மகான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்.
மகான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்.
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றி தெரியாதவர்கள் மிகக் குறைவே என்று சொல்லலாம். பல இடங்களில் உற்பத்தியான ஆறுகள் ஒரே கடலில் வந்து சேருவது போல, சமய மார்க்கங்கள் அனைத்தும் ஒரே இறைவனை அடையும் வழிகள் என்றும், இறைவனை அடைய அவரவருக்குப் பிடித்த வழிகளில் கடைப்பிடிக்க வழிகாட்டிய மகான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்.
எந்த சமய ஆன்மிகக் கருத்துக்களை குறை சொல்லாமலும், எந்த ஒரு வழிமுறைக்கும் முக்கியத்துவம் அளிக்காமலும், எல்லா சமயப் பிரிவினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அனைத்து சமயக் கருத்துக்களையும் ஒருங்கிணைக்கும் சமய சமரச வாழ்க்கை வாழ்ந்தவர் மகான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.
மகான் ராமகிருஷ்ண பரமஹம்சருடைய உபதேசங்கள் உபநிஷத்துக்குச் சமானம் என்றால் மிகையாகாது. மிக கடினமான வேத, உபநிஷத்து கருத்துக்களை கூட அனைவருக்கும் புரியும் வண்ணம் சிறிய கதைகள் மூலம் சொன்னவர்.
காளி கோயிலின் பூசாரியான பரமஹம்சர்:
‘ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்’ என அறியப்படும் கதாதர் சட்டர்ஜி அவர்கள், 1836 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் நாள், மேற்குவங்காளம் மாநிலத்தில் ஹூக்ளி மாவட்டதிலுள்ள “காமர்புகூர்” என்ற இடத்தில் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த குடிராம் சடோபாத்யாய சந்திரமணி தேவி தம்பதியருக்கு நான்காவது குழந்தையாகப் பிறந்தார்.
கதாதரர் மிகவும் சிறியவராக இருந்த போது அவரது தந்தை காலமாகி விட்டதால் தாய் சந்திரமணி, அண்ணன் ராம்குமார் ஆகியோரின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். சிறு வயதில் ஆடல் பாடல்களிலும், தெய்வங்களின் படங்கள் வரைவதிலும், களிமண்ணில் சிலைகள் செய்வதிலும் ஆர்வமாயிருந்த இவர் கல்வி பயில்வதில் ஆர்வம் இல்லாததால் பள்ளி செல்ல மறுத்தார். இயற்கையை ரசிப்பதிலும், பக்திப் பாடல்கள் பாடுவதிலும், புராணக் கதைகள் கேட்பதிலும், நண்பர்களுடன் விளையாடுவதிலும் பொழுதைக் கழித்தார்.
சிறு வயதிலேயே ஆன்மீகத்தில் அதிக ஞானம் உடையவராயிருந்த கதாதரருக்கு உலகப்பற்று இல்லாமலிருந்தது. சன்னியாசிகளைக் கண்டால் அவருக்குள் தனி மகிழ்ச்சி ஏற்படும். அவர்களுடன் பேசுவதும், தேவையானதை செய்வதாலும் அவர்களுடன் நெருக்கமாகி விடுவார். ஒருநாள் அவரது தாய் அவருக்குப் புது ஆடை கொடுத்து உடுத்திக் கொள்ளச் சொன்னார். அவர் அந்தப் புது ஆடையை உடுத்திக் கொண்டு ஜகன்னாத் யாத்திரை செல்லும் சாதுக்கள் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று அவர்களைப் பார்த்தார். அவர்கள் அனைவரும் கௌபீனம் (கோவணம்) அணிந்திருந்ததைப் பார்த்ததும், தன் புது ஆடையை இரண்டாகக் கிழித்து தானும் கௌபீனம் அணிந்து கொண்டார். அப்படியே, அவரது தாயிடம் சென்று, “அம்மா, நானும் கௌபீனம் அணிந்து சன்னியாசியாகி விட்டேன்” என்றார்.
