ஸ்ரீ பூண்டி மகான் ஸ்வாமிகள்
ஶ்ரீ பூண்டி மகான் சுவாமிகள்
திருவண்ணாமலை என்றவுடன் மகான் சேஷாத்ரி சுவாமிகள், மகான் ரமண மஹரிஷி பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அப்படிப்பட்ட புண்ணிய ஸ்தலமான திருவண்ணாமலை அருகே போளூர் அருகேயுள்ள கலசப்பாக்கத்தில் சென்ற நூற்றாண்டின் வாழ்ந்தவர் ஶ்ரீ பூண்டி மகான்.
நாம் வாழும் காலத்தில் வாழ்ந்து ஜீவசமாதியான ஶ்ரீ பூண்டி ஆற்று ஸ்வாமிகளைப் பற்றி அதிகம் பேர் அறிந்ததில்லை.
திருவண்ணாமலை மாவட்டத்தில் போளுர் தாலுகாவில் பூண்டி என்னும் சிறிய கிராமம். அங்கு வாழ்ந்து பல அற்புதங்களை நிகழ்த்தியவர் ஶ்ரீ பூண்டி மகான் ஆவார். இவரின் அன்பும் தீட்சண்ய பார்வையும் இவரை மகான் என மக்களுக்கு அடையாளம் காட்டியது. இவர் செய்த பல அற்புதங்கள் பற்றிய தகவல்கள், போளூர் ,கலசப்பாக்கம், பூண்டி போன்ற இடங்களில் வாழும் மக்களால் பிரமிப்பாக பேசப்படுகிறது. நீண்ட தாடியும் தீட்சண்ய பார்வையுமாக மிக எளிமையான மனிதரைப் போல் காட்சியளிக்கும் இந்த மகானை அவதாரப் புருஷனாக அந்தப்பகுதி மக்கள் பக்தியோடு வணங்கினார்கள்.
பூண்டி மகான் அந்த கிராமத்திற்கு வந்தபோது யாரோ ஒரு பித்தன் என்பது போலத்தான் அந்த கிராம மக்கள் அவரை பார்த்தனர்.ஆனால் அவருக்குள்ள அமானுஷ்ய சக்தியினால் அவர் தந்த திருநீறு மற்றும் மூலிகைகளால் எந்தவித நோயையும் குணப்படுத்தி அக்கிராம மக்களை பாதுகாத்து வந்தார். இதனால் பாமரமக்களும், மற்றவர்களும் அவரைத் தேடியும், நாடியும் வந்து வணங்கி நல்ல பலன்களை பெற ஆரம்பித்தனர்.
கலசப்பாக்கம் வந்த பூண்டி மகான்:
1955களில் பூண்டி மகான் ஆரம்ப காலத்தில் கலசப்பாக்கம் கிராமத்தில் இவர் காக்கும் கரைப் பிள்ளையார் கோயில், அல்லது ஒரு இடிந்த மசூதியில் இருப்பார். இந்த ரெண்டு இடத்தில் இல்லாவிட்டால் அவரை நிச்சயம் திரௌபதி அம்மன் கோவில் அருகே ஒரு மரநிழலில் பார்க்கலாம். அவர் கந்தல் உடுத்திய பைத்தியம் போன்று உலவி வந்திருக்கிறார். அவரை அங்குள்ளவர்கள் கேலி செய்த போதும் எதிர்ப்போ மறுப்போ கூறாமல் அமைதியாக அங்கிருந்து சென்று விடுவார்.
மேலிருந்து முழங்காலுக்கு கீழே வரையிலும் கம்பளி போன்ற சட்டையைப் போட்டிருப்பார் . அதை கழற்றமாட்டார் . அது கிழிந்து நைந்துவிட்டால் யாராவது வேறு சட்டை போட்டால் அந்த கிழிந்த சட்டை மேலேயே போட்டுக் கொள்வார்.
