சிறப்பு வாய்ந்த கிரிவலம் ... வலம் வருவோம்,வளம் பெறுவோம்!!

சிறப்பு வாய்ந்த கிரிவலம் ... வலம் வருவோம்,வளம் பெறுவோம்!!
ஆரூர் சுந்தரசேகர்.
        “நினைத்தாலே முக்தி தரும்” ஸ்தலம் திருவண்ணாமலை. பஞ்சபூத தலங்களுக்குள் இது நெருப்புக்குரிய தலம். இங்கு மலையே இறைவனின் சொரூபமாக இருக்கிறது.           
    திருவண்ணாமலை ஸ்தலத்தில் தான் முதன் முதலில் லிங்க வழிபாடு தொடங்கியதாகவும் மற்றும் மகா சிவராத்திரி தொடங்கியதாகவும் புராணங்களில் குறிப்படப்பட்டுள்ளது. திருவண்ணாமலையை சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்து இருப்பதாக சித்தர்கள் கூறியுள்ளார்கள். 
         ஆயுட் காலத்தை அதிகரிக்க திருக்கடையூர். பிணிகளை போக்க வைதீஸ்வரன் கோயில். சனி தோஷம் நீங்க திருநள்ளாறு. ஆனால்  ஊழ்வினை (பிறவிப்பிணி) நீங்க திருவண்ணாமலையை கிரிவலம் வந்தால் மட்டுமே முடியும் என்பது ஐதீகம்
    அருணன் என்றால் சூரியன் - நெருப்பின் நிறமான சிவப்பைக் குறிக்கும். அசலம் என்றால் கிரி என்றும் மலை என்றும் பொருள். எனவே அருணாசலம் என்றால் சிவந்த நிறத்தையுடைய மலை என்று பொருள்.    மலையே சிவனாக காட்சி தரும் திருவண்ணாமலை, கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறி,மாறி வந்துள்ளது.

கிரிவலம் எதற்காக சுற்ற வேண்டும்:
   கிரி என்றால் மலை, வலம் என்றால் சுற்றுதல் என்று பொருள். அதனால் மலையை சுற்றி வருவது கிரிவலம் எனப்படுகிறது. 
கி‌ரிவல‌ம் ப‌ற்‌றி அருணாசல புராணம் :
“அருணாசலத்தை வலம்வர வேண்டும் என்ற நினைவோடு ஓரடி எடுத்து வைப்பவருக்கு யாகம் செய்த பலன் கிடைக்கும். இரண்டடியில் ராஜசூய யாகம் செய்த பலன் கிடைக்கும் சர்வதீர்த்தமாடிய பலனும் வந்து சேரும். மூன்றடியில் தான பலன், நான்கடியில் அஷ்டாங்க யோக பலன் உண்டாகும்”.
    பல நூற்றாண்டுகளாக கிரிவலம் வருவது திருவண்ணாமலையில் வழக்கத்தில் இருக்கிறது.
    ஒரு சாதாரண நாளில் திருவண்ணாமலை கிரிவலம் சென்றாலே நமது முன்வினைகள் நீங்கிவிடும். பொருள் வேண்டுபவர்கள் பௌர்ணமியிலும், அருள் வேண்டுபவர்கள் அமாவாசையிலும் திருவண்ணாமலையை கிரிவலம் வரவேண்டும். திருவண்ணாமலை உள்ள குகைகளில் சித்தர்கள், முனிவர்கள், மகான்கள் யோகிகள் தவம் செய்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் அமாவாசை அன்று அண்ணாமலையாரை கிரிவலம் வந்து சிவனின் அருள் பெற்று, பின் குகைகளிலேயே இறைவனுடன் கலந்து ஜீவசமாதி நிலை அடைந்துள்ளார்கள்.இதனால், சக்தி அதிர்வலைகள் அதிகமான இந்த மலையைச் சுற்றி வருவதால் சித்தர்கள், முனிவர்கள், மகான்கள் யோகிகள் ஆசிகளை பக்தர்கள் பெறுகின்றனர் என்பது ஐதீகம். மற்றும்  திருவண்ணாமலையை கிரிவலம் சுற்றி வரும்போது சக்தி மிக்க மூலிகைச் செடிகொடிகளின் காற்றைச் சுவாசிப்பதால் உடலும் உள்ளமும் நலம் பெறுகிறது.