தனது பதினேழாம் வயதில் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை காரணமாக, அவரது அண்ணனுடன் கதாதரர் கல்கத்தா சென்றார். அவருடைய அண்ணன் ராஜ்குமார், தக்ஷ்னேஸ்வர் காளி கோயிலில் பூசாரி வேலை பார்த்துக் கொண்டு ஒரு பாடசாலையும் நடத்தி வந்தார். கதாதரர் அவருடன் சென்றால் அவர் நடத்திய பாடசாலையை கவனிக்க உதவி செய்யலாம், மற்றவர்களுடன் படிக்கவும் செய்யலாம் என்ற எண்ணத்தில் கல்கத்தா வந்தார். சிறிதுகாலம் தன்னுடைய அண்ணனுக்கு உதவியாக வீடுகளில் சென்று பூஜைகளைச் செய்ததுடன் அவரிடம் கல்வியும் கற்று வந்தார். தனது அண்ணன் ராஜ்குமார் இறந்தவுடன் காளி கோயிலின் பூசாரியானார்.
தக்ஷ்னேஸ்வர் காளி நேரில் காட்சியளித்தார்:
தக்ஷ்னேஸ்வர் காளி கோயிலில் தினந்தோறும் பூஜை செய்து வந்த கதாதரருக்கு, தாம் கல்லைத்தான் பூஜை செய்கிறோமா, அல்லது இறைவனையா என்ற சந்தேகம் எழுந்தது. காளி கடவுளாக இருந்தால், தனக்குக் காட்சி அளிக்குமாறு தினமும் பிரார்த்தனை செய்தார். காளி தேவியின் தரிசனம் கிடைக்கவில்லையே என மனமுடைந்து ஒரு நாள், காளி சிலையின் கைகளில் இருந்த வாளினால் தன்னைத்தானே மாய்த்துக் கொள்ள முயன்றார். கதாதரரின் தீவிரமான பக்தியில் மனமிரங்கிய காளி தேவி அவர் முன்பு தோன்றினார். கதாதரர், தன்னுடைய சுயநினைவை இழந்து தரையில் வீழ்ந்தார்.
அன்னை சாரதாதேவி:
1859ம் ஆண்டு மே மாதத்தில், ஐந்து வயதுச் சிறுமியான சாரதாவுக்கும் இருபத்து மூன்று வயது வாலிபர் கதாரருக்கும் திருமணம் நிகழ்ந்தது. அக்காலத்தில் பால்ய விவாகம் சகஜம் என்பதால் வயது வித்தியாசத்துக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. திருமணம் முடிந்ததும் கதாதரர் வழக்கம்போலக் காளிகோவில் பூஜைக்காக தக்ஷிணேசுவரம் சென்றுவிட்டார். சாரதா சிறுமி என்பதால், அக்கால வழக்கப்படி திருமணத்திற்குப் பின் தாய் வீட்டிற்குச் சென்று வசித்தார்.
பரமஹம்சரின் மனைவி சாரதாதேவிக்கு 18 வயது ஆனபோது, அவரது கணவர் பைத்தியமாக இருப்பதாகச் சிலர் அவரிடம் தெரிவித்தனர். அதைக் கேட்டு அவர் மன வருத்தமடைந்தார். அவர் உண்மையைத் தெரிந்து கொள்ளும் ஆவலுடன் கமார்புகூரிலிருந்து தக்ஷ்னேஸ்வரம் வரை கால்நடையாக நடந்து வந்து கணவரைக் கண்டார்.
பரமஹம்சர் அவரைப் பிரியமுடன் வரவேற்றார். பரமஹம்சர் அவரிடம், “உன்னை மணந்த கதாதரன் இறந்து விட்டான். இப்போது இருக்கும் பரமஹம்சன் எந்தப் பெண்ணையும் மனைவியாக ஏற்பதில்லை. உன்னிடம் என் தாய் காளியைத்தான் காண்கிறேன்.” என்றார். மனைவி என்று உறவு சொன்னாலும் அன்னை சாரதா தேவியினை பரமஹம்சர் காளியின் ரூபமாகவே பார்த்தார். அன்னை சாரதாதேவியும் பரமஹம்சரின் ஆன்மீக வழியினை பின்பற்றி அவரது சீடர்களுக்கு அன்னையாகவே விளங்கினார். அவரது வழிகாட்டுதலில் ஆன்மிகப் பணிகளை தொடர்ந்து செய்தார்.
