பெரிய திருவடி என போற்றப்படும் கருடாழ்வாரின் மகத்துவம்...

பெரிய திருவடி என போற்றப்படும் கருடாழ்வாரின் மகத்துவம்...
ஆரூர் சுந்தசேகர்.


         திருமாலுடன் எப்பொழுதும் உடனிருப்பவர் கருடன். இவரை ‘பெரிய திருவடி’ என்பர். மகாவிஷ்ணுவின் அடியார் என்பதால் கருடாழ்வார் என்று அழைப்பார்கள்
       எல்லா பெருமாள் கோயில்களிலும், பெருமாள் சந்நிதிக்கு எதிரே கைக்கூப்பி நின்றுகொண்டிருக்கும் கருடாழ்வாரைத் தரிசிக்கிறோம்.
         பெரிய திருவடியான கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்றுதான். இந்தத் திருநாளில் கருட தரிசனம் செய்வதாலும், கருடனை வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும்; மாங்கல்யம் பலம் பெறும் என்பது ஐதீகம்.
கருடனுக்கு வேறு பெயர்கள்:
   கருடன் என்று போற்றப்படும் பறவையை ராஜபட்சி- பறவைகளின் தலைவன் என்று சொல்வார்கள். சாஸ்திர சம்பிரதாயங்களுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள ஒரு விசேஷமான பறவை.
      கருடனுக்கு கருத்மான், சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பகிராஜன், தார்ச்டயன், மோதகாமோதர், மல்லீபுஷ்யபிரியர், மங்களாலயர், சோமகாரீ, பெரிய திருவடி, விஜயன், கிருஷ்ணன், ஜயகருடன், புள்ளரசு, கலுழன், சுவணன்கிரி என்றும் ஓடும்புள் கொற்றப்புள் என்றும் பெயர்கள் உண்டு.
     சமஸ்கிருத மொழியில் கருடன் என்பதற்கு பெரும் சுமையைச் சுமப்பவன் என்று பொருள்.
கருட ஸ்தம்பம்:
       மகா விஷ்ணு கருடனை ‘வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்’ என்று வரமளித்து வாகனமாகவும் அவரை ஏற்றுக்கொண்டுள்ளார். இவர் பெருமாளின் கொடியாகவும் விளங்குகிற காரணத்தால் பெருமாள் கோயில்களில் கொடி மரமானது துவஜ ஸ்தம்பம் என்றும் கருட ஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகிறது.
கருடன் வட்டமிடுவது நல்ல சகுனம்:
    கருடன் மங்கள வடிவினன். வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. கருட தரிசனம் சுப சகுனமாகும்.
     கோவிலில் குடமுழுக்கு, ஹோமம் மற்றும் பிற சிறப்பு வழிபாடுகள் நடைபெரும்போது போது, கோவிலுக்கு மேலே கருடன் வட்டமிடுவது நல்ல சகுனம் என்று நம்பப்படுகிறது.   
    சபரிமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் மகரஜோதி தரிசனத்துக்காக கேரளா மாநிலம் பந்தளம் எனும் ஊரில் உள்ள அரண்மனையிலிருந்து திருவாபரணப் பெட்டிகள் ஊர்வலமாக சபரிமலைக்கு எடுத்து வரும்போது கூடவே கருடன் பறவை மேலே வட்டமிட்டபடி தொடர்ந்து வருவதை இன்றும் காணலாம்.
    நம்மில் பெரும்பாலானவர்கள், வீட்டை விட்டு வெளியே வரும்போது கருடன் வானில் தென்பட்டால், நல்ல சகுனம் என்று கருதுவது வழக்கத்தில் இருக்கிறது.
கருட சேவை:
       பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவாக பெருமாள் கருட வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் கருட சேவை நடைபெறுகிறது.
