மகான் தங்கக்கை ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்.
மகான் தங்கக்கை ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை என்றவுடன் கார்த்திகை தீபமும், அருணகிரிநாதரும் நினைவுக்கு வரும், அடுத்து எல்லோரும் மனதிலும் நிலைத்து இருப்பது மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்.
ஆதிசங்கரர், காஞ்சிபுரத்தில் காமகோடி பீடத்தை அமைத்து, காமாட்சி அம்மனை முறைப்படி வழிபாடு செய்ய சில பக்தர்களை ஏற்பாடு செய்தார். அனைத்து வேத சாஸ்திரங்களில் அறிந்த இவர்கள் காமகோடி வம்சம் என அழைக்கப்பட்டனர். இந்த வம்சத்தை சேர்ந்த வரதராஜன்-மரகதம்பாள் தம்பதியினருக்கு 1870 ஜனவரி 22ம் நாள் உத்திரமேரூர் அருகே வழூர் கிராமத்தில் சேஷாத்ரி சுவாமிகள் பிறந்தார். இவர் பிறந்தது சனிக்கிழமை, ஹஸ்த நட்சத்திரமாகும். இவரது இயற்பெயர் சேஷாத்ரி காமகோடி சாஸ்திரி.
குழந்தை சேஷாத்ரிக்கு தங்கக்கை பெயர் வர காரணம்:
சேஷாத்ரி சுவாமிகள் குழந்தையாக இருந்த போது தனது அன்னையுடன் வைகாசி உற்சவ நேரத்தில் காஞ்சி வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு செல்லும் வழியில் பலவிதமான கடைகள் போட்டு ஊரே கொண்டாட்டமாக இருந்தது. அப்போது, ஒரு பொம்மை வியாபாரி, கிருஷ்ணர் பொம்மைகளை வைத்து விற்றுக் கொண்டிருந்தான். கிருஷ்ணர் பொம்மை பார்த்த குழந்தை சேஷாத்ரி தனக்கும் ஒரு பொம்மை வேண்டும் என கேட்க, அவரது தாய்க்கு பொம்மை வாங்க விருப்பமின்றி, குழந்தை அழ அழ, வேகமாக நடந்தாள். இதைக் கண்ட பொம்மைக் கடைகாரர் "அம்மா, குழந்தையை அழ விடாதீர்கள், ஆசையாக கேட்கிறது, எனது முதல் பொம்மைக்கு காசு வேண்டாம், ஒரு பொம்மையை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கூற, குழந்தையான சேஷாத்ரி, ஆர்வமாக, ஒரு பொம்மையைத் தானே எடுத்துக் கொண்டார். மறுநாள் காலை, அன்னையுடன் கோவிலுக்கு செல்லும்போது, அந்த வியாபாரி, தாயின் காலில் விழுந்தான். அம்மா, திருவிழா நாட்களில், நூறு பொம்மை விற்பதே, கடினம், நேற்று உங்கள் குழந்தை கை பட்டதால் ஆயிரத்துக்கும் மேலான பொம்மைகள் விற்று விட்டன இன்னும் நிறையபேர் கேட்கிறார்கள் எனக்கு ஒன்றும் புரியவில்லை என்று கூறிக்கொண்டு குழந்தை சேஷாத்ரியின் கையைப் பிடித்து, கண்களில் ஒற்றிக்கொண்டு இது தங்கக்கை அம்மா தங்கக்கை என்று மகிழ்ச்சியுடன் கூத்தாடினர். இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு காஞ்சி நகரம் முழுவதும் பரவியதும் குழந்தை சேஷாத்ரியை தங்கக்கை சேஷாத்ரி என்று அழைக்க ஆரம்பித்து விட்டனர்.
