மஞ்சளின் மகத்துவம் அறிவோம்..
மஞ்சளின் மகத்துவம் அறிவோம்...
மஞ்சள் நம்முடைய கலாசாரத்திலும், பாரம்பரிய மருத்துவத்திலும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மஞ்சள் உணவில் சுவை கூட்டவும், மற்றும் நிறத்துக்காகவும் பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு சித்தர்கள் சித்த மருத்துவத்தில் முக்கிய பொருளாக இதைப் பயன்படுத்தியுள்ளார்கள். மஞ்சள் என்பது மிகப்பெரிய கிருமிநாசினி. அதனால் தான் அது ஒரு மிகச்சிறந்த மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மஞ்சளை 'ஏழைகளின் குங்குமப்பூ’ என்பார்கள். விலை உயர்ந்த குங்குமப்பூ தரும் பலன்களைக் குறைந்த விலையில் கிடைக்கும் மஞ்சள் தருகிறது. எந்த ஒரு நல்ல காரியமும் மஞ்சளுடன் தான் தொடங்கும். எல்லா சுபகாரியங்களிலும் முதலில் முழுமுதற் கடவுளாக வணங்கப்பெறும் விநாயகப் பெருமானை மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து பூஜிக்கிறோம். மங்களகரமான பொருள் மஞ்சள் என்பதால், எல்லாவிதமான சுபமுகூர்த்தங்களுக்கும் மஞ்சள் உபயோகப்படுகிறது. மஞ்சளின் புனித தன்மையால், அவற்றை திருமணத்தில் கட்டப்படும், மங்கள நாண் எனப்படும் “தாலிக் கயிறில்" பூசப்படுகிறது.
மஞ்சள் செடியை வீட்டில் வளர்ப்பது மிகவும் விசேஷம். மஞ்சளில் ஸ்ரீ லட்சுமி வாசம் செய்கிறாள். அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகையின் போது, பொங்கல் பானையில், மஞ்சள் செடி மங்கல அடையாளமாக கட்டப்படுகிறது.
இந்தியாவில் மஞ்சள்:
மஞ்சளின் தாயகம் ஆசிய கண்டம், இவற்றில் உலக உற்பத்தியில் ஏறத்தாழ 78 சதவிகித மஞ்சள், இந்தியாவில்தான் உற்பத்தியாகிறது.
தமிழகத்தில் ஈரோடு மாவட்டமானது மஞ்சள் வேளாண்மைக்கும்,சந்தைக்கும் பெயர்பெற்றுள்ளது. சங்க காலத்தில் இருந்தே மஞ்சள் பயிரிடும் வழக்கம் தமிழகத்தில் இருந்து வந்ததாகவும், ஈரோடு மாவட்டத்தில் பெருவாரியாக பயிரிடப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது. இதனால் புவிசார் குறியீடு பதிவுத்துறை, ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு அந்தஸ்தை வழங்கி உள்ளது.
மஞ்சள் சுமார் 60 முதல் 90 செ.மீ. உயரம் வரை வளரும். பூமிக்கு அடியில் விளைகின்ற கிழங்கு வகைகளில் ஒன்று. மஞ்சள் நன்றாக வளர்வதற்கு, 20 முதல் 30 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலை தேவை. இதன் இலைகள் கொத்தாக இருக்கும். தண்டில் உள்ள முளையிலிருந்து கிளைத்து மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு.
அகத்தியரும் மஞ்சளும்:
அகத்தியரின் “அகத்தியர் குண பாடம்” என்ற நூலில் மஞ்சள் மருத்துவ குணங்களை பற்றி பின்வரும் பாடலில் எழுதியுள்ளார்.
“பொன்னிறமாம் மேனி புலானாற்ற மும்போகும்
மன்னு புருட வசியமாம் பின்னியெழும்
வாந்திபித்த தோடமையம் வாதம் போற் தீ பனமாங்
கூர்ந்தமஞ்ச ளின்கிழங்குக்கு
தலைவலிநீ ரேற்றஞ் சளையா மேகம்
உலைவுதரும் பீநசத்தி னுமே வலிசுரப்பு
விஞ்சு கடிவிட மும் வீறுவிர ணங்களும் போம்
மஞ்சள் கிழங்குக்கு மால்
மஞ்சட் குளிதனக்கு மாறாத்துர்க் கந்தமொடு
விஞ்சுமுக சாட்டியமும் விட்டகலுந் கொஞ்சலுறும்
ஐய மொழியு மடர்வியர்வுங் காணாது
வைய மதனில் வழுத்து
நீர்க்கடுப்பு காசமொடு நீடு விடாசுரமுந்
தீர்க்க நமைச்சல் வெப்புஞ் சேர்மலமும் பார்க்கு ண்மிக
அஞ்சியே யேகுமஞ்ச ளாம்வத்தி ரம்புனைந்தால்
வஞ்சியே நன்றாய் வழுத்து”
பொருள்:
மஞ்சளை உடலில் பூசிக் குளிப்பதன் மூலம் உடல் பொன்னிறம் பெறும்; கெட்ட வாடை நீங்கும்; வசீகரமான தோற்றம் உண்டாகும்; வாந்தி, வாய்வு, சூடு, திருஷ்டி தோஷம், தலைவலி, நீர் கோத்தல், மூக்கில் நீர்வடிதல், வீக்கம், வண்டுகடி, புண் ஆகியவை நீங்கும் தன்மை இந்த மஞ்சளுக்கு உண்டு என்று மருத்துவ குணங்களை அகத்தியர் விரிவாகவே சொல்லி இருக்கிறார்
மஞ்சளின் மருத்துவ பயன்கள்:
மஞ்சளில் வாலட்டைல் எண்ணெய் என்ற திரவம் இருக்கிறது. அதிலுள்ள குர்குமின் என்ற நிறமிதான் இதற்கான காரணம். இந்த குர்குமின் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதிலும், நோய் எதிர்ப்பு மண்டலத்தைச் சீரமைப்பதிலும் சிறந்து செயல்படுகிறது.
