திருமாலுக்கு வைகுண்ட ஏகாதசி... சிவனுக்கு ஆருத்ரா தரிசனம்... மகிமை அறிந்துகொள்வோம்!!
திருமாலுக்கு வைகுண்ட ஏகாதசி... சிவனுக்கு ஆருத்ரா தரிசனம்... மகிமை அறிந்துகொள்வோம்!!
தட்சிணாயன காலத்தின் கடைசி மாதமான மார்கழி மாதம் தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்தமாகும். இந்த நாளில் அதிகாலைப் பொழுதில் இறைவனை வணங்குவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
`மாதங்களில் நான் மார்கழி' என்று சொன்ன மகாவிஷ்ணுவுக்குப் பிடித்தமான மார்கழி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசியை 'வைகுண்ட ஏகாதசி' விரதமாக மக்கள் அனுஷ்டிக்கிறார்கள்.
வைணவர்களுக்கு வைகுண்ட ஏகாதசியைப் போல் சைவர்களுக்கு மார்கழி மாதம் பௌர்ணமி நாளில் திருவாதிரை நட்சத்திரத்தில் அனுசரிக்கப்படுவது ஆருத்ரா தரிசனம் ஆகும்.
வைணவர்கள் திருப்பாவை பாடல்களைப் பாடி பெருமாளை வணங்கி அருளைப் பெறுவது போல், சைவர்கள் திருவெம்பாவைப் பாடல்களைப் பாடி சிவனின் அருளைப் பெறுகின்றனர்.
பொதுவாக திருவாதிரை நட்சத்திரம் பெருமாளுக்கு உகந்த நட்சத்திரம். ஆனால் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரமானது சிவனுக்கு உகந்தது என்பதால் சிவன் பெருமாள் ஆகிய இருவரின் சக்தி பெற்ற நாளாக விளங்குகிறது மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாள்.
வைகுண்ட ஏகாதசி விரதம்:
தாயைக் காட்டிலும் உயர்ந்த தெய்வமில்லை, காசியை மிஞ்சிய புண்ணிய தீர்த்தம் இல்லை. காயத்ரி மந்திரத்தை விட உயர்ந்த மந்திரம் இல்லை. அது போல் ஏகாதசி விரதத்தை விட சிறந்த விரதமும் இல்லை. அந்த அளவுக்கு மற்ற விரதங்களைக் காட்டிலும் ஏகாதசி விரதம் உயர்ந்ததாக கருதப்படுகிறது.
“வைதாரையும் வரவேற்கும் வைகுண்டம்” என்ற வாக்கியத்திற்கேற்ப மக்கள் விரும்பும் முக்தி எனப்படும் மீண்டும் பிறவாமையை தருவது வைகுண்ட ஏகாதசி விரதம்தான் என்கிறது புராணம்.
ஒவ்வொரு ஏகாதசி நாளிலும் அசுவமேத யாகத்திற்கு நிகரான ஏகாதசி விரதத்தை நாம் கடைப்பிடித்தால், நம்முடைய சகல பாவங்ளும் நீங்கும். தீராத நோய்கள் அகலும், சகல செல்வங்களும் உண்டாகும்.
அனைத்து ஏகாதசி நாட்களிலும் விரதம் இருந்து பெறும் பயனை வைகுண்ட ஏகாதசி அன்று ஒருநாள் விரதத்தால் பெறலாம் என்கிறது விஷ்ணுபுராணம்.
