மகான் ஶ்ரீபாம்பன் குமரகுருதாச சுவாமிகள்
மகான் ஶ்ரீபாம்பன் குமரகுருதாச சுவாமிகள்
சென்னையில் எண்ணற்ற மகான்கள் வாழ்ந்து, சென்னைக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள். அவர்களில் பாம்பன் குமரகுருதாச ஸ்வாமிகள் என்று அழைக்கப்படும் பாம்பன் ஸ்வாமிகளை அறியாதவர்களே இருக்க முடியாது. எளிமையாக வாழ்ந்து, எண்ணற்ற பக்தர்களை தன் அருளால் ஆட்கொண்டவர். முருகப் பெருமானை தன் வாழ்நாளில் பல முறை தரிசிக்கும் பேறு பெற்றவர். சென்னை திருவான்மியூரில் இவர் சமாதி இருந்தாலும், இவருக்கு நாட்டின் பல இடங்களிலும் திருக்கோயில்கள் உள்ளன. இன்றும் வெளிநாடுகளில் உள்ள இவரது பக்தர்கள், விசேஷ தினங்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். பாம்பன் சுவாமிகளை நம்பிக்கையுடன் சரணடைந்தவர்களை இன்றும் அவர் அருள்பாலித்து வருகிறார்.
பாம்பன் ஸ்வாமிகள் பாடிய பாடல்கள் ஏராளம். ஸ்வாமிகளது வழிபாடு எங்கே நடந்தாலும் அவரது பிரபலமான குமாரஸ்தவம், பஞ்சாமிர்த வண்ணம் முதலான பாடல்கள் பாடப்படும்.
“உபய அருணகிரிநாதர்”
பாம்பன் சுவாமிகள் 1848 ஆம் ஆண்டு சாத்தப்பப் பிள்ளை, செங்கமலம் தம்பதியருக்கு மகனாக இராமேசுவரத்தை அடுத்த பாம்பனில் பிறந்தார். இவரது இயற்பெயர் அப்பாவு என்பதாகும். இவர் உள்ளூர் கிருஸ்துவப் பள்ளியில் பயின்றார். ஆசிரியர் முனியாண்டிப் பிள்ளை என்பவரிடம் தமிழினைக் கற்றார். ஆங்கிலத்திலும், தமிழிலும் நல்ல புலமைப் பெற்றார். ஒரு நாள் அப்பாவு தன் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தார். அவரைக் கடந்து சென்ற ஒரு ஜோதிடர் அப்பாவுவின் முக தேஜஸைப் பார்த்து அவரை அருகில் அழைத்து அவரைப்பற்றி விசாரித்தார். அப்பாவுவின் கையைப் பற்றி அவரது ரேகைகளையும் ஆராய்ந்தார். ஜோதிடர் முகத்தில் ஆச்சர்யம் மேலிட்டது. “அப்பாவு… நீ பிற்காலத்தில் மாபெரும் மகானாக புகழ் பெற்று விளங்குவாய்..” என்று வாழ்த்திவிட்டு சென்றார். சிறுவயதில் இவருக்கு மிகவும் பிடித்தது கந்த சஷ்டி கவசமாகும். இதுவே இவர் பின்னாளில் சண்முக கவசம் இயற்ற தூண்டுதலாக இருந்தது.
அவருடைய பதிமூன்றாம் வயதில் அவர் கனவில் வந்த ஒருவர் , முருகப்பெருமான் மீது பாடல்களை இயற்றுமாறு கூற, அருணகிரிநாதரை ஞானகுருவாகக் கொண்டு 'கங்கையைச் சடையில் பதித்து' என்று ஆரம்பிக்கும் பாடலை முதன்முதலாகப் பாடினார். அருணகிரிநாதரை ஞானகுருவாகக் கொண்ட இவர் பின்னாளில் ’உபய அருணகிரிநாதர்’ என்ற பெயரும் பெற்றார்
சேது மாதவ ஐயர் என்பவர் அப்பாவுவிற்கு முருகக் கடவுள் மீது இருந்தப் பக்தியைப் புரிந்து கொண்டு. அவருக்கு ராமேஸ்வரத்தில் இருந்த அக்னி தீர்த்தம் என்ற இடத்தில் ஆறு அட்சரத்தில் மந்திரோபசேதம் செய்து வைத்தார். அதிலிருந்து சமஸ்கிருதத்திலும் நற்புலமை பெற்றார்.
