்ற சிவாலயங்களுக்கு சென்று வழிபடலாம் என்று புறப்பட்டபொழுது நாகமொன்று கோபுரவாசலில் வழி மறித்தது கண்டு வேறு கோபுரவாசல் வழியே செல்லும் போது அதே நாகம் மீண்டும் வழி மறித்தது. பின்பு மகான் தம்மை தண்டபாணீஸ்வரர் இத்தலத்திலேயே தங்கி மேலும் சிவத்தொண்டினை செய்யச் சொல்கிறார் என்பதனை அறிந்து இத்தலத்திலேயே தங்கி மென்மேலும் பல சிவத்தொண்டுகளைச் செய்தார்.
மகானின் அற்புதங்கள்:
தண்டீஸ்வரர் கோயில் தங்கிக்கொண்டு, யாசகம் பெற்று உணவு உண்டு வந்த மகான் ஸ்ரீ சிதம்பர பெரிய சுவாமிகளுக்கு இரவில் ஒரு வீட்டில் வழக்கமாக உணவு கொடுப்பார்கள். ஒரு நாள் அந்த வீட்டில் யாசகம் கேட்கும்போது வேறு வேலையில் மும்முரமாக இருந்தபடியால் அந்த வீட்டு பெண்மணி உணவு இன்னும் தயார் செய்யவில்லை என்று பொய் சொல்லிவிட, சுவாமிகளும் ஞானத்தால் உண்மைநிலை அறிந்து தண்டீஸ்வரர் கோயிலில் போய் அமர்ந்துவிட்டார். வீட்டு வேலைகள் எல்லாம் முடிந்தபிறகு தன் குழந்தைக்கு உணவு ஊட்டுவதற்காக பானையை திறந்து பார்த்தபொழுது சோற்றுப் பானை காலியாக இருந்ததைக் கண்டு சுவாமிகளிடம் வந்து வருந்தி மன்னிப்பு வேண்டியதும், மகான் “உணவு இருக்கிறது போய் குழந்தைக்கு கொடு தாயே” என்ற பிறகு வீட்டிற்கு வந்து சோற்றுப்பானையில் உணவு இருந்ததைக்கண்டு வியந்தார்.
ஒரு நாள் மகான் அவர்கள் இரவில் ஊருக்குள் வலம் வரும் பொழுது சில திருடர்கள் தென்னைமரத்தில் ஏறி தேங்காய்களைத் திருடுவதை பார்த்த உடனே மரத்திலேயே அவர்கள் ஒட்டிக்கொண்டார்கள். திருடர்களால் மரத்தை விட்டு இறங்க முடியவில்லை, என்ன செய்வது என்று அறியாத திருடர்கள் மகானிடம் மன்னிப்புக்கேட்க, அவர்களை இறங்கி வா என்று கூறிய பின்னர்தான் அவர்களால் இறங்கிவர முடிந்தது. பின் திருடர்கள் கீழே இறங்கி மகானின் காலில் விழுந்து வணங்கினார்கள்.
ஒரு முறை, தீராத வயிற்றுவலியில் துடித்துக்கொண்டிருக்கும் நவாப் ஒருவரை மகான் ஸ்ரீ சிதம்பர பெரிய சுவாமிகளிடம் அழைத்துவந்தார்கள். சுவாமிகள் அவரது வயிற்றில் விபூதியை பூசிவிட்டுச் சிறிது வாயில் போட்டதும் வயிற்று வலி முற்றிலும் குணமாகியது. இதனால் மகிழ்ந்த நவாப், சுவாமிகளுக்கு தங்கியிருக்க இடமும் பல இடங்களில் பயிர் செய்ய விளை நிலங்களும் வழங்கினார். (தற்போதைய ஐஐடி வளாகம்) அன்றைய காலகட்டத்தில் நவாப்புக்கு சொந்தமான தோட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கியது.
‘உபதேச உண்மை’
சிவனன்றி வேறு தெய்வம் இல்லை என்று வணங்கி வந்த சிதம்பர பெரிய சுவாமி பாடல்கள் இயற்றுவதிலும் வல்லவர். அவர் இயற்றிய பாடல்களுக்கு, ‘உபதேச உண்மை’ என்று அவரே பெயரிட்டுத் தொகுத்துள்ளார். அந்தப் பாடல்கள், பதிணென் சித்தர்களின் பாடல்களைப் போன்றே பல மறைபொருள்கள் வைத்துப் பாடப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
மகான் தாம் ஜீவ சமாதியடையப் போகும் நாளை அறிவித்து சமாதிக் குழியையும் தயார் செய்தார். 1858-ம் ஆண்டு டிசம்பர் நான்காம் நாள், கார்த்திகை மாதம் பதினாறாம் தேதி, சனிக்கிழமை காலை 9.45 மணிக்கு விசாக நட்சத்திரத்தில் நவாப், அரசாங்க மருத்துவர்கள், காவலர்கள் சுற்றியிருக்க சமாதிக் குழிக்குள் சென்று அமர்ந்தார். உடனே தமது மூச்சையும் நாடியையும் நிறுத்தினார். அப்போதைய அரசாங்க மருத்துவரின் சோதனைக்குப் பிறகு சமாதி மூடப்பட்டது. அந்த சமாதி தற்போது, மக்கள் வழிபடும் கோயிலாக மாறி உள்ளது. சமாதி மேல், அவரின் சிலையை வைத்து வழிபடுகின்றனர். அவர் சமாதி அடைந்த, கார்த்திகை மாதம் தோறும், குருபூஜை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. 'சிந்தனைக்கெட்டாத சிவரூபத்தை கடின உழைப்பால் காண்' எனும் அவரது வாழ்வுரையை ஏற்று, 'நினைத்தது நிறைவேறும்' என்ற நம்பிக்கையில் அதிகம் பேர் அங்கு வந்து தரிசிக்கின்றனர். சுவாமிகளின் ஜீவ சமாதி இருக்கும் ஆலயத்தினுள் பஞ்சமுக லிங்கம், பஞ்சமுக விநாயகர், பஞ்சமுக ஆஞ்சனேயர், குமாரசுவாமி, குபேரப் பெருமாள், மகாமேருவுடன் காமாட்சியம்மாள் ஆகியோர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி பதிணென் சித்தர்களின் சொரூபங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
வேளச்சேரி மெயின் ரோட்டில், காந்தி சாலை திருப்பத்திற்கு அருகில் மகான் ஶ்ரீ சிதம்பர பெரிய சாமி கோயில் உள்ளது. இந்த கோவிலை, அமைதி வரம் தரும் ஜீவசமாதியாகவும், இன்னும் அவர் இங்கு வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், அவருடைய கிருபையால் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.
Comments
Post a Comment