ஞானகுரு தட்சிணாமூர்த்தியும், நவக்கிரக குருபகவானும்...

ஞானகுரு தட்சிணாமூர்த்தியும், நவக்கிரக குருபகவானும்...
ஆரூர்.சுந்தரசேகர்.
   ஸனகாதி முனிவர்களுக்கு வேத ஆகமங்களின் பொருளை உபதேசிக்கும் குருவாக சிவபெருமானே தட்சிணாமூர்த்தியின் வடிவு எடுத்து கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து காட்சியளிக்கிறார். இவரை ஆதிகுரு என்றும் ஞானகுரு என்றும் அழைக்கப்படுகிறார்.
    நவகிரகங்களில் சுப கிரகமானவர் குரு பகவான். நவகோள்களில் குரு என்ற வியாழனாக இருந்து உயிர்களுக்கு முன்ஜென்மங்களில் செய்த நல்வினை, தீவினைகளுக்கு ஏற்ப பலன்களை கொடுப்பவர்.

ஞான குரு, நவக்கிரக குரு என்ன வித்தியாசம்:
      ஒரு சிலர் தட்சிணாமூர்த்தி, குருபகவானும் ஒன்றே என்று கூறி வருகிறார்கள், ஆனால் நவக்கிரக சந்நிதியில் இருக்கும் குரு பகவான் வேறு. தட்சிணாமூர்த்தி வேறு, இவர்கள் இருவருக்கும் உள்ள வித்தியாசத்தை பார்ப்போம்.
    தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி வீற்றிருப்பவர். ஞானத்தின் வடிவாக இருக்கும் அவரை வழிபட்டால் அறிவும், தெளிவும், ஞானமும் பிறக்கும் என்பது நம்பிக்கை.   நவகிரகங்களில் உள்ள குரு பகவானின் திசை வடக்கு. அதே நேரத்தில் குருபகவான் என்பது ஒன்பது கிரகங்களில் ஒன்றான கிரக வடிவம் என்றும், அவர்  பிரகஸ்பதியாகவும், தேவகுருவாகவும் உள்ளார். திசையின் அடிப்படையிலேயே இருவரும் வேறுபடுகின்றனர்.  
    தட்சிணாமூர்த்தி வெண்ணிற ஆடையை உடுத்தியிருப்பவர். ‘ஸ்வேதாம்பரதரம் ஸ்வேதம்..’ என்று உரைக்கிறது வேதம். ஸ்வேதம் என்றால் வெள்ளை நிறம் என்று பொருள். குரு பகவானுக்கு உரிய ஆடை மஞ்சள் நிறம். அதே நேரத்தில் தேவர்களின் சபையில் ஆச்சாரியனாக இருப்பதால்  ப்ருஹஸ்பதி மற்றும் குரு என்று அழைக்கப்படுகின்றார்.
     எந்த விதத்திலும் தட்சிணாமூர்த்தியோடு நவக்கிரக குருபகவானை சம்பந்தப்படுத்தி  வேதத்திலோ, புராணங்களிலோ சொல்லப்படவில்லை.

ஞானகுரு தட்சிணாமூர்த்தி:
 தெற்கு நோக்கி வீற்றிருக்கும்  தட்சிணாமூர்த்தியின் சன்னதி சிவாலயத்தில் உள்ள பிராகாரத்தில் மூலஸ்தானத்தின் சுற்றுச்சுவரில்தான் அமைக்கப்பட்டிருக்கும்.      கல்லால மரத்தின் அடியில், யோக ஆசனத்தில் ஸனகாதி  முனிவர்கள் நால்வருக்கும் உபதேசிக்கும் முறையில் வீற்றிருப்பவர் தட்சிணாமூர்த்தி. இவர் ஒரு காலில் முயலகனை மிதித்தபடியும், மற்றொரு காலை வீராசனமாக வைத்தபடியும் இருப்பார். நான்கு கரங்களில் வலக் கை சின் முத்திரை தாங்கியும், ஒரு கை ருத்ராட்ச மணிவடம் தாங்கியும் இருக்கும். இடப்பக்கம் உள்ள ஒரு கையில் அமுத கலசமும், ஒரு கையில் வேத நூலும் இருக்கும். இவர் தென்முகக் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார் சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில், குரு வடிவாக திகழ்பவர் தட்சிணாமூர்த்தி. இவருக்கு யோக தட்சிணாமூர்த்தி, வீணா தட்சிணாமூர்த்தி என்ற பெயர்களும் உண்டு. சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகியோருக்கு யோக முறையை அருளியதால் யோக தட்சிணாமூர்த்தி என்றும், தும்புரு, நாரதர் ஆகியோருக்கு வீணையின் இலக்கணத்தை உணர்த்தியதால், வீணா தட்சிணாமூர்த்தி என்றும் பெயர் பெற்றார். 

தட்சிணாமூர்த்தியின் சின்முத்திரை:
  வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகிய மூன்றும் தனித்து நிற்கும் அடையாள சின்னத்தையே சின்முத்திரை என்பார்கள். இதில் கட்டைவிரல் கடவுளைக் குறிக்கும். சுட்டுவிரல் மனிதனைக் குறிக்கும். நடுவிரல் ஆசையையும், மோதிரவிரல் கர்மம் ஆகிய செயல்களையும், சுண்டுவிரல் மாயையையும் குறிக்கும். மனிதனை மாயை மறைத்துநின்று, ஆசையை ஏற்படுத்தி, கர்மங்களை செய்ய வைக்கிறது. அந்த மூன்றையும் தவிர்த்து, இறைவனை வணங்கினால், இறைவனோடு ஐக்கியமாகலாம் என்பதே இதன் பொருளாகும்.             தினமும் தட்சிணாமூர்த்தியை துதிபாடல்களால் துதித்து, அர்ச்சனை செய்து வழிபடும்போது, தட்சிணாமூர்த்தி காயத்ரி மந்திரத்தை  சொல்லலாம்.

