பயத்தை போக்கும் பைரவர் வழிபாடு !!
பயத்தை போக்கும் பைரவர் வழிபாடு !!
ஆரூர். சுந்தரசேகர்.
பைரவர் என்றாலே பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்று பொருள். சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில் ஒரு வடிவம் பைரவர் வடிவமாகும். இவர் வைரவர் என்றும் அழைக்கப்படுகிறார். பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள்.
ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்குப் பகுதியில் தனிச்சன்னிதியில் காலபைரவர் எழுந்தருளி இருப்பார். சில கோவில்களில் சூரியன், பைரவர், சனி பகவான் என்ற வரிசையில் காட்சி தருவதும் உண்டு.
காலையில் கோயில் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்று “பார்த்த நித்ய பூஜா விதி” கூறுகிறது. கோயிலின் மற்ற சன்னதிகளை பூட்டி சாவியை பைரவர் பாதங்களில் வைத்து விட்டு அதன்பின் வெளிக் கதவை பூட்டிச் சாவியை எடுத்துச் செல்லும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது. பாதுகாப்பற்ற இந்நாளில் சில கோவில்களில் இப்படி சாவிகளை வைப்பதைத் தவிர்த்து பூஜை முடிந்தவுடன் அடையாளமாக கைமணியையும் அபிஷேக கலசத்தையும் வைத்துவிட்டு செல்கின்றனர்.
பைரவர் தோன்றிய வரலாறு:
அந்தகாசுரன் என்னும் அரக்கன் மூவுலகையும் கொடுமைப்படுத்தத் தொடங்கினான். அந்தகம் என்றால் இருள். தன் சக்தியால் பிரபஞ்சம் முழுமையையும் இருளாக்க, அஞ்சிநடுங்கிய தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானிடம் தஞ்சமடைந்தனர். அப்போது அவர்களுக்கு அபயம் அளித்த சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணில் இருந்து தன் சக்தியாக பைரவரைப் படைத்தார். பைரவர் இந்த உலகின் ஒளியாகி எண் திசைகளிலும் நின்று ஒளிகொடுத்தார். அப்படி எண் திசைகளிலும் நின்று ஒளிகொடுத்து அந்தகாசுரன் அழித்தவர்களே ‘அஷ்ட பைரவர்கள்' எனப்படுகிறார்கள்.
பிரம்மனுக்கு ஆரம்பத்தில் ஐந்து தலைகள் இருந்தன. உலக உயிர்களையெல்லாம் நாம் தானே படைக்கிறோம் என்றஅகந்தைகொண்டார். பிரம்மனின் அகந்தை அடங்க சிவபெருமானின் அம்சமாகத் தோன்றிய பைரவ மூர்த்தி பிரம்மனின் நடுச்சிரத்தை நக நுனியால் கிள்ளி எடுத்தவுடன் சிவபெருமான் பைரவனிடம் 'நீ பிரம்மாவின் தலையைத் துண்டித்ததினால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் போக, பிரம்மாவின் தலையை ஏந்திக் கொண்டு மூவுலகையும் சுற்றி காசியை அடையுமாறு ' கூறினார். அதன்படி பைரவரும் மூவுலகங்களிலும் அலைந்து காசிக்கு வந்தார். காசியின் எல்லையை மிதித்த உடனேயே பைரவரின் கையில் உள்ள பிரம்மனின் அந்த கபாலம் தெறித்து விழுந்தது. அத்துடன் அவரின் பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது.பிறகு பைரவர் காசியிலேயே நிரந்தரமாகத் தங்கி காலபைரவராக பக்தர்களுக்கு அருள் புரிந்து கொண்டிருக்கிறார். இதன் காரணமாகத் தான் காசியில் இறந்தவர்களுக்கு மோட்சம் கிடைக்க அங்கே உள்ள கால பைரவரை அனைவரும் வணங்குகின்றனர். பைரவர் உருவங்களில் பல உண்டு என்றாலும் பிரதானமானவராகக் கருதப்படுபவர் கால பைரவர் தான்.
காசியில், காலபைரவருக்கு வழிபாடுகள் முடிந்த பிறகே காசி விஸ்வநாதருக்கு வழிபாடுகள் நடைபெறும் காசியாத்திரை செல்பவர்கள் கூட இறுதியில் காலபைரவரை தரிசித்தால்தான் காசி யாத்திரை பூரணம் அடைவதோடு அந்த யாத்திரையின் பலமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மற்றும் கால பைரவரின் புனித ரட்சையை (காசிக்கயிறு) பக்தர்கள் அணிந்து கொண்டு எவ்வித அச்சமும் இல்லாதவர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.
இருளையும் அகந்தையையும் அழிப்பவர் பைரவர் என்பதால் பைரவ வழிபாடு செய்பவர்களுடைய குறைகள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல மறையும்.
பிறகு அகந்தை நீங்கிய பிரம்மனும் பைரவரை வணங்கித் தன் பிழை பொறுக்குமாறு வேண்டினார்.
பைரவரின் உருவ அமைப்பு:
பைரவர் நீலநிற மேனியராய் சிலம்பொலிக்கும் திருவடிகளை உடையவராய், பாம்புகள் பொருந்திய திருஅரையும், கபால மாலைகள் புரளும் திருமார்பும், சூலம், மழு, பாசம், உடுக்கை இவைகள் ஏந்திய திருக்கரங்களையும் சிவபெருமான் போன்றே மூன்று கண்களையும், இரண்டு கோரைப்பற்களையும், செஞ்சடையுடன், கோபச் சிரிப்பும், உக்கிர வடிவமும் உடையவராய் காட்சியளிப்பார் என்று பைரவரின் தோற்றத்தை புராணங்கள் கூறுகின்றன. உடற்பற்றை நீக்கியபடியால் பைரவர் நிர்வாண கோலத்துடன் காட்சியளிக்கின்றார். பைரவர் ஸ்வானம் என்று அழைக்கப்படுகின்ற நாயை வாகனமாகக் கொண்டுள்ளார்.