முருகனே நேரில் வந்து குழந்தையைக் காப்பாற்றினார்:
இளமைப் பருவத்திலேயே தெய்வீக வாழ்வை விரும்பி ஏற்ற அப்பாவுவிற்கு அவருடைய பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்து விட விரும்பினர்கள். 1878ஆம் ஆண்டு வைகாசித்திங்களில் இராமநாதபுரத்தில் மதுரையைச் சேர்ந்த சின்னக் கண்ணு பிள்ளை குமாரத்தியான காளிமுத்தமாளை திருமணம் செய்துவித்தனர். பின் இவர்களுக்கு முருகையபிள்ளை, சிவஞானாம்பாள், குமரகுருதாச பிள்ளை என மூன்று குழந்தைகள் பிறந்தனர். திருமணம் ஆனாலும் கூட பாம்பன் ஸ்வாமிகள், பூஜைகள் போன்றவற்றை தொடர்ந்து செய்து கொண்டு ஒரு துறவி போலவே வாழ்ந்து வந்தார் .
ஒரு நாள் பாம்பன் ஸ்வாமிகளின் மகள் சிவஞானாம்பாள் தாங்கமுடியாத வயிற்றுவலியால் அழுதுகொண்டேயிருந்தாள். வைத்தியரிடம் போகலாம் என்று மனைவி சொல்ல, அதற்கு அவர் மறுத்து குழந்தை குணமடைய வேண்டுமென முருகனைப் பிரார்திக்கும்படிக் கூறிவிட்டார். பின்பு தானும் முருகனிடம் பிரார்த்தனை செய்தார். குழந்தை நன்றாக உறங்குவதைக் கண்ட ஸ்வாமிகள் தன் மனைவியிடம் அதுபற்றி கேட்க “அவள் தான் முருகனை பிரார்த்தனை செய்த பின் ஒரு வயதானவர் வீட்டிற்கு வந்து குழந்தையை பார்த்து நெற்றியில் விபூதியை இட்டு விட்டுச் சென்றதாகக் கூறினாள்” அதன்பின் குழந்தையும் பூரண குணம் அடைந்தது. முருகப்பெருமானே நேரில் வந்திருந்துத் தன் குழந்தையைக் காப்பாற்றி இருக்கின்றார் என்பதை ஸ்வாமிகள் உணர்ந்தார்.
ஶ்ரீபாம்பன் ஸ்வாமிகளின் துறவறம்:
1894-ம் ஆண்டு ராமநாதபுரம் அருகிலுள்ள பிரப்பன்வலசை என்ற ஊருக்கு வந்து, அங்குள்ள மயானத்தில் ஒரு ஆள் அமரும் அளவிற்கு சதுர குழி வெட்டச்செய்து சுற்றிலும் முள்வேலி அமைத்து அதன் மேலே கூரை எழுப்பினார். அதனுள் அமர்ந்து முப்பத்தைந்து நாட்கள் அருந்தவமிருந்த நிலையில் சித்ரா பௌர்ணமியான அன்று முருகப்பெருமான் காட்சி கொடுத்து உபதேசம் அளித்தார். அன்று முதல் அவர் பௌர்ணமி வழிபாட்டைத் தொடங்கினார். பின் துறவறம் மேற்கொண்டு சொந்தங்களையும் சுகங்களையும் துறந்தார். அங்கே இப்போது பாம்பன் ஸ்வாமிகளின் நினைவாலயமும் உள்ளது. இதையடுத்து, ராமநாதபுரம், உத்தரகோச மங்கை, மதுரை, திருச்சி, வயலூர், விராலிமலை, திருவானைக்கோவில், திருவண்ணாமலை, திருக் காளத்தி, திருத்தணி, காஞ்சிபுரம், கண்டியூர், திருவையாறு, திருப்பூந்துருத்தி, திருமழப்பாடி, நாகப்பட்டினம், திருக்கழுக்குன்றம் உட்பட