தை பொங்கல் பொங்கட்டும்... வாழ்வில் மங்கலம் பெறுகட்டும்...
தை பொங்கல் பொங்கட்டும்... வாழ்வில் மங்கலம் பெறுகட்டும்...
“தை பொறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழிக்கேற்ப தமிழ் மாதங்களில் தனிச் சிறப்பு வாய்ந்த மாதங்களில் முக்கியமானது தை மாதம். இந்த மாதத்தின் பிறப்பை பொங்கல் தினமாக உலகத் தமிழினம் கொண்டாடி வருகிறது. தைமாதம் கொண்டாடப்படுவதால்' தைத் திருநாள்' என்றும் அழைக்கிறோம். தமிழர்கள் மிக விமரிசையாக கொண்டாடும் பொங்கல் பண்டிகை, இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி கூறும் விதமாகவே கடைப்பிடிக்கப்படுகிறது. உலகெங்கும் வாழும் தமிழர்களால் குதூகலமாக கொண்டாடப்படும் பொங்கல் என்பதை வெறும் பண்டிகையாக மட்டும் பார்ப்பதில்லை. தமிழ் பண்பாட்டின் அடையாளமாகவும், உறவுகளின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ள வழிவகை செய்யும் பெருவிழாவாகவும் பார்க்கின்றனர். இதனால் தான் மற்ற பண்டிகைகளை காட்டிலும் பொங்கலை மட்டும் ஊருடனும், உறவுகளுடனும் இணைந்து கொண்டாட வேண்டும் என நினைக்கின்றனர். தமிழர்களின் தாயகமான தமிழ்நாட்டில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை, வட மாநிலங்களில் சூரியன் மகர ராசிக்குள் பிரவேசிக்கும் காரணத்தால் இந்தியாவின் பல பகுதிகளில் இந்த பொங்கல் திருநாள், மகர சங்கராந்தி எனவும் சங்கராந்தி எனவும் கொண்டாடப்படுகிறது.குஜராத் மற்றும் ராஜஸ்தானில் இப்பண்டிகை உத்தராயன் என்கிற பெயரிலும், பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் லோரி என்றும் கொண்டாடப்படுகிறது. நேபாளத்தில் மாகி, மாகே சங்கராந்தி, மாகே சகாராதி என்கிற பெயர்களில் பொங்கல் போற்றப்படுகிறது. தாய்லாந்தில் சொங்க்ரான் எனவும், லாவோஸ் மக்களால் பி மா லாவ் என்றும், மியான்மரில் திங்க்யான் என்கிற பெயரிலும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதைத்தவிர மலேசியா, கனடா, சிங்கப்பூர், இலங்கை, மொரீஷியஸ் உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளிலும் கூட விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மலேசியா,இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் பொங்கல் பண்டிகையன்று அரசு விடுமுறையாகவும் அறிவிக்கப்படுகிறது.
புராணத்தில் பொங்கல் திருநாள்:
சூரிய வம்சத்தில் ஸ்ரீராமனாக அவதரித்து சூரியனை வழிபட்ட மகாவிஷ்ணு, ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தில் தன் மகன் சாம்பனுக்கு தான் அளித்த சாபம் நீங்க, மகனிடம் சூரிய பூஜை செய்யச் சொன்னார். அவ்வாறு சாம்பன் பூஜித்த நாள் பொங்கல் திருநாளாகும்.
தருமர், அகத்தியர் ஆகியோர் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி சூரிய பகவானை வழிபட்டதாக புராணங்கள் கூறுகிறது.
சங்க காலத்தில் பொங்கல் திருநாள்:
பொங்கல் பண்டிகையின் வரலாற்றை பார்க்கையில் இரண்டாயிரம் வருடங்களுக்கும் முன்பாக கடைப்பிடிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.
தை உண் என்றும் தை நீராடல் என்றும் சங்க காலத்தில் இப்பண்டிகைப் பற்றிய குறிப்புகள் இருப்பதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். சங்ககாலத்தில் பொங்கல் நாளை அறுவடை விழாவாகவே தமிழர்கள் கொண்டாடியிருக்கின்றனர். என்பதனை சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூற்றின் இருபத்திரண்டாம் பாடல் விளக்கிறது.
‘அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல….’ என்று குறந்தோழியூர் கிழார் எனும் புலவர் அறுவடை விழாவை சாறு கண்ட களம் என வருணிக்கின்றார். இதைத்தவிர சங்ககால நூல்கள் பலவும் தைத்திருநாளை பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
‘தைஇத் திங்கள் தண்கயம் படியும்’ (நற்றிணை)
‘தைஇத் திங்கள் தண்ணிய தரினும்’ (குறந்தொகை)
‘தைஇத் திங்கள் தண்கயம் போல்’ (புறநானூறு)
‘தைஇத் திங்கள் தண்கயம் போது’ (ஐங்குறுநூறு)
‘தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ’ (கலித்தொகை)
எனப்பலவாறாக தைத்திருநாளின் சிறப்பியல்புகளை பழந்தமிழர் இலக்கியங்கள் தெளிவுபடுத்திக் காட்டுகின்றது. சீவக சிந்தாமணி என்னும் காப்பியத்திலும் பொங்கல் பற்றி குறிப்பிடும் போது
‘மதுக்குலாம் அலங்கல் மாலை
மங்கையர் வளர்த்த செந்தீப்
புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்’
என பொங்கலினை குறிப்பிடுகின்றது.