சேஷாத்ரி ஓர் அவதாரபுருஷர்:
சேஷாத்ரி இளம் வயதிலேயே அனைத்து சாஸ்திரங்களையும் கற்றார். சேஷாத்ரியின் பதினான்கு வயதில் அவருடைய தகப்பனார் இறந்துவிட்டார். அவருக்கு பதினேழாவது வயதில் திருமண ஏற்பாடுகள் நடைபெற இருந்தபோது அவருடைய ஜாதகத்தினைப் பார்த்ததும் இவர் சன்னியாசியாக மாறி யோகியாகக் கூடியவர் என்றார்கள்.
ஜோதிடர்கள் கூறியது போல அவருடைய எண்ணங்களை அனைத்தும் ஆன்மிகத்திலேயே லயித்திருந்தது. வடநாட்டிலிருந்து காஞ்சிபுரத்துக்கு வந்திருந்த பாலாஜி சுவாமிகள் என்பவரிடம் தீட்சை பெற்றார். அதன் பின்பு மிகக் கடுமையான யோக, தவப் பயிற்சிகளை மேற்கொண்டார். அன்ன ஆகாரம் இன்றி மயானத்தில் அமர்ந்து தவம் புரிய ஆரம்பித்தார். அவரை மயானத்துக்குப் போகாமல் தடுக்க இவரை வீட்டு அறையில் பூட்டிவைத்தார்கள். ஆனால், பூட்டிய அறையில் இருந்த அவர் காவேரிப்பாக்கத்தில் உள்ள ஒரு சிவன் கோயிலில் இருந்ததைக் கண்டு அனைவரும் ஆச்சரியமடைந்தனர். பல அற்புதங்களைச் சிறுவயதிலேயே செய்துகாட்டிய சேஷாத்ரி ஓர் அவதாரபுருஷர் என்பதை உறவினர் புரிந்து கொண்டனர்.
ஒரு நாள் அவருடைய தாயார் அருணாசல, அருணாசல, அருணாசல என மூன்று முறை கூறிவிட்டு உயர்துறந்தார். இதனால் திருவண்ணாமலை பற்றிய எண்ணங்கள் சேஷாத்திரி சுவாமிகள் மனதில் ஆழப்பதிந்தது.
திருவண்ணாமலைக்கு வந்தார் மகான் சேஷாத்ரி:
தனது 19வது வயதிலேயே எல்லாவற்றையும் துறந்து துறவியாகி, காஞ்சிபுரத்தை விட்டு புறப்பட்டு 1889ல் தை மாதத்து ரத சப்தமி திருநாளில் திருவண்ணாமலைக்கு வந்தார். இங்கு வந்த பின்னர் கோயிலில் பல இடங்களில் தியானம் செய்ய ஆரம்பித்தார். தினமும் மலையை சுற்றி கிரிவலம் வருவதும், அங்குள்ள துர்க்கையம்மன்கோயிலில் அதிக நேரம் தியானத்தில் இருப்பதும், பிறகு அவருடைய சித்துகளை அறிந்த மக்கள் அவரிடம் வந்தார்கள். நல்லவர்களுக்கு நல்வாக்கும், தீயவர்களை திருத்த கொடுஞ்சொற்களும் கூறினார். மனநிலை சரியில்லாதவர் போல வேகமாக சிரிப்பதும், ஓடுவதும், தன்னைப் பார்க்க வருகின்றவர்களை கட்டியணைத்தல், கன்னத்தில் அறைதல், போன்றவைகளை செய்வார்.
மகான் ஶ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் அற்புதங்கள் :
சேஷாத்திரி சுவாமிகள் திருவண்ணாமலையில் யில் வாழ்ந்த போது, அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். அதில் சில....