கிரிவலம் எங்கு தொடங்கி எப்படி முடிக்க வேண்டும்:
     திருவண்ணாமலை மலையின் சுற்றளவு பதினான்கு கிலோமீட்டர். இம்மலையில் இன்றும் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதால் கிரி வலம் வருவது மிகச்சிறந்தது.
  கிரிவலத்தை எங்காவது துவங்கி, எப்படியாவது முடித்தல் கூடாது. அதன் பெயர் கிரிவலமும் அல்ல. முதலில் ஆலயத்தின் புறத்தே இருக்கும் இம்மலைக்கு காவல் தெய்வமான பூத நாராயணரை வணங்கி மலையைச் சுற்றுவதற்கு அனுமதி வாங்கிக் கொண்டு, அடுத்து  இடையூறு இல்லாமல் கி‌ரிவல‌ம் முடிய வேண்டும் என்று வழியில் உள்ள இரட்டைப் பிள்ளையாரை வணங்கி வேண்டிக் கொள்ள வேண்டும். பின்னர் ஆலயம் சென்று அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்மனையும் தரிசனம் செய்தல் வேண்டும். அதன் பின் வெளியில் வந்து ராஜ கோபுரத்தை வணங்கி விட்டு  கி‌ரிவல‌த்தை ஆரம்பிக்க வேண்டும்.
  மலையின் எட்டு திசைகளிலும் உள்ள அஷ்டதிக்கு லிங்கங்களில், இந்திரலிங்கத்தை முதலில் வழிபடவேண்டும். 
இந்திரலிங்கம்.
   அஷ்டலிங்க தரிசனத்தில் முதலில் அருள்தருவது இந்திரன் வழிபட்ட இந்திர லிங்கம். இது கிழக்கு திசையில் அமைந்திருக்கிறது.  இங்கு வழிபட்டால் ஐராவதம் எனும் யானையின் மூலம்  இந்திரன் கேட்பதையெல்லாம் பக்தர்களுக்கு அஷ்ட ஐஸ்வர்யங்களை வாரி வழங்குகிறார்.  பின்னர் மலை சுற்றும் பாதையில் உள்ள நந்திகேசுவரர் சன்னதியை வணங்கி வழிபட்டு அடுத்து அக்னி லிங்கத்தை வழிபடவேண்டும்.
அக்னிலிங்கம்.
கிரிவல பாதையில் உள்ள  சிம்ம தீர்த்தத்தை ஒட்டி அமைந்துள்ளது அக்னிலிங்கம். தென்கிழக்கு திசைக்கு அதிபதி சந்திரன். ருத்ரமூர்த்திகள் மூவர் பல யுகங்களாக அங்க பிரதட்சணமாக கிரிவலம் வந்தனர். அவர்கள் திருமேனிகள் இந்த இடத்தில் வந்தபோது குளிர்ச்சிபெற்றது. அந்த இடத்தை தோண்டி பார்த்தபோது சுயம்பு லிங்கம் காட்சியளித்தது. அந்த இடம்தான் இன்றளவும் அக்னி லிங்கமாக காட்சி தருகிறது. இங்கு வழிபாடு செய்தால் நோய், பிணி, பயம் முதலியன விலகும். எதிரிகள் தொல்லை, மனபயம் நீங்கும்.

