சுந்தரருக்காக யாசகம் கேட்டு விருந்திட்ட திருக்கச்சூர் ஈசன்!!
சுந்தரருக்காக யாசகம் கேட்டு விருந்திட்ட திருக்கச்சூர் ஈசன்!!
சுந்தரர் சைவசமயத்தில் போற்றப்படும் சமயக்குரவர் நால்வரில் ஒருவராக, அறுபத்து மூன்று நாயன்மார்களில், முக்கியமானவராக கருதப்படுபவர்ஆவார்.
சுந்தரருக்கு சிறப்பு ஒன்று உண்டு. அதாவது, சிவபெருமானையே தன் தோழனாகக் கொண்டவர்.
சுந்தரர் திருநாவலூர் எனும் ஊரில் சடையனார் - இசைஞானியார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவர் ஆதி சைவர் எனும் குலத்தினை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் நம்பியாரூரன் என்பதாகும். நம்பியாரூரன் என்பதை ஆரூரன் என்று சுருக்கி அழைப்பர். இவருடைய அழகினைக் கண்டு சிவபெருமானே சுந்தரர் என்று அழைத்ததாக புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
இவர் சிவபெருமானை பற்றி பல ஸ்தலங்களுக்குச் சென்று பாடியுள்ளார்.
சுந்தரருக்காக தனது கையில் திருவோடு ஏந்தி யாசகம் வாங்கி சுந்தரரின் பசியைப் போக்கிய ஸ்தலம் திருக்கச்சூர்.
ஞானப்பசியை மட்டுமின்றி வயிற்றுப் பசியையும் போக்குகிறவர் சிவபெருமான். அதனால்தான் சிவபெருமானை படியளப்பவர் என்றும் அழைக்கப்படுகிறார்.
ஒருமுறை சுந்தரர் திருவாரூரில் இருந்து கிளம்பி வழியில் உள்ள எல்லா சிவ ஸ்தலங்களிலும் இருக்கும் சிவலிங்கங்களை தரிசித்தபடி வந்தார். திருக்கழுக்குன்றத்திலிருந்து காஞ்சிபுரம் சென்று கொண்டிருந்த சுந்தரர், வழியில் திருக்கச்சூர் என்ற ஸ்தலத்துக்கு வந்தார். சிவபெருமானை தரிசனம் செய்த மகிழ்ச்சியில் திளைத்தாலும், இந்த ஸ்தலத்துக்கு வந்தபோது உச்சி வேளை ஆகிவிட கடுமையான பசியால் தவித்தார். கோயிலுக்கு வெளியே உள்ள பதினாறுகால் மண்டபத்தில் சுந்தரர் பசியின் களைப்பால் படுத்திருந்தார். சுந்தரர் வந்திருக்கிறார் என்பதை அறிந்த ஈசன், வயதான அந்தணர் ரூபத்தில் அவரிடம் சென்றார். ‘ஏன் சோர்வாக இருக்கிறீர்கள்... என்ன வேணும்’ என்று கேட்டார். கிட்டத்தட்ட மயக்கத்தில் கண்களை லேசாகத் திறந்து பார்த்த சுந்தரர், “பசிக்கிறது என்றார்”... பசிக்கிறதா. ஆமாம் நீங்கள் யார்? என்று வயதான அந்தணர் கேட்டார். சுந்தரர் என்று தன்பெயரைச் சொன்னார். உடனே “சிவபெருமானைத் தெரிந்தவருக்கெல்லாம் உங்களைத் தெரிந்திருக்கும்” இங்கேயே இருங்கள். உணவுக்கு ஏற்பாடு செய்கிறேன் என்றார்.
சுந்தரரின் திருவோட்டை எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று யாசகம் பெற்றார். ஈசன் தான் கொண்டுவந்த உணவை சுந்தரருக்கு விருந்தாக அளித்தார். சுந்தரரும் உணவினை உண்டபின், கண்கள் பிரகாசமாகி, உடம்பு தெம்பாகியது. “இந்த வயதான காலத்தில், எனக்கு உதவிய நீங்கள் யார்?” என்று கேட்டார். அந்தப் பெரியவர் சுந்தரரையே உற்றுப் பார்த்தார். ‘உங்கள் தோழனை உங்களுக்கே தெரியவில்லையே சுந்தரா’ என்று சொல்லியபடி, சுந்தரருக்கு தன் சுயரூபத்தைக் காட்டியருளினார் சிவபெருமான். வயதான அந்தணராக வந்தது ஈசன் என்று அறிந்த சுந்தரர் மிகவும் வருந்தி, `எந்தையே, எனக்காக திருவோடு சுமந்தாயா... யாசகம் பெற்றாயா?' என்று உருகினார். `ஈடில்லாத இந்தக் கருணைக்கு என்ன செய்ய முடியும்?' என்று பதிகம் பாடி இறைவனைத் தொழுதார்.
சுந்தரர் பசியுடன் இருந்த போது, யாசகம் கேட்டு உணவு வாங்கி வந்து, அவருக்கு சிவபெருமான் பசியை போக்கிய இடம் ஆலயத்தில், பிராகாரப் பகுதியில் இருக்கிறது. அங்கே சிவனாருக்கு சந்நிதியும் உண்டு. அந்த சந்நிதியில் குடிகொண்டிருக்கும் சிவனுக்கு விருந்திட்ட ஈசன் என்றே பெயர்.
இங்கு ஈசன் விருந்திட்டு மகிழ்ந்த வைபோகம் வருடந்தோறும் மாசி மாதத்தில் விருந்திட்ட ஈசனுக்கு விமரிசையாக நடைபெறுகிறது. பக்தர்களால், அன்னதானம், நீர் மோர் போன்றவை அளிக்கப்படுகிறது.
இந்த விழாவில் கலந்துகொண்டு சிவதரிசனம் செய்து, அன்று,யாரேனும் பசி என்று யாசகம் கேட்டால் ஏதேனும் வழங்குங்கள்.
இந்த விழாவில் கலந்துகொள்பவர் வீட்டில் உணவிற்கும், ஐஸ்வரியத்துக்கும் ஒருபோதும் பஞ்சம் வராது என்பது ஐதீகம்!
ஆடி மாதத்தில் சுவாதி நட்சத்திர நாளில், சுந்தரர், சிவனுள் ஐக்கியமானார் என்கிறது புராணம். எனவே ஒவ்வொரு ஆடி சுவாதியும், சுந்தரர் குருபூஜை விழாவாக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
சிவபெருமான் யாசகம் கேட்டு விருந்திட்ட திருத்தலமான திருக்கச்சூரில், சுந்தரர் குருபூஜை விழாவில் கலந்துகொண்டு, ஈசனைத் தரிசித்து பிரார்த்தனை செய்வோம். திருக்கச்சூர் ஈசன் அருளாள் நமக்கு தனம், தானியம் கிட்டும்.
திருக்கச்சூர் கிராமம் தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ள மறைமலைநகரிலிருந்து மூன்று கி.மீ. தொலைவிலும், அதேபோல் சிங்கபெருமாள் கோவிலில் இருந்து மூன்று கி.மீ. தொலைவிலும் உள்ளது.
திருச்சிற்றம்பலம்!!!
Comments
Post a Comment