நவக்கிரக வழிபாடும் நற்பலன்களும்...
நவக்கிரக வழிபாடும் நற்பலன்களும்...
ஆரூர் சுந்தரசேகர்.
மனிதனுடைய ஒவ்வொரு செயலும் நவகிரகங்களின் ஆட்சியின் ஆளுகைக்கு உட்பட்டுத்தான் நடைபெறுகிறது.
நவகிரகங்களாகிய சூரியன்,சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய ஒன்பது கிரகங்கள் மனித இனத்துடனும் பூமியுடனும் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டவை. இவைகளை நாம் நவகிரகங்கள் அல்லது நவ கோள்கள் என்று கூறுகிறோம். (நவ என்றால் ஒன்பது என்று பொருள்). மனித வாழ்வில் பெரும் பங்கு பெறுவது இந்த நவ கிரகங்கள். கிரகங்கள் விண்ணில் இருந்து தனக்கென குறிப்பிடப்பட்டுள்ள பாதையில் காலம் தவறாமல் சஞ்சரிக்கின்றன. இவைகளின் சஞ்சாரத்தால் சீதோஷ்ண நிலையில் மாறுதல்கள் ஏற்படுகின்றன. இந்த சீதோஷ்ண மாறுதல்களினால் பருவ நிலை மாற்றங்கள் உண்டாகின்றன.
நவக்கிரகங்களின் தன்மைகளும், காயத்ரியும்:
கிரகம் 1: சூரியன் (ஞாயிறு)
நவகிரகங்களில் முதன்மையானது சூரியன்.
கிழக்குத் திசை சூரியனுக்கு உரியது. அக்னி இவருக்கு அதி தேவதை. மாணிக்கம் உகந்த ரத்தினம். ஏழு குதிரைகள் பூட்டிய ரதமே சூரியனின் வாகனம். சூரிய பகவான் இருகரங்களில் தாமரை ஏந்தி, வலம் புறம் உஷா தேவி, இடது புறம் சாயா தேவி என இரு மனைவியருடன் ஒற்றைச் சக்கரம் கொண்ட தேரில் வேதத்தின் ஏழு சந்தங்களை ஏழு குதிரைகளாகக் கொண்டு பவனி வருகிறார்.
மேலும் சூரியனை நடுநாயகமாகக் கொண்டே மற்ற கிரகங்கள் தங்களின் இருப்பிடங்களை அமைந்து கொண்டுள்ளன.
இவருக்கு உரிய மலர் செந்தாமரை.
நிறம் சிவப்பு,
உலோகம்: தாமிரம்.
இவருக்கு உகந்த நாள் ஞாயிற்றுக்கிழமை,
தானியம்: கோதுமை
மரம்-உருத்திராட்ச மரம்
சமித்து: வெள்ளெருக்கு
ஸ்தலம்: சூரியனார் கோவில்.
சூரிய காயத்ரி :
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்
கிரகம் 2: சந்திரன் (திங்கள்)
நவகிரகங்களில் இரண்டாவது சந்திரன். தென் கிழக்குத் திசை சந்திரனுக்குரியது. பார்வதி தேவி இக்கிரகத்தின் அதி தேவதை ஆவார். முத்து உகந்த ரத்தினம். வெள்ளை குதிரையே இவருடைய வாகனம் சந்திரனின் மனைவி -ரோகிணி
இவருக்கு உரிய மலர் வெள்ளரளி.
நிறம் : வெள்ளை.
உலோகம்: ஈயம்.
இவருக்கு உகந்த நாள் திங்கள் கிழமை,
தானியம்: பச்சரிசி,
மரம்-வேப்ப மரம்
சமித்து: முருங்கை
ஸ்தலம்: திங்களூர்
சந்திர காயத்ரி :
ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி
தந்நோ சந்திர ப்ரசோதயாத்
கிரகம் 3: அங்காரகன் (செவ்வாய்)
நவகிரகங்களில் மூன்றாவது கிரகம் செவ்வாய் . தெற்கு திசை செவ்வாய் கிரகத்திற்கு உரியது. பூமாதேவி இக்கிரகத்தின் அதி தேவதை ஆவார். பவழம் உகந்த ரத்தினம். ஆட்டுக்கடா இவருடைய வாகனம். அங்காரகன் மனைவி சக்தி தேவி இவருக்கு உரிய மலர் செண்பகம்,
நிறம் : சிவப்பு.
உலோகம்: செம்பு.
இவருக்கு உகந்த நாள் செவ்வாய் கிழமை,
தானியம்: துவரை.
மரம்-வில்வ மரம்.