பைரவர் வழிபாடு:
சிவபெருமான், கால பைரவராக அவதரித்த நாளே கால பைரவாஷ்டமி என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவரை வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். அதிலும் அவர் அவதரித்த கால பைரவாஷ்டமி நாளில் அவரை வணங்குவது, சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்களில் கலந்து கொள்வது சகல வித செல்வங்களையும் அள்ளித்தரும். சொர்ண கமல ரேகை அமைந்திருக்கும் சொர்ணாகர்ஷண பைரவ மூர்த்தியை வணங்குவது இன்னும் சிறப்பானது. ஸ்ரீ ஸ்ரீ பகவத்பாதாள் ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த பைரவ வழிபாடு தொன்மையான பிணி தீர்க்கும் வழிபாடு. பைரவருக்கு ராகு காலத்தில் பூஜை செய்வது மிகவும் சிறப்பானது. பொதுவாக சிவாலயங்களில் காணப்படும் கால பைரவரை எந்த நேரத்தில் வழிபட்டாலும் அவர் அருள் நிச்சயம் கிட்டும்.
பைரவர் பன்னிரெண்டு ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர். நவக்கிரகங்களையும், நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்துபவரும் இவரே என நூல்கள் விவரிக்கின்றன.
பைரவர் வழிபாடும், பரிகாரங்களும்:
வெள்ளிக்கிழமை, ராகு கால நேரத்தில் பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்து, வடை மாலை சாற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமண பாக்கியம் விரைவில் கைகூடும்.
தொடர்ந்து ஆறு தேய்பிறை அஷ்டமி தினங்கள் சிவாலயங்களுக்குச் சென்று, பைரவ மூர்த்திக்கு செவ்வரளி மாலை சாற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
பைரவர் சந்நிதியில் நெய் தீபம் ஏற்றி வைத்து மனமுருகிப் பிரார்த்தித்து அர்ச்சனை செய்து வழிபட்டால், இழந்த பொருள் மற்றும் சொத்துகள் திரும்பக் கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை மாலை வேளையில், வில்வ இலைகள் மற்றும் வாசனை மலர்களால் பைரவரை அர்ச்சனை செய்து வழிபட்டால் வறுமை அகலும்.
ஞாயிற்றுக்கிழமை ராகுகாலம், தேய்பிறை அஷ்டமி ஆகிய தினங்களில் பைரவருக்கு நடைபெறும் வழிபாடுகளில் கலந்துகொண்டு, பைரவருக்கு மஞ்சள் மற்றும் சந்தன அபிஷேகம் செய்து , எலுமிச்சைமாலை அணிவித்து அர்ச்சனை செய்தால் உடலில் உள்ள நோய்கள் தீரும்.
சனிக்கிழமைகளில் பைரவருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், சனி கிரகத்தால் ஏற்படும் அனைத்துவிதமான தோஷங்களும் விலகும்.
கால பைரவர் காயத்ரீ:
“ச் வாந வாஹனாய வித்மஹே சத்ரு நாசநாய தீமஹி
தன்னோ கால பைரவ ப்ரசோதயாத்”.
பைரவரை தேய்பிறை அஷ்டமி தினத்தன்று பைரவருக்குரிய காயத்ரி மந்திரத்தை துதித்து வணங்குபவர்களுக்கு உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். எதிரிகளால் ஏற்படும் தொந்தரவுகள் நீங்கும். துஷ்ட சக்திகளின் பாதிப்புகள் அகலும். ஆபத்துகளை அறவே நீங்கும். டதொழில், வியாபாரங்களில் நஷ்ட நிலை நீங்கி லாபங்கள் பெருகும். பணம் பொருள் ஆகியவற்றின் சேமிப்பு அதிகரிக்கும். நல்ல முறையில் திருமணம் விரைவில் நடைபெறும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.
சொர்ணாகர்ஷண பைரவர்:
நேர்மையான வழியில் செல்வச் செழிப்பை அடைய உதவுவதே ஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் வழிபாடு ஆகும். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வறுமை அகலவும், செல்வம் சேரவும் சொர்ணாகர்ஷண பைரவர் அருள்புரிகிறார். இவர் அமர்ந்த நிலையில் தன்மடியில் பைரவியை அமர்த்திக்கொண்டு, ஒரு கையில் அமுத கலசமும், இன்னொரு கையில் சூலமும் ஏந்தியிருப்பார். தலையில் வைர கிரீடம், பட்டு வஸ்திரம் அணிந்து தம்பதி சமேதராக காட்சி தருவார். இவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறந்த பலனைக் கொடுக்கும். இந்த பைரவரை, வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வரும் அஷ்டமி அல்லது பவுர்ணமி நாளில் வழிபாடு செய்தால் சகல சௌபாக்கியங்களும், பொன், பொருளும் சேரும்.
அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகளும் நீங்கும்.
இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசுநெய் இவற்றினை தனித்தனி தீபமாக ஏற்றி வர நல்ல பலன் கிடைக்கும். பக்தியுடன் சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து, தினந்தோறும் தூபதீபம்காட்டி வழிபட்டு வந்தால் வீட்டில் செல்வச்செழிப்பு ஏற்படும்.
Comments
Post a Comment