  வழியில் மகான் சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம் மகத்தான  சக்தி வாய்ந்தது. கேட்டதை அளிக்க வல்லது. தொடர்ந்து ரமணாஸ்ரமம் ஆன்ம அமைதியைத் தரக் கூடியது. சற்றுத் தொலைவில் இடது புறம் விசிறி சாமியார் ஆசிரமம் உள்ளது. தியானம் செய்ய அமைதியான இடம். அடுத்து எமலிங்கத்தை வழிபடவேண்டும்
எமலிங்கம்.
எமதர்மன் அங்கபிரதட்சணமாக கிரிவலம் சென்று சிவனை வழிபட்டார். அவர் கிரிவலம் நிறைவு செய்த இடத்தில் தாமரை மலர்ந்தது. அதிலிருந்து ஜோதிமயமான ஒரு லிங்கம் தோன்றியது. அதுவே எமலிங்கம் என்று புராணம் கூறுகிறது . இங்கு மனமுருகி பிரார்த்தனை செய்தால், பொருளாதார கஷ்டங்கள் நிவர்த்தியாகும். சகோதரர்களின் உறவு நீடிக்கும். அடுத்து  நிருதிலிங்கத்தை வழிபடலாம்.
நிருதிலிங்கம்.
சோண தீர்த்தத்துக்கு அருகே நிருதி லிங்கம் அமைந்துள்ளது. அஷ்ட திக் பாலகரான நிருதீஸ்வரர் தினமும் கிரிவலம் வந்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது கிரிவல மலையின் தென்மேற்கு திசையில் ஒரு குழந்தையின் அழுகுரலும், பெண்ணின் சலங்கை ஒலியும் கேட்டது. அந்த இடத்தைநோக்கி நிருதீஸ்வரர் சென்றார். அவர் எதிரில் ஒரு பிரகாசமான லிங்கம் தோன்றியது. அதுதான் நிருதிலிங்கம். இங்கு வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியமும், சுகவாழ்வு கிடைக்கும்.
   இங்கு வணங்கிய பின்பு தெற்கிலிருந்து மேற்கில் திரும்பும் வளைவில் நின்று மலையை தரிசிக்க வேண்டும். இந்த இடம் பார்வதி தேவிக்கு ரிஷப வாகனத்தில் சிவபெருமான காட்சி அளித்த இடம் ஆகும். ஆதலால் இங்கு மலையின் முகப்பில் தெரியும் நந்தியை வணங்கிச் செல்ல வேண்டும். அடுத்து அருணாசலேஸ்வரின் கோயிலுக்கு நேர் எதிரில் திருநேர் அண்ணாமலை கோயில் உள்ளது. அருகில் உண்ணாமுலை அம்மன் தீர்த்தம் உள்ளது. அதனை வழிபட வேண்டும். வழியில் அடிமுடி சித்தர் ஜீவ சமாதி இருக்கிறது. இங்கு தியானம் செய்தால் மகத்தான புண்ணிய பலன்கள் கிடைக்கும். அடுத்ததாக வருணலிங்கத்தை வழிபடவேண்டும்.
வருணலிங்கம்:
நீருக்கு அதிபதியான வருணபகவான், அக்னி வடிவமான அண்ணாமலையை முழங்கால் பிரதட்சணமாகவும், ஒற்றைக்கால் பிரதட்சணமாகவும் கிரிவலம் வந்து வழிபட்டார். அப்போது கிரிவல பாதையின் ஒரு இடத்தில் வானம்தொடும் அளவுக்கு நீரூற்று இருந்தது. அந்த புனிதநீரில் நீராடி பின் அண்ணாமலையை மெய்மறந்து வணங்கினார். எதிரில் ஒளிமயமான வடிவில் லிங்கம் காட்சியளித்தது. அந்த லிங்கமே வருணலிங்கம். இங்குவழிபட்டால் கொடிய நோயிலிருந்து விடுதலையும், புகழும் கிடைக்கும். பிறகு பிரம்மன் வழிபாடு செய்து பாவங்களை போக்கி கொண்ட ஆதி அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலை அடி அண்ணாமலையார் என்று அழைப்பர். இங்கு அவசியம் தரிசனம் செய்தல் வேண்டும். அதற்கடுத்து வாயுலிங்கத்தை வழிபடவேண்டும்.

வாயுலிங்கம்
மூச்சுக்காற்றை நிலை நிறுத்தியபடியே வாயுபகவான் கிரிவலம் சென்றார். அப்போது அடிஅண்ணாமலை அருகே சுகந்தமான நறுமணம் வீசியது. அதுவரை மூச்சை நிறுத்தி வலம் வந்த வாயுபகவான் நிலைதடுமாறினார். அங்கு பஞ்சக்ருத்திகா மலர்களின் நடுவே சுயம்பாக லிங்க வடிவில் சிவன் காட்சி அளித்தார். அதுவே வாயுலிங்கம். இக்கோயிலை அடையும்போது இயற்கையாகவே ஒரு அமைதி கிடைக்கும். இங்கு வழிபாடு செய்தால் எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபடலாம். பெண்களுக்கு நல்வழி கிடைக்கும். கண் திருஷ்டி தொல்லைகள் நீங்கும். சிறிது தூரத்தில் குபேரலிங்கத்தை வழிபடலாம்.
குபேரலிங்கம்:
எல்லா செல்வங்களுக்கும் அதிபதியானவர் குபேரன்.  சிவனின் அருள் வேண்டி குதிகால் நடையுடன் குபேரன் கிரிவலம் சென்று வழிபட்டார். அப்போது விஷ்ணுவும், லட்சுமியும் சேர்ந்த சங்குசக்ரபாணிதாரியாக காட்சி கொடுத்த அண்ணாமலையாரை குபேரன் தரிசித்தார். அந்த இடத்தில் சுயம்புவாக தோன்றியதே குபேரலிங்கம். இங்கு இறைவனை வேண்டினால் பொருளாதாரம் உயரும். மன அமைதி கிடைக்கும்.
   அடுத்து இடுக்குப் பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கிருந்து மலையை பார்த்தால் ஐந்து முகங்கள் தெரியும். இது சிவனின் ஐந்து திருமுகங்களை குறிக்கக்கூடியது. இதனை பஞ்ச முக தரிசனம் என்பர். அடுத்து மலை வல பாதையில் இருந்து சுடுகாட்டுக்கு பிரியும் தனிப் பாதையில் சென்றால் ஈசான லிங்கத்தை வழிபடலாம்.
ஈசான்யலிங்கம்:
நாமெல்லாம் சவம். அவன் ஒருவனே சிவம். உடலெல்லாம் சாம்பல் பூசி மயானம் காக்கும் ஈசன், நிலையற்ற வாழ்வை உணர்த்தும் லிங்கமே ஈசான்யலிங்கம். கண்களை மூடியபடி ருத்திர முனிவர் கிரிவலம் சென்றார். அப்போது ஈசான்ய மூலையில் ஒருவரின் அழுகுரல் கேட்டது. அங்கு சென்றபோது ஓர் சுயம்பு லிங்கம் காட்சியளித்தது. கிரிவல பாதையின் கடைசி லிங்கம் இது. இங்கு வழிபாடு செய்தால் மனம்ஒருநிலை அடையும்.  இதனையும் வழிபட்டு, வழியில் உள்ள அம்மணி அம்மாள் மற்றும் ஈசான்ய மடத்தில் ஜீவ சமாதியாக உள்ள ஈசான்ய ஞான தேசிகரையும் வணங்க வேண்டும். 
அதனை அடுத்து எதிரே ஒரு சிறிய விருஷபாரூடர் சன்னதி இருக்கும். அதை கண்டிப்பாக வணங்க வேண்டும். இந்த இடத்தில்தான் உமையம்மைக்கு சிவன் காட்சி அளித்து இடபாகம் தந்தருளினான். மீண்டும் பூதநாராயணர் ஆலயம் அடைந்து தீபம் ஏற்றி வழிபட்டு,  கடைசியாக  எந்தவித இடையூறும் இல்லாமல் அருள் புரிந்த இரட்டைப் பிள்ளையாரையும் வணங்கி வழிபட்டு, பின் அருணாசலேஸ்வரர் ஆலயம் சென்று தரிசித்த பிறகுதான் கிரி வலம் முழுமையடையும்.


திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா:

 திருவண்ணாமலையில் வருடம் முழுதும் திருவிழாக்கள் நடந்துகொண்டே இருக்கும். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் மகாதீப திருவிழா பிரசித்தி பெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்க தமிழகம் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருகின்றனர்.  பத்தாம்நாள் காலை கோவிலில் பரணி தீபம் ஏற்றிய பிறகு  மாலை வேளையில் அண்ணாமலை என அழைக்கப்படும் மலையின் உச்சியில் நெய் தீபம் ஏற்றுவார்கள். மஹா தீபம் ஏற்ற ஆறறை அடி உயரமுள்ள  அர்த்தநாரீஸ்வரர் உருவம்  பொறிக்கப்பட்ட ராட்சத இரும்பு கொப்பரையில் இரண்டாயிரம் கிலோ நெய்யை விட்டு, முப்பது மீட்டர் காடாத் துணியைச் சுருட்டி  திரியாகப் போட்டு அதன் மேல் இரண்டு கிலோ கற்பூரத்தை வைத்து மகா தீபம் ஏற்றப்படும். இது மலையைச் சுற்றி முப்பத்தைந்து கிலோமீட்டர் தூரத்திற்கு தெரியும்.தொடர்ந்து இந்த தீபம் தொடர்ந்து பதினொன்று நாட்கள் எரிந்துக் கொண்டிருக்கும். 

    திருவண்ணாமலை தீபத்தை தரிசிப்போரின் இருபத்து நான்கு தலைமுறைகளுக்கு புண்ணியம் கிடைக்கும் என்று அருணாசல புராணத்தில் கூறப்பட்டுள்ளது.“அருணாசலத்தை கார்த்திகை தீபத்தின் போது கிரிவலம் வருவது இதுவரையில் நாம் செய்த பாபங்கள் நீங்கி  புண்ணியம் கிடைக்கும். 


கிரி வலம் செல்வதால் பலன்கள்:

   சிவராத்திரி, தீபாவளி, கார்த்திகைத் தீபநாள், வருடப்பிறப்பு அன்று அண்ணாமலையைக் கிரிவலம் வருபவர்கள் அதிகப் பலனைப் பெறுவர்.

பௌர்ணமி அன்று அண்ணாமலையைக் கிரிவலம் வரும் பக்தர்களின் துயரங்கள் விலகி ஒளி மிகுந்த எதிர்காலம் நிச்சயம்.அண்ணாமலையைக் கிரிவலம் வரும் பக்தப் பெருமக்கள் பஞ்சாட்சர மந்திரமான“ஓம் நமச்சிவாய” என்று உச்சரித்துக் கொண்டு கிரிவலம் செல்லலாம்.

    நாம் கிரிவலம் சென்று அண்ணாமலையானின் அருள் பெற்று அனைத்து வளங்களும் பெறுவோமாக.

Comments

Popular posts from this blog

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..

உண்மை பக்தி எது ?

ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்...