சுவாமிகள் திருவண்ணாமலையில் வாழ்ந்த காலத்தில் தம்மை நாடி வந்தவருக்கு திருவருளை வழங்கினார். அவர் ஆசிர்வதித்தாலோ, கட்டியணைத்தாலோ அவர்களது பாவம் நீங்கியது. பித்தரைப் போலவும், மனநிலை பாதித்தவரைப் போன்றும் காட்சியளித்தார். அவரின் பார்வையே, பல வியாதிகளை, பாதிப்புகளை பக்தர்களிடமிருந்து இருந்து விரட்டியது. உண்மையான பக்தியும், அன்பும் உள்ளவர்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவினார். வறுமையில் உழன்றவர்களை செல்வச் செழிப்பில், திளைக்க வைத்தார், அவர் ஒரு கடைக்குள் நுழைந்து பொருட்களை வீசி எறிந்தால் அன்று, அவர்களுக்கு நன்கு வியாபாரம் நடந்து அதிக இலாபம் கிடைக்கும். தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு அற்புதங்கள் புரிந்து பலரது கர்மவினைகள் நீங்கவும் மகான் காரணமாக இருந்தார்.
ஒரு நாள் இரவில், ஒரு உணவு விடுதிக்குள் நுழைந்து, தண்ணீர் நிரம்பிய ஒரு அண்டாவில், மைதா மாவு மூட்டையைப் பிரித்துக் கொட்டிவிட்டார். பதறிய ஊழியர்கள், ஒரு மூட்டை மாவை வீணடித்துவிட்டாரே, என்று இவரை விரட்டிவிட்டனர். சிறிது நேரத்தில், அங்கு வந்தவர் "நாங்கள் இங்கு சர்க்கஸ் நடத்த வந்திருக்கிறோம், எங்கள் குழுவினருக்கு சப்பாத்திகள் செய்து தர முடியுமா" என்று கேட்க, அப்போதுதான், ஊழியர்களுக்கு, சுவாமிகளின் செய்கைக்கு அர்த்தம் புரிந்து மெய்சிலிர்த்து போனார்கள்.
ஒரு அமாவாசை நாளன்று மாலை சுமார் 4 மணிக்கு சுவாமிகள் வெங்கடேச முதலியார் என்னும் அடியவரின் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு இருந்த அவரது துணைவியார் சுப்புலக்ஷ்மி அம்மாள் மகானை வலம் வந்து நமஸ்கரித்தார். உனக்கு ஒரு ஒரு வேடிக்கை காண்பிக்கிறேன் என்று சொன்ன சுவாமிகள், கொல்லைப் புறத்திலுள்ள மரங்கள் அருகில் சென்று சுவாமிகள் “பார் உனக்குப் பறவைகளைக் காட்டுகிறேன்” என்றார். வானத்தைப் பார்த்து ’வா வா’ என்று சொன்னார். அவ்வளவுதான். சற்று நேரத்தில் நூற்றுக்கணக்கான பறவைகள் அந்தத் தோட்டத்தில் வந்து இறங்கின. பலவித வண்ணங்களில், பல வித நிறங்களில் இருந்த அவை சுவாமிகளின் தோள் மீதும், தலை மீதும் அமர்ந்து குரலெழுப்பின. அவற்றைப் பார்க்கப் பெரும் கூட்டம் கூடி விட்டது. சுப்புலட்சுமி அம்மாள் மாலை வேளையில் இப்படிப் பறவைகளைக் கூப்பிடுகிறீர்களே. அவைகள் எல்லாம் குஞ்சுகளைப் பார்க்க கூட்டுக்குப் போக வேண்டாமா என்று கேட்கவே, அப்படியா இதே போகச் சொல்கிறேன் என்று சுவாமிகள் சொன்னார். தன் மேலே போட்டிருந்த துண்டில் இருந்து ஒரு நூலை எடுத்து வாயால் ஊதிப் போ என்றவுடன் அவ்வளவு பறவைகளும் பறந்தோடிப் போய்விட்டன.
