நவராத்திரியின் பெருமையை தெரிந்துகொள்வோம்!!

நவராத்திரியின் பெருமையை தெரிந்துகொள்வோம்!!

ஆரூர். சுந்தரசேகர்.


    சிவனை வழிபடத் தகுந்த ஒரு ராத்திரி சிவராத்திரி. சக்தியை வழிபடத் தகுந்த ஒன்பது ராத்திரிகள் நவராத்திரி. நவம் என்பது ஒன்பது. துன்பத்தைத் துடைத்து, அச்சத்தைப் போக்கி, இன்பத்தையும் மகிழ்ச்சியையும் நல் வாழ்வையும் அருளச்  செய்யும்  சக்தியை வழிபடும் காலமாக நவராத்திரி அமைந்துள்ளது.
   நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கை வழிபாடும், அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மி வழிபாடும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடும் செய்வார்கள். சரஸ்வதி வழிபாட்டின் இறுதியில், நல்லறிவும், ஞானமும் வேண்டி, விஜயதசமியன்று பூஜையைப் பூர்த்தி செய்வார்கள்.

நவராத்திரி வந்தது எப்படி:
    ஒரு முறை தேவர்களுக்கு பெரிய அளவில் துன்பங்கள் கொடுத்து வந்த மகிஷாசுரன் என்ற அரக்கனை அழிக்க வேண்டும் என்ற, தேவர்களின் வேண்டுகோளை ஏற்று சக்திவாய்ந்த தெய்வத்தை உருவாக்க சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் முடிவு செய்து ஒரு அற்புதமான பெண் உருவத்தை சிருஷ்டித்தார்கள். அந்த பெண் தெய்வமான துர்க்கை, ஆக்ரோஷமான முகத்துடன் பத்து கைகளையும் கொண்டதாக இருந்தார். அந்த துர்க்கைக்கு மற்ற தெய்வங்களும் தங்களின் ஆயுதங்களையும், கவசங்களையும் அளித்தனர். மகிஷாசுரனுடன் துர்க்கை ஒன்பது நாள்கள் போரிட்டு பத்தாவது நாளில் அவனை வதம் செய்து வெற்றிகொண்டதாகவும் இதனை நினைவுகூரும் வகையில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வெற்றித் திருநாளையே விஜயதசமியாகக் கொண்டாடுகிறோம்.

புராணங்களில் நவராத்திரி:
    வால்மீகி ராமாயணத்தில் புரட்டாசியில் வரும் தசமி (விஜய தசமி) அன்று ராமன், ராவணனுடன் போர் செய்ய உகந்த நாள் என்று அன்று போருக்கு புறப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
மகாபாரதத்தில், அஞ்ஞாதவாசம் முடிந்த பின் வன்னி மரத்தில் மறைத்துவைத்திருந்த தங்களது ஆயுதங்களை வெளியே எடுத்து அர்ச்சுனன் வழிபட்ட நாள் விஜயதசமி. அதன் தொடர்ச்சியே ஆயுதபூஜை என்ற ஐதீகமும் உண்டு.

இந்தியாவில் பல்வேறு பெயர்களில் நவராத்திரி:
     இந்தியாவில் மக்கள் நவராத்திரி விழாவை தங்கள் கலாச்சாரத்தின் அடிப்படையில் பல்வேறு விதமாகக் கொண்டாடுகிறார்கள். நவராத்திரி விழா ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பெயரில் கொண்டாடப்படுகிறது.
   தமிழ் நாட்டில் நவராத்திரி விழாவை கொலு வைத்து சிறப்பாக கொண்டாடுகிறார்கள். இங்கு நவராத்திரி விழா பெண்களுக்கான பண்டிகையாகத் திகழ்கிறது. பெண்கள் தங்களின் ஆர்வத்தையும்,  கலைத்திறனையும் கொலுவில் அழகுறக் காட்டி மகிழ்வர்.
   கர்நாடக மாநிலம் மைசூர் தசரா திருவிழா (நவராத்திரி) உலகப்புகழ் பெற்றது. மைசூரில் நவராத்திரி ஒரு அரச குடும்பத்து விழாவாக தசரா என்ற பெயரில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
   வட இந்தியாவிலும், உத்தரப்பிரதேசத்திலும் ராம் லீலா என்று கொண்டாடுகின்றனர். ராமாயண நாடகங்கள் நடிக்கப்படுகிறது.  விஜய தசமியன்று இராவணன் கும்பகர்ணன் உருவப் பொம்மைகள் பெரிய உருவங்களாக செய்து பொது இடங்களில் வைத்து வெடிகளை வெடித்து  உருவங்களை எரித்துக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
     கிழக்கு இந்தியாவில் அமைந்துள்ள மேற்கு வங்கம், ஒடிசா, அசாம், பீகார் போன்ற மாநிலங்களில் நவராத்திரிக்கு துர்க்கா பூஜை என்று பெயர். டெல்லி பகுதிகளில் நவராத்திரிக்கு ராம்லீலா (இராவண வாதம் அல்லது இராமனின் வெற்றி) என்று பெயர்.
    மேற்கு இந்தியாவில் அமைந்துள்ள மாநிலங்களான மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் இராஜஸ்தானின் சில பகுதிகளில் நவராத்திரி விழாவை கற்பா-தண்டியா என்னும் நடன விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.