புராணத்தில் வைகுண்ட ஏகாதசி:
திருமாலின் கையால் மோட்சம் பெற்ற மது மற்றும் கைடபன் என்னும் இரண்டு அசுரர்கள் மார்கழி சுக்லபக்ஷ ஏகாதசியன்று சொர்க்கத்தின் வடக்கு நுழைவாயில் வழியாக பரமபதத்திற்கு சென்றனர், அப்போது அந்த அசுரர்கள் மார்கழி சுக்லபக்ஷ ஏகாதசியன்று எங்களுக்கு அருளிய சொர்க்கவாசல் திருநாளை பூவுலகில் சிறந்த திருவிழாவாக அனைவரும் அனுஷ்டிக்க வேண்டும். அன்று திருக்கோவில்களில் சொர்க்கவாசல் வழியே எழுந்தருளும் பெருமாளை தரிசிப்பவர்கள் அனைவரும் மோக்ஷம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். அதன்படியே நடக்கும் எனத் திருமாலும், அசுரர்களுக்கும் ஆசி வழங்கினார். அந்த திருநாள் தான் இப்போது மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசித் திருநாளாக வைணவத் திருத்தலங்களில் உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி புராண நிகழ்வுகள்:
ஶ்ரீகிருஷ்ண பரமாத்மா வைகுண்ட ஏகாதசி அன்று தான் அர்ஜுனனுக்குக் கீதையை உபதேசம் செய்தார்.எனவே இந்தநாளை, ‘கீதா ஜெயந்தி’ என்றும் கொண்டாடுகின்றனர்.
தேவர்கள் ஓருமுறை மார்கழி மாத சுக்லபக்ஷ ஏகாதசியன்று, வைகுண்டம் சென்று மகாவிஷ்ணுவை வணங்கி தங்களுக்கு அரக்கர்களால் நேர்ந்த துன்பங்களைக் கூறினார்கள் . மகாவிஷ்ணுவும் அவர்களது துன்பங்களை போக்கினார். முக்கோடி தேவர்களின் துன்பத்தை பகவான் போக்கியதால் வைகுண்ட ஏகாதசி ‘முக்கோடி ஏகாதசி’ எனவும் அழைக்கப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி விரதமும் பலன்களும்:
இந்த வைகுண்ட ஏகாதசி விரதம் ஆண்கள், பெண்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய உயர்ந்த விரதமாகும். வைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாளான தசமி அன்று, ஒரு வேளை உணவு மட்டுமே உண்ண வேண்டும். அடுத்த நாள் ஏகாதசி அன்று அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து முடித்து விட்டு, அருகிலுள்ள பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி தினத்தில் திறக்கப்படும் சொர்க்க வாசல் வழியாக சென்று பெருமாளை வழிபட வேண்டும். அருகில் பெருமாள் கோயில் இல்லாதவர்கள் வீட்டில் இருந்தபடியே பெருமாள் படத்தை வைத்து வழிபாடு செய்யலாம். பின்பு விரதத்தை மேற்கொள்ள வேண்டும். முழு நாளும் உபவாசம் இருந்து மகாவிஷ்ணுவை நினைத்து தியானிக்க வேண்டும். சிறிதளவு தண்ணீர் அருந்தலாம், ஏழு தடவை ஓரிரு துளசி இலையை சாப்பிடலாம், அப்படி முழுவதும் பட்டினியாக இருக்க முடியாதவர்கள்,முதியோர்கள் உடல் நலிவுற்றவர்கள், பழங்கள், நிலக்கடலை, பால், தயிர் போன்றவற்றை பெருமாளுக்கு நைவேத்தியம் செய்த பிறகு சாப்பிடலாம். அன்றைய தினம் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து புராண நூல்களை படிப்பதும்,விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் ரங்கநாதர் ஸ்துதி முதலியவைகளை பாடியும்,கேட்டு கொண்டும் இருக்கலாம். பிறகு மறுநாள் காலை துவாதசி அன்று, பகவானின் நாமத்தைச் சொல்லியபடி துளசி தீர்த்தத்தை அருந்தி, உபவாசத்தை முடித்துக் கொள்ளலாம். துவாதசியன்று நெல்லிக்கனி, சுண்டைக்காய், அகத்தி கீரை இவைகளை உணவில் சேர்த்து சாப்பிட வேண்டும். தசமி, ஏகாதசி, துவாதசி ஆகிய மூன்று நாட்களும் விரதம் இருப்பவர்கள் தங்கள் பணிகளைச் செய்யும் வேளைத் தவிர மற்ற நேரங்களில் பெருமாளை நினைத்த வண்ணம் இருக்க வேண்டும்.
வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சௌபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல் நலமும் ஆரோக்கியத்துடன் இருக்கும். வைகுண்ட ஏகாதசி தினமான நாளை விரதமிருந்து விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து பரந்தாமனின் அருளை திருப்பாவையின் 'நீங்காத செல்வம் நிறைந்தேலொ ரெம்பாவாய்’ என்பதற்கிணங்க நீங்காத செல்வத்தை பெற்று உன்னதமான வாழ்வை பெறுவோமாக.
ஶ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா:
தமிழ்நாட்டில் அமைந்துள்ள வைணவத்தலங்களில் முதன்மையாகக் கருதப்படுகின்ற ஶ்ரீரங்கத்தில் உள்ள அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா இருபத்தொரு நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பகல்பத்து, இராப்பத்து என்று இரு பகுதிகளாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருநாளும் அரங்கநாதர் வெவ்வேறு அலங்காரங்களில் வெவ்வேறு வாகனங்களில் உலா வருவார். ஏகாதசி நாளன்று இரத்தினங்களால் வேய்ந்த ரத்னாங்கி என அழைக்கப்படும் உடையில் கருவறையிலிருந்து வெளிவந்து ஆயிரங்கால் மண்டபத்தில் வீற்றிருக்க வடக்கு வாயில் இந்த நாளிலே மட்டுமே திறக்கப்படும் "பரமபத வாசல்" (சொர்க்க வாசல்) வழியாக வருவதைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
திருப்பதி மலையில் "வைகுண்ட துவாரம்":
திருப்பதி மலை மீதுள்ள திருமலையிலும் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது. இங்குள்ள சிறப்பு வாயில் "வைகுண்ட துவாரம்" என அழைக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி நாளில் மட்டுமே திறக்கப்படுகிறது இவ்வாயில் வழியே சென்று வழிபடுவோர் முக்தி பெறுவர் என நம்பப்படுகிறது.எனவே இத்திருநாளில் பெருந்திரளான பக்தர்கள் இங்கு திரள்கின்றனர.
ஓம் நமோ நாராயணாய நமஹ!!
ஆருத்ரா தரிசன விழா:
சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டிய நாள் சிவராத்திரி. சிவபெருமான் இப்பூமியில் ஆவிர்ப்பித்த (தோற்றுவித்த) நாள் ஆருத்ரா தரிசனம். சிவராத்திரியன்று அவரை வழிபட்டால் பலன். ஆருத்ராவன்று தரிசித்தாலே பலன்...
மார்கழி மாதம் பௌர்ணமியோடு, திருவாதிரை நட்சத்திரம் கூடி வரும் நாளன்று “திருவாதிரை” திருவிழா “ஆருத்ரா தரிசனம்” திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஆருத்ரா என்ற வடமொழி சொல் தமிழில் “ஆதிரை” என்று அழைக்கப்படுகிறது. அதோடு திரு என்ற அடைமொழி சேர்த்து “திருவாதிரை” என்று சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள் திருவாதிரை அன்று நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும். இந்த ஆனந்தத் திருநாளில் ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜப் பெருமானை சிதம்பரத்திற்குச் சென்று தரிசிப்பது விசேஷமாகும்.
புராணத்தில் ஆருத்ரா தரிசனம்:
மகாவிஷ்ணுவின் ஆசியால் திருவாதிரை நாளன்று சிவபெருமான் நடராஜராக ஆடப் போவதைக் காணும் மகிழ்ச்சியில் ஆதிசேஷன் பதஞ்சலி முனிவராக உருக் கொண்டு, பூலோகம் வந்து தவம் செய்யத் தொடங்கினான். தவம் முடிவு அடைந்தபோது, பதஞ்சலி முனிவர் முன் சிவபெருமான் தோன்றி, உம்மைப் போலவே வியாகரபாத முனிவரும் திருநடனம் காணவேண்டி காத்திருக்கிறார். நீங்கள் இருவரும் தில்லையில் என் நடனத்தைக் கண்டு மகிழ்வீராக என்று கூறி மறைந்தார். அதன்படி பதஞ்சலி முனிவரும் வியாகரபாதரும் சிதம்பரம் திருத்தலத்தில் திருவாதிரை நாளில் திருநடனத்தைக் கண்டனர்.