ஏராளமான திருத்தலங்களில் தெய்வங்களை வழிபட்டார். தமிழகம் மட்டுமின்றி பெஜவாடா, கோதாவரி, விசாகப்பட்டினம், பூரி ஜகநாத், கல்கத்தா, கயா என்று காசி வரை திருத்தல யாத்திரை மேற்கொண்டார். காசியில் குமரகுருபர ஸ்வாமிகள் மடத்தில் தங்கி அவரை வணங்கிவந்தார். அப்பொழுது அவர் வைத்திருந்த ஒரு வேட்டியும் காணாமல் போக, உடுத்த மறு ஆடையில்லாமல் தவித்தார். ஒரு பெரியவர் ஸ்வாமிகளிடம் வந்து, இரு காவி வேட்டிகளை தந்து “இது முருகன் கட்டளை” என்றார். அதுவரை வெள்ளை வேட்டி உடுத்திவந்த சுவாமிகள் அன்றுமுதல் காவி உடைக்கு மாறி முழுத் துறவியானார்.
ஶ்ரீபாம்பன் ஸ்வாமிகளின் அற்புதங்கள்:
ஒருமுறை சஷ்டி பூஜையில் அவர் கலந்து கொண்ட பொழுது அங்கிருந்தவர்கள் நூறு பேர்கள் சாப்பிடும் அளவில் மட்டுமே உணவு தயாரித்து இருந்தனர். சுமார் நானூறு பேருக்கு மேல் வந்திருந்த பக்தர்களுக்கு செய்திருந்த உணவு பற்றாமல் போய் சாம்பார் , ரசம் கறிகாய் போன்றவற்றை செய்ய வேண்டியதாயிற்று , ஆனால் ஸ்வாமிகளின் அருளினால் சாதம் மட்டும் எடுக்க எடுக்க வந்து கொண்டே இருந்தது இது போன்ற ஸ்வாமிகளின் அற்புதங்கள் பல உண்டு.
சென்னைக்கு(மெட்ராஸ்) வந்த பாம்பன் ஸ்வாமிகள்:
ஒரு நாள் பாம்பன் ஸ்வாமிகள் கனவில் தோன்றிய முருகப்பெருமான் அவரை சென்னைக்குச் (மெட்ராஸ்)செல்லுமாறு கூறினார் . அங்கு அவருக்கு ஒருவரையும் தெரியாதிருந்தாலும் முருகன் சொல்லிற்கிணங்க இரயில் மூலம் சென்னைக்குச் சென்றார். எக்மோர் ஸ்டேஷனில் இறங்கியவுடன் ஒருவர் வந்து தன் குதிரை வண்டியில் அமர்ந்து கொள்ளுமாறு அழைத்தார். ஒரு வார்த்தைக் கூட கூறாமல் குதிரை வண்டியில் அமர்ந்தவரை செயின்ட் ஜார்ஜ் டவுனில் , 41 ஆம் எண் , வைத்தியநாத முதலித் தெருவில் , ஒரு வீட்டில் அவரை விட்டுவிட்டுச் செல்ல உள்ளிருந்து வெளிவந்த பங்காரு அம்மாள் என்ற மூதாட்டி அவரை எதிர்பார்த்திருந்தது போல் அவரை வரவேற்றார். “முதல் நாள் இரவில் தன் கனவில் வந்த முருகன் மறு நாள் காலையில் ஒரு மகான் உனது வீட்டிற்கு வருவார்” என்றும் அவருக்கு தங்க இடமும் உணவும் தரும்படிச் சொன்னதினால் அவரை அங்கு அழைத்து வர தான் ஏற்பாடு செய்ததாக கூறினார். அவரும் அதை ஏற்று சில நாட்கள் அங்கு தங்கி தினமும் முருகப்பெருமானை வழிபட்டுக் கொண்டிருந்தார்.
