மார்கழி மாதத்திற்கு என்ன மகிமை...
மார்கழி மாதத்திற்கு என்ன மகிமை...
தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் ஒன்பதாவது மாதமாகும். இந்த மாதம் முழுவதும் இறைவனுக்கு உகந்ததாகவே போற்றப்படுகிறது.
ஒரு ஆண்டில் பதினோரு மாதங்கள் கோயில்களுக்கு போக முடியாதவர்கள் மார்கழி மாதம் மட்டும் கோயிலுக்கு சென்றாலே வருடம் முழுதும் கோயிலுக்கு சென்ற பலன்கள் கிடைத்துவிடும் என்பது ஐதீகம். எல்லா கஷ்டங்களும் நீங்கி, தை மாதத்திலிருந்து இருந்து புது வாழ்வு கிடைக்க இம்மாதத்தில் பிராத்தனை செய்யப்படுகிறது. “பீடு” (பெருமைகள்) நிறைந்த மாதம் என்பது மருவி “பீடை” மாதம் என ஆனது.
ஸ்ரீகிருஷ்ண பகவான் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று பகவத்கீதையில் அருளியுள்ளார்.
மார்கழி மாதம் முழுவதும் இறைவனை வழிபடுவதால் இம்மாதத்தில் எவ்வித குடும்ப மங்கள விழாக்கள் நடத்தப்படுவதில்லை.
இம்மாதம் தேவர்களுக்கு அதிகாலை நேரமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் அதிகாலை நீராடி ஆலய தரிசனம் செய்வது மிகவும் சிறப்பாகும்.
மார்கழி மாதத்தில் நடந்த புராண சிறப்புகள்:
மார்கழி மாதத்திற்கு ஏராளமான புராண சிறப்புகள் உள்ளன.
மார்கழி மாதத்தில் மகாபார யுத்தம் நடைபெற்றதாக இதிகாசம் கூறுகிறது. மற்றும் ஆண்டாள் திருமாலை திருமணம் புரிந்ததும், திருப்பாற்கடல் கடையும் போது கிடைத்த விஷத்தை சிவன் உண்டு உலகை காப்பாற்றியதும், இந்திரனால் பெருமழை உருவானபோது கோகுலத்தில் உள்ள அனைவரையும் காப்பாற்ற கோவர்த்தனகிரி மலையை, கிருஷ்ணர் குடையாகப் பிடித்து காப்பாற்றியதும் இந்த மார்கழி மாதத்தில்தான்.
மார்கழி மாத மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்த மார்க்கண்டேயர் மரணத்தை வென்றதாக மார்க்கண்டேய புராணம் குறிப்பிடுகிறது. ஆகையால் ம்ருத்யுஞ்ச ஹோமம் செய்ய இம்மாதம் மிக சிறந்தாகக் கருதப்படுகிறது.
திருப்பாவை, திருவெம்பாவை :
ஆண்டாள் நாச்சியார் "மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்' என்றும், மாணிக்கவாசக நாயனார் திருவெம்பாவையில், "போற்றியாம் மார்கழி நீர் ஆடேலோர் எம்பாவாய்' - என்றும் அதிகாலை வழிபாடு மகத்துவம் பற்றி பாடியுள்ளார்கள். மார்கழி மாதம் முழுவதும் பெரும்பான்மையான கோயில்களில் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, ஆழ்வார் பாசுரங்கள் பாடப்படுகின்றன.
அறிவியலின்படி மார்கழி மாதத்தில் அதிகாலை வழிபாடு:
மார்கழியில் அதிகாலையில் எழுந்து நடக்கும் போது இயற்கை காற்றை சுவாசிப்பதால் மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களும் குணமாகும் என்று முன்னோர் அறிந்து கொண்டதால் ஆண்கள் நாம சங்கீர்த்தனம் பாடி நகர் வலம் வருவதும், பெண்கள் காலையில் கோலம் போடுவதும் இம்மாதத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.
அறிவியலின்படி மார்கழி மாதத்தில் ஆக்ஸிஜன் நிறைந்த ஓசோன் படலம் பூமிக்கு மிக அருகில் அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை இருக்கும். ஓசோன் வாயு நுரையீரலுக்கு சென்று புத்துணர்ச்சி உண்டாக்கும். மார்கழி மாத காற்று சருமத்திற்கும், உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது என்பதை விஞ்ஞான பூர்வமான ஆராய்ச்சியிலும் தெரியவந்துள்ளது.
மார்கழி மாத கோலம்:
மார்கழி மாதத்தில் வாசலில் மிகப்பெரிய கோலம் போட்டு அதில் வண்ண பொடி தூவுவதும், பூசணிப் பூவினை பசும் சாணத்தில் வைப்பது இன்றும் சம்பிரதாயமாக பின்பற்றப்படுகின்றது. பசும் சாணம் கிருமி நாசினியாகும்.