ஆற்று சுவாமிகள் என்ற பெயர் வந்த காரணம்:
ஒரு விசித்திர நிகழ்ச்சி மூலமாக கலசப்பாக்கம் கிராம மக்கள் அவரை மகாசித்த புருஷர் என்று கண்டுகொண்டார்கள். கலசபாக்கம் கிராமத்தில் ஓடுகின்ற செய்யாறு என்ற ஆற்றின் மணல் மேல் வாரக்கணக்கில் எழுந்திருக்காமல் அமர்ந்திருப்பார், சுட்டெரிக்கும் வெயிலானாலும் அந்த சுடும் மணலில் சந்தோஷமாக முழு நிலவொளியில் அமர்ந்திருப்பதைப் போன்று உட்காந்திருப்பார். ஒரு சமயம் கனமழை பெய்ததால் திடீரென்று வெள்ளம் வந்தது. ஆற்றில் அமர்ந்திருந்த பைத்தியக்கார சுவாமிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவார் என்றே நினைத்தார்கள். வெள்ளம் குறைந்தபின்பு கிராமத்தார் பலர் சுவாமிகள் அமர்ந்திருந்த இடத்தில் பார்த்தபொழுது சுவாமியின் உடல் எல்லாம் மணலால் மூடப்பட்டு தலைமட்டும் மேலே தென்பட்டது . சுவாமிகளே தன் மேலுள்ள மணலை தானே அப்புறப்படுத்திய பிறகு மௌனமாக எழுந்து சென்று விட்டார் . அவ்வளவு வெள்ளத்தில் மூழ்கியும் அவர் ஒன்றுமே நடக்காததைப் போல் இருப்பதைக் கண்களால் கண்ட ஊர் மக்கள் அவர் சாதாரணமானவர் இல்லை என்றும் , மகா சித்த புருஷர் என்று தெரிந்துகொண்டார்கள். இந்நிகழ்ச்சியின் மூலம் சுவாமிகளின் மகிமை பரவ ஆரம்பித்தது . இந்நிகழ்ச்சி மூலமாகவே சுவாமியை ' ஆற்று சுவாமிகள் ' என்று அழைத்தனர் . அதன் பிறகு ஆற்றுக்குப் பக்கத்திலிருக்கும் சுடுகாட்டுக்கு அருகில் சுவாமிகளுக்காக ஒரு பந்தல் போட்டுக் கொடுத்தார்கள். சுமார் மூன்று வருடகாலங்கள் சுவாமிகள் அங்கு தங்கி இருந்தார்கள்.
திண்ணையே மகானுக்கு நிரந்தர வாசமானது:
1959ஆம் ஆண்டில் பூண்டியில் ஒரு பிரதான சாலைக்கு பக்கத்திலுள்ள கிராம முன்சீப் வீட்டு திண்ணை மேல் அமர்ந்து கொண்டார். பின்பு,அந்த வீட்டை மகானுக்கு கைங்கர்யமாக கொடுக்கப்பட்டது . ஆனால் சுவாமி மட்டும் அந்த வீட்டினுள் ஒருபோதும் அடியெடுத்து வைக்கவில்லை. அந்த திண்ணையை விடவில்லை . அப்படி அந்த மூன்றடி அகலம் , ஆறடி நீளம் உள்ள அந்த திண்ணையே மகானுக்கு நிரந்தர வாசமானது . வந்த நைவேத்தியங்களை எல்லாம் அன்பர்கள் அந்த வராண்டாவை அடுத்துள்ள அறையில் வைத்தார்கள் . அப்படி தினந்தோறும் நூற்றுக்கணக்கான அன்பர்கள் சமர்ப்பித்த காணிக்கைகள் , பழங்கள் , தின்பண்டங்கள் முதலானவை அந்த அறையிலேயே குவியல் குவியலாக வருடக்கணக்கில் குவிந்து கிடக்கும் . ஆனால், இதில் அதிசயம் என்னவென்றால் அவை வெயிலில் காய்ந்தது போல் இருந்ததை தவிர ஒருபோதும் அழுகி , துர்நாற்றம் வீசாது இருந்தன. யாராவது பேசினால் பேசுவார் . ஏதாவது கேட்டால் சுருக்கமாக பதில் அளிப்பார்
ஶ்ரீ பூண்டி மகான் செய்த அற்புதங்கள்:
இரும்பைத் தங்கமாக மாற்றியது:
ஒருமுறை மகானிடம் பக்தர் ஒருவர் தனது மகளின் திருமணத்திற்கு பணம் இல்லையெனக்கூறி தன்மகளின் திருமணம் நல்லபடி நடக்க ஆசி வழங்கும்படி கேட்க, மகானோ 'கவலைப்படாதே, எல்லாம் நல்லபடி நடக்கும். உனது வீட்டுக்கு பக்கத்தில் உள்ள விவசாயிடம் பழைய தேய்ந்த கொலுவு ஒன்று வாங்கிவா' என்றார். (கொலுவு என்பது ஏர் கலப்பையின் கீழே அமைக்கப்படும் இரும்பாலான நிலத்தைத் தோண்ட உதவும் கருவியாகும்)
இது தேயத்தேய சிறிதுசிறிதாக கீழே இறக்கி அமைப்பார்கள். அதிகம் தேய்மானம் அதிகமாகி விட்டால் அதனை எடுத்துவிட்டு, வேறு புதிதாக அமைத்திடுவார்கள். பழையது எதற்கும் உதவாது. பழைய இரும்பென எடைக்குப்போட மட்டுமே பயன்படும். அத்தகைய கொலுவு ஒன்றை வாங்கிவரும்படி பூண்டிமகான் சொன்னார். அந்த பக்தரும் அதேபோல அவ்விவசாயியிடம் கொலுவு ஒன்றை கேட்டு வாங்கிவந்து மகானிடம் தந்தார். அந்த இரும்பு கொலுவை வாங்கிய மகான் அதனை தனது கையினால் தடவிட அந்த இரும்புகொலுவு தங்கமாக மாறியது. 'இதனை விற்று உனது மகளின் திருமணத்தை நல்லபடி நடத்து' எனக் கூறி மகான் அனுப்பிவைத்தார்.
