மகான் ஸ்ரீ குழந்தையானந்தர் ஸ்வாமிகள்

மகான் ஸ்ரீ குழந்தையானந்தர் ஸ்வாமிகள்
ஆரூர். சுந்தரசேகர்.
     மகான்களின் வாழ்க்கை புனிதமானது மட்டுமல்ல; மகான்களின் வாழ்க்கை எல்லாம் அற்புதங்கள் நிறைந்தது. பூமியில் பிறப்பவர்கள் மனிதர்களாக இருந்தால் ஒரே முறை தான் இறந்து போவார்கள். அதுபோல, மகான்களாக இருந்தாலும் ஒரே முறைதான் சமாதி அடைவார்கள் .
    மகான்களுக்குள் நான்கு இடங்களில் ஜீவசமாதியானதாகக் குறிப்பிடப்படுபவர் மகான் ஸ்ரீ குழந்தையானந்தர் சுவாமிகள். ஒவ்வொரு முறை சமாதி அடைந்த பிறகும் மற்றொரு இடத்தில் தோன்றி அற்புதங்கள் புரிந்தவர்.
   இம்மகானின் வாழ்க்கை வரலாறு பல்வேறு அற்புதங்களை உள்ளடக்கியது. இம்மகானும் ஸ்ரீ ஷிர்டி சாயிபாபாவைப் போலவே விஜயதசமி நன்னாளைத் தான் தனது சமாதி காலத்திற்குத் தேர்ந்தெடுத்து விஜயதசமியன்று தனது நான்காவது சமாதி நிலையை அடைந்தார். இவர் சுமார் 300 வருடங்களுக்கு மேல் வாழ்ந்தவர்.

மதுரை மீனாட்சி அம்மன் வளர்த்த மகான்:
   மதுரையை அடுத்த சமயநல்லூரில் வாழ்ந்தவர்கள் ராமஸ்வாமி ஐயர் – திரிபுரசுந்தரி தம்பதியினர். ஸ்ரீவித்யா உபாசகர்கள். இவர்களுக்கு பல வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து, எல்லா விரதங்களும் அனுஷ்டித்தும் பலன் இல்லை. கடைசியாக அன்னை மதுரை மீனாட்சி அம்மனை மனமுருகி வேண்டி,  “தங்களுக்குக் குழந்தை பிறந்தால் அதை மீனாட்சி அம்மனுக்கு  அர்ப்பணித்து விடுவதாக வேண்டிக் கொண்டனர்”. அவர்கள் பிரார்த்தனை பலித்தது. திரிபுரசுந்தரி அம்மாள் கருத்தரித்தார். இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். அக்குழந்தைகளுக்கு ராமன், லட்சுமணன் என  பெயரிட்டனர். அதில் மூத்த குழந்தை ராமன் ஒளி பொருந்திய கண்களுடனும்,  பாதங்களில் சங்கு, சக்கர முத்திரையுடன் மிக அழகாக இருந்தது. பாதங்களில் சங்கு சக்கரங்களுடன் பிறந்த மூத்த குழந்தையை தாங்கள் வேண்டியபடி அன்னை மீனாட்சி அம்மனிடம்  ஒப்படைத்தனர். மற்றொரு குழந்தையை தாங்களே வளர்த்தனர்.
     கோயிலுக்கு ஒப்படைத்த மூத்த குழந்ததையை திருஞானசம்பந்தருக்கு ஞானப்பாலை ஊட்டியதைப் போல குழந்தையை பாலுட்டி சீராட்டி, மந்திரங்களை உபதேசித்து, தாயாக, குருவாக இருந்து மீனாட்சி அம்மன் வளர்த்தார். கோயிலில் வளர்ந்த குழந்தையை குழந்தைசாமி என பக்தர்கள் அழைத்தனர். அன்னை மீனாட்சியின் அருளாலும், அர்ச்சகர்களின் ஆதரவாலும் குழந்தை வளர்ந்து. தகுந்த வயது வந்ததும் உபநயனமும் செய்விக்கப்பட்டது. ராஜகோபாலன் என்ற நாமமும் சூட்டப்பட்டது.