      ரத சப்தமியன்று திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்ஸவ கருட சேவை புகழ் பெற்றதாகும். ஸ்ரீரங்கம் கோயில் சித்திரைத் தேர், தைத் தேர், பங்குனித் தேர் உற்ஸவங்களின்போது கருட சேவை நடைபெறுகிறது.   
  காஞ்சிபுரம் வாதராஜப் பெருமாள் கோயில் கருட சேவை, திருநாங்கூர் பதினோரு கருட சேவை, கும்பகோணம் 12 கருட சேவை, கூழமந்தல் திருத்தலத்தில் வைகாசி மாதம் நடைபெறும் 15 கருட சேவை, தஞ்சை மாமணிக் கோயில் 23 கருட சேவை போன்றவை சிறப்பு வாய்ந்தவை.
       கருட வாகனத்தில் பெருமாளை வணங்குபவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது நம்பிக்கை.
ஸ்ரீரங்கம் செப்பு கருடன்:
           ஸ்ரீரங்கத்தில் உள்ள அரங்கநாதசுவாமி கோவிலில்  செப்பினால் செய்யப்பட்ட மிகப்பெரிய கருடன் தனி சன்னதி கொண்டுள்ளார். இங்குள்ள கருடாழ்வார் சந்நிதிச் சுவர்களின் சிற்பங்கள் வேலைப்பாடுமிக்கவை. கருடன் சன்னதி அமைந்துள்ள மண்டபங்கள் கருட மண்டபம் என்று அழைக்கப் படுகின்றன. இந்த கருட மண்டபம் ஒரு பிரம்மாண்டமான படைப்பு ஆகும். இம்மண்டத்தில் 212 தூண்கள் உள்ளன.
நாச்சியார் கோவில் கல்கருடன்:
   கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நாச்சியார் கோவில் என்ற ஸ்தலத்தில் ஸ்ரீவஞ்சுளவல்லி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோவில் கொண்டுள்ளார். இங்கு கம்பீரமாக கல்கருடன் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். இங்கு ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கும் வஞ்சுளவல்லி நாச்சியாருக்கும் கருடன் திருக்கல்யாணம் செய்து வைத்தார் என்பது தல வரலாறு. அதற்காகவே பெருமாள் தனக்குச் சமமாக கருடனுக்குத் தனியாக சன்னிதானம் அமையச் செய்து கருடாழ்வாராகப் பெருமைப்படுத்தியுள்ளார். பட்சிராஜன் என்ற பெயரோடு இங்குள்ள கல்கருடன் ஐந்தடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சி கொடுக்கிறார்.
பெண் வடிவில் கருடன்:
     சென்னை சவுகார்பேட்டை பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவிலில் பெண் வடிவில் கருடன் அருள்பாலிக்கிறார்.    
தவக்கோல கருடன்:
    திருவள்ளூர் மாவட்டம் கோயில்பதாகை சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் பெருமாள் எதிரே அமர்ந்த நிலையில் தவம் செய்வது போல் உள்ளார்.
ஸ்ரீ கருட புராணம்:
   பதினெட்டு புராணங்களில் ஸ்ரீ கருட புராணம் மிகவும் பெருமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மனிதனின் பிறப்பு- இறப்பு, வினைகள், பாவ புண்ணிய பலன்கள் பற்றி விவரித்துக் கூறும் ஸ்ரீ கருட புராணம். மகா விஷ்ணு ஸ்ரீ கருடனுக்குப் போதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கருட புராணத்தை அமாவாசை, பவுர்ணமி, மாதப் பிறப்பு, கிரகணம், சிராத்தம் போன்ற முக்கிய தினங்களில் படிப்பது காரியத் தடைகளை அகற்றி ஜெயம் அளிக்கும்.
கருட பஞ்சமி:
