ஸ்கந்த சஷ்டி விரதம்..!! - ஆரூர் சுந்தரசேகர்.

ஸ்கந்த சஷ்டி விரதம் பற்றி தெரிந்துகொள்வோம்!!

ஆரூர் சுந்தரசேகர்.
               விரதங்களில் வார விரதம், நாள் விரதம், பட்ச விரதம் என்று மூன்று வகைகள் உள்ளன.
       செவ்வாய்,  வெள்ளி, சனி போன்ற நாட்களில் இருக்கும் விரதம் வார விரதம் எனப்படும்.
       மாதத்தின் ஏதாவது ஒரு நாள் உதாரணமாக அமாவாசை, பௌர்ணமி தினத்தில் விரதம் இருப்பது நாள் விரதமாகும்.
       மாதத்தின் இரு நாள்கள் ஏதாவது ஒரு திதியில் உதாரணமாக சஷ்டி, பிரதோஷம் நாள்களில் இருப்பது பட்ச விரதம் எனப்படுகிறது.

 ஸ்கந்த சஷ்டி விரதம் பற்றி தெரிந்துக்கொள்வோம்....

“பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா முருகா வருவாய் அருள்வாய்…………முருகா!”

கந்தப் பெருமான் சூரனை சம்ஹாரித்த பெருமையைக் கொண்டாடுவதே ஸ்கந்த சஷ்டி விரதமாகும்.
        'சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்'  என்ற பழமொழியின் உண்மையான விளக்கமே சஷ்டியில் விரதம் இருந்தால் அகமென்னும் பை சிறப்பாக மாறும் என்பதுதான்.  பெண்கள் சஷ்டியில் விரதமிருந்தால் அவர்களின் அகமென்னும் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதும் ஐதீகம். 

     முக்கிய விரதமான ஸ்கந்த சஷ்டி விரதம் ஐப்பசி மாதம் சுக்கில பட்ச பிரதமை திதி முதல் சஷ்டி திதி வரையிலும் ஆறுநாட்களுக்கு ஸ்ரீ முருகப் பெருமானைக் குறித்து அனுஷ்டிக்கும் விரதமாகும். 

    ஆறுபடை வீடுகளான திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணிகை, பழமுதிர்ச்சோலையிலும், மற்றும் முருகன் குடி கொண்டுள்ள எல்லா கோயில்களிலும் ஸ்கந்த சஷ்டி விரதம் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.


புராணத்தில் ஸ்கந்த சஷ்டி விரதம்:

சூரபத்மனின் ஆணவத்தை அழிப்பதற்கென்றே அவதரித்தவர் முருகக் கடவுள் என்கிறது கந்தபுராணம்.

    சூரபத்மன், சிங்கமுகாசுரன், தாரகாசுரன், கிரௌஞ்சாசுரன் ஆகியோர் கொடுமைகளை தாங்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று  முறையிட்டனர். சிவபெருமான் அசுரர்களுடைய கொடுமையை களைய, தேவர்களை  காத்தருள  தமது நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறிகளைத் தோற்று வித்தார். சிவனிடமிருந்து புறப்பட்ட தீப்பொறிகள் சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்து ஆறு குழந்தைகளாக உருப்பெற்றன. அந்த ஆறு குழந்தைகளை வளர்க்க மகாவிஷ்ணு  ஆறு கார்த்திகை பெண்களை நியமித்தார். கார்த்திகைப் பெண்கள் குழந்தைகளுக்கு  பாலூட்டி, சீராட்டி வளர்த்து வந்தனர். ஒரு நாள்  குழந்தைகளை காண  சிவனும், பார்வதியும் சரவணப் பொய்கைக்கு   சென்றிருந்த போது பார்வதிதேவி  அங்குள்ள  அந்த ஆறு குழந்தைகளையும் எடுத்து அணைத்துக் கொள்ள, அந்த ஆறு குழந்தைகளும்  ஆறு முகங்கள், மற்றும் பன்னிரண்டு கைகளையும் கொண்ட ஒரே உடலைக் கொண்ட  குழந்தையாக மாறியது. இதனால் முருகப்பெருமானுக்கு ஆறுமுகன் என்ற பெயரும் ஏற்பட்டது.  

   முருகப்பெருமான் சூரபத்மனுடன் போரிடும் ஆறாம் நாளில் வீரத்தால் முருகனை வெல்ல முடியாது என்றுணர்ந்த சூரபத்மன்,  மாமரமாகி நின்ற வேளையில், தன் அன்னையிடம் பெற்ற சக்திவேலால் மாமரத்தை இரண்டாகப் பிளந்து, ‘நான்’ என்னும் அகங்காரம் சேவலாகவும், ‘எனது’ என்னும் அகங்காரம் மயிலாகவும் மாறியது. சேவலைக் கொடியாக்கியும், மயிலை வாகனமாக்கியும் ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டார்.
இந்நாளே ஸ்கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. என்று கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. 
     இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.