காசி கணபதி பாபாவும் குழந்தையானந்தரும்:
    மீனாட்சி அம்மனை தரிசனம் செய்வதற்காக மதுரைக்கு காசியிலிருந்து கணபதி பாபா என்ற மகான் வந்திருந்தார். அம்மனை தரிசித்த பின் வெளியே வரும்போது அங்கே விளையாடிக்கொண்டிருந்த  ராஜகோபாலனைக் கண்டதும், அவனுடைய அழகும் , தேஜஸும் அவரைப் பெரிதும் கவர்ந்தன. ஒரு நிமிடம் கண்களை மூடி தியானித்தார். ஒரு நல்ல சீடனை தேடிக் கொண்டிருந்த அவருக்கு "இங்கே இருப்பவன் தான் என்னுடைய சீடன்" என்று அம்பாள் மூலம் மனப்பூர்வமாக உணர்ந்துகொண்டார். ஆலயத்தினரின் அனுமதி பெற்று ராஜகோபாலனைத் தன்னுடன் அழைத்துச் சென்றார். காசியில் ஸ்ரீகணபதி பாபா அவருக்கு  சகல சாஸ்திரங்களையும் பயிற்றுவித்தும்,   பலப்பல ஆன்ம விஷயங்களைப் போதித்தும்,  பல ஆன்ம சக்திகளையும் வழங்கினார் . 

முதல் சமாதி:
  ஸ்ரீகணபதி பாபாவிடம் சகல சாத்திரங்களையும் கற்றுத்தேர்ந்த அவர் “திரிலிங்கசுவாமிகள்” என்ற பெயரால் அழைக்கப்பட்டார். சில வருடங்களில் ஶ்ரீகணபதி பாபா மகா சமாதி அடைந்தார். அவரது சமாதி காசியில் பஞ்சலிங்க கட்டத்தில் உள்ளது. இன்றும் வெள்ளைச் சலவைக் கல்லிலானான அவரது சிலையையும் அங்கு காணலாம்.
    அவர் சமாதிக்குப் பின் பல ஆண்டுகாலம் நிஷ்டையில் இருந்த திரிலிங்கசுவாமிகள், பின் தாமும் ஒரு சமாதிக் குழியை தோண்டச் சொல்லி அதில் இறங்கி ஜீவ சமாதி அடைந்தார். இவருடைய சமாதி கணேச கட்டத்தில் கணபதி பாபா சமாதிக்குப் பக்கத்திலேயே உள்ளது.

காசியில் அற்புதம்:
   காசியில் பிராம்லி என்ற வெள்ளைக்கார துரை அப்பொழுது அங்கு சப் கலெக்டராக இருந்தார் . ஒருநாள் துரை தன் மனைவியுடன் தனியிடம் ஒன்றில் உல்லாசமாக இருந்தார். அப்போது அந்த இடத்தின் வழியாகச் சுவாமிகள் அவதூத் கோலத்தில் சென்று கொண்டிருந்தார். ஆடையின்றி அவதூத் கோலத்தில் சுவாமிகளைப் பார்த்த அவருக்குக் கோபம் வந்தது. தன்னிடமிருந்த சவுக்கால் அவரை அடித்தார் . ஆனால் சுவாமிகளின் மேல் அந்த அடி விழவில்லை . அதற்கு மாறாகத் துரையின் மனைவி மீதே விழுந்தது, அவரது மனைவி கீழே விழுந்து வலி தாங்காமல் அழுதாள். சுவாமியை மாயாஜாலக்காரன் என்று நினைத்து தன் வீட்டுக்கு அவரை இழுத்துச் செல்லுமாறு சேவகர்களுக்கு உத்தரவிட்டார் பிராம்லி துரை. பின், தனது வீட்டு இருட்டு அறையில்” அவரை அடைத்துப் பூட்டச் செய்து சாவியை தான் எடுத்துக் கொண்டார். பிறகு ஒருவண்டியில் ஏறிக்கொண்டு வெளியே சென்று கொண்டிருந்தார். சுவாமிகள் அவர் முன்னால் சாவதானமாகச் சென்று கொண்டிருந்தார். ஆச்சரியம் மேலிட அருகிலுள்ளோரிடம் அவரைப் பற்றி விசாரிக்கவே அவரது மகிமை தெரிய வந்தது . சுவாமிகள் காலில் விழுந்து மன்னிக்க வேண்டினார், சுவாமிகள் அவருக்கு ஆசிகள் வழங்கினார் . அன்று முதல் பிராம்லி துரை மகானின் பெரும் பக்தரானார். காசியில் சுவாமிகளின் சமாதிக்கு குறிப்பிட்ட நாளில் சமாதி பூசைக்காக அத்துரை ஒரு கட்டளை ஒன்று ஏற்படுத்தினார். அது இன்றும் “பிராம்லி துரை”க்கட்டளை என்றே அழைக்கப்படுகிறது.