         ஆடி மாதத்தில் வருகின்ற பல்வேறு விசேஷங்களில் கருடாழ்வார் எனும் பெரிய திருவடி அவதரித்த திருநாளை கருட பஞ்சமி என வழிபடுகிறோம். இது ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், பெருமாள் வழிபாடும் சகல பாவ, தோஷங்களை போக்கி சுப யோகத்தை அமைத்து கொடுக்கும். பெண்கள் விரதமிருந்து கருடனை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். மகப்பேறு கிடைக்கும். செல்வம் பெருகும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். நாக தோஷங்கள் விலகிவிடும்.
புராணங்களில் கருடன்:
         நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் 36 இடங்களில் கருடனை போற்றிப் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள்.
         இராமாயணத்தில் ராம-லட்சுமணர்களை அசுரர்கள் நாகபாசத்தால் கட்டிப்போட, அவர்கள் மயங்கி விழுந்த போது கருட பகவான் வந்து தன் சிறகுகளால் வீசி அவர்களை மூர்ச்சையிலிருந்து தெளிய வைத்தார்.
    கிருஷ்ணாவதாரத்திலும் சத்யபாமாவுக்காகப் பாரிஜாத மரத்தைக் கொண்டு வந்தார்.
    முதலை வாயில் பிடிபட்ட கஜேந்திரன் என்ற யானை  ஆதிமூலமே என்று கதறிய போது கருட வாகனத்தில் பறந்து வந்து காத்தவர் மகாவிஷ்ணு.
ஜோதிடத்தில் கருடன்:
    ஜோதிடத்தில் பறவைகளுக்கு காரகர் புதபகவானாவார். புதனின் அதிதேவதை ஸ்ரீ மஹாவிஷ்ணுவாகும். கிருஷ்ணன் “நான் பறவைகளில் பட்சி ராஜனான கருடனாயிருக்கிறேன்” என கீதையில் கூறியுள்ளார்.  எனவே கருடாழ்வார் புதனின் அம்சம் பெற்றவர் ஆகும்.
கருடாழ்வார் ஸ்வாதி நக்ஷத்திரத்தில் பிறந்தவர் என்பதால் ராகுவின் தன்மையும் பெற்றிருக்கிறார். ஸ்வாதி நக்ஷத்திரம் சுக்கிரனின் வீடாகிய துலாராசியில் அமைந்திருப்பதால் சுக்கிரனின் அதிதேவதையாகிய ஸ்ரீ மஹாலக்ஷமியின் அம்சமாகவும் விளங்குகிறார்.
ஒருவருடைய ஜாதகத்தில் உள்ள புத்திர தோஷம், ருணரோகம், சத்ரு பீடை, பில்லி, சூனியம் போன்றவற்றை நீக்கி சகல சௌபாக்கியங்களும் தரக்கூடியவர் கருடாழ்வார்.
ராகு, கேது போன்ற சர்ப்ப தோஷங்களை நீக்கி மங்களத்தை அருள்வார்.
வரலாற்றில் கருடன்:
  மௌரியர்கள் கருடனை மிகவும் அதிர்ஷ்ட தெய்வம் என்று கருதினார்கள்.
  குப்தர்காலத்தில் குமார குப்தன், சமுத்திர குப்தன் என்ற இரண்டு அரசர்கள் தங்கள் பொன் நாணயங்களில் கருடனைப் பொறித்தார்கள். கருட முத்திரை தங்கள் நாட்டிற்கு வளம் சேர்க்கும் என்று அவர்கள் நம்பிக்கைப்படி குப்தர்கள் காலம் வரலாற்றின் பொற்காலமாகத் திகழ்ந்தது.
  சந்திரகுப்த விக்ரமாதித்தன் முதன் முதலில் நாட்டின் நலனைக் கருதி டெல்லியில் ஒரு கருட ஸ்தம்பத்தை ஸ்தாபித்தார்.
  நேபாள நாட்டில் கருட நாக யுத்தம் என்று ஒரு விழா நடைபெறுகிறது. அப்பொழுது கருடனுடைய திருமேனியில் வியர்வைத் துளிகள் தோன்றும். அதைத் துணியால் ஒற்றி எடுத்து அதை அரசருக்கு அனுப்புவார்கள். அந்தத் துணியின் நூலிழையை பாம்பு கடித்த மனிதனுக்கு சுற்றினால் பாம்பு கடி விஷம் உடன் இறங்கி விடும்.
   பிரான்ஸ் சக்ரவர்த்தி மாவீரன் நெப்போலியனுடைய கொடி கருடக் கொடியாகும். எனவேதான் அவரால் பலவெற்றிகளை அடைய முடிந்தது.
