சுந்தர காண்டம் பாராயணம் அள்ளித் தரும் பலன்கள்!!

சுந்தர காண்டம் பாராயணம் அள்ளித் தரும் பலன்கள்!!
ஆரூர் சுந்தரசேகர்.
    சுந்தர காண்டம் என்பது வால்மீகி இராமாயணத்தின் ஐந்தாவது காண்டம் ஆகும். இதில் உள்ளது அனைத்தும் சுந்தரமான விஷயங்கள். சுந்தர காண்டம் அனுமாரின் அறிவுக் கூர்மையும், வீரத்தையும், சொல்வன்மையும், பெருமையையும் விளக்குகிறது.
     இராமாயணத்தில் சுந்தரகாண்டமே மிக முக்கிய திருப்புமுனையாக அமைந்ததுள்ளது. சீதாதேவியை பிரிந்த துக்கம் தாளாமல் நம்பிக்கை இழந்து செய்வதறியாது ஸ்ரீராமன் இருந்த போது, அனுமன் சீதாதேவியிடமிருந்து கொண்டு வந்து கொடுத்த கணையாழி  ஸ்ரீராமனுக்கு பெரும் நம்பிக்கையை அளித்தது. ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கே அனுமனின் வலிமை நம்பிக்கை தந்தது என்றால், இதை நம்பிக்கையோடு பாராயணம் செய்பவர்களுக்கு  ஸ்ரீராமனின் அருளோடு கூடிய அனுமனின் கடாக்ஷம் கிட்டும்
அற்புதமான சுந்தர காண்டம் பற்றிய அழகான ஸ்லோகம் இது.
ஸுந்தரே ஸுந்தரோ ராம:
ஸுந்தரே ஸுந்தரி கதா
ஸுந்தரே ஸுந்தரி ஸீதா
ஸுந்தரே ஸுந்தரம் வநம்
ஸுந்தரே ஸுந்தரம் காவ்யம்
ஸுந்தரே ஸுந்தரோ கபி:
ஸுந்தரே ஸுந்தரம் மந்த்ரம்
ஸுந்தரே கிம் ந ஸுந்தரம்
அழகான சுந்தர காண்டத்தில் ராமபிரான் அழகு; அன்னை சீதா அழகு; சுந்தர காண்டம் கதை அழகு; அசோகவனம் அழகு; வானரர்கள் அழகு; சுந்தர காண்டத்தில் உள்ள சொற்கள் அழகு; நல்ல பலனைக் கொடுக்கும் மந்திரங்கள் அழகு; காண்டம் முழுவதும் காணப்படும் அனுமன் அழகு. சுந்தர காண்டத்தில் எல்லாமே அழகுதான்!
சுந்தர காண்ட பாராயணம்:
     பஞ்சபூதங்களையும் வென்றவர் என்ற பெருமை  ராமாயணத்தில் அனுமனுக்குக் கிடைத்தது, சுந்தரன் என்ற இயற்பெயரைக் கொண்ட அனுமனின் வீர தீரச் செயல்களைப் பற்றி கூறுவதால்  இதற்கு ‘சுந்தர காண்டம்’ என்று பெயர். இறைபக்திக்கும், செயல் திறமைக்கும்,  மதியூகத்திற்கும்,ஒழுக்கத்திற்கும், மற்றும் அனைத்து தெய்வீக குணங்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்பவர் அனுமான். கலியுகத்தில் சகல தோஷங்களையும் களைந்தெறியும் வல்லமை, சுந்தர காண்ட பாராயணத்திற்கு உண்டு. 
   இராமாயணம் மகாபாரதம் இதிகாசங்கள் வெறும் புராணக்கதைகள் அல்ல. இறைவனின் அவதாரப் பெருமைகளை விளக்கி அதை  நமது வாழ்க்கைக்கு பயன்படும் தத்துவங்களாக உணர்த்தும் உன்னதப் படைப்புகள். 
   இருபத்து நான்காயிரம் ஸ்லோகங்கள் கொண்ட ராமாயணத்தில் சுந்தரகாண்டத்தில் மட்டும் அனுமனின் செயல் திறனைப் பற்றி  இரண்டாயிரத்து எண்ணூற்று எண்பத்தைந்து  ஸ்லோகங்கள் அறுபத்தெட்டு அத்தியாயங்களில்  கொடுக்கப்பட்டுள்ளது.
    இவைகள் முழுவதையும் எல்லோராலும் படிக்க நேரம் கிடைப்பது அரிது. ஆகையால் கீழே கொடுக்கப்பட்ட மிக எளிய தமிழில் உள்ள சுந்தர காண்டத்தை படித்து முழு பலனையும் பெறுவோம்.

சுந்தர காண்டம் என்று பெயர் சொல்லுவார்,
சுகம் தரும் சொர்க்கம் என்று கருத்தில் கொள்வார்,
கண்டேன் சீதையை என்று காகுத்தனிடம் சொன்ன,
கருணை மிகு ராமபக்தன் ஆஞ்சநேயர் பெருமை இது.

அஞ்சனை தனையன் அலைகடல் தாண்டவே,
ஆயத்தமாகி நின்றார் ராம பாணம் போல்,
ராசஷஸர் மனைநோக்கி ராஜ கம்பீரத்தோடு,
ராமதூதனும் விரைந்தே சென்றார்.

அங்கதனும் ஜாம்பவானும் அனைத்து வானரங்களும்,
அன்புடன் விடை கொடுத்து வழியனுப்பினரே !
வானவர்கள் தானவர்கள் வருணாதி தேவர்கள்,
வழியெல்லாம் நின்று பூமாரி பொழிந்தனரே !