நேப்பாளத்தில் குஷ்ட நோய் குணமாதல்:
 காசி சமாதிக்குப்பின் “ஶ்ரீ த்ரிலிங்கசாமிகள்” என்ற பெயரிலேயே அங்கிருந்து கிளம்பி நேப்பாளத்திற்குச் சுவாமிகள் சென்றார். ஸ்ரீ த்ரிலிங்க ஸ்வாமிகளை ராமகிருஷ்ண பரமஹம்ஸர், ஸ்வாமி விவேகானந்தர் உள்ளிட்ட ஏராளமான மகான்கள் தரிசித்திருக்கின்றனர். 
  நேபாள ராஜ வம்சத்தைச் சேர்ந்த ஒருவருக்கு குஷ்ட நோய் பீடிக்கவே எத்தனையோ வைத்தியமுறைகளைக் கையாண்டும் அவருக்குப் பலனில்லாமல் போக அவர், அப்பகுதிக்கு மகான் வந்திருப்பதை அறிந்து  தன் நோயைக் குணப்படுத்த வேண்டிக் கொண்டார். மகான் அந்த நோயாளியைத் தன் கையால் தடவிவிட்டதும் உடனே நோய் பூரண குணமாயிற்று.

இரண்டாவது சமாதி:

    நேபாள ராஜ வம்சத்தைச் சேர்ந்தவருக்கு குஷ்ட நோய் குணமானவுடன், மகானை இராஜ மரியாதையோடு அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கேயே அவரை தங்க வைத்து அரச குடும்பத்தினர் வணங்கி வந்தனர்.

ஸ்வாமிகளுக்கு அணிய மகர கண்டியும், கௌரிசங்கர ருத்ராட்ச மாலையும் நேபாள அரசர் கொடுத்தார். சில காலங்களுக்கு பிறகு அங்கேயே சமாதியானார்

   ஸ்வாமிகளின் இந்த இரண்டாவது சமாதி நேபாளத்தில் பசுபதிநாதர் கோவிலில் உள்ளது.

மூன்றாவது சமாதி   
  நேபாள சமாதியிலிருந்து எழுந்த ஸ்வாமிகள் வட இந்தியா முழுவதும் சஞ்சரித்துப் பின்னர் தென்காசியில் உள்ள தன் பக்தர் சங்கரன் பிள்ளையின் வீட்டிற்குச் சென்றார். வீட்டினுள் புகுந்த மகான் உள்ளே சென்று பின்புறத்தில் உள்ள ஒரு சமாதி மேடைமேல் பத்மாசனம் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார். அந்த வீட்டில் உள்ளவர்க்கு இது பிடிக்கவில்லை. இந்த சமாதி யாரோ ஒரு மகான் சமாதி என்றேதான் அவர்களுக்கு தெரியுமே தவிர, உண்மையில் யாருடையது? என்று தெரியாது! வீட்டில் உள்ளவரின் முகக்குறிப்பைக் கண்டு கொண்ட மகான், “என்னுடைய சமாதியில் நான் அமர்வதற்கு யாரைக் கேட்க வேண்டும்?” என்று கேட்டார். வீட்டுக்காரருக்கும் ஒன்றும் புரியவில்லை. பிறகு மகானே சாவதானமாகச் சங்கரன் பிள்ளையை அழைத்து, அவர் முன்னோர்களின் வரலாற்றைச் சொல்லி அப்போது ஏற்பட்டதுதான் தன்னுடைய சமாதி எனக் கூறி விளக்கினார். இச்சமாதி தென்காசியில் சந்நிதி மடத் தெருவில் “சங்கரன் பிள்ளை”  பக்தர் வீட்டில் உள்ளது. இச்சமாதி இன்றும் “நெல்லையப்பர் சமாதி” என்றே அழைக்கப்படுகிறது.

