மகான் திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளார்.

மகான் திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளார்.
ஆரூர் சுந்தரசேகர்.
"அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி !!
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி !!”
    ஆயிரக்கணக்கானோர் பசியை போக்கிட  அன்ன தானம் இடும் “சத்திய ஞான சபையை” வடலூரில் இராமலிங்க அடிகளார் நிறுவினார். இதன் காரணமாக மக்களால் “வள்ளலார்” என்று போற்றப்பட்டார்.
"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடியவர்.  ஆன்ம நேய ஒருமைப்பாடு எங்கும் தழைக்க, இவ்வுலகமெல்லாம் உண்மை நெறி பெற்றிட, கடவுள் ஒருவரே என்ற கருத்தை வலியுறுத்தியவர்.
    அன்பையும், இரக்கத்தையும் வாழ்வின் அடிப்படையாக கருத வேண்டும்.  கோபம், சோம்பல், பொறாமை, பொய், கடுஞ்சொல் முதலானவற்றை அறவே நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியவர் வள்ளலார். 
  எல்லோரும் சமரச சன்மார்க்கம் என்ற நெறியோடு வாழ வேண்டும் என்பதற்காகத்தான் தனி இயக்கத்தையும் தனிக்கொடியையும் கொண்டு வந்தார். 

இராமலிங்கனார் பிறப்பு :
     கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள  மருதூரில் கிராம கர்ணமாகவும், குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தரும் ஆசிரியராகவும் விளங்கியவர் ராமைய்யா. இவர் மனைவி பெயர் சின்னம்மையார், இராமைய்யா மனைவி சின்னம்மை தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. சபாபதி, பரசுராமர் என்ற ஆண் குழந்தைகளும் உண்ணாமுலை, சுந்தரம்மாள் என்ற பெண் மக்களும் பிறந்து, ஐந்தாவதாக 1823-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 5-ஆம் நாள் ஞாயிறு மாலை 5.54 மணியளவில் ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு இராமலிங்கம் எனப் பெயர் சூட்டினர். இராமலிங்கம் பிறந்த எட்டாம் மாதத்தில் தந்தை ராமைய்யா காலமானார். சின்னம்மையார், தன் குழந்தைகளின் எதிர்காலம் கருதி பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தாம் பிறந்த ஊரான பொன்னேரிக்கு அடுத்த சின்னக்காவனம்  என்ற ஊருக்கு சென்றார். சிலகாலம் சின்னக்காவனத்தில் வாழ்ந்த பின்பு, குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் கருதி சென்னைக்கு வந்து சேர்ந்தார். 

சென்னையில் இராமலிங்க அடிகளார்: 
   1826-ஆம் ஆண்டு, சின்னம்மையார் தன் குடும்பத்துடன் சென்னையில் சென்னையில் பெத்த நாயக்கன் பேட்டை ஏழு கிணறு ,வீராசாமிப் பிள்ளைத் தெருவில் உள்ள ஒரு வீட்டில் குடியேறினர்.  மூத்த மகன் சபாபதி முறையாக ஒரு தமிழ் ஆசிரியரிடம் நன்கு தமிழ் பயின்றதின் விளைவாக ஒரு பள்ளியில்  தமிழாசிரியராக பணிபுரிந்ததுடன் , ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் பெரியபுராண விரிவுரை நடத்துவதுமாக, வாழ்க்கையை சிறப்பாக நடத்திவந்தார் . இளைய சகோதரரான இராமலிங்கத்திற்கு படிப்பில் ஆர்வம் இல்லாதிருந்தது. ஆனால் அவர் பல புலவர்களின் பாடல்களை படிக்காமலேயே பாடும் திறன் கொண்டிருந்தார். ஒருமுறை அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் பெரிய கண்ணாடி இருந்தது. அதற்கு சந்தனம் , குங்குமமிட்டு , அழகு செய்த இராமலிங்கம் அதற்கு மாலை அணிவித்து, சாம்பிராணி புகை போடப்பட்டு, தன் உள்ளத்தில் தோன்றியதை அக்கண்ணாடியின் எதிரே நின்றவாறே ராமலிங்கம் பாடத் தொடங்க, ஒரு அற்புதம் அங்கே நிகழ்ந்தது. கண்ணாடியை இமை மூடாமல் இராமலிங்கம் பார்த்திருக்கையிலேயே அறுபடைகளில் ஒரு படை வீடான திருத்தணியில் குடியேறிய முருகனின் அருள் வடிவம் தோன்றியது. புன்னகை பூத்துக் கொண்டிருந்த அந்த அழகனின் திருமுகத்தில் லயித்தவாறே அவர் நிற்க , கற்காத பல அருட் தகவல்கள் , ஊற்றுப் போல அவர் மனதில் கொட்டிக் கொண்டே இருந்தது . அப்படி பாடிய ஒரு பாடலிது .
 " உள்ள நெக்குவிட்டுருகு மன்பர்தந் 
நள்ள கத்தினில் நடிக்கும் சோதியே ! 
தள்ள ருந்திறந் தணிகை யானந்த வெள்ளமே மனம் விள்ளச் செய்வையே”
இன்னும் பல பாடல்களும், கருத்துக்களும், முறைப்படி கல்லாத இளைஞரான அவர் உள்ளத்திலே தினமும் பெருகிக்கொண்டு இருந்த விந்தை முடிவற்று தொடர்ந்து கொண்டு இருந்தது . சுப்ரமணியம் என்ற தத்துவத்தை தனது நுண்ணறிவால் கண்டுகொண்டு , அதற்கு இராமலிங்கம் அளிக்கும் விளக்கம் பிறரது உள்ளத்தைக் கொள்ளைக் கொள்ளும். குடும்பத்தினரின் புரிதலுக்கு பின்னர் முழுமையாக அருள் வாழ்க்கையை தொடங்கிய வள்ளலார். திருவொற்றியூர், பாடி, திருமுல்லைவாயல், திருவள்ளூர், திருத்தணி என்று பல தலங்களுக்கும் சென்று அத்தல பெருமைகளை எழுதிப் பாடினார். 

