தைப்பூசத்திருநாள்...

தைப்பூசத் திருநாள்
ஆரூர் சுந்தரசேகர்.

    இருபத்தேழு நட்சத்திரங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். தை மாதத்தில் வரும் பௌர்ணமியும் பூச நட்சத்திரமும் கூடிய புண்ணிய நாள் தைப்பூசத் திருவிழாவாக இந்துக்களால் கொண்டாடப் படுகிறது. இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் தைப்பூசத் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.தைப்பூசத்தன்று முருக பக்தர்கள்,   ஆறுபடை வீடுகளில் ஏதேனும் ஒரு முருகன் கோயிலுக்கு காவடி எடுத்து  பாதயாத்திரையாகச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரீஷியஸ், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நார்வே என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் தைப்பூசத் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 
    "'பூசம் நாம் புகுதும் புனல் ஆடவே'' என்று தைப்பூசத் திருநாளன்று நீராடுவது பற்றி அப்பர் பாடியுள்ளார். 
"மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச் சரம மர்ந்தான்
நெய்ப்பூசு மொன்புழுக்க னேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்''
மயிலையில் தைப்பூச விழா கொண்டாடியது பற்றியும், அப்பொழுது அன்னதானம் செய்வது பற்றியும் ஞானசம்பந்தர் தேவாரத்தில், என்று குறிப்பிடுட்டுள்ளார்.

புராணங்களில் தைப்பூசம்:
    தைப்பூச திருநாளில் தான் உலகம் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன.
     பார்வதி தேவி பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியதும் தைப்பூசத்தன்று தான். அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
    சிவபெருமான் அன்னை பார்வதியுடன் தில்லையம்பலத்தில்  இணைந்து நடனம் ஆடியது தைப்பூசத்தன்று தான்.      
    பிரகஸ்பதி எனப்படும் குருபகவானின் நட்சத்திரம் பூசம் என்பதால், தைப்பூச தினத்தில் குரு வழிபாடு செய்வது சிறப்பான பலனை அளிக்கும்
   தாமிரபரணி நதிக்கரையில் தவமிருந்த காந்திமதி அம்மனுக்கு நெல்லையப்பராக சிவபெருமான் அருள்பாலித்த நாள் தைப்பூச நன்னாளே.
   வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் தை மாத பூச நட்சத்திரத்தன்று தான் ஜோதியானார். அவர் ஜோதியான வடலூரில் தைப்பூசத்தன்று இலட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.
  தைப்பூசத் திருநாளில்தான் திருஞானசம்பந்தர், இறந்து போன பூம்பாவையின் எலும்பிலிருந்து அவரை மீண்டும் உயிர்ப்பித்தார். இன்றும் தைப்பூசத்தன்று சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இந்த வைபவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தைப்பூச விரதம்:
   தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு சிவபெருமான் மற்றும் முருகப்பெருமானை மனமார துதித்து, தேவாரம், திருவாசகம், சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்றவற்றைப் பாராயணம் செய்யலாம். மாலையில் அருகிலுள்ள கோயிலுக்கு சென்று சிவபெருமானையும், முருகப்பெருமானையும் தரிசித்து வரலாம். இந்த நாளில் அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு விழாக்கள் நடத்தப்படுகின்றன.
   தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர். நாற்பத்தெட்டு நாட்கள் விரதம் இருந்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள். 

பழனி தைப்பூசத் திருவிழா:                                                            
    பழனி, முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். முருகப் பெருமான் தண்டாயுதபாணியாகக் காட்சி தரும் இந்த ஸ்தலத்தில் நடைபெறும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசம். இக்கோவிலில் தைப்பூச விழா பத்து நாட்கள் நடைபெறும். இந்த நாட்களில் தினமும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானையோடு தினமொரு வாகனங்களில் ரதவீதிகளில் உலா வருகின்றார். ஆறாம் நாளில் முக்கிய நிகழ்வாக முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. ஏழாம் நாள் விழாவில் வள்ளிதெய்வானை சமேத  முருகப்பெருமான் ரதவீதிகளில் தேரில் வலம் வருவார். பத்தாம் நாள் தெப்போற்சவம் நடைபெறுகிறது. தைப்பூசத்தன்று  பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் முருகனுக்கு விரதமிருந்து காவடி எடுத்து பாத யாத்திரையாக பழனிக்கு வந்து முருகனை தரிசனம் செய்து தங்கள் நேர்த்திக்கடன்களை பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.
காவடிகளில் பல வகை உண்டு. அவை