நான்காவது அவதாரமாக மதுரையில் தோன்றினார்:
    மூன்றாவது சமாதி நிலையிலிருந்து எழுந்த ஸ்வாமிகள் மதுரைக்கு வந்தார். குள்ளமான உருவம். பருத்த தொந்தி. வட்டமான முகம். சாளவாய் ஒழுகிக் கொண்டிருக்கும் வாய். மழலைப் பேச்சு என்று சுவாமிகளின் தோற்றம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. குழந்தையைப் போன்ற தோற்றம். சிரித்த, ஆனால் மரியாதையைத் தோற்றுவிக்கும் முகம் என்பதாக மகானின் உருவ அமைப்பு அமைந்திருந்தது. குழந்தை போல குழறிக் குழறிப் பேசுவார் என்பதாலேயே அவருக்கு ‘குழந்தையானந்தர்’ என்ற பெயர் நிலைத்து விட்டது.
   மதுரையில் மகான் இருபது வருஷங்களுக்கும் மேலாக நிகழ்த்திய அற்புதங்கள் அநேகம். தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு நற்பலன்களையும், மேன்மைகளை அருளினார். அவரை தரிசித்தவர்கள் தாங்கள் விரும்பியவற்றை அடைந்து வாழ்வில் உயர்ந்தனர்.

மகான் குழந்தையானந்தர் மதுரையில் நடந்திய அற்புதங்கள்
ரயில் நகரவில்லை:
    1887 - ல் மதுரை ரயில் நிலையத்தில் சென்னைக்குச் செல்ல இருந்த ரயில் ஒன்றில் முதல் வகுப்பு பெட்டியில் ஏறி அமர்ந்து கொண்டார் குழந்தையானந்தர். அவர் உட்கார்ந்தது ஒரு வெள்ளைக்கார அதிகாரிக்கு  பதிவு செய்யப்பட்ட இருக்கை . சிறிது நேரத்தில் வெள்ளைக்கார அதிகாரி அங்கே வந்தார் . தனக்கென ரிசர்வ் செய்த அந்த இடத்தில் குழந்தையானந்தர் அமர்ந்திருந்ததைப் பார்த்ததும் அந்த அதிகாரி கடும் கோபம் கொண்டார். உடனடியாக அந்த இடத்தை விட்டு எழுந்து கொள்ளுமாறு விரட்டினார். மகான் மௌனமாக இருந்தார் . இது குறித்து ஸ்டேஷன் மாஸ்டராக இருந்த கல்யாணராம ஐயரிடம் சென்று அதிகாரி புகார் செய்தார் . அவர் சுவாமிகளைப் பரிசோதித்து டிக்கட் இல்லை என்பதால் கீழே இறக்கி விட்டார். சற்று நேரத்தில் வண்டி புறப்பட வேண்டும் . விசில் ஊதப்பட்டது . ஆனால் வண்டி நகரவில்லை. டிரைவர் தன்னால் முடிந்தவரை முயற்சி செய்து பார்த்தார். அப்போது அங்கு வந்த மகானின் மகிமை அறிந்த சிலர், ஸ்டேஷன் மாஸ்டரிடம் சுவாமிகளின் பெருமை பற்றிச் சொல்லி, அவரிடம் மன்னிப்புக் கேட்கச் சொன்னார்கள். கல்யாணராம அய்யரும் பணிவுடன் சுவாமிகளிடம் மன்னிப்பு வேண்டினார். வெள்ளைக்கார அதிகாரிக்கு மாற்று ஏற்பாடு செய்து, சுவாமிகளை முதலில் அமர்ந்திருந்த ஆசனத்திலேயே உட்கார்ந்து கொள்ள சொன்னார். உடனே சுவாமிகள் சந்தோஷம் பொங்க ‘ ரயில் இனிமேல் கிளம்பும்’ என்றார். டிரைவர் உடனே எஞ்சினை இயக்க, ரயில் கிளம்பியது.