தனது யோகசக்தியின் மூலம் இரும்பைத் தங்கமாக மாற்றுவது வள்ளலார் குறிப்பிட்டதுபோல யோகசித்தி வகையைச் சார்ந்ததாகும். நினைத்த நேரத்தில் ஒரு சாதாரண உலோகத்தை உயர்ந்த (தங்க) உலோகமாக மாற்றும் அற்புத சித்தியினை பூண்டிமகான் பெற்றிருந்தார்.
அவர் அந்த சித்தியினைத் தன்சுய நலத்துக்காகப் பயன்படுத்தாமல், பிறர் நலனுக்காக மட்டும் பயன்படுத்தி வந்தார்.
ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடியது:
ஒருசமயம், மழை பெய்யாத காரணத்தால் விவசாயம் செய்ய முடியாமல் மக்கள் கஷ்டப்பட்டனர். ஊர்மக்கள் ஒன்று கூடி மகானிடம் இது பற்றி கேட்கவேண்டும் என கிராம முன்சீஃப் முடிவெடுத்தார்.
அன்றிரவு.., இரவு தூங்கப்போகும்போது அவரிடம் எப்படி கேட்பது . அவர் தியானத்தால் மழை பெய்யுமா? அவருக்கு அந்த அளவு ஆற்றல் இருக்கிறதா? உண்மையிலேயே அவர் மகானா? என்று பலவாறு நினைத்த வண்ணம் அவர் தூங்கிவிட்டார்.
ஆழ்ந்த தூக்கத்திலிருந்த போது, யாரோ தன் கன்னத்தில் மென்மையாக தட்டுவது போல் உணர..., எதிரே மஞ்சள் நிற ஒளியோடு மகான் நின்றிருந்தார்.
“என்ன முன்சீஃப்.., இவன் நிஜமாகவே மகானா? இவனுக்கு அந்தளவு சக்தி இருக்கா! இவன்கிட்டே போய் கேட்டா மழை பெய்யுமான்னு நினைக்கிறியா?" என்று கேட்டார். இது கனவா... நிஜமா என்று உணர்ந்திடும் நிலையில்லாத முன்சீஃப் இருந்தார்.”
“ஐயா..., தப்பாக நினைக்க வேண்டாம். நீங்கள் மகான் தான்.. என்னை மன்னித்து விடுங்கள்” பணிந்து வேண்டினார்.
“பெரிய வார்த்தைகள் எல்லாம் பேச வேண்டாம்” என சொல்லிவிட்டு மகான் மறைந்து விட்டார்.
காண்பது கனவு போலவே முன்சீஃப்க்கு தெரியவில்லை அடுத்த சில நிமிடங்களில் லேசாக தூறல் விழ ஆரம்பித்தது. அடுத்த சில விநாடிகளில் ‘பளீர்’ என்று மின்னல் வெட்டி மழை வலுக்க ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக பெய்த மழை பேய் மழையாகி, இடி மின்னலுடன் பெரும் மழையாகியது. நள்ளிரவு துவங்கி, விடியல் வரை அடைமழையாய் பெய்ததால் மழையின்றிகாய்ந்து கிடந்த ஆற்றில் வெள்ளம் வர துவங்கியது. விடிந்ததும் நடந்த விபரங்களை ஊர் மக்களிடம் கூறி, மகானை காண ஆற்றங்கரைக்குச் சென்றார்.அங்கே மகான் இல்லை. சிறிது நேரத்தில் மண்ணுக்கடியில் இருந்த மகானை வெளியே தூக்கி எடுத்தனர். அதிர்ச்சியில் எல்லோரும் நெகிழ்வாக கண்கலங்கி நிற்கச் சற்று நேரத்தில் மகான் சட்டென்று கண் திறந்தார். இதை பார்த்து ஊரே வியந்தது. ஊர் மக்கள் எல்லோரும் மகானை கை கூப்பி வணங்கினர்.
பூண்டி மகான் இதைப்போல பலப்பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார்கள்.
ஶ்ரீ பூண்டி மகானின் பொன்மொழிகள்...
தன் பசித்துன்பத்தைக் பொருத்துக்கொள்ளுதலும், பிறருக்கு தன் மனதினாலும் தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் தவத்தின் வலிமையாகும்.
