இருளை நீக்கி ஒளியைப் தரும் தீபாவளி...

இருளை நீக்கி ஒளியைப் தரும் தீபாவளி...
ஆரூர் சுந்தரசேகர்.
      தீபாவளி பண்டிகை இந்து மதத்தின் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இந்தியா உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இது வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாகும்.
      இந்தியா மட்டுமின்றி, நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிஜி போன்ற நாடுகளில் தீபாவளி பண்டிகை அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். மலேசியா,  சிங்கப்பூர் வாழும் இந்தியர்களும், தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.
தீபம் + ஆவளி =தீபாவளி
  “தீபம்” என்றால் ஒளி , விளக்கு . “ஆவளி” என்றால் வரிசை . வரிசையாய் விளக்கேற்றி ஒளிதரும் பண்டிகையே தீபாவளி ஆகும் . தீபத்தில் பரமாத்மாவும் , நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம்.

புராணங்கள் கூறும் தீபாவளி:
     இராவணனை அழித்து விட்டு  சீதாதேவியை மீட்ட இராமர் தமது பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, மனைவி சீதையுடனும் சகோதரன் இலக்ஷ்மணனுடன் அயோத்தி திரும்பிய நாளை,அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இராமாயண இதிகாசத்தில் தீயவை அழிந்து நல்லவை பெற்றதன் நினைவாக தீபாவளி பண்டிகை   கொண்டாடப்படுகிறது.
   அதே போல் மக்களுக்கு பல்வேறு இன்னல்களை கொடுத்த நரகாசுரனை கிருஷ்ணன் வதம் செய்தார். அப்போது நரகாசுரன் இறக்கும் போது கிருஷ்ணனிடம், தான் இறக்கும் இந்த நாளை மக்கள் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க விளக்குகளில் தீபம் ஏற்றி தீபாவளியாக பண்டிகையாகக் கொண்டாடி வருகிறோம்.
    சிவபெருமானின் திருவருளை உணர்ந்து இருபத்தொரு நாட்கள் கேதாரகெளரி விரதம் இருந்து சிவனுடன் பராசக்தி இணைகிறார். இந்த விரதம் முடிவுற்ற அத்தினத்தில் சிவன் தன்னில் ஒரு பாதியை சக்தியாக ஏற்று அர்த்தநாரீஸ்வரர் உருவ மெடுக்கிறார். இவ்வாறு ஆணில் பெண் சரிபாதியாக இணையும் நாளினை தீபாவளி என ஸ்கந்தபுராணம் கூறுகிறது.
   மகாவிஷ்ணு, மகாலக்ஷ்மியின் திருமண நாளை தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்றும் புராணம் கூறுகிறது.

சரித்திரத்தில் தீபாவளி:
   இந்தியாவில் கி.பி.ஆயிரத்து நூறாம் ஆண்டிலேயே தீபாவளி கொண்டாடும் பழக்கம் இருந்திருப்பதாக சில வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. 
   கி.பி. 1117ல் வாழ்ந்த சாளுக்கிய மன்னன் ஆண்டு தோறும் சாத்யாயர் எனும் அறிஞருக்கு தீபாவளிப் பரிசு வழங்கியதாக கன்னட கல்வெட்டு ஒன்றும் கிடைத்துள்ளது. 
  கி.பி.1250ல் எழுதப்பட்ட லீலாவதி எனும் மராட்டிய புத்தகத்தில் எண்ணெய் தேய்த்து நீராடுவதை பற்றிய குறிப்புக்களும் உள்ளன.
   சந்திர குப்த விக்ரமாதித்தன் தீபாவளி திருநாள் அன்று அரியணை அமர்ந்ததாக சரித்திரம் கூறுகிறது.

இந்தியாவில் தீபாவளி பண்டிகை:
    இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் தீபாவளி பண்டிகை ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படுகிறது. 
    தமிழ்நாட்டில் தீபாவளி ஒருநாள் மட்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
     வட இந்தியாவில் தீபாவளித் திருநாள் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. 
  முதல் நாளை நரக சதுர்தசியாக கொண்டாடுகிறார்கள். தீய சக்திகள் அழிந்து (அதாவது நரகாசுகரன் அழிந்த நாள்) வாழ்வில் வளம் பிறக்கும் நாளாக இது கொண்டாடப்படுகிறது.
    தீபாவளி தினமான இரண்டாம் நாள் அமாவாசை தினம். இந்த நாளில் லட்சுமி தேவியை வணங்குகிறார்கள்.
    மூன்றாம் நாளில் கார்த்திகை சுத்த பதயாமி தினமாக கொண்டாடப்படுகிறது.
     நாலாவது நாள் யம திவிதியை தினமாக கொண்டாடுகிறார்கள். அதாவது அன்றைய தினம் பெண்கள் தங்களது சகோதரர்களுக்கு புத்தாடைகள் கொடுத்து வணங்கி, ஆசிர்வாதம் பெறும் தினம் இது.
    சீக்கியர்கள் 1577- இல் இத்தினத்தில் , தங்கக் கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர் .
      மகான் மகாவீரர் முக்தி அடைந்த புனித தினத்தை சமணர்கள் நினைவுபடுத்தி கொள்ளும் நாளே தீபாவளி.
   இப்படி ஒவ்வொரு விதமாக இந்தியாவின் ஒவ்வொரு பகுதி மக்களும் கொண்டாடுகின்றனர்.

கங்கா ஸ்நானம்:
     தீபாவளி தினத்தன்று சாதரண நீரையும் கங்கையாக பாவித்து நாம் நீராடும் போது, எல்லா தோஷங்களும் நீங்கி, நம் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும். எண்ணெயில் திருமகளும், வெந்நீரில் கங்கையும் அன்று ஒன்று சேர்வதால், அன்று எண்ணெய்க் குளியல் செய்பவர்க்கு கங்கையில் மூழ்கி நீராடியது போன்ற புனிதப்பயன் கிட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அதை முன்னிட்டே தொன்று தொட்டு பல ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வந்தாலும், இன்றும் மற்ற பண்டிகைகளின் போது, கேட்கப் படாத கேள்வியாக தீபாவளி திருநாளில் மட்டுமே, “கங்கா ஸ்நானம் ஆனதா” என்று கேட்கும் வழக்கம் தொடர்ந்து  கொண்டே வருகிறது

லக்ஷ்மி குபேர பூஜை !
   தீபாவளி அன்று செல்வம் பெருக்கும்  லக்ஷ்மி குபேர பூஜை செய்தால் நம் இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது ஐதீகம். 
   இந்த ஆண்டு (2019) தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 27ம் தேதி அதாவது விகாரி ஆண்டு ஐப்பசி 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது.

Comments

Popular posts from this blog

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..

உண்மை பக்தி எது ?

ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்...