சிறுவனை உயிர்பிழைக்க வைத்தார்:
   திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் வேலை பார்த்து வந்தவர் கிருஷ்ணமூர்த்தி ஐயர் . ஒரு நாள் அவரது பத்து வயது மகன் தனது நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருக்கும் போது இறந்து விட்டான். கிருஷ்ணமூர்த்தி குழந்தையானந்தரின் தீவிர பக்தர் . அவர் மகானிடம் தன் மகனை உயிர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். “உனது மகனை உயிர் பிழைக்க வைக்க வேண்டுமானால் , நான் அவன் உடலுடன் மூன்று நாட்கள் தனி அறையில் தங்க ஏற்பாடு செய்து கொடுத்தால் உன் மகனை சாவில் இருந்து மீட்டுக் கொடுக்கிறேன் ' என்றார். மகான் சொல்லியதை பெற்றோர் ஏற்றுக்கொள்ள, மகானும் கிருஷ்ணமூர்த்தி ஐயரின் வீட்டுக்குச்சென்று இறந்த சிறுவனின் உடலோடு ஓர் அறைக்குள் நுழைந்தார் . நான்காம் நாள் காலையில் எல்லோரும் அதிசயிக்கும் விதமாக அந்தச் சிறுவன் தூக்கத்தில் இருந்து எழுபவனைப்போல எழுந்து வெளியே வந்தான் . ஊர்மக்கள் இந்தக் காட்சியைக் கண்டு மெய்சிலிர்த்தனர் . இறந்த சிறுவன் தங்கள் கண் முன்னால் உயிர் பெற்று எழுந்து வந்ததைப் பார்த்து வியந்தனர். 
  மரணத்தையே மாற்றி அமைக்கின்ற அசாத்தியமான சக்தி படைத்த குழந்தையானந்தரின் அருளால் புத்திரபாக்கியம் அடைந்தவர்கள் பலர்.
   இவரை மனமுருகி வேண்டினால் குடும்பம் ஆலமரம் போல தழைக்கும்  மற்றும் எப்படிப்பட்ட துன்பம் வந்தாலும் விலகிப்போகும் ' என்று திருவண்ணாமலை ஶ்ரீ சேஷாத்திரி மகான் இவரது பெருமையை எழுதி இருக்கிறார்.

நான்காவது முறை சமாதியான மகான்:
    மூன்று முறை ஜீவசமாதியிலிருந்து வெளித்தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலித்த மகான், 1932ஆம் ஆண்டு மதுரை லக்ஷ்மிநாராயணபுர அக்ரஹாரம் 4அம் நம்பர் கிருஹத்தில் நவராத்திரி உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. மகான் வைத்திருந்த ஸ்ரீசக்ரத்திற்கு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன. எட்டாம் நாளன்று சிஷ்யர் ராமலிங்கய்யர் வெந்நீர் கொண்டு வந்து வைக்க, மகாலிங்க பண்டாரம் என்பவர் ஸ்வாமிகளுக்கு எண்ணைய் தேய்த்து விட்டுக் கொண்டிருந்தார். மகாலிங்கம் அவரது கையில் ஏற்பட்ட பிளவையைக் கண்டு பயந்து ஏதோ ராமலிங்கய்யரிடம் சொல்ல, குழந்தையானந்தர், “என் கையில் ஏற்பட்ட பிளவை பற்றிதானே சொல்கிறான்  மகாலிங்கம்! அதெல்லாம் ஒண்ணுமில்லை! எல்லாம் நாளை மறுநாள் தெரியும்!” என்று சொன்னார்.
   சனிக்கிழமை சரஸ்வதி பூஜை முடிந்தது. மதியம் மூன்று மணிக்கு ஸ்வாமிகளே என்று கூப்பிட்ட போது கண் விழித்துப் பார்த்தார் அவர். ராமலிங்கய்யர் சிறிது பாலை வாயில் ஊற்ற இரண்டு வாய் உள்ளே சென்ற பால் அப்படியே நின்று விட்டது.
   இறுதியாக 1932ஆம் ஆண்டு, ஆங்கீரஸ வருஷம், புரட்டாசி மாதம் 23ஆம் தேதி சனிக்கிழமை, தசமி திதி, திருவோண நக்ஷத்திரத்திரம் கூடிய தினத்தில் நான்காவது முறையாக சமாதியை அடைந்தார்.
    மதுரை அரசரடியில் அமைந்திருக்கும் இவரது ஜீவ சமாதியிலிருந்து சூட்சும ரீதியாக பக்தர்களுக்கு இன்றும் மகான் ஸ்ரீகுழந்தையானந்தர் அருள் புரிகிறார் என்பது அவரது பக்தர்களின் நம்பிக்கை. விஜயதசமி அன்று மகானை உளப்பூர்வமாக வழிபடுபவர்களுக்கு எல்லா நன்மையும் பெருகும்.










Comments

Popular posts from this blog

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..

உண்மை பக்தி எது ?

ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்...