"இரை தேடுவதோடு இறையைத் தேடு"
அருணகிரிநாதரைப்போல பல திருத்தலங்கள் சென்று, முருகப்பெருமானை வழிபட்டு மனமுருகிப் பாடினார். அவரது தமிழால் மயங்கிய முருகப்பெருமான் பலமுறை நேரிலும் கனவிலும் காட்சி தந்து, பல திருவிளையாடல்களை நடத்தினார். "இரை தேடுவதோடு இறையைத் தேடு" என்று சுவாமிகள் மக்களுக்கு அறிவுறுத்தினார். முருகன் ஒருவனே முழுமுதற் கடவுள் என்று உள்ளம் உருகி தனது வாழ்நாளில் முருகனின் வழிபாட்டு ஆறாயிரத்து அறுநூற்று அறுபத்தாறு பாடல்களையும் முப்பத்திரண்டு அருளுரை தொகுப்பினையும் முருகப்பெருமானின் புகழ் மணக்க இயற்றி அருளியுள்ளார். இவரியற்றிய சண்முக கவசம் மிகவும் புகழ்பெற்றது. இதனை உள்ளத் தூய்மையுடன் படிப்பவர்கள் உடற்பிணியில் இருந்தும், துன்பங்களிலிருந்தும் விடுபடுவர்.
வேலின் மகத்துவம்:
வயதான காரணத்தால் ஸ்வாமிகள் சென்னையிலேயே (மெட்ராஸ்)தங்கியிருந்தார். 1923-ஆம் வருடம் டிசம்பர் மாதம் 27-ஆம் தேதி அன்று சென்னை தம்பு செட்டி வீதியில் சென்று கொண்டிருந்த சுவாமிகள் மீது, குதிரை வண்டிச் சக்கரம் இடது கணைக்கால் மீது ஏறியதால் கணுக்கால் எலும்பு முறிந்து சுவாமிகள் பொதுமருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து நடந்த போது பாம்பன் சுவாமிகளுக்கு 73 வயது. ஆங்கிலேய மருத்துவர்களால் குணமடைவது கடினம் என்று கூறி கைவிடப்பட்டார். சுவாமிகள் விரைவில் நலம் பெற வேண்டி, அவரின் சீடரான சின்னசாமி ஜோதிடர் தனது இல்லத்தில் இருந்தபடியே தினமும் சண்முக கவச பாராயணம் செய்தார்.சுவாமிகளின் முறிந்த காலின் பகுதியை இரு வேல்கள் தாங்கி நின்று இணைப்பது போன்ற ஒரு காட்சியை கனவில் கண்டார். பெரிதும் மகிழ்ந்தார்.
1924, ஜனவரி 6-ம் நாள் இரவில் மயில் வாகனத்தில் தோன்றிய சண்முகக் கடவுள் ‘15 நாளில் குணப்படுத்துவேன்’ என்று பாம்பன் ஸ்வாமிகளிடம் கூறினார். மருத்துவர்களின் கணிப்பையும் மீறி, முருகப் பெருமானின் அருளால் தான் நலம் பெற்று விடுவோம் என்று பூரணமாக நம்பினார் சுவாமிகள். அவரது நம்பிக்கை வீண்போகவில்லை. அவ்வாறே ஸ்வாமிகளின் கால் எலும்புகளைச் சேர்த்து முருகன் குணப்படுத்தினார். சில நாட்கள் கழித்து, எக்ஸ்-ரே எடுத்து ஸ்வாமிகளைப் பரிசோதித்த மருத்துவர்கள் வியந்து போனார்கள். முறிந்திருந்த அவரது இடது கணுக்கால் எலும்புகள் ஒன்று சேர்ந்திருந்தன. ''எங்களது கணிப்பையும் மீறி இந்த நற்செயல் நடந்துள்ளது. ஸ்வாமிகள் பழைய பொலிவுடன் மீண்டிருப்பது அதிசயமே'' என்று ஆச்சரியத்துடன் தெரிவித்தனர்.