  ஜைன மதத்தினர் கருடனை சுபர்ணா என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர். பவுத்தர்கள் உராசனா, பன்னகாசனா, நாகத்தகா ராஜநிர்ஹனா என்னும் பெயர்களில் கருடனை வழிபட்டு வருகின்றனர்.
  ஹோமர் எழுதிய இலியத் என்ற ரோமானிய காவியத்தில் ஒரு பெரிய பாம்பைப்பற்றியபடி கருடன் வானத்தில் வட்டமிடுவதாகக் கூறப்பட்டுள்ளது. காம்போஜத்தில் கருடனே யோக தேவதையாக இருந்திருக்கிறார்.
அமெரிக்க நாட்டுச் சின்னம் கருடன். இதனால்தான் அந்நாடு செழிப்புடன் விளங்குகிறது. அவர்கள் கருடனை கோல்டன் பறவை (தங்கப் பறவை) என்றும் அதிர்ஷ்ட பறவை என்றும் கூறுகிறார்கள்.
கருடனைத் தரிக்கும் கிழமைகளில் நாம் அடையும் பலன்கள்:
ஞாயிறு - நோய் அகலும், மனக்குழப்பம் நீங்கும். பாவங்கள் நீங்கும்.
திங்கள் - குடும்ப நலம் பெருகும்.
செவ்வாய்  - தைரியம் கூடும்.
புதன்  - எதிரிகள் இல்லா நிலை உருவாகும்.
வியாழன் - பில்லி, சூனியம் நீங்கும்
வெள்ளி  - பணவரவு வரும்.
சனி - நற்கதி கிட்டும்   .
கருடாழ்வாரை தரிசிக்கும்போது
"குங்குமாங்கித வர்ணாய குந்தேந்து தவளாய ச! விஷ்ணு வாஹ! நமஸ்துப்யம் பக்ஷி ராஜாயதே நம:"
என கூறி வணங்க வேண்டும்.
கருட காயத்ரி மந்திரம்:
       தன்னை வழிபடும் பக்தர்களின் குறைகளை கருடன்,  மகாவிஷ்ணுவிடம் எடுத்து கூறுவதாக   பக்தர்களுக்கு நம்பிக்கையாக உள்ளது. கருடனை வழிபடும் போது கீழ் கண்ட கருட காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபட்டால், நினைத்த காரியங்கள் எளிதாக நிறைவேறும் என்று கூறப்படுகிறது.
    ‘ஓம் தத்புருஷாய வித்மஹே
    ஸூவர்ண பட்சாய தீமஹி
    தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்’
பரம புருஷனை அறிந்து கொள்வோம். சொர்ணத்தைப் போல் ஒளிவீசும் அவன் மீது தியானம் செய்வோம். கருட பகவானான அவர் நம்மை காத்து அருள் செய்வார் என்பது இதன் பொருளாகும்.
இந்த காயத்ரி மந்திரத்தை உச்சரித்து கருடனை வழிபடுபவர் களுக்கு, விஷ ஜந்துகளால் ஆபத்து நேராது. தத்துவ அறிவு உண்டாகும். கருடனைத் துதித்தால் நாராயணனின் அருளும் கிடைக்கும். பகை விலகும். ஆபத்து அகலும். நல்ல காரியங்கள் நடந்தேறும்.
   கோவிலிலும், வீட்டிலும் கருடனை தினம்தோறும் வணங்குவதன் மூலம்  நாக தோஷம் நீங்கும். தோல் வியாதிகள் குணமடையும். திருமணமான பெண்களுக்கு அறிவும், ஆற்றலும் நிறைந்த குழந்தை பிறக்கும். தீராத  நோய்கள் தீரும்.
  பஞ்சமி தினத்தில் கருட பகவான் தரிசனம் காண்பதால் நன்மக்கட்பேறு கிட்டும். தடைப்பட்ட திருமணம் நிகழும். கருடனின் ஜன்ம நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தன்று இவரை அர்ச்சிப்பது மிகச் சிறந்த பலன்களைத் தரும். ஏழு வியாழக்கிழமைகள் தொடர்ந்து கருட பகவானை அர்ச்சனை செய்து பிரசாதம் பெறுவதால் பறவை தோஷம், நாக தோஷம், நவக்கிரக தோஷம் போன்றவை விலகும்.
கருடாழ்வாரை வணங்கி சகல வளங்களும் நலன்களும் பெறுவோமாக.

Comments

Popular posts from this blog

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..

உண்மை பக்தி எது ?

ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்...