வள்ளலாரின் திருமணம்:
    வள்ளலார் கோயில் குளம் என்று சுற்றிக் கொண்டிருப்பது தாயாருக்கும், அண்ணன் சபாபதிக்கும் மிகுந்த கவலையை அளித்தது. அவருக்கு திருமணம் செய்வித்தால் நிலைமை மாறும் என்று எண்ணி வள்ளலாருக்குத் திருமணம் ஏற்பாடுகள் செய்தனர். அவரோ திருமணம் வேண்டாம் என்று மறுத்தார். அவர்களால் முடிந்தவரை எவ்வளவோ அறிவுரைகள் கூறிப் பார்த்தனர். அவர்கள்  வள்ளலார் அதிக ஈடுபாடு கொண்டிருந்த நந்தி ஆசிரமத் தலைவராகிய சிவயோகியாரிடம் சென்று எப்படியாவது இராமலிங்கரைத் திருமணத்திற்கு இசைய வைக்கவேண்டும் என்று வேண்டினர். சிவயோகியாரும் அவர்கள் கேட்டுக் கொண்டபடி வள்ளலாரைத் திருமணம் செய்து கொள் என்று வற்புறுத்தினார். “நீ பக்தி உள்ளவன்தானே. எல்லாம் அவன் செயல் என்பதை நம்புகிறாயா இல்லையா? நீ திருமணம் செய்து கொள்வது ஆண்டவனுக்குச் சம்மதம் இல்லை எனில், தடுக்கபடும். நீ தடுப்பதில் நியாயம் இல்லை” என்றார். வள்ளலார் இதற்கு என்ன சொல்வது என்று தயங்கினார். ஆண்டவன் தடுத்துவிடுவார் என்று நம்பிக்கையில் பதில் பேசவில்லை.
   மெளனத்தையே சம்மதமாக எடுத்துக் கொண்டு தமக்கையார் உண்ணாமுலை அம்மாளின் மகளான தனக்கோட்டியை வள்ளலாருக்குத் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் நடந்தபோது  வள்ளலாருக்கு வயது   இருபத்தேழு.
    திருமணம் செய்து கொண்ட அன்றிரவு தனக்கோட்டியிடம் திருவாசகம் கொடுத்துப் படிக்கச் சொல்லிவிட்டு மனைவியை ஏறிட்டும் பாராது சிவ தியானத்தில் ஆழ்ந்துவிட்டார். அவரை அன்றே புரிந்து கொண்டுவிட்ட தனக்கோடி, இல்லறத்தை நல்லறமாக நடத்தி, அவருடன் பக்தி மார்க்க நெறிமுறை தவறாமல் வாழ்க்கையை நடத்தி வந்தார்.