சமித்து: கருங்காலி
ஸ்தலம்: வைதீஸ்வரன் கோவில்.
செவ்வாய் (அங்காரக) காயத்ரி :
ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ அங்காரக: ப்ரசோதயாத்
கிரகம் 4: புதன்
நவகிரகங்களில் நான்காம் கிரகம் புதன். வட கிழக்கு திசை புதனுக்கு உரிய திசை. விஷ்ணு இக்கிரகத்தின் அதி தேவதை ஆவார். மரகதம் உகந்த ரத்தினம். குதிரையே இவருடைய வாகனம். புதனின் மனைவி - ஞானசக்தி.
இவருக்கு உரிய மலர் வெண்காந்தல்.
நிறம் : பச்சை ,
உலோகம்: பித்தளை.
இவருக்கு உகந்த நாள் புதன் கிழமை.
தானியம்: பச்சைபயிர்,
மரம்-ஆல மரம்
சமித்து: நாயுருவி.
ஸ்தலம்: திருவெண்காடு.
புத காயத்ரி :
ஓம் கஜத் வஜாய வித்மஹே ஸுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத ப்ரசோதயாத்
கிரகம் 5 : குரு (வியாழன்)
நவகிரகங்களில் ஐந்தாம் கிரகம் குரு. வடக்கு திசை குருவின் திசை.பிரம்மா இக்கிரகத்தின் அதி தேவதை ஆவார்.
பொன் உகந்த ரத்தினம். அன்னம் இவருடைய வாகனம். குருவின் மனைவி - தாராதேவி.
இவருக்கு உரிய மலர் வெண்முல்லை.
நிறம் : மஞ்சள்.
உலோகம்: பொன்.
இவருக்கு உகந்த நாள் வியாழக்கிழமை.
தானியம்: கொண்டை கடலை.
மரம்-சந்தன மரம்.
சமித்து: அரசு.
ஸ்தலம்: தென் குடித்திட்டை
குரு காயத்ரி :
ஓம் விருஷபத்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்
கிரகம் 6: சுக்கிரன் (வெள்ளி)
நவகிரகங்களில் ஆறாவது கிரகம் சுக்கிரன். கிழக்குத் திசை சுக்கிரனுக்கு உரிய திசையாகும். இந்திராணி இக்கிரகத்தின் அதி தேவதை ஆவார். வைரம் உகந்த ரத்தினம். கருடன் இவருடைய வாகனம். சுக்கிரன் மனைவி -சுகீர்த்தி.
இவருக்கு உரிய மலர் வெண் தாமரை.
நிறம் : வெள்ளை.
உலோகம்: வெள்ளி.
இவருக்கு உகந்த நாள் வெள்ளிக் கிழமை.
தானியம்: மொச்சை.
மரம்-அத்தி மரம்.
சமித்து: அத்தி.
ஸ்தலம்: கஞ்சனூர்
சுக்ர காயத்ரி :
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்
கிரகம் 7: சனி
நவகிரகங்களில் ஏழாம் கிரகம் சனி. மேற்கு திசை சனி கிரகத்திற்கு உரியது. யமன் இக்கிரகத்தின் அதி தேவதை ஆவார். நீலம் உகந்த ரத்தினம். காகம் இவருடைய வாகனம்
சனியின் மனைவி -நீலாதேவி.
இவருக்கு உரிய மலர் கருங்குவளை.
நிறம் : கருப்பு.
உலோகம்: இரும்பு.
இவருக்கு உகந்த நாள் சனிக்கிழமை.
தானியம்: எள்.
மரம்-வன்னி மரம்.
சமித்து: வன்னி
ஸ்தலம்: திருநள்ளாறு
சனி காயத்ரி :
ஓம் காகத் வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த ப்ரசோதயாத்
கிரகம் 8: ராகு
நவகிரகங்களில் எட்டாவது கிரகம் ராகு. தென்மேற்கு திசை ராகுவுக்கு உரியது. பசு இக்கிரகத்தின் அதி தேவதை.
கோமேதகம் உகந்த ரத்தினம். ஆடு இவருடைய வாகனம். ராகுவின் மனைவி -சிம்ஹி.
இவருக்கு உரிய மலர் மந்தாரை.
நிறம் : கரு நிறம்.
உலோகம்: கருங்கல்.
இவருக்கு உகந்த நாள் ஞாயிற்றுக் கிழமை.
தானியம்: உளுந்து.
மரம்-மருத மரம்.
சமித்து: அருகு.