முருகன் காட்சியளித்த அந்த நாள் இன்றும் ‘மயூர வாகன சேவனம் விழா’ என மார்கழி மாத வளர்பிறை பிரதமை நாளில் கொண்டாடப்படுகிறது. இன்றும் சென்னை பொது மருத்துவமனையின் (ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை) மன்றோ வார்டில் பாம்பன் ஸ்வாமிகளின் திருவுருவப்படம் மாட்டப்பட்டு நோயாளிகளால் வழிபடப்படுகிறது.
பாம்பன் ஸ்வாமிகளின் மகா சமாதி:
பாம்பன் ஸ்வாமிகள் ஞானியானதால் முருகபெருமானை தான் அடையும் காலம் நெருங்குவதை உணர்ந்தார். முருகப்பெருமானைத் துதித்து 'குமாரஸ்தவம்' பாடியபடியே. 30.5.1929 வைகாசி தேய்பிறை சஷ்டி திதி,அவிட்ட நட்சத்திரத்தில் வியாழக்கிழமை காலை ஏழேகால் மணிக்குச்
ஸ்வாமிகள் குக சாயுச்சிய நிலையில் சமாதி நிலை அடைந்தார். பின்பு அவர் ஏற்கெனவே உபதேசித்த படி முருகப்பெருமானின் பாடல்களைப் பாடியபடியே ஸ்வாமிகளின் இறுதி யாத்திரை முறைகளைச் செய்தார்கள். அடுத்த நாள் 1929-ம் ஆண்டு மே 31 அன்று அலங்கரிக்கப்பட்ட புஷ்ப விமானத்தில் பாம்பன் ஸ்வாமிகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டார். பின்பு வங்கக் கடலோரம் சென்னை, திருவான்மியூரில் ஸ்வாமிகளின் திருவுடல் அடக்கம் செய்யப்பட்டு, மகா சமாதி அமைக்கப்பட்டது.
ஸ்ரீபாம்பன் ஸ்வாமிகள் கோயில்:
திருவான்மியூர் பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவிலிருக்கும் ஸ்ரீபாம்பன் ஸ்வாமிகளின் சமாதி இன்று ஒரு கோயிலாக விளங்குகிறது. இந்த கோயில் வளாகத்தில்
ஸ்ரீ முருகன் சந்நிதியும் உள்ளது. மற்றும் ஸ்ரீபாம்பன் ஸ்வாமிகள் சீடர் சின்னசாமி ஜோதிடர் சமாதியும் இருக்கிறது. கோயிலில் ஏராளமான மரங்கள் மற்றும் தாவரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. இங்கு ஒரு பெரிய தியான மண்டபம் உள்ளது. அங்கு ஸ்ரீபாம்பன் ஸ்வாமிகளின் மிகப் பெரிய புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. இது தியானம் செய்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. இங்கு பௌர்ணமி வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு பௌர்ணமியிலும் ஸ்வாமிகளின் சமாதியில் விசேஷ பூஜைகள் நள்ளிரவு வரை நடைபெறுகிறது. அன்று வரும் பக்தர்களின் கூட்டம் எண்ணிலடங்காதது. இதில் கலந்துகொள்பவர்கள் அனைத்து வியாதிகளிலிருந்தும் குணமடைவார்கள் என்று நம்பப்படுகிறது.
`இங்கு வந்து முருகப்பெருமானை வழிபடும் பக்தர்களை பாம்பன் ஸ்வாமிகள் கைவிடுவதே இல்லை’ என அவர் அருளினை பெற்ற பக்தர்கள் மெய்சிலிர்க்கக் கூறுகிறார்கள்.
நாமும் ஸ்ரீபாம்பன் ஸ்வாமிகளின் சமாதியைத் தரிசித்து, ஸ்வாமிகளின் அருளுடன் முருகப்பெருமானின் பேரருளையும் பெறுவோம்.
கோயில் திறக்கும் நேரம்
இந்த கோயில் காலை 06.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை மற்றும் மாலை 03.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை திறந்திருக்கும்.
Comments
Post a Comment