வள்ளலார் சென்னையை விட்டு வெளியேறினார்:
    தமிழ் வித்வான், ஆன்மீகவாதி, சொற்பொழிவாளர், நூல் ஆசிரியர், நூல் பதிப்பாளர் என்று சென்னையில் பல பரிமாணங்களை காட்டிய  வள்ளலார் 1858ல் சென்னையை விட்டு புறப்பட்டு, போக்குவரத்து வசதி இல்லாத அக்காலத்தில்  மயிலாப்பூர், அச்சிறுபாக்கம், புதுச்சேரி வழியாக நடந்து சென்று சிதம்பரத்தை அடைந்தார். அங்கிருந்து அவருடைய பிறந்த  ஊரான மருதூருக்குப் பக்கத்தில் உள்ள கருங்குழிக்கு சென்றார். சில நாட்களாக அங்கு நோய்வாய்ப்பட்டிருந்த அவருடைய சகோதரர் பரசுராமபிள்ளை காலமானார் . இராமலிங்கனார்அவரது சகோதரரின் ஈமக் கடன்களை செய்தார் . பின்பு அவர் கடலூர் , மஞ்சக்குப்பம் ஆகிய இடங்களுக்கு சென்றுவிட்டு, பிறகு கருங்குழி வந்து அங்கு நிலையாகத் தங்கினார் . கற்றறிந்த துறவிகளும் , தமிழாசிரியர்களும் உரையாடி மகிழவும் , தங்கள் ஐயங்களைத் தெளிவு செய்து கொள்ளவும் இராமலிங்கரை நாடி வந்தனர் . அவர் அவர்களுக்கு தகுந்த விளக்கங்களை வழங்கினார் .

வள்ளலாரின் அற்புதங்கள்:
    வள்ளலார் தன் வாழ்வில் சில அற்புதங்களை புரிந்துள்ளார். ஒரு சமயம் வள்ளலாரை புகைப்படம் எடுக்க விரும்பிய சிலர் எத்தனை முறை புகைப்படம் எடுத்தும் அவரின் உருவம் அதில் பதிவாகவில்லை. இதற்கு காரணம் வள்ளலார் பெற்ற “ஒளி தேகத்தை” அந்த புகைப்படக் கருவியால் பதிவு செய்ய இயலவில்லை. பின்பு தனது அடியவர்களின் ஆசைக்காக சிறிது நேரம் தியானித்த பின், புகைப் படம் எடுத்துக்கொள்ளுமாறு கூறிய பிறகு அவரது உருவம் அதில் மங்கலாக பதிவாகியது. 
   வள்ளலார் கருங்குழியில் ஒரு ரெட்டியாரின் இல்லத்தில் தங்கி , சிறு விளக்கு தந்த ஒளியில் அருட்பாக்கள் ' எழுதிக் கொண்டிருந்தார் . வீட்டில் யாரும் இல்லை . விளக்கில் எண்ணெய் தீரும் நிலை. எனவே அதன் ஒளி மங்கி, எக்கணமும் அணைந்து விடுமோ என்று இருந்தது . அதனை உணர்ந்து கொண்ட  வள்ளலார், யாரிடமும் எண்ணெய் கோர முடியாத நிலையில், பக்கத்திலிருந்த மண்பானையில் வைத்திருந்த நீரை, அதன் அருகில் இருந்த மண் குடுவையில் எடுத்து விளக்கில் சொட்டுசொட்டாக அவர் விட, விளக்கு ஒளிர் விட்டு எறிய ஆரம்பித்தது. இதன்பின் வெளியிலே இருந்து திரும்பிய அவ்வீட்டார் இந்த அதிசய நிகழ்வினை கண்டு வியந்தார்கள். இதே போன்று வெறும் நீரால் விளக்கெரித்து காட்டியவர் மகான் ஷீர்டி சாயி பாபா.
   ஒரு முறை வடலூரிலுள்ள சத்திய ஞான சபையில் புதிய கொடிமரம் ஸ்தாபிக்க, அதற்கான மரத்தை வாங்க வள்ளலார் தனது சீடர்கள் சிலரை சென்னைக்கு அனுப்பிவைத்தார். சென்னைக்கு ரயிலில் வந்து இறங்கிய அந்த சீடர்கள், வள்ளலார் அவர்களிடம் முன்பே கூறிய அந்த குறிப்பிட்ட மரக்கடைக்கு சென்றனர். அப்போது அச்சீடர்கள் காணும் வகையில் “சூட்சம” வடிவில் தோன்றிய வள்ளலார் ஒரு மரத்துண்டின் மீது நின்று, கொடிமரத்துக்கான மரம் அதுதான் என அடையாளம் காட்டினார். இந்த அதிசயத்தை கண்ட அந்த சீடர்கள் வடலூர் திரும்பிய பின்பு இது பற்றி அங்கிருந்தவர்களிடம் கூறினர். அப்போது அங்கிருந்தவர்கள் வள்ளலார் அந்த சீடர்களுக்கு சென்னையில் காட்சியளித்த அதே நேரத்தில், இங்கு வடலூரில் தங்களுக்கு ஆன்மீக போதனைகளை வழங்கி கொண்டிருந்ததாக கூறினர். இதை கேள்விப்பட்ட அனைவரும் வள்ளலாரின் யோக ஆற்றலை எண்ணி வியந்தனர்.  மற்றும் இராமலிங்க அடிகளார் நிகழ்த்தியுள்ள  அற்புதங்கள் அநேகம் ! இதில் பாலுரெட்டியார் என்பவருக்கு தொழுநோய் போக்கியது , முத்து நாராயண ரெட்டியாரின் கண் புறையை நீக்கியது , மழை கொட்டிக்கொண்டு இருக்கையில் அனைவரின் ஆடைகளும் நனைத்திட்ட நிலையில், வள்ளலார் மீது ஒரு சொட்டு நீர் படாத நிகழ்வும் , ஒரு அன்பருக்கு இரும்புத்துண்டை, தன் தலையில் தீண்டிய பாம்பால் பாதிக்கப்படாமல் நடந்ததோடு அதனை பிறர் கொல்ல முயற்சிக்கையில் பரோபகார சிந்தனையில் , உயிரோடு பாம்பை ஓடவிட்டது என பட்டியல் இட முடியாத அளவுக்கு போய்க்கொண்டே இருக்கும் !

வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கம்:
     எவ்வகையாலும் கண்டுகொள்ள முடியாத இறைவனை மிகவும் சுலபமாக அனைவரும் அடைதற்பொருட்டு வள்ளலாரால் எற்படுதப்பட்டதே சமரச சுத்த சன்மார்க்கமாகும். 
  கருங்குழியில் தங்கி யிருந்தபோது 1865 ஆம் ஆண்டு வள்ளலார் "சமரச வேத சன்மார்க்க சங்கம்" என்ற அமைப்பை உருவாக்கினார். பிற்காலத்தில் அந்தப் பெயரை "சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சங்கம்" என்று மாற்றியமைத்தார்.
  மனிதனை துன்பத்தில் இருந்து மீட்டு ஜீவகாருண்ய வழியில் நடத்தி மனிதனை தெய்வநிலையை அடையச் செய்விப்பதே சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய நோக்குமாகும். சாதி, மதங்களில் பேதமுற்று அலைந்து வீணே அழியும் இந்த உலகத்தவர்களுக்கு ஆன்ம நேயத்தை உணர்த்தினார். எல்லா உயிரையும் தன்னுயிரைப் போல் பார்க்கும் உணர்வை கொள்ளுதல் வேண்டும். எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம் என்று பெயரிட்டார்.
அனைத்துச் சமய நல்லிணக்கத்திற்காக சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். அறிவுநெறி விளங்க  சிதம்பரம், அருகே உள்ள  வடலூரில் சத்திய ஞானசபையை அமைத்தார். இத்தகைய உயரிய நோக்கங்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார். அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாகக் கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைகளுக்கு ஒத்த கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றி வரப்படுகின்றன.