நிர்விகல்ப சமாதி நிலை அறிதல்:
பரமஹம்சர் அனைத்து ஞானங்களையும் உணர்ந்து ஞானியாக வேண்டும் என்று விரும்பினார். மற்றும் நிர்விகல்ப சமாதி நிலைக்கு வழிகாட்ட தனக்கு குரு எவருமில்லையே என வருத்தமடைந்தார். இந்நிலையில், தோதாப்புரி என்ற ஒரு மகான், இவருக்கு குருவாக இருந்து வேதாந்த ரகசியங்கள் அனைத்தையும் கற்றுக் கொடுக்க முன் வந்தார். அவர் பரமஹம்சருக்கு வேதாந்த ரகசியங்கள் அனைத்தையும் உபதேசித்தார். அவருடைய உபதேசப்படி மூன்று நாட்கள் அப்பியாசம் செய்து நிர்விகல்ப சமாதி நிலை அடையப் பெற்றார். தோதாப்புரி தான் நாற்பது வருடங்கள் கஷ்டப்பட்டு அடைந்த நிர்விகல்ப சமாதி நிலையை பரமஹம்சர் மூன்று நாட்களிலேயே பெற்றதைக் கண்டு ஆச்சர்யமடைந்தார். தோதாப்புரி ஆச்சர்யத்துடன், “பரமஹம்சரே, இனி நீ எனக்கு சீடனல்ல. எனக்கு குரு” என்று கூறி அவருடன் சில காலம் தங்கியிருந்தார். அப்போது இருவரும் தமக்குத் தெரிந்த விஷயங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொண்டனர். பின்னர் அவரிடமிருந்து தோதாப்புரி விடை பெற்றுச் சென்றார்.
தோதாப்புரி மகான் சென்ற பிறகு, பரமஹம்சர் ஆறு மாத காலம் நிர்விகல்ப சமாதி நிலையில் இருந்தார். அதனால், அவருக்குக் கடுமையான ரத்தக் கடுப்பு உண்டாயிற்று. அவரது உடல்நிலை குணமானதும், அவருடைய பக்தி நிலையில் மாற்றம் கண்டது.
சுவாமி விவேகானந்தர் சீடரானார்:
பரமஹம்சர் உபதேசங்களைக் கேட்க கல்கத்தாவின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் அவரைத் தேடி வந்தனர். அவரைத் தேடி வந்து தங்களைச் சீடர்களாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினர். இவர்களுள் நரேந்திரன் குறிப்பிடத்தக்கவர். கடவுளைக் காண வேண்டும் என்ற தேடல் இறுதியில் பரமஹம்சரின் சீடராக அவரை ஆக்கியது. பரமஹம்சரின் முக்கிய புகழ்பெற்ற சீடராக அவர் விளங்கினார். இந்த நரேந்திரன்தான் பின்னாளில், ஒரு மகானாக, விவேகானந்தராக உயர்ந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் சமாதிக்கு பிறகு, சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்ட ராமகிருஷ்ண மடங்கள், இன்றளவும் ஆன்மீக வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகின்றன.
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் ஆனது எப்படி:
விவேகானந்தரின் கேள்விகளும், சிறப்பான வாதங்களும் பரமஹம்சருக்கு மிகவும் பிடித்திருந்தன. இதனால் பரமஹம்சருக்கு மற்ற சீடர்களை விட, இளம் வயதுச் சீடரான விவேகானந்தர் மீது மிகுந்த பற்று இருந்தது. விவேகானந்தர் ஒரு முறை ராமன், கிருஷ்ணர் போன்ற கடவுளின் அவதாரங்கள் குறித்த தகவலைக் கேட்டுக் கொண்டிருந்த போது பரமஹம்சர், “ராமனாகவும், கிருஷ்ணனாகவும் வந்தவர் எவரோ, அவரே ராமகிருஷ்ணனாக வந்திருக்கிறான்!” என்று விவேகானந்தருக்குத் தமது அவதார ரகசியத்தை வெளிப்படுத்தினார். அதன் பிறகு ராமகிருஷ்ண பரமஹம்சர் என்று உலகம் முழுவதும் போற்றும் மகான் ஆனார்.