ஆருத்ரா தரிசனம் அன்றுதான் மாணிக்கவாசகரின் திருவெம்பாவை நிறைவுற்று அவர் ஈசனை தரிசித்தார்.
ஆருத்ரா தரிசனம் அன்றுதான் ஈசன் தேவலோகப் பசுவான காமதேனுவுக்கும் தரிசனம் தந்து அருள்புரிந்ததாக ஐதீகம்.
ஆருத்ரா தரிசனம் அன்றுதான் பார்வதி தேவியின் தவத்தில் மகிழ்ந்து அவரை மணக்க சிவபெருமான் சம்மதம் கூறிய நாளாகக் கருதி, இன்றும் கன்னிப்பெண்கள் தங்களுக்கும் நல்ல கணவன் கிடைக்க வேண்டி நோம்பை அனுஷ்டிக்கிறார்கள்.
திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் தமது தேவாரத்தில் ஆதிரை நாளைப் பின்வருமாறு சிறப்பித்துள்ளார்.
"ஊர்திரை வேலை யுலாவும் உயர்மலைக்
கூர்தரு வேல்வல்லார் கோற்றங் கோள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆதிரைநாள் காணாதே போதியார் பூம்பாவாய்"
எனவே மார்கழி திருவாதிரை தினத்தன்று விரதம் இருந்து, சிவாலயம் சென்று, நடராஜ தரிசனம் கண்டால் பாவங்கள் விலகி புண்ணியம் பெருகும் என்கின்றன புராணங்கள்.
திருவாதிரைக் களி:
திருவாதிரைக்கு ஒருவாய்க்களி’ என்பது பழமொழி. எனவேதான் மார்கழி திருவாதிரை அன்று விரதம் உள்ள பக்தர்கள் அன்று ஒரு வாய்களி தின்று மகிழ்கின்றனர். இதே திருவாதிரை நாளன்று ஒருவாய் களி தின்றால், அதன்பலன் அளவிடற்கரியது. திருவாதிரை விரதம் இருப்பவர்கள் களி செய்து படைக்கும் வரை வெறும் வயிற்றுடன் தியானிப்பதோடு, சிவாலயம் சென்று நடராஜரைத் தரிசித்து வருவது சிறப்பு என்கின்றன புராணங்கள்.
சிவபெருமானுக்கு நைவேத்தியம் செய்யப்படும் திருவாதிரைக் களியின் பின்னணியில் பக்திபூர்வமான வரலாறு ஒன்று உள்ளது. சிதம்பரத்தில் விறகுவெட்டியாக வாழ்ந்து வந்த சேந்தனார் தினமும் சிவனடியாருக்கு உணவளித்த பின்பே உணவருந்துவார். ஒருநாள் மழையாக இருந்ததால், அவரது ஈர விறகை வாங்க எவரும் வரவில்லை. மனம் நொந்து போன நிலையில் வீடு வந்து சேர்ந்தார். அவரிடம் அரிசி வாங்க பணம் இல்லை. எனவே அன்று தன்னிடம் உள்ள கேழ்வரகில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார், சிவனடியார் யாரும் வராததால் மன வருத்தப்பட, வாசல் திண்ணையில் அமர்ந்திருந்தார். சேந்தனாரின் பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பிய நடராஜப் பெருமான் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் வீட்டிற்கு வந்தார்.
சேந்தனார் மிக்க மகிழ்ச்சியுடன் களியை சிவனடியாருக்கு விருந்திட்டார். சிவனடியார் களியை ஆசையாக சாப்பிட்டு பின் மீதமிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்றார்.