பணம் எட்டாத உயரமும், பாயாத பாதாளமும் இல்லைதான்; ஆனால் சத்தியம் பணத்தின் நிழலில் தங்கக் கூட தயங்குகிறது.
இடி விழுந்தவனுக்கு சிகிச்சை பலிக்காதது போல, நன்றி மறந்தவனுக்கு என்றும் நன்மை கிடைக்காது.
மக்களை மக்களென நினைத்து பணியாற்றி வந்தாலொழிய நாடு வளம் பெறாது.
மேகம் கருகி மழை பொழிகிறது. மனிதன் பிறரைக் கருக்கி தானே கெடுகின்றான்.
தன்னிலும் இழிந்த ஒருவனைத் தனக்கு சமமாக நினைத்து நன்மை செய்பவன்தான் அறிவுடையவனுமாவான்.
ஶ்ரீ பூண்டி மகான் பற்றி மகாபெரியவா:
மகாபெரியவா பூண்டி மகானை பற்றி பேசும்போது ரொம்ப உயர்வாக மரியாதையோடு பேசுவார். ''நான் பூண்டி மகானின் தரிசனம் பெற்றிருக்கிறேன்'' என்பார்.
ஒரு முறை காஞ்சி மகாபெரியவா மகான்கள் மற்றும் ஞானிகளைப் பற்றி சொல்லும்போது “நாம் எல்லோருமே இந்த எலக்ட்ரிக் பல்ப் மாதிரி தான், நமக்கென்று ஒளி கிடையாது, பூண்டி மகான் போல் இருப்பவர்கள் ஒளி வீசும் சக்தியை நமக்கு அளிக்கும் சுவிட்ச் போன்றவர்கள். ஸ்விச் போடப்பட்டால் தானே விளக்குகள் ஒளி வீசும் என்றார்”.
ஶ்ரீ பூண்டி மகான் ஜீவசமாதி:
பத்தொன்பது ஆண்டுகள் ஒட்டுத் திண்ணையில் அமர்ந்தவாறு அருளாட்சி வழங்கிய மகான் ஜீவசமாதியடைவதற்கு மூன்று நாட்களுக்கு தன் பக்தர் சுப்பிரமணியத்திடம் “தாம் வடக்கே போய் செய்ய வேண்டிய வேலைகளை முடித்துக்கொண்டு சொல்ல வேண்டியவர்க்குச் சொல்லிவிட்டு அதன் பிறகு வந்து பூண்டியிலேயே இருந்து விடுவேன்” என்று கூறினார்.
இரண்டு நாட்கள் கழித்து தாம் சொல்ல வேண்டிய பதினெட்டு சித்த புருஷர்களுக்கு சொல்லிவிட்டு வந்தேன் என்று சுப்பிரமணியத்திடமே கூறினார். மறுநாள் 1978 நவம்பர் 3ஆம் தேதி அனுஷம் நட்சத்திரம் அன்று காலை 9 மணியளவில் ஜீவசமாதி ஆனார். சமாதியடைந்த சிறிது நேரத்தில் மேகமூட்டம் ஏற்பட்டு கனத்தமழை ஆரம்பித்து மூன்று நாட்கள் இடைவிடாமல் பொழிந்தது. கனத்த மழையால் அந்த மூன்று நாட்களும் சுவாமியின் உடலை அப்படியே பக்தர்களின் தரிசனத்திற்கு வைத்திருந்தார்கள். மூன்று நாட்கள் ஆனபிறகும் மகானின் தேகம் கெடாமலும், இறுகிப் போகமலும், எந்தவித துர்நாற்றமும் வராமலும் உயிருடன் இருக்கும்போது எப்படி இருந்தாரோ அப்படியே ஜீவக்களையுடன் இருந்தார். பின்பு ஸ்ரீ மகான் அமர்ந்திருந்த திண்ணைக்கு அருகிலுள்ள இடத்தில் சமாதியை ஏற்படுத்தினார்கள். இங்கு மகானுக்கு ஒரு கோயிலும் கட்டப்பட்டுள்ளது. இங்கு சென்று நாம் மனப்பூர்வமாக வேண்டினால் சமாதியில் ஜீவனுடன் இருக்கும் பூண்டி சுவாமிகள் நம்மை காப்பாற்றுவார் என்பது பரிபூர்ண உண்மையாகும்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் என்கிற நகருக்கு மேற்கேயுள்ள கலசப்பாக்கதில் இருந்து 3 கி.மீ தொலைவில் இவரது ஜீவசமாதி உள்ளது. ஜீவசமாதியில் இருந்து கொண்டு இன்றும் ஶ்ரீ பூண்டி மகான் ஆசி வழங்குகிறார்.
ஶ்ரீ பூண்டி மகான் திருவடிகள் போற்றி!
Comments
Post a Comment