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் அமுத மொழிகள் புத்தகம் ஆனது:
மகான் ராமகிருஷ்ண பரமஹம்சர் உபதேசங்களைக் கேட்க வருவோரின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. அவர் தன்னைத் தேடி வருபவர்களுக்கு உபதேசம் செய்வதுடன், மற்ற நேரங்களில் சீடர்களுடன் ஆன்மீகம் குறித்து விவாதங்கள் புரிவார். அப்போது அவரை வந்து அடிக்கடி சந்தித்த மகேந்திரநாத் குப்தா என்பவர் தினமும் அவர் கூறும் கருத்துக்களையும், அவர் புரிந்த விவாதங்களையும் குறிப்பெடுத்து எழுதி வைத்துக் கொண்டார். இந்தக் குறிப்புகளே, பின்னாட்களில் The Gospel of Sri Ramakrishna என்ற பெயரில் தொகுக்கப்பட்டது. இது தமிழில் “ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்” என்ற பெயரில் மூன்று பாகங்களாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சிந்தனைத் துளிகள்:
கர்மமார்க்கம், ஞானமார்க்கம், பக்திமார்க்கம் இப்படி எந்த வழியிலும் இறைவனை அடைய முடியும்.
இறைவன் ஒரு கற்பவிருட்சம். நாம் அதன் நிழலில் எப்பொழுதும் இருக்க வேண்டும்.
கடவுள் எல்லா மனிதர்கள் இடத்திலும் உள்ளார். ஆனால் எல்லா மனிதர்களும் கடவுள் இல்லை.
நீங்கள் பைத்தியமாய் இருங்கள். உலக சுகங்களுக்காக அல்ல, இறைவனின் அன்பு வேண்டி பைத்தியமாய் இருங்கள்.
கடவுள் தரிசனம் கிடைத்தவருக்கு நல்லது, கெட்டது, உயர்ந்தது, தாழ்ந்தது என்ற பாகுபாடு இருக்காது.
கடுகளவு தற்பெருமை இருந்தாலும் கடவுளை உணர முடியாது.
நான் வாழும் வரை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.
அனைத்து மதங்களும் ஒன்றே என உணரவேண்டும்.
இல்லற வாழ்வில் இருந்தாலும் இறையருள் பெற விரும்புபவர்கள் அவ்வப்போது தனிமையை நாடிச் சென்று இறைவனை தொழ வேண்டும்.
உலக வாழ்வில் ஈடுபட்டாலும் இறைவனே நமக்கு வாழ்வளிப்பவர் என்னும் உள்ள உறுதியோடு வாழ வேண்டும்.
மக்களுள் பெரும்பாலானோர் புகழுக்காகவோ, புண்ணியத்தைத் தேடும் பொருட்டோ பரோபகாரம் செய்கின்றனர். அத்தகைய சேவைகள் சுய நலத்தை அடிப் படையாகக் கொண்டவை.
மனத்தூய்மையால் மட்டுமே பிரபஞ்ச உண்மையினை உணர முடியும்
அறியாமையின் காரணமாகத்தான் அகம்பாவம் மனிதனுக்கு ஏற்படுகின்றது. அந்த அகம்பாவம் மனிதனை அழிக்கின்றது.
உண்மையாய் எளிமையாய் இறைவனிடம் வேண்டினாலே போதும். இறைவனுக்கு கேட்கும்.
இரவில் தெரியும் நட்சத்திரங்கள் பகலில் தெரிவதில்லை என்பதால் நட்சத்திரங்கள் இல்லை என்று சொல்ல முடியாது. ஆகவே மனிதா உனக்குக் கடவுள் தெரியவில்லை என்பதால் கடவுள் இல்லை என்று சொல்லாதே.
சிலருடைய உள்ளம் கல்சுவர் போல உறுதியாக இருக்கும், அதில் ஆணி அடித்தால் அது வளைந்து போகும். அதுபோல எவ்வளவு முயன்றாலும் அவர்களுக்கு ஆன்மீக விஷயம் எதுவும் உள்ளே போகாது.
ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் கூறிய கதை:
ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் உபதேசங்கள் மிகவும் எளிமையாக இருக்கும். சில சமயம் உபதேசங்களைப் புரிந்து கொள்ளும் விதமாக சின்னச் சின்னக் கதைகளையும் அவர் கூறுவதுண்டு. இப்படி ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதைகள் நிறைய இருக்கின்றன. இந்தக் கதைகள் அனைத்தும் எல்லோரும் புரிந்து கொள்ளும்படி எளிமையானவை. ஆனால் அந்தக் கதைகளில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் சிறப்பானது. இறைவன் மீது நம் நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்க, பகவான் ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை இது:
ஒரு கிராமத்தில் ஏழைப்பெண் ஒருத்திக்கு சொந்தமாக ஒரு பசுமாடு இருந்தது. அவள் அந்தப் பசுமாட்டிலிருந்து பாலைக் கறந்து, ஊர் மக்களுக்கு விற்று,அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்தினாள். கிராமத்தின் எல்லையில் உள்ள ஆற்றின் மறுகரையில் ஒரு கோயில் அர்ச்சகர் வாழ்ந்து வந்தார். தினமும் அபிஷேகத்திற்கு ஆற்றின் அக்கரையில் உள்ள பெண்ணிடம் அவர் பால் வாங்குவார். சில நாட்களாக குறித்த நேரத்தில் அந்தப் பெண்மணியால் பால் கொண்டு வர இயலவில்லை. இதனால் கோபம் கொண்ட அர்ச்சகர், ஒரு நாள் அவளைக் கூப்பிட்டு, உன்னுடைய கால தாமத்தால் என்னால் உரிய நேரத்தில் பூஜையை முடிக்க முடியவில்லை’’ என்று கோபமாக கடிந்துகொண்டார். “மன்னிக்கவேண்டும் சுவாமி, நான் வீட்டிலிருந்து முன்னதாகவே கிளம்பிவிடுகிறேன். ஆனால். ஆற்றைக் கடந்து வர வேண்டும் என்பதால், கரையில் படகுக்காக வெகுநேரம் காத்திருக்கவேண்டியிருக்கிறது”என்றாள் அவனவன் பிறவிப் பெருங்கடலையே `கடவுள்’ பெயரைச் சொல்லிக்கொண்டே கடந்துவிடுகிறான். நீ என்னடாவென்றால், சிறிய ஆற்றைக் கடப்பதற்கெல்லாம் படகுக்காக நம்பிக்கொண்டிருக்கிறாயே! இனிமேல் சரியான நேரத்துக்கு வரவில்லை என்றால், எனக்கு நீ பால் கொண்டுவர வேண்டாம்" என்று கேலியாக சொன்னார். ஆனால், அதை, அந்த பெண்ணால் புரிந்துக்கொள்ள முடியவில்லை 'இந்த ஊரிலேயே அதிகமாக பால் வாங்குபவர் இவர் ஒருவர்தான். இவரும் இப்படிச் சொல்லிவிட்டாரே... என்ன செய்வது?' என வருத்தத்துடன் கிளம்பிச் சென்றாள். அதன் பிறகு, அவள் குறித்த நேரத்துக்குள் வந்து விட்டாள். அந்த அர்ச்சகருக்குஆச்சர்யமாக இருந்தது. ஒரு நாள்"இப்போதெல்லாம் சரியான நேரத்துக்குள் வந்துவிடுகிறாயே... எப்படியம்மா?" என்று கேட்டார். "அது ஒன்றும் பெரிய மந்திரம் இல்லை, சுவாமி. நீங்கள் சொன்னது போலத்தான் செய்கிறேன்."
"என்னது... நான் சொன்னபடியா! ஆற்றின் தண்ணீர் மேல் நடந்தா வந்தாய்..!" என்றார் கேலியுடன்.
"ஆமாம் சுவாமி! அப்படித்தான் நடந்துவந்தேன்" என்றாள் அந்தப் பெண் உறுதியான குரலில். `இது எப்படிச் சாத்தியம்?’ அர்ச்சகரின் மனதுக்குள் சந்தேகம் இருந்தாலும், அதை அவர் வெளிகாட்டிக் கொள்ளவில்லை. ''எங்கே... என் கண்முன்னே நடந்துகாட்டுவாயா?" என்று கேட்டார்.
"நீ முன்னே செல், நான் உன்னைப் பின்தொடர்கிறேன்" என்றார் அர்ச்சகர். உடனே அந்தப் பெண்மணி, கை இரண்டையும் கூப்பியபடி, கடவுளின் பெயரைக் கூறியபடியே தண்ணீரில் நடக்க ஆரம்பித்தாள். கண்முன்னே நடந்ததை நம்ப முடியாமல் பார்த்த அர்ச்சகருக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி... அதை வெளிக்காட்ட முடியாமல், நீண்ட தயக்கத்துக்குப் பிறகு அவளைப் பின்தொடர்ந்தார்.