ஸ்தலம்: ஸ்ரீ காளஹஸ்தி, திருநாகேஸ்வரம்,
ராகு காயத்ரி :
ஓம் நகத்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத்
கிரகம் 9: கேது
நவகிரகங்களில் ஒன்பதாம் கிரகம் கேது. வடமேற்கு திசை கேதுவுக்குரியது. சித்திரகுப்தன் இக்கிரகத்தின் அதி தேவதை ஆவார். வைடூரியம் உகந்த ரத்தினம். சிங்கம் இவருடைய வாகனம். கேதுவின் மனைவி - சித்ரலேகா,
இவருக்கு உரிய மலர் செவ்வல்லி.
நிறம் : சிகப்பு.
உலோகம்: கருங்கல்.
இவருக்கு உகந்த நாள் ஞாயிற்றுக் கிழமை.
தானியம்: கொள்ளு.
மரம்-மா மரம்
சமித்து: தர்ப்பை.
ஸ்தலம்: ஸ்ரீ காளஹஸ்தி, கீழ்பெரும்பள்ளம்.
கேது காயத்ரி :
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேது ப்ரசோதயாத்
நவக்கிரகங்களை வணங்கும் முறை:
நவகிரகங்களைப் சுற்றி வழிபடும் போது முதலில் ஒன்பது முறை சுற்றி வணங்கிய பின் அந்தந்த கிரகத்தின் அனுக்கிரகத்துக்காக பின்வரும் எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும்.
சூரியன் – 10 சுற்றுகள்
சுக்கிரன் – 6 சுற்றுகள்
சந்திரன் – 11 சுற்றுகள்
சனி – 8 சுற்றுகள்
செவ்வாய் – 9 சுற்றுகள்
ராகு – 4 சுற்றுகள் அடிப்பிரதட்சிணம்
புதன் – 5, 12, 23 சுற்றுகள்
கேது – 9 சுற்றுகள்
வியாழன் – 3, 12, 21 சுற்றுகள்
நவகிரகங்களை நேருக்கு நேராக நின்று வணங்க கூடாது. மற்றும் விக்கிரகத்தை தொட்டு வணங்குவது கூடாது.
பின்பு திருஞான சம்பந்தர் இயற்றிய கீழ்கண்ட ஒன்பது கோள்களையும் போற்றி துதிக்கின்ற இந்த கோளறு பதிக ஸ்தோத்திரத்தை நவகிரகங்களை சுற்றிய பிறகு கோயில் பிராகாரத்தில் அமர்ந்து, மனதிற்குள் பாராயணம் செய்தால் நவகிரக தோஷங்கள் விலகும்.
நவகிரக ஸ்தோத்திரம்
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
நவக்கிரகங்களை வணங்குவதால் பலன்கள் :
சூரியனை வழிபடுவதால் வாழ்வில் மங்களமும், ஆரோக்கியமும் கிடைக்கும்.
சந்திரனை வணங்குவதினால் புகழ் கிடைக்கும்.
செவ்வாயை (அங்காரன்) வழிபடும் போது தைரியம் அதிகரிக்கும்.
புதனை வழிபடுபவர்களுக்கு நற்புத்தி கிடைக்கும்; அறிவாற்றல் பெருகும்.
குரு பகவானை (வியாழன்) வணங்கும் அனைவருக்கும் செல்வமும் புத்திர பாக்கியமும் கிடைக்கும்.
சுக்கிரனை வணங்குபவர்களுக்கு நல்ல மனைவி அமையும், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.
சனி பகவான் வழிபடுவதால் ஆயுள் பலம் பெறும்.
ராகுவை வணங்குவதினால் பயணத்தால் நன்மை கிடைக்கும்.
கேதுவை வணங்குவதினால் ஞானம் பெருகும்; மோட்சம் கிடைக்கும்; ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.
கிழமைக்கு ஏற்றவாறு அந்தந்த கிரகத்துக்கு உரிய கடவுளை வணங்கும்போது கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
நவகிரக ஹோமம்:
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் வானியல் சாஸ்திரம், ஜோதிடம் போன்ற கலைகளைக் கொண்டு கிரகங்கள், நட்சத்திரங்கள் பற்றி ஆராய்ந்து நவகிரகங்களின் பலன்களை பெற முன்னோர்கள் கடைபிடித்த பூஜை முறை தான் நவகிரக ஹோமம்.