"மணிமேகலை" காப்பியத்தில், இந்திர விழா என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்பட்ட அக்காலத்தில், காவிரி பூம்பட்டினத்தில், மன்னர்கள், மக்களுக்கு முரசறைந்து, பொங்கல் விழா வரவிருப்பதை அறிவிப்பார்கள். அக்காலத்தில் பொங்கல் விழா இருபத்தெட்டு நாட்கள் வரை நடந்திருக்கிறது. மேலும் இந்தியா, ஈழம் ஆகிய நாடுகளை அடிமைப்படுத்தியிருந்த போர்த்துகீசியர்கள் பொங்கலின் சிறப்பினை கூறியுள்ளார்கள். அதாவது கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவுக்கு வந்த அப்போடூபாய் எனும் போர்த்துகீசிய அறிஞர் தான் எழுதிய ‘இந்துக்களின் பழக்க வழக்கங்களும், வாழ்க்கை முறைகளும் எனும் நூலிலே பொங்கல் பண்டிகையை உழவர்களின் அறுவடை நாளாக சிறப்பாக கொண்டாடப்பட்டதாக குறிப்பிட்டிருக்கின்றார். சோழர்கள் காலத்தில் இவ்விழா ‘புதியீடு’ என்கிற பெயரால் அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
நான்கு நாள் பண்டிகை:
பொங்கல் பண்டிகை நான்கு தினங்கள் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பண்டிகை கொண்டாடப்படுகிறது. முதல் நாள் போகி பண்டிகை, இரண்டாம் நாள் தை பொங்கல், மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல், நான்காம் நாள் காணும் பொங்கல். கிராமங்களில் இன்றும் பொங்கல் வருவதற்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள்.
முதல் நாள் போகிப் பண்டிகை:
தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று போகி பண்டிகை கொண்டாடப் படுகிறது. இந்நாள் பழையவற்றையும், உபயோகமற்றவையும் அகற்றும் நாளாகக் கருதப்படுகிறது. இப்பண்டிகையைப் "போக்கி" என்று கொண்டாடினர். அந்தச் சொல் நாளடைவில் மருவி "போகி" என்றாகிவிட்டது. போகி பண்டிகையன்று, அதிகாலையில், அனைவரும் எழுந்து வீட்டில் உள்ள தேவையற்ற, பழையை பொருட்களை வீட்டின் முன்பு வைத்து தீயிட்டு கொளுத்துவார்கள். அல்லவை அழிந்து நல்லவை வரட்டும். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற மொழிக்கேற்ப போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும். கிராமங்களில் வீட்டின் கூரையில் பூலாப்பூ வைக்கின்றனர். போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும்.
இரண்டாம் நாள் தைப்பொங்கல்:
பொங்கல் விழாவை தை முதல் நாளில் ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். இத்திருநாள் சூரியக் கடவுளுக்கு உரிய திருநாள். துன்ப இருளகற்றி எல்லோர் மனதிலும் இன்பம் பெருகும் வகையில் உழவிலும், வாழ்விலும் ஒளிதரும் சூரியக் கடவுளுக்கு நன்றி செலுத்தும் நாள் இத்திருநாள். அன்று பானையில் நல்ல தண்ணீர் ஊற்றி சந்தனம், குங்குமம் இட்டு, மஞ்சள் கொத்து முதலியன சேர்த்துக் கட்டி, அடுப்பில் வைத்து புது அரிசிபோட்டு பொங்கி வரும் வேளையில், வெல்லமும், ஏலமும், பாலும் கலந்து உலை பொங்கிவழியும் வேளையில் “பொங்கலோ பொங்கல்” என்று குடும்பத்தார் எல்லோரும் ஒன்றுகூடி சொல்லி வழிபடுகின்றனர்.