நம் உடலை நோயிலிருந்து காக்கும் திறன் மஞ்சளுக்கு உண்டு. மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது; தொற்று ஏற்படாமல் தடுக்கும் மாபெரும் சக்தி மஞ்சளுக்கு உண்டு.
மஞ்சள் கிழங்குகள் கார்ப்பு, கைப்புச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டவை. கல்லீரலைப் பலப்படுத்தும்; பசியை அதிகமாக்கும்; காய்ச்சலைத் தணிக்கும்; குடல் வாயுவை அகற்றும்; தாதுக்களைப் பலப்படுத்தும்;
வீக்கம், கட்டி ஆகியவற்றை கரைக்கும். உடலில் ஏதாவது பாகங்களில் வீக்கம் ஏற்பட்டால் மஞ்சள் தூளையும், வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து வீக்கத்தில் தடவினால் குணமாகிவிடும்.
மஞ்சள் தூளுடன், எலுமிச்சை சாறு கலந்து அம்மை நோயினால் ஏற்பட்ட தழும்புகளில் தடவினால் மறைந்துவிடும்.
மஞ்சள்தூளைப் போட்டுக் காய்ச்சிய நீரில் வாய் கொப்பளிக்க, தொண்டைப்புண் ஆறும். சளி பிரச்சனையும் சரியாகும்.
பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் தங்களுடைய உணவில் மஞ்சளைச் சற்றுக் கூடுதலாகச் சேர்த்துக்கொள்வது நன்று. கர்ப்பக்காலத்தில் வயிற்றில் ஏற்பட்ட தளர்ச்சி குறைந்து, வயிறு இறுக உதவுகிறது.
மஞ்சளை இடித்து தூளாக்கி, தூளை நீரில் இட்டு ஊற வைத்து, காய்ச்சி, வடிகட்டி குடித்தால் காய்ச்சல் மற்றும் நாக்குச் சுவையின்மை குணமாகும்.
நம் அன்றாட உணவில் ஏதாவதொரு வகையில் மஞ்சளைச் சேர்த்துக்கொண்டால், ரத்தச்சோகை பிரச்னையே ஏற்படாது
அழகு சாதனமாக மஞ்சள்:
வெகு காலமாகவே இந்தியப் பெண்கள் தங்கள் முகத்தையும், உடலையும் அழகுபடுத்திக் கொள்ள மஞ்சளைப் பயன்படுத்தி வருகின்றனர். முகத்தில் மாசு, மரு நீக்கி பொலிவு கொடுப்பதில் மஞ்சளுக்கு நிகர் வேறில்லை.மஞ்சள் இயற்கை சன்ஸ்கிரீனாக பயன்படுவதால், இந்திய பெண்கள் தோலுக்கு ஊட்டமளிக்கும் பொருளாக பயன் படுத்துகின்றனர். இது முகத்தில் ரோமங்கள் வளர்வதை தடுப்பதோடு, இயற்கை, “ப்ளீச்"சாக செயல்படுகிறது.
மஞ்சளின் வகைகள்:
மஞ்சள் கிழங்கில் மூன்று வகை அதிக பயன்பாட்டில் உள்ளது. முதல்வகை முகத்திற்குப் போடும் மஞ்சள் என்பார்கள். இதை முட்டா மஞ்சள் என்பார்கள். இது உருண்டையாக இருக்கும். இது முகத்தில் வளர்ந்துள்ள முடியை மேலும் வளராமல் தடுத்து மென்மையாக்குகிறது. சருமத்திற்கு ஒருவித மினுமினுப்பைத் தருகிறது. வசீகரத்தைத் தருகிறது. மிகவும் மங்களகரமானது.
இரண்டாம் வகை கஸ்தூரி மஞ்சள். வில்லை வில்லையாகத் தட்டையாக நிறைய வாசனையோடிருக்கும். ஆனால் இதனை சருமத்தில் பூசினால் நிறத்தைத் தராது. ஆனால் நல்ல மருத்துவ குணம் கொண்டது. இதனை வாசனைப் பொடிகளிலும், வாசனைத் தைலங்களிலும் இதைச் சேர்த்து வருகிறார்கள்.
மூன்றாவது வகை நீட்ட நீட்டமாக இருக்கும். இதற்கு விரளி மஞ்சள் என்ற பெயர். கறி மஞ்சள் என்றும் இதனை அழைப்பார்கள். இதைத்தான் நாம் சமையலுக்குப் பயன்படுத்துகிறோம்.
அழகு, ஆன்மிகம், ஆரோக்கியம் ஆகிய மகத்துவம் கொண்ட மஞ்சளை நாம் பயன்படுத்தி சிறப்பிப்போம்.
Comments
Post a Comment