தட்சிணாமூர்த்தி காயத்ரி மந்திரம்
‘ஓம் தட்சிணாமூர்த்தியே வித்மஹே
த்யாநஸ்தாய தீமஹி
தந்நோ தீஸஹ் ப்ரசோதயாத்’
பொருள்:
தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தியை அறிவோம். தியானத்தில் இருக்கும் அவரை தியானம் செய்வோம். குருவாகிய அவர், நம்மை காத்து அருள்புரிவார்...
  இந்த மந்திரத்தைச் சொல்லி வழிபட்டால் ஞானம், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். பயம் நீங்கும். வித்தைகளில் மேன்மை அடையலாம். 
  ஞானகுருவாம் தட்சிணாமூர்த்தியை வழிபடும் வகையில் குழந்தைகளுக்கு கீழே உள்ள ஸ்லோகத்தினை சொல்லித் தரலாம்.
குருப்ரஹ்மா: குருர்விஷ்ணு: குரு தேவோ மஹேஸ்வர: குரு சாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குருவே நம:
      மனம் சஞ்சலத்திற்கு உள்ளாகும் நேரத்தில் தட்சிணாமூர்த்தியின் சன்னதியில் அவருக்கு முன்பாக அமைதியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபடுவோர்க்கு குழப்பங்கள் அகன்று மனம் தெளிவடையும். ஞானம் வேண்டி தட்சிணாமூர்த்தியை வழிபடுபவர்களுக்கு கிழமை முக்கியமில்லை. வியாழன் அன்றுதான் வழிபட வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

நவக்கிரக குருபகவான்:
    பிருகஸ்பதி என்பவர் தேவர்களின் குருவும், நவகிரகங்களில் ஒருவராகவும் ஆவார். இவர் சப்தரிஷிகளில் ஒருவரான ஆங்கிரச முனிவரின் மகனாவார். இவருக்கு தாரா என்ற மனைவி உண்டு. இவர் நான்கு வகையான வேதங்களையும், அறுபத்து நான்கு கலைகளையும் அறிந்தவர். எண்ணற்ற யாகங்களையும் செய்து தேவர்களின் குருவானார். அத்துடன் திட்டையில் கோயில் கொண்டுள்ள வசிஷ்டேஸ்வரரை வணங்கி நவக்கிரக அந்தஸ்து பெற்றார். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்வதே குருப் பெயர்ச்சி என்று வழங்கப்படுகிறது. 
    ஒருவரின் ஜாதகத்தில் எப்பேர்பட்ட தோஷங்களையும் தன் பார்வையால் நிவர்த்தி செய்பவர் குரு பகவான். “குரு பார்க்க கோடி புண்ணியம்” என்பார்கள். குரு  பகவான் நம்மை பார்த்தால் மட்டுமல்ல, குரு பகவானை ஆலயம் தேடிச் சென்று நாம் கண்டு தரிசித்தாலும் கோடி புண்ணியம்தான்.

குரு ஸ்தோத்திரம்: 
தேவானாம் ச ரிஷஷீணாம் ச
குரும் காஞ்சன ஸந்நிபம்!
புத்தி பூதம் த்ரிலோகேசம்
தம் நமமாமி ப்ருஹஸ்பதிம்!
தமிழில்:
குணமிகு வியாழக் குருபகவானே
மணமுடன் வாழ மகிழ்வுடனருள்வாய்!
பிருகஸ்பதி வியாழப் பரதகுரு நேசா
கிரக தோஷமின்றிக் கடாக்ஷத் தருள்வாய்!!

குரு காயத்ரி:
வ்ருஷப த்வஜாய வித்மஹே
க்ருணீ ஹஸ்தாய தீமஹீ
தந்நோ குரு ப்ரசோதயாத்
மேலே உள்ள குரு ஸ்தோத்திரம்,குரு காயத்ரியை தினமும் சொல்லி பிராத்தனை செய்யலாம்.
   உங்கள் வீட்டின் அருகேயே இருக்கும் ஆலயத்தில் உள்ள நவகிரக சந்நதியில் வீற்றிருக்கும் குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து வணங்கலாம்.  மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வணங்கினால் மலையளவு உள்ள துயரம் கடுகளவாக குறைந்து விடுவதுடன் குரு பகவானின் பரிபூரண அருளாசியும், நன்மைகளும் தேடி வரும். துன்பங்கள் நீங்கி இன்பங்களை பெறலாம். குரு பகவான், தம்மை வழிபடுவோருக்கு உயர் பதவி, திருமண பாக்கியம், புத்திரப்பேறு, நிறைவான செல்வம் போன்றவற்றை கொடுப்பதோடு, கல்லீரல், காது, இடுப்புகளில் ஏற்படும் நோய்கள் குணமாக அருள்புரிகிறார். வியாழக்கிழமை விரதம் இருந்து நெய் தீபம் ஏற்றி குருவிற்குரிய மஞ்சள் வஸ்திரம்,  கொண்ட கடலை கொண்டு வழிபடுவது நன்மை தரும்.
ஞானகுரு தட்சிணாமூர்த்தியை அவரது சன்னதியிலும், நவக்கிரக குருபவானை அவர் அமர்ந்துள்ள நவக்கிரக சன்னதியிலும் வழிபட்டு நல்வாழ்வை பெறுவோம்.….


Comments

Popular posts from this blog

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..

உண்மை பக்தி எது ?

ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்...