`ஆற்றின் ஆழம் எவ்வளவு இருக்கும் என்று தெரியலையே’ என்று பயத்துடன் நினைத்தபடியே கடவுளின் பெயரைக் கூறியபடி, இறங்க முயற்சித்தார். ஆனால் அவருக்கு ஓர் எண்ணம்....`தண்ணீரில் நடக்க முடியுமோ முடியாதோ... ஒருவேளை நீரில் விழவேண்டி இருந்தால், குறைந்த பட்சம் ஆடையாவது நனையாமல் இருக்கட்டுமே...’ என நினத்தவர் தன்னுடைய ஆடையைக் கைகளால் தூக்கிப் பிடித்துக்கொண்டு ஆற்றில் இறங்கினார். ஆனால், கால் தண்ணீருக்கு உள்ளே சென்றது. அர்ச்சகர் திடுக்கிட்டார். வேறு வழி தெரியாமல் திரும்பி, கரையேறினார். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பெண் திரும்பி அவர் இருக்கும் கரைக்கே வந்தாள்.
"என்னை மன்னித்துவிடம்மா! என்னால் உன்னைப் போல் நீரில் நடக்க முடியவில்லை. உண்மையாகவே நீ நீர் மேல் நடந்து சென்றது எப்படி சாத்தியமானது என்பதை எனக்குச் சொல்லேன்..." என்று கேட்டார்.
அந்தப் பெண் பணிவுடன், “சுவாமி…. உங்கள் உதடுகள் கடவுள் பெயரைச் உச்சரித்தாலும், உங்கள் கைகள் இரண்டும் உங்கள் உடைகள் நனையக் கூடாது என்பதற்காக தூக்கிப் பிடித்துக்கொண்டே இருந்தன. அதன் பிறகு நீங்கள் நீரில் இறங்கினீர்கள். கடவுள் மேல் உண்மையாகவே உங்களுக்கு நம்பிக்கை இருந்திருந்தால், அப்படிச் செய்திருக்க மாட்டீர்கள்" என்ற அந்தப் பெண் சற்றுத் தயங்கி சொன்னாள்...
``மேலும், ஆற்றின் ஆழத்தைப் பரீட்சித்து பார்ப்பது, அந்த ஆண்டவனையே ஆழம் பார்ப்பது போன்றது அல்லவா?” என்றாள்.
அந்தப் பெண் இதைச் சாதாரணமாகச் சொன்னாலும், அதை அந்த இறைவனே நேரில் வந்து சொன்னதுபோல இருந்தது அர்ச்சகருக்கு அவர் வெட்கித் தலைகுனிந்தார்.
பிரார்த்தனை என்பது அந்தப் பெண்ணின் மனநிலையைப் போலத்தான் இருக்கவேண்டும். அந்த அர்ச்சகரைப்போல இருக்கக் கூடாது என்பதுதான் ஸ்ரீராமகிருஷ்ணர் பரமஹம்சர் நமக்கு கூறும் அறிவுரை.
“எல்லாம் நாராயணன்தான்; எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். நல்லவர்களிடமும் அவர் இருக்கிறார்; கெட்டவர்களிடமும் அவர் இருக்கிறார். இருந்தாலும் தீயவர்களிடமிருந்து நாம் சற்று விலகியே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நமக்குத் துன்பம்தான் வரும்” என்று கூறியவர், அதை விளக்க கதை ஒன்றைச் சொல்ல ஆரம்பித்தார்.
ஒரு குருவினிடத்தில் சீடன் ஒருவன் இருந்தான். அந்தச் சீடரிடம் குரு “அனைத்தும் நாராயணன் செயல் தான், அதனை மறந்து விடாதே” என்று அடிக்கடி கூறிக் கொண்டிருப்பார். குருவின் வாக்கையே திருவாக்காக எடுத்துக் கொண்ட சீடன், அதனையே பின்பற்ற ஆரம்பித்தான். மண்புழுவிலிருந்து மனிதன் வரை அனைத்தையும் நாராயணனாகவே பார்க்க ஆரம்பித்தான்.