நவராத்திரி விழா வழிபடும் முறை:
     தமிழ் நாட்டில் புரட்டாசி மாதத்தில் மஹாளய அமாவாசை திதிக்கு அடுத்தநாள் வரும் பிரதமை திதியில் இருந்து தொடங்கி தொடர்ந்து வரும் ஒன்பது நாட்களும் நவராத்திரி என அனுஷ்டிக்கப்படுகிறது. பத்தாவது நாளான  தசமி திதியடன் நவராத்திரி நிறைவுபெறுகிறது.
     நவராத்திரி தினங்களில் கொலு முக்கிய அம்சம் பெறுகிறது. கொலு படிகள் அவரவர் வசதிக்கேற்ப 1, 3, 5, 7, 9, 11 என்ற கணக்கில் அமைத்து பொம்மைகளை படிகளில் வைத்து வழிபடுகின்றனர்
     நவராத்திரியில் அடுத்து முக்கியமானது கோலம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக, ஒவ்வொரு பொருட்கள் கொண்டு கோலமிட வேண்டும். மாலையில் கொலு படி அருகில் கோலம் போட்டு விளக்கேற்றி வைக்க வேண்டும்.
அடுத்ததாக   நைவேத்தியம்,   நவராத்திரி ஒன்பது நாட்களும், ஒவ்வொரு விதமான நைவேத்தியம் படைத்து சக்தியை வணங்க வேண்டும்.அவரவர் வசதிப்படி  நவதானிய சுண்டல்களை நிவேதனம் செய்யலாம்.
   பாடத் தெரிந்தவர்கள், இசைக் கருவிகள் இசைக்க தெரிந்தவர்கள் தினமும் மாலை நேரத்தில் பக்திப் பாடல்கள் பாடுவது சிறப்பு. துர்க்காஷ்டகமும், லட்சுமி அஷ்டோத்திரமும் சரஸ்வதி அஷ்டோத்திரம், லலிதா சகஸ்ரநாமம், திரிசதிதேவி பாகவதம், சௌந்தர்ய லஹரி, அபிராமி அந்தாதி போன்ற ஸ்லோகங்கள் சொல்லலாம்.
    தினமும் அக்கம்பக்கம் உள்ளவர்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்களை கொலுவுக்கு அழைக்கலாம், வீட்டிற்கு வரும் சுமங்கலி மற்றும் கன்னிப்பெண்களுக்கு நிவேதனம் செய்த நவதானிய சுண்டல், குங்குமச்சிமிழ், பூ, ரவிக்கை, கண்ணாடி, சீப்பு, தேங்காய், பழம், வெற்றிலை-பாக்கு போன்றவைகளைக் கொடுத்து உபசரித்து அவர்களின் அன்பையும், ஆசியையும் பெறுவதே இந்த வழிபாட்டின் தத்துவம்.
       நவராத்திரி விழாவில் குழந்தைகளை கண்ணனாகவும் ராதையாகவும் வேடமிட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்களை கொலுவுக்கு அழைக்க அனுப்பும்போது குழந்தைகளிடம் மனித நேயம் வளர்கிறது.
     நவராத்திரி சமயங்களில் அம்பாள் ஊசி மேல் அமர்ந்து தவம் செய்வதாக சொல்லப்படுகிறது, அச்சமயங்களில் வீட்டில் கிழிந்த துணிகளை தைக்கக் கூடாது, நவராத்திரி காலத்தில் எண்ணெய் தேய்த்து முழுகுதல் கூடாது என்கிறது சாஸ்திரம்.
     நவராத்திரி வழிபாட்டு பெண்களுக்கே உரியது. இந்த வழிபாட்டால்  வழிபாட்டால் பெண் குழந்தைகளுக்கு கல்வியும், கன்னி பெண்களுக்கு திருமணமும் நடக்கும் என்பது ஐதீகம்.
   நவராத்திரியின் ஒன்பதாம் நாளாகிய நவமியில் சரஸ்வதி பூஜை அல்லது ஆயுத பூஜை செய்வார்கள். பாடப்புத்தகங்கள், நோட்டு, பேனா, பென்சில், கலைப் பொருட்கள், இசைக்கருவிகள், தொழிற்கருவிகள் முதலியவைகளை பூஜையில் வைத்து வழிபடுகின்றனர். அது மட்டுமல்லாமல் அத்தினத்தில் அவற்றை பயன்படுத்துவதும் தவிர்க்கப்படுகிறது.
பத்தாம் நாளான விஜயதசமி நாள் சக்தியின் வெற்றியை தேவர்கள் யாவரும் கொண்டாடி மகிழ்ந்த திருநாள் ஆகும்
அன்றைய தினம் புதிய தொழில் தொடங்க உகந்த நன்னாளாகும். இந்நாளில் தொடங்கப்படுகின்ற எந்த செயலும் வெற்றிகரமாக முடியும் என்பது ஐதீகம். அன்று  பாடசாலைகளில் பாலகர்களுக்கு வித்யாரம்பம் செய்து வைக்கவும், முக்கிய பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் போடுவதற்கும் இயல், இசை, நாடகம், நாட்டியம் போன்ற கலைகள் பயில ஆரம்பிக்க மிகவும் உகந்த நாளாகும்.
    அன்று இரவு பால் நிவேதனம் செய்து பொம்மைகளைப் படுக்க வைக்க வேண்டும். மறுநாள் பூஜையிலிருந்து கொலு பொம்மைகளை எடுத்து வைக்க வேண்டும்.

நவராத்திரி விரத பலன்:
நவராத்திரி விரதத்தைப் போன்று எளிமையானதும் அதேநேரம் மிகுந்த பலன்களைத் தரக்கூடியதுமான வேறு விரதங்கள் இல்லை என்கின்றன புராணங்கள். தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஸ்வர்க்கம், மோட்சம் என ஒரு மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் தரக்கூடிய விரதம். குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும். படிப்பில் மந்தமாக இருப்பவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், உயர்ந்த நிலையை அடையலாம்.

Comments

Post a Comment

Popular posts from this blog

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..

உண்மை பக்தி எது ?

ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்...