ஸ்கந்த சஷ்டி விரத முறை :

              ஸ்கந்த சஷ்டி விரதம் இருக்கும் ஆறு நாட்களிலும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து இவ்விரதத்தை இருப்பது ஒருமுறை. அவ்வாறு இயலாதவர்கள் அந்நாட்களில் ஒருமுறை ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் அருந்தலாம்.   உப்பு நீர், எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம் பழச்சாறு, இளநீர் முதலியவற்றை கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அருந்தக்கூடாது. இரவில் பால் பழம் மட்டும் அருந்தலாம் ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள். சஷ்டி அன்று மட்டுமாவது எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. மற்ற தினங்களில் பால், பழம் சாப்பிடலாம். வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மூன்று வேளை உணவு உட்கொண்டு இவ்விரதத்தை மேற்கொள்ளலாம். இந்த விரதத்தின் முக்கியத்துவம் என்னவென்றால் முருக பெருமானை எந்த நேரமும் நினைத்து இருக்க வேண்டுமே தவிர, பட்டினி இருந்து தான் வழிபட வேண்டும் என்ற கட்டாயமில்லை. நம் உடல் வலிமைக்கு ஏற்றவாறு உண்ணாவிரதத்தை மேற்கொள்ளலாம். 

        விரத நாட்களில் அதிகாலையில் எழுந்திருந்து, நீராடி, திருநீறணிந்து முருகப்பெருமானின் விக்கிரகத்தையோ அல்லது படத்தையோ வைத்து முறைப்படி பூஜை செய்ய வேண்டும். வீட்டில் பூஜையை முடித்தபின், கோயிலுக்குச் சென்று வரலாம். ஸ்கந்தசஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டிப்போர்க்கு முருகப்பெருமானது அருள் கிட்டும்.


ஸ்கந்த சஷ்டி விரதத்தில் படிக்க வேண்டியவை:

இவ்விரதத்தின் போது, தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கச்சியப்ப சுவாமிகளின் கந்த புராணம் ஆகியவற்றைப் படிக்கலாம். இதனை  படிப்பதால் மனஅமைதி நிலவும். இதைத்தவிர சுப்பிரமணிய புஜங்கம், சுப்பிரமணிய பஞ்சரத்னம், சண்முக கவசம் முதலான நூல்களை ஆறு நாட்களும் பாராயணம் செய்வது விசேஷம்.


ஸ்கந்த சஷ்டி விரதத்தின் பலன்:

     குடும்பத்தில் ஆண்கள் தங்கள் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு கிடைக்கவும், கடன் தொல்லை நீங்கவும். திருமணமான பெண்கள் குடும்ப நன்மைக்காகவும் குழந்தை வரம் வேண்டியும், கன்னிப்பெண்கள் திருமண வரம் வேண்டியும், மாணவர்கள் கல்விக்காகவும், இந்த விரதத்தை கடைப்பிடிப்பதனால் விரும்பிய பலன்களை பெறலாம் என்பது ஐதீகம்.


திருச்செந்தூரில் ஸ்கந்த சஷ்டி:

ஸ்கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்: திங்கட்கிழமை 28-10-2019

ஸ்கந்தசஷ்டி விரதம் முடிவு (சூரசம்ஹாரம்):  சனிக்கிழமை 2-11-2019

முருகன் திருக்கல்யாணம் : ஞாயிற்றுக்கிழமை 3-11-2019

         சூரசம்ஹாரம்  நடைபெறும் தினத்தில் திருச்செந்தூரில் கடல் நீரானது சம்ஹாரம் நடைபெறுவதற்கு வசதியாக செந்தில் ஆண்டவனின் அருள் கருணையால் உள் முகமாகச் சென்று சூரசம்ஹாரம் முடிந்து செந்தில் ஆண்டவர் இருப்பிடம் திரும்பும் போது  கடலானது பழைய நிலைக்கு வருவதை காண முடிவதுடன் கருவறையில் உள்ள மூலவரின்  முகத்தில் சூரசம்ஹார களைப்பினால் ஏற்பட்ட வியர்வைத் துளிகளையும் காணலாம்


சுப்ரமணிய காயத்ரி :

`ஓம் தத் புருஷாய வித்மஹே
மஹா ஸேனாய தீமஹி
தந்நோ ஷண்முக: ப்ரசோதயாத்’     

 முருகப் பெருமானுக்குரிய இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி, அவரை வழிபட்டு வந்தால் முருகனின் அருள் கிட்டும்.

Comments

Popular posts from this blog

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..

உண்மை பக்தி எது ?

ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்...