பூஜை அறையில் திருவிளக்கேற்றி முதலில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து விநாயகர் பூஜை செய்த பிறகு
பொங்கிய பொங்கலை தலைவாழை இலையில் இட்டு பழங்கள், கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து முதலியவற்றை வைத்து பூக்களால் அர்ச்சனை செய்து, தூபதீபம், கற்பூரம் காட்டி சூரியபகவானை வணங்கி வழிபாடு செய்ய வேண்டும். தீபாராதனை காட்டும் போது குலதெய்வத்தையும் பிரார்த்தனை செய்ய வேண்டும். பின்பு 'ஆதித்யஹ்ருதயம்', 'சூரிய காயத்ரி' சொல்லி கதிரவனை மனதில் தியானித்து வணங்கி வழிபடுவது மிகவும் நன்று. நகர்ப்புறங்களில் உள்ளோர் வீட்டுக்குள் பொங்கல் வைத்தாலும் பால்கனி அல்லது மொட்டைமாடியில் பொங்கலை நிவேதனம் செய்து சூரியனை வழிபடுகின்றனர்.
மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல்:
பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கலன்று உழவுக்குப் பயன்படும் காளைகளுக்கும், பால் கொடுத்து உதவும் பசுக்களுக்கும் விழா எடுப்பது, ஆண்டெல்லாம் நமக்காக உழைக்கும் மாடுகளுக்கு நன்றி கூறும் தினமாக கொண்டாடப்படுகிறது. கிராமங்களில் காளை மாடுகள், பசுக்களின் கொம்புகளுக்கு புது வர்ணம் பூச்சி, நன்கு குளிப்பாட்டி, அவற்றை அலங்காரம் செய்து, மாட்டுப் பொங்கல் தினத்தின்போது படையலிட்டு வழிபாடு செய்வார்கள். பின்னர் மாடுகளுக்கு பொங்கல் அளிக்கப்படுகிறது. கழுத்தில் புது மணி கட்டி, கொம்புகளை சீவி விட்டு சுதந்திரமாக திரிய விடுவார்கள். மாட்டுப் பொங்கலன்றும், பொங்கல் வைத்து வீட்டில் உள்ள மாடு, கன்றுகளைப் பூஜித்து வணங்குவதால், முப்பது முக்கோடி தேவர்களையும் வணங்கிய பலன் கிடைக்கும் என்பதாக ஐதீகம்.
‘கணுப்பிடி’
மாட்டுப் பொங்கலன்று பெண்களின் மாங்கல்ய பலத்திற்காகவும், உடன்பிறந்தோரின் நலனுக்காகவும் “கணுப் பிடி’ என்று சொல்லப்படும் விசேஷ நிகழ்வு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. கணுப்பிடியில், “மஞ்சள் குங்குமத்துடன் நிறைந்த சுமங்கலியாக வாழவும், உடன் பிறந்த சகோதரர்களும் நீடுழி வாழவும் '' பிரார்த்தனை செய்து கொண்டு முதல் நாள் செய்த சர்க்கரைப் பொங்கலுடன் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறச் சாதங்கள், தயிர் சாதம், கரும்பு, வெற்றிலை,பாக்கு போன்றவற்றை மஞ்சள் கொத்து இலையில் “காக்காய் பிடி வைத்தேன், கணுப் பிடி வைத்தேன்” காக்கை கூட்டம் போல எங்கள் குடும்பமும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். என்று கூறிகொண்டே காக்கை, குருவிகளுக்கு பரிமாறுவார்கள்.
இன்றைய தினம் சகோதரர்கள் தன் சகோதரிகளுக்கு பரிசுகளை தருவார்கள். மற்றும் சித்ரான்னங்கள் செய்து இறைவனுக்கு நிவேதனம் செய்வார்கள்..
நான்காம் நாள் காணும் பொங்கல்:
தமிழர் திருநாளின் இறுதியில் வருவது காணும் பொங்கல். இன்றைக்கு உறவுகளும் நட்புகளும் கூடி மகிழ்ந்து பொங்கல் பண்டிகையை நிறைவு செய்கின்றனர்.
இந்நாளில் மக்கள் தங்கள் உற்றார் உறவினர்கள், நண்பர்களைக் சென்று சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர். சுற்றுலாத் தலங்களுக்கும், பொழுதுபோக்குமிடங்களுக்கும் இந்த நாளில் போவது வழக்கம். இன்று தான தர்மம் செய்வதும் பெரியோரிடம் ஆசி வாங்குவதும் வழக்கம்.
இன்றைய தினம் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் என பல வீர சாகசப் போட்டிகள் நடைபெறும். தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு என்னும் மாடுபிடி விளையாட்டு இந்நாளில் நடைபெறும். பழங்காலத்தில் இந்திய நாணயமாகிய சல்லிக் காசுகளை மாடுகளின் கொம்பில் கட்டிவைத்திருப்பார்கள். மாட்டை அடக்குபவர்களுக்கே அந்த காசு பரிசளிக்கப்படும். இந்த சல்லிக்காசே பின்பு ஜல்லிக்கட்டாக மாறி அழைக்கப்படுகிறது.
வழிபாடு, உயர்ந்த சிந்தனை போன்றவை மிக்க பாரம்பரிய பொங்கல் திருநாளை கொண்டாடி, அனைவரும் அனைத்து மங்கலம் பெறுவோம்!!
Comments
Post a Comment