ஒரு முறை புதிய ஊர் ஒன்றுக்குச் சென்று கொண்டிருந்த அந்தச் சீடன் எதிரே யானை ஒன்று ஆவேசமாக வந்து கொண்டிருந்தது. அங்குள்ள மக்கள் “யானைக்கு மதம் பிடித்து விட்டது” ஓடிப்போய் உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்” என்று கூறினர். ஆனால் அந்தச் சீடனோ, “யானையிலும் நாராயணன்தான் இருக்கிறார். அவர் என்னைக் காப்பாற்றுவார் என்று கூறிக் கொண்டு நடந்து சென்றான். எதிரில் வந்த யானை பிளிறிக் கொண்டு ஓடி வந்து கொண்டிருந்தது. அதனைத் துரத்திக்கொண்டு வந்த அதன் பாகன், சீடனை விலகிச் செல்லுமாறு பலமுறை கூக்குரலிட்டான். ஆனால் சீடனோ, ’நாராயணன் என்னைக் கைவிட மாட்டான்’ என்று கூறி ஒதுங்காமல் நேர் எதிராக அப்படியே நின்று கொண்டிருந்தான். எதிரில் வந்து கொண்டிருந்த யானை, தன் துதிக்கையால் சீடனைத் தூக்கியது. தூர வீசி எறிந்தது. பலத்த காயங்களோடு சீடன் உயிர் பிழைத்தான். உடல் நலமான பின் தன் குருவிடம் சென்று, “எல்லாம் நாராயணன்தான், கடவுள் கைவிட மாட்டான் என்று கூறினீர்களே, எனக்கு ஏன் இப்படி ஆயிற்று? யானையில் இருந்த நாராயணன் ஏன் என்னைக் காப்பாற்றாமல் தண்டித்தார்?” என்று அழுகையுடனும் ஆத்திரத்துடனும் கேட்டான். அதற்கு குருநாதர், “யானையில் நாராயணன் இருந்தது உண்மைதான் ஆனால் அதற்கு முன் பாகன் வடிவத்தில் நாராயணன் உன்னை ஒதுங்கச் சொல்லி எச்சரித்தாரே, ஏன் நீஒதுங்கவில்லை?; அதனால் தான் இப்படி ஆனது” என்றார். சீடன் பதில் பேச முடியாமல் நகர்ந்தான்.
”ஆகவே தீயவர்களிடம் விலகி இருத்தலே நல்லது” என்று சொல்லிக் கதையை குருதேவர் முடித்தார்.
ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி:
தானறிந்த உண்மைகளை மக்களுக்கு எடுத்துரைத்தது மட்டுமல்லாமல், எப்படி பக்தி கொள்வது என்றும், அவற்றைத் தானும் பின்பற்றி அதன்படி வாழ்ந்துக்காட்டிய ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், கடைசி நாட்களில் அவரை தொண்டைப் புற்றுநோய் தாக்கியது. இருந்தாலும் தன்னைத் தேடி வருபவர்களுக்கும், தன் உபதேசங்களைக் கேட்க வருபவர்களுக்கும் தன்னுடைய பேச்சுதான் ஆறுதலாக இருக்கும் என்றார். தன்னைத் தேடி வரும் மக்களைத் திருப்பிப் போகச் சொல்ல அவருக்கு விருப்பமில்லை. தன் தொண்டை புண்ணாக இருந்த நிலையிலும், திரவ நிலையிலான உணவைக் கூட உட்கொள்ள முடியாத நிலையிலும் அவர் உபதேசத்தை நிறுத்தாமல் தொடர்ந்தார். பின்பு அவருடைய சீடர்கள் அவரை கல்கத்தாவின் அருகில் உள்ள காசிப்பூர் என்ற இடத்தில் தோட்டவீட்டில் வைத்து வைத்தியம், மற்றும் சேவை செய்தனர். ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், 1886 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 அன்று மகா சமாதி அடைந்தார். இவர் எந்த சமய வழிமுறையையும் உயர்த்திச் சொல்லாமல், மற்றவர்களின் ஆன்மிகக் கருத்துக்களை பற்றி குறை சொல்லாமல், அனைத்து சமயப் பிரிவினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில், அனைத்து சமயக் கருத்துக்களையும் ஒருங்கிணைக்கும் சமய சமரச வாழ்க்கை வாழ்ந்தவர். அவர் இந்த உலகை விட்டு மறைந்து விட்டாலும் அவரின் உபதேசங்களும், அவர் சொன்ன கதைகளும் இன்றும் சிந்திக்கக் கூடியதாக இருக்கின்றன. இன்று உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள், ஆத்மார்த்தமாக வணங்கும் மகானாக விளங்கிக் கொண்டிருக்கிறார்.
Comments
Post a Comment