வள்ளலாரின் திருவருட்பா:
    வள்ளலார் 1851ஆம் ஆண்டு ஒழுவில் ஒடுக்கம் என்ற நூலையும்,1855-இல் தொண்டமண்டல சதகம் என்ற நூலையும்,1857 இல் சின்மய தீபிகை என்ற மூன்று நூல்களை பதிப்பித்துள்ளார். மேலும், அவர் ஆறாயிரம் பாடல்களைக் கொண்ட திருவருட்பாவையும், மனுமுறைகண்ட வாசகம் மற்றும் சீவகாருண்ய ஒழுக்கம் என்ற மூன்று நூல்களை இயற்றி வெளியிட்டுள்ளார்.
    ஆறாயிரம் பாடல்களைக் கொண்ட திருவருட்பாவானது ஆறு திருமுறைகளாக தொகுக்கப்பட்டுள்ளது. இப்பாடல்கள் அனைத்தும் இறை அருளால் அருள்நிலையில் பாடப்பட்டவையாகும். எனவே திருவருட்பா என பெயர்ப்பெற்றது. இப்பாடல்கள் அனைத்தும் ஒன்பது வகையான இலக்கணங்களைக் கொண்டுள்ளது.அவை, எண்ணிலக்கணம்,  எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணம், உரையிலக்கணம், புணர்ச்சியிலக்கணம் மற்றும் ஒற்றிலக்கணம் என்பனவாகும்.
   திருவருட்பா என்பது உண்மை உரைக்க வந்த இறை நூலாகும். இதில் பற்பல சாதன ரகசியங்களும், சிவ ரகசியங்களும், சித்துகளையும் உள்ளடக்கி பாடப்பெற்றுள்ளது. எந்த ஒரு சித்த புருஷரும் வெளிப்டையாக பகிரங்கமாக எடுத்துரைக்காத விஷயங்களை எல்லாம் தெள்ளம் தெளிவாக எடுத்துரைக்கப் பெற்ற ஒரே ஒரு நூல் என்று சொன்னால் அதுவே திருவருட்பாவாகும்.
வாடிய பயிரைக் கண்ட போதல்லாம் வாடினேன் என்ற வள்ளல் பெருமான், நாம் உண்மையையும் புனிதமும் பெறும் பொருட்டு அருளியதே திருவருட்பாவாகும். திருவருட்பா பாடல்கள் முழுவதும் உள்ளத்தை உருக்குவன. ஆழ்ந்த கருத்துகளை கொண்டன.

வள்ளலாரின் கொள்கைகள்:
கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்ஜோதியானவர். புலால் உணவு உண்ணக்கூடாது. எந்த உயிரையும் கொல்லக்கூடாது. சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது. பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும். தெய்வ வழிபாடு பெயரால் பலி இடுதலும் கூடாது. எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது. மத வெறி கூடாது. எல்லா உயிரையும் தம் உயிர்போல் பாவிக்கும் ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமையைக் கடைபிடிக்க வேண்டும் !

பிள்ளைகளுக்கு வள்ளலார் அறிவுரைகள்:
  நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதே
தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே
மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே
ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே
பொருளை இச்சித்துப் பொய் சொல்லாதே
பசித்தோர் முகத்தைப் பாராதிராதே
இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்னாதே
குருவை வணங்கக் கூசி நிற்காதே
வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே
தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே

ஒளிவடிவம் பெற்று இறையோடு கலந்த வள்ளலார்:
     கருங்குழிக்கு அருகிலுள்ள வடலூரில், பார்வதிபுரம் என்னும் கிராமத்து மக்களிடம் எண்பது காணி நிலத்தைத் தானமாகப் பெற்று, 1867--ஆம் ஆண்டு, மே மாதம் 23(வைகாசி மாதம் பதினொன்றாம் தேதி) ஆம் தேதியன்று அங்கு சமரச வேத தர்ம சாலையைத் தொடங்கினார். பின்பு, அதை அவரே சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை எனப் பெயர் மாற்றம் செய்தார்.

  1874ஆம் ஆண்டு சனவரி 30 ஆம் தேதி (திருமுக ஆண்டு தை 19) வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.00 மணிக்குமேட்டுக்குப்பத்தில் உள்ள சித்திவிளாக திரு மாளிகைக்குள் நள்ளிரவு 12 மணிக்குச் சென்று ஒளிவடிவம் பெற்று இறையோடு கலந்தார். இறைவன் ஒளிவடிவில் இருப்பதால், அந்நிலையை அடைந்த ஒரே ஒரு அருள் மகான் திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளார் ஆவார். ஒளியாகிய ஜோதியில் ஐக்கியமாகி இறைவன் இருக்கிறான். இந்த உண்மையை அறிந்து அந்த ஜோதியையே உண்மைக் கடவுளாக எண்ணி வழிபடுவோம்...

Comments

Popular posts from this blog

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..

உண்மை பக்தி எது ?

ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்...