பால் காவடி
பன்னீர்க் காவடி
மச்சக் காவடி
சர்ப்பக் காவடி
மயில் காவடி
பறவை காவடி
தூக்குக் காவடி மற்றும்
அலகு குத்துதல் போன்றவை பல.

அன்றுமுதல் இன்றுவரை முருகப்பெருமானுக்கு காவடி:
    அகத்தியர் தன் சீடர்களில் ஒருவரான இடும்பனை அழைத்து கயிலை சென்று அங்கு மலையிலுள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனும் இரு மலைகளை தனது வழிபாட்டிற்காக கொண்டு வரும்படி கூறினார். அகத்தியரின் வேண்டுகோளுக்கிணங்க இடும்பனும் கயிலை சென்று இவ்விரு மலைகளையும் தன் தோளில் சுமந்து எடுத்துக்கொண்டு வந்தான். திருவாவினன்குடி(பழனி) வழியாக வந்த பொழுது இடும்பன் காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்தான். பின் புறப்படும்போது காவடியை தூக்க முடியாமல் திண்டாடினான். இவ்வளவு நேரம் சுமந்து வந்த காவடியை எப்படி காவடியைத் தூக்க முடியாமல் போனது என்று சுற்றிப் பார்க்கும்போது சிவகிரி மலை மேல் ஒரு சிறுவன் கோவணத்துடனும் கையில் தண்டத்துடனும் நிற்பதைக் கண்டு, கீழே இறங்கி வரும்படி கேட்டுக்கொண்டான். மலையை விட்டு இறங்காத சிறுவனை இடும்பன் தாக்க முயல, வேரற்ற மரம்போல் இடும்பன் கீழே விழுந்தான்.
 இதனையறிந்த அகத்தியர் முருகனிடம் சென்று வேண்ட, இடும்பனுக்கு அருள் புரிந்து, இடும்பனைத் தன்னுடைய காவல் தெய்வமாக்கிக் கொண்டார். தோளில் இருமலைகளை சுமந்து வந்த இடும்பன் போல சந்தனம், பால், மலர் போன்ற அபிஷேகப் பொருட்களை காவடியேந்தி தன் சன்னதிக்கு எடுத்து வருபவர்களுக்கு இன்றுவரை அருள் புரிந்து வருகின்றார்.

தொட்டது துலங்கும் தை பூசம்:
    தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் என்றொரு பழமொழி உண்டு.
எந்த ஒரு காரியத்தையும் நல்ல நாளில் செய்தால் அந்த காரியம் வெற்றி பெரும் என்பது உறுதி. அந்த நல்ல நாள் தைப்பூச திருநாளாகும். குழந்தைகளுக்கு காது குத்துதல், திருமணப் பேச்சுக்கள் ஆரம்பித்தல், ஒப்பந்தங்கள் செய்தல் போன்ற நற்செயல்கள் மேற் கொள்ளப்பெறுகின்றன. இத்தைப்பூசத்திருநாளிலே தொடங்கும் செயல்கள் தொய்வின்றி இனிதே நிறைவேறும் என்பது ஐதீகம்.
  தைப்பூச நாளின் போது முருகனை வழிபட்டால், கணவன்-மனைவி இடையே ஒற்றுமையும், குடும்பத்தில் செல்வமும் பெருகும். துயரங்கள் ஏதேனும் இருந்தால் விலகி விடும்.

  தைப்பூசத் திருநாளில் முருகப்பெருமானை வழிபட்டு நற்பலன்களைப் பெறுவோம்.

Comments

Popular posts from this blog

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..

உண்மை பக்தி எது ?

ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்...