ஒருமுறை, சவ ஊர்வலம் ஒன்றின் பின் சேஷாத்ரி சுவாமிகள் சென்று கொண்டிருந்தார். போகும் வழியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடந்து கொண்டிருந்தது. திடீரென்று மண்டபத்திற்குள் நுழைந்தார் சுவாமிகள். பலருக்கும் அதிர்ச்சியாய் இருந்தது. சாவு ஊர்வலத்தில் இருந்து, அதுவும் குளிக்காமல் தீட்டுடன் திருமண வீட்டிற்குள் நுழைந்து விட்டாரே என சிலர் கோபத்தில் திட்டினர். அவரைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் சுவாமிகள் வந்தது நிச்சயம் நல்லதற்குத் தான் என நினைத்தவாறு அமைதியாக இருந்தனர்.மகான் எதையும் பொருட்படுத்தவே இல்லை. நேரே சமையல் அறைக்குச் சென்றார். அங்கே ஒரு பெரிய அண்டாவில் சாம்பார் கொதித்துக் கொண்டிருந்தது. அதனை அப்படியே சாய்த்துக் கீழே கொட்டிவிட்டு, வேகமாக வெளியே ஓடிச் சென்று விட்டார். எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி, சிலர் திட்டிக் கொண்டே மகானைப் பிடிக்கப் பின்னால் வேகமாக ஓடினர். மகானின் இந்தச் செய்கைக்குக் காரணம் புரியாமல், கீழே கொட்டிக் கிடந்த சாம்பார் அருகில் சென்று பார்த்தனர். சாம்பாரில் ஒரு பெரிய நல்ல பாம்பு செத்துக் கிடந்தது. பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி போய் வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. மகான் முன்கூட்டியே இதனை அறிந்து சாம்பாரை யாரும் உண்டுவிடக் கூடாது, அதனால் ஆபத்தோ, உயிரிழப்போ நேர்ந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில்தான் அண்டாவைக் கவிழ்த்தார் என்பதறிந்து மகானை இரு கைகள் கூப்பி வணங்கினர்.
பொதுவாக மகான்கள் செய்யும் காரியங்கள் பலவற்றிற்கும் நமக்கு முதலில் அர்த்தம் புரியாது. பைத்தியக்காரத்தனமாகத் தான் அது நமக்குத் தோன்றும். ஆனால் பின்னர்தான் உண்மை விளங்கும்.
மகான் ஶ்ரீசேஷாத்ரி சுவாமிகள் முக்தி:
பல அற்புதங்கள் நிகழ்த்தி 40 ஆண்டுகள் அண்ணாமலையாரின் அருட்ஜோதியில் ஓர் அணுவாகவே இருந்த மகான் ஶ்ரீசேஷாத்ரி சுவாமிகள் 1929ம் ஆண்டு ஜனவரி மாதம் 4ம் நாள் வெள்ளிக்கிழமை ( மார்கழி மாதம் 21ம் நாள்) தனது 58ஆவது வயதில் ஹஸ்த நட்சத்திரத்தன்று முக்தி அடைந்தார். மகான் பிறக்கும்போது கிரகங்கள் இருந்த நிலையிலேயே முக்திநாளிலும் அபூர்வமாக அமைந்தன.
ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள், ஸ்தூல சரீரத்தில் இருந்து மறைந்த பின்னும், அவர் சமாதியில் சூட்சும ரூபமாக இருந்துகொண்டு, தன்னை வணங்க வரும் அடியார்களின் துயர்களை, இன்றும் களைந்து, அவர்களின் நல்வாழ்விற்கு அருள் ஒளியை ஏற்றி வருகிறார்.
சேஷாத்ரி சுவாமிகளின் சமாதி அடைந்த இடம் கிரிவலப்பாதையில் அக்னி லிங்கத்தை அடுத்து ஸ்ரீரமணாச்ரமத்துக்கு முன்னால் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் மகா சமாதி மற்றும் ஆசிரமம் உள்ளது.
நினைத்தாலே முக்தி தரும், அண்ணாமலையில் உறையும் மகான் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள், ஈசனின் தங்கக்கை மைந்தன் தானே...
Comments
Post a Comment