அந்த காலத்தில் தங்கள் வீட்டில் திருமண வயதுடைய பெண் இருக்கிறாள் என்பதைத் தெரிவிக்கும் அடையாளமாகவே கோலத்தின் மீது பூசணி பூ வைப்பார்கள். அதிகாலையில் வீதியில் பஜனைக்கு வருபவர்கள், அந்த வழியாக செல்பவர்கள் அதனை புரிந்து கொண்டு, மார்கழி முடிந்ததும், தை மாதம் திருமணம் பேசி மணம் முடித்து விடுவார்கள்.
“மார்கழியில் பூசணிப் பூ வைக்க, தை மாதத்தில் திருமணம் கைகூடிவரும் என்பர்”.
மார்கழி மாதங்களில் வீட்டு முன்பு கோலமிட்டால் மகாலட்சுமி வீடு தேடி வருவார் என்பது நம்பிக்கை. கோலம் போடுவதால் மனதுக்கு உற்சாகம், நினைவாற்றல் கிடைக்கிறது. மனஒருமைப்பாடு இருந்தால் தான் புள்ளிகளைச் சரியாக இணைத்துக் கோலம் போடமுடியும். கோலம் இடும் பெண்களின் சிந்திக்கும் திறன் சிறப்பாக இருக்கும் என்றும், நல்ல மனநிலையோடு இருப்பார்கள் என்றும் உடலிலும் மிக நல்ல அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன என விஞ்ஞான ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
மார்கழி இசை விழா:
இசை என்பது அனைவருடைய மனதையும் கவரக்கூடிய ஒரு கலையாகும். அதிலும் கர்நாடக இசை மக்களின் மனதை கவர்வதுடன் பக்தியின் வெளிப்பாடகவும் அமைந்துள்ளது . மார்கழி மாதத்தின் தனி சிறப்பே கர்நாடக இசை தான்.
தமிழ்நாட்டில் உள்ள திருவையாற்றில் மார்கழியில் தியாகராஜர் ஆராதனை என்கிற உலகப் புகழ் வாய்ந்த இசைத் திருவிழா ஆண்டு தோறும் தவறாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் இந்தியா முழுவதிலும் இருந்து பாடகர்கள், இசையமைப்பாளர்கள், இசைக் கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்ச்சியில் புகழ்பெற்ற தியாகராஜர் கீர்த்தனைகள் பாடப்படுகின்றன.
இப்பொழுது சென்னையிலும் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் முழுதும் கர்நாடக இசைக் கச்சேரிகள் நடத்தப்படுகின்றன. சபாக்கள் முழுக்க
இசை மழையில் நிரம்பி வழிகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்தும், கலைஞர்கள் மற்றும் ரசிகர்களும் பெருமளவில் இதில் கலந்து கொள்கிறார்கள். வளர்ந்து வரும் இசை கலைஞர்களை ஊக்குவிக்கும் விதத்தில் விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
மார்கழி மாத விழாக்களும், சிறப்புகளும்:
மார்கழி மாதத்தில் அதிகாலையிலேயே ஆலய வழிபாடு தொடங்கிவிடும். இம்மாதத்தில் திருவாதிரை, வைகுண்ட ஏகாதசி, அனுமந் ஜெயந்தி, பாவை நோன்பு, திருவெம்பாவை நோன்பு, படி உற்சவம், விநாயகர் சஷ்டி விரதம், உற்பத்தி ஏகாதசி போன்ற விழாக்கள், பண்டிகைகள், விரதங்கள் கடைபிடிக்கபடுகின்றன.
வைணவக் கோயில்கள் சிலவற்றில் மார்கழியில் ராப்பத்து, பகல் பத்து என்ற முறையில் நாலாயிர திவ்ய பிரபந்தம் முழுவதையும் பாராயணம் செய்கின்றனர். இம்மாதத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் வாயில நாயனார், சடைய நாயனார், இயற்பகை நாயனார், மானக்கஞ்சாற நாயனார், சாக்கிய நாயனார் ஆகியோரின் குருபூஜை நடத்தப்படுகிறது.
பன்னிரு ஆழ்வார்களில் தொண்டரடிப் பொடியாழ்வார் ஜெயந்தி இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது. ரமண மகிரிஷி, அன்னை சாரதா தேவியார், பாம்பன் சுவாமிகள் ஆகியோர் இம்மாதத்தில் தான் தோன்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தவிர கிருத்துவர்களின் கிறிஸ்துமஸ், புதுவருடபிறப்பு, முகமதியர்களின் பக்ரீத் போன்ற பண்டிகைகள் இம்மாதத்தில் கொண்டாடப்படுகின்றன. புத்த, சீக்கிய மற்றும் சமண மதங்களிலும் இந்த மாதம் புனித மாதமாக கருதப்படுகிறது.
நாமும் ஆன்மிக மலர்ச்சிக்கு சிறந்த மாதமாக கருதப்படும் இந்த மார்கழி மாதத்தில் கடவுள்களை மனதால் துதித்துப் போற்றுவோம்..... நற்பேறு பெறுவோம்...
Comments
Post a Comment