மறுநாள் காலையில் வழக்கம் போல் சிதம்பரம் கோயில் அர்ச்சகர்கள் கருவறையைத் திறந்த போது நடராஜப் பெருமனைச் சுற்றி எங்கும் களிச் சிதறல்கள் இருந்தன, ஏதோ அபச்சாரம் நடந்துவிட்டதாக அரசருக்கு அறிவித்தார்கள். ஆனால் தென்னாடுடைய சிவபெருமான் நடந்தது அனைத்தும் தமது திருவிளையாடலே என்பதை மன்னர் முதலான அனைவருக்கும் தெளிவுபடுத்தி அருள்பாலித்தார். இந்த நிகழ்வு நடந்தது ஒரு திருவாதிரை ஆருத்ரா தரிசனம் அன்றுதான். அதுமுதல் இன்றும் திருவாதிரை நாளில் நடராஜப் பெருமானிற்குக் களிபடைக்கபடுகிறது. எனவே ‘திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி’ என்ற சொலவடையே ஏற்பட்டது.
தில்லையில் ஆருத்ரா தரிசனம்:
திருவாதிரை நாளன்று சிதம்பரத்தில் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் ஆயிரங்கால் மண்டப முகப்பில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜப் பெருமானிற்கு அபிஷேகமும், புஷ்பாஞ்சலியும் நடைபெறும். பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரமும், சித்சபையில் பூஜையும் நடைபெறும். அதனையடுத்து பஞ்சமூர்த்திகள் வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீநடராஜப் பெருமானும் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்மனும் புறப்பட்டு நடனப்பந்தலில் நடனமாடி ஆருத்ரா தரிசன காட்சியளித்து, சித்சபா பிரவேசம் செய்வர்.
ஸ்ரீநடராஜமூர்த்தியின் ஆருத்ரா தரிசனம் கண்டால் தீராத நோய்களும், பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்.
திருஉத்திரகோசமங்கை ஆருத்ரா தரிசனம்:
திருஉத்திரகோசமங்கை இராமநாதபுரம் அருகே உள்ள மிகவும் பழமை திருக்கோயில். இங்கு மார்கழி மாதம் நடக்கும் ஆருத்ரா தரிசனம் மிகவும் பிரசித்தி பெற்றது.
இக்கோயிலில் நவரத்தினங்களில் ஒன்றான பச்சை மரகதக்கல்லினால் ஆளுயரத்தில், நடனம் ஆடும் திருக்கோலத்தில், விலை மதிக்க முடியாத அபூர்வ நடராஜர் சிலை உள்ளது. தமிழர்களின் கலைத்திறனுக்கும், நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகளுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில் இச்சிலை அமைந்திருப்பது கூடுதல் சிறப்பாகும். நவரத்தினங்களில் ஒன்றான பச்சை மரகதம் இயற்கையாகவே மென்மையானது. ஒலி,ஒளி அதிர்வுகளைத் தாங்க முடியாத தன்மை உடையது. இதன் காரணமாக மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்ற சொல்லுக்கேற்ப ஒலி, ஒளி அதிர்வுகளிலிருந்து இச்சிலையைப் பாதுகாக்க சிலைக்குச் சந்தனம் பூசிப் பாதுகாத்து வருகிறார்கள்.
ஆருத்ரா தரிசன திருநாளில் மட்டும் பக்தர்களின் தரிசனத்திற்காக சந்தனப்பூச்சு கலையப்பட்டு காலை முப்பத்திரண்டு வகையான அபிஷேகங்கள் செய்து தீபாராதனை நடைபெறும். பின் நைவேத்தியம் பண்ணிய பிறகு அலங்காரம் செய்யப்படும்.
திருஉத்திரகோசமங்கையில் மட்டும் தான் அபிஷேகம் முடிந்தது நைவேத்தியம் பண்ணிய பிறகு அலங்காரம் செய்வது சிறப்பான ஒன்றாகும். அன்று இரவே மீண்டும் சந்தனம் பூசப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
இன்றைய தினம் திருஉத்திரகோசமங்கையில் சந்தனம் கலையப்பட்ட நிலையில் மரகத நடராஜரைத் தரிசனம் பண்ணலாம்.
இதைக் காண்பவர்க்கு பிறவிப்பிணி தீரும் என்பது ஐதீகம்.
ஓம் சிவாய நமஹ!!
Comments
Post a Comment