மைநாக பர்வதம் மாருதியை உபசரிக்க,
மகிழ்வுடன் மாருதியும் மைநாகத்தை திருப்தி செய்து,
ஸுரசையை வெற்றி கொண்டு ஸிம்ஹிகையை வதம் செய்து,
சந்தோஷமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சேர்ந்தார்.

இடக்காகப் பேசிய இலங்கையின் தேவதையை,
இடக்கையால் தண்டித்தவன் இதயத்தைக் கவர்கின்றார்,
அழகான இலங்கையில் அன்னை ஜானகியை,
அங்குமிங்கும் தேடியே அசோகவனத்தில் கண்டார்.

சிம்சுபா மரத்தடியில் ஸ்ரீராமனைத் தியானம் செய்யும்,
சீதாப்பிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினார்,
ராவணன் வெகுண்டிட ராசஷஸியர் கலங்கிட,
வைதேகி மகிழ்ந்திட வந்தார் துயர்துடைக்க.

கணையாழியைக் கொடுத்து ஜயராமன் சரிதம் சொல்லி,
சூடாமணியைப் பெற்ற சுந்தர ஆஞ்சநேயர்,
அன்னையின் கண்ணீர் கண்டு அரக்கன் மேல் கோபம் கொண்டு,
அசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தார்.

பிரம்மாஸ்திரத்தினால் பிணைத்திட்ட ஆஞ்சநேயர்,
பட்டாபிராமன் தன் பெருமையை எடுத்துரைக்க,
வெகுண்ட இலங்கை வேந்தன் வையுங்கள் தீ வாலுக்கென்றான்,
வைத்த நெருப்பினால் வெந்ததே இலங்கை நகர்.

அரக்கனின் அகந்தையை அழித்திட்ட அனுமனும்,
அன்னை ஜானகியிடம் அனுமதி பெற்றுக் கொண்டார்,
ஆகாய மார்க்கத்தில் ஆஞ்சநேயர் தாவி வந்தார்,
அன்னையைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய்மறந்தார்.

ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ராமனிடம்,
கைகூப்பிக் 'கண்டேன் சீதையை' என்றார்,
வைதேஹி வாய்மொழியை அடையாளமாகக் கூறி
சொல்லின் செல்வன் ஆஞ்சநேயர் சூடாமணி அளித்தார்.

மனம் கனிந்த மாருதியை மார்போடணைத்த ராமர்,
மைதிலியை சிறைமீட்க மறுகணம் சித்தமானார்,
ஆழ்கடலில் அற்புதமாய் அணைகட்டிப் படைகள் சூழ,
அனுமனும் இலக்குவனும் உடன்வரப் புறப்பட்டார்.

அழித்திட்டார் ராவணணை, ஒழித்திட்டார் அதர்மத்தை,
அன்னை சீதாதேவியை சிறைமீட்டு அடைந்திட்டார்,
அயோத்தி சென்று ராமர் ஜகம் புகழ் ஆட்சி செய்தார்,
அவனைச் சரணடைந்தோர்க்கு அவர் அருள் என்றும் உண்டு.

எங்கெங்கு ரகுராமன் கீர்த்தனமோ அங்கெல்லாம் கரம் குவித்து,
மனம் உருகி கண்களில் நீர் சொரிந்து, ஆனந்தத்தில் மூழ்கி,
கேட்கும் பரிபூரண பக்தனே ஸ்ரீ ஆஞ்சநேயா - உன்னைப்
பணிகின்றோம் !! பன்முறை உன்னைப் பணிகின்றோம் !!

சுந்தர காண்டம் பாராயண பலன்:

   நமது முன்னோர்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்னைகளை எல்லாம் நீக்கும் சுந்தரகாண்டத்தை பாராயணம் செய்து நற்பலன்களை அனுபவித்துள்ளனர். 
  இதை பாராயணம் செய்ய, வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல பிரச்னைகளும் பகலவனைக் கண்ட பனி போல் உருகிவிடும். சுந்தர காண்டம் பாராயணம் செய்யும் வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வாள். மங்களம் பொங்கும் சுந்தரகாண்டத்தைப் பாராயணம்  செய்பவர்களுக்கு வாழ்வில் நம்பிக்கை ஏற்படும். நோய்கள் விலகும். நவக்கிரக தோஷங்கள் அகலும். எண்ணிய நல்லெண்ணங்கள் எண்ணிய படி நிறைவேறும்.சகல சௌபாக்கியமும் கிட்டும். மனதுக்கு நிம்மதி, குழந்தைகளின் திருமணச் செலவு போன்ற இக்கட்டான நிலையில் உள்ளவர்களும், வரன் தேடுபவர்களும் இதைப் படித்தால் அல்லது கேட்டால் உரிய பலன் கிடைக்கும்.
    ஏழரை சனி, அஷ்டமத்து சனி திசை நடப்பவர்கள்  சுந்தரகாண்டம் படித்து வந்தால் சனி பகவானின் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.
     கருத்தரித்த பெண்கள் சுந்தரகாண்டம் படித்து வந்தால்  சுகப் பிரசவம் ஆகி குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும் என்பது ஐதீகம்.
    காயத்ரி மந்திரத்தில் எந்த அளவு சக்தி உள்ளதோ, அதற்கு இணையாண சக்தி சுந்தரகாண்டத்திலும் உள்ளது.
நாமும் சுந்தர காண்டம் பாராயணம் செய்து நற் பலன்களை பெறுவோம் !
ஸ்ரீ ராம ஜெய ராம... ஜெய ஜெய ராமா...

















Comments

Popular posts from this blog

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..

உண்மை பக்தி எது ?

ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்...