நவகிரகங்கள் பூமிக்கு ஒவ்வொரு கோணத்தில் இருக்கும் நிலையே ஜாதகத்தில் கிரக பெயர்ச்சி எனப்படுகிறது. கிரகங்களின் நிலை பொறுத்து நன்மை மற்றும் தீமையான பலன்கள் நமக்கு உண்டாகின்றன. கிரகங்களின் பாதகமான தாக்கம் நமக்கு ஏற்படாமல் இருக்க, அக்னி வேள்வி செய்வது நவகிரக ஹோமம் ஆகும்
நவகிரஹ ஹோம பூஜை செய்து கொள்வதால் நமக்கு நவகிரகங்களின் தோஷங்கள், காரிய தடைகள் நீங்கும். நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறும். திருமண தடை மற்றும் தாமதங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும். கல்வியில் பின் தங்கியிருக்கும் குழந்தைகள் கல்வி, கலைகளில் சிறந்து விளங்குவார்கள். தொழில், வியாபாரங்களில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் பெருகும். வீட்டில் வறுமை நிலை அண்டாத வளங்கள் பெருகும்.
நவகிரக தோஷங்களுக்கு என்ன தானம் தரலாம்:
முன் ஜென்ம கர்ம வினைகளால் கிரக தோஷங்கள் ஏற்படுகின்றன. அந்த தோஷங்களை போக்க கிரகங்களுக்கு பிடித்த தானியங்களை தானமாக தரலாம்.
கோதுமை தானம்:
சூரிய பகவானால் கிரக பாதிப்பு ஏற்பட்டு, தோஷம் என்றால், கோதுமையால் செய்த உணவுகளை ஞாயிற்றுக்கிழமையில் தானம் செய்துவர நன்மைகள் நம்மை வந்து சேரும். மற்றும் குதிரைக்கு உணவளிப்பதன் மூலம் தோஷம் நிவர்த்தியாகும்.
பச்சரிசி தானம்:
சந்திர பகவானால் கிரக பாதிப்பு ஏற்பட்டு, தோஷம் என்றால், பச்சரிசியில் செய்த உணவுகளை திங்கட்கிழமையில் தானம் செய்துவர நன்மை கிடைக்கும். இதைத்தவிர கோவில் குளங்களில் இருக்கும் மீன்களுக்கு பொரி போடலாம்.
துவரை தானம்:
செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாய் பகவானுக்கு பிடித்த தானியமான துவரையால் செய்த உணவுகளை தானம் செய்யலாம். ஆடுகளுக்கு உணவு கொடுப்பதன் மூலம் கெட்ட வினைகள் குறையும். மேலும், குரங்குகளுக்கும் தானியங்கள், பழ வகைகளை வழங்கலாம்.
பச்சைப்பயறு தானம்:
புதன் திசை பிரச்சினை உள்ளவர்கள், புதனின் தானியமான பச்சைப்பயறு சுண்டல் செய்து தானம் தர நன்மை உண்டாகும். தங்கள் வீட்டின் மேல் கூரையில் பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வைக்கலாம்.
கொண்டைக்கடலை தானம்:
குரு பகவானின் தானியம் கொண்டைக்கடலை இதை வியாழக்கிழமைகளில் தானம் வழங்கினால், நன்மை உண்டாகும். திருமணம், புத்திர சந்தானம், நல்ல வேலை, தொழில், உயர் கல்வி என அனைத்தையும் நிறைவேற்றித்தருவார்.
மொச்சைப் பயறு:
சுக்ரனால் ஏற்படும் பிரச்சினைகள் நீங்க சுக்கிரனின் தானியமான வெள்ளை மொச்சைப் பயறு சுண்டல் செய்து வெள்ளிக்கிழமை தோறும் தானம் தர செல்வ வளம் பெருகும். புறா உள்ளிட்ட பறவைகளுக்கு தானியங்களை உணவாக வைக்கலாம்.
எள் தானம்:
எள் கலந்த உணவை சனிக்கிழமைகளில் தானம் தர நன்மை பெருகும்.
காகத்திற்கு எள் கலந்த உணவை தானம் தர சனிபகவானின் அற்புத பலன்கள் நம்மை வந்தடையும்.
உளுந்து, கொள்ளு தானம்:
ராகு - கேதுவால் ஏற்படும் பிரச்சினைகள் குறைய
ராகுவிற்கு பிடித்த தானியமான கருப்பு உளுந்து பருப்பில் செய்த உணவை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தானம் தர நன்மைகள் வந்து சேரும். நாய்களுக்கு உணவளிப்பது, எறும்புகளுக்கு சர்க்கரை, மாவுப்பொருட்களை உணவாக அளிப்பது நல்ல பலன்களைத் தரும்... கேதுவிற்கு பிடித்த தானியமான கொள்ளு கலந்த உணவை சனிக்கிழமைகளில் தானம் தர தடைகள் அனைத்தும் நீங்கி நல்லதே நடக்கும்.
நவகிரகங்களை வழிபடுவோம்! நற்பலன்களை பெறுவோம்!!
Comments
Post a Comment