சிறப்புமிகு சீமந்தம்-வளைகாப்பு !! ஆரூர் சுந்தரசேகர்.

சிறப்புமிகு சீமந்தம்-வளைகாப்பு !!
ஆரூர் சுந்தரசேகர்.
         நமது பெரியோர்கள் வாழ்ந்து கடைப்பிடித்த சீமந்தம்-வளைகாப்பு  போன்ற  சம்பிரதாயங்களை நாம் இன்றும் கொண்டாடுகிறோம்.
        நம் முன்னோர்கள் மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை செய்ய வேண்டிய 41 சடங்குகளைப் பட்டியலிட்டு வைத்துள்ளனர்.  அவற்றில் ஒன்றுதான் சீமந்தம்-வளைகாப்பு ,இம்மாதிரியான சடங்குகள் நமக்கு மகிழ்ச்சியையும், மன நிம்மதியையும் தருகிறது.  சீமந்தம்-வளைகாப்பு என்பது சுகப்பிரசவம் ஆகவும், குழந்தை பூரண நலத்துடன் இந்தப் பூமியில் பிறக்கவும் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
      முதலில் கர்ப்பிணிப் பெண்களுக்குச் செய்யப்படும் வளைகாப்பு, சீமந்தம், பும்ஸவனம் என்ற இந்த மூன்றும் வெவ்வேறானவை என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பும்ஸவனம்:
 பும்ஸவனம் என்பது முதலில் ஆண் வாரிசு பிறக்க வேண்டிச் செய்யும்  ஒரு சடங்காகும்.  இதை கர்ப்பம் தரித்த 2வது,3வது அல்லது 4வது மாதத்திற்குள்ளாக செய்யவேண்டும். இந்தச் சடங்கின்போது ஆண் குழந்தை வேண்டி அதற்குரிய மந்திரங்களைச் சொல்லி ஹோமம் செய்து விதையுடன் கூடிய ஆலம்மொக்கினை இடித்து அதன் சாற்றை கர்ப்பிணிப் பெண்ணின் மூக்கு துவாரத்தில் பிழிவார்கள். நாசியின் வழியே கர்ப்பிணிப் பெண்ணால் உறிஞ்சப்படும் இந்தச் சாறு அப்பெண்ணின் ரத்தத்தில் கலந்து கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை ஆணாக மாற்றம் செய்யும் என்பது ஐதீகம் (மருத்துவர்கள் கூற்றுப்படி மூன்றாவது மாதம் முடிந்து நான்காவது மாதத்தில் குழந்தையின் பிறப்புறுப்பு வளர்ச்சியடைகிறது).

சீமந்தம் :


      பல ஆண்டுகளாக சீமந்தம் தென் இந்தியாவில் சிறப்பாக நடை பெற்று வருவதாக வரலாறு கூறுகிறது.
      சீமந்தத்தின் போது பூரண கும்பம் வைத்து வேத மந்திரம் முழங்கி பின்னர் அந்த கும்ப நீரினை எடுத்து கர்ப்பிணி பெண்  மீது ஊற்றிய பிறகு கர்ப்பிணிப் பெண்ணை உட்கார வைத்து அவளது நாபி முதல் உச்சந்தலை வரை முள்ளம்பன்றியின் முள்ளால் தலைமுடியில் வகிடு எடுத்து உச்சந்தலையில் வைத்து லேசாக அழுத்துவர். இந்தச் சடங்கிற்கும் மந்திரங்கள் உண்டு. 
     வயிற்றினில் வளரும் கருவானது எந்தவித இடையூறுமின்றி நல்லபடியாக வளர்ந்து சுகப்பிரசவம் ஆவதற்கும், தீயசக்திகளினால் எந்தவித தீங்கும் நேராமல்இருப்பதற்கும் சீமந்தம் செய்யப்படுகிறது. மற்றும் பெண்ணின் மனதில் இது ஒரு பெரிய நம்பிக்கையை ஊட்டுகிறது.

வளைகாப்பு:


     வளைகாப்பு என்பது நமது முன்னோர்கள் வகுத்த ஒரு அறிவியல் பூர்வமான சடங்காகும்.  உற்றார்,உறவினர்கள் சூழ வளைகாப்பு நடத்தப்படுவதால் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பற்றிய பயங்கள், மனஅழுத்தங்கள் நீங்கி அவர்களுக்கு மிகுந்த தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் அளிக்கிறது.
       வளைகாப்பு நிகழ்வின்போது கருவுற்ற பெண்ணின் கையில் வேப்பிலைக் காப்பு கட்டுவர். இது வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளால் பாதிக்கப்படாமல் காக்கின்றது. வளைகாப்பின்போது கையில் 'கண்ணாடி வளையல்கள் ' அணிவிக்கப்படுகிறது. அணிவிக்கப்பட்ட வளையல்கள் உடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. இதன் நோக்கமே எந்த ஒரு செயலையும் அவசரம் இல்லாமல் நிதானமாகச் செய்யவேண்டும் என்பதற்காகத்தான். மேலும் கருவில் இருக்கும் சிசுவானது உருவான 20 வாரங்களுக்குப் பின்பு கேட்கும் திறனைப் பெறுகிறது. இதனாலே வளையல் அணிவிக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.
        நமது தமிழ் சித்தர்கள் கண்டுபிடித்த “வர்மக்கலை” தத்துவப்படி பெண்களின் இரண்டு கைகளின் அணிவிக்கப்படும் வளையல்களால் கைகளில் இருக்கின்ற வயிறு மற்றும் கருப்பையை இயக்கும் வர்ம புள்ளிகள் தூண்டப்பெற்று பெண்ணுக்கும், பிறக்க போகின்ற குழந்தைக்கும் உடல்நலத்தை மேம்படுத்துகிறது. மேலும் 7 அல்லது 9 மாதத்தில் கருவில் இருக்கும் குழந்தை தாய் அணிந்திருக்கும் வளையல் சத்தத்தை தொடர்ந்து கேட்பதால் அக்குழந்தையின் மூளை வளர்ச்சி தூண்டப்படுகிறது என்கிற நமது முன்னோர்கள் கண்டுபிடித்த அறிவியல் உண்மையை நவீன மேலை நாட்டு அறிவியல் ஆய்வாளர்களும் உண்மை என்பதை இப்பொழுது ஒப்புக்கொண்டுள்ளார்கள்.
        இரண்டு கைகள் நிறைய கண்ணாடி வளையல்களை அணிவித்து, ஜடை நிறைய பூச்சூட்டிய பிமன்னர் அப்பெண்ணின் வாய்க்கு ருசியாக பலகாரங்களையும், கலவை சாதங்களையும் அவள் வயிறு நிறைய சாப்பிட்டு மகிழும்படி செய்யப்படுகின்ற இந்தச் சடங்கானது கர்ப்பிணிப் பெண்ணானவள் எந்தவித மனக்கவலையும் இன்றி முழுமகிழ்ச்சியோடு இருந்தால் அவளது உடல்நிலையானது சுகப்பிரசவத்திற்கு ஒத்துழைக்கும் என்பதற்காகச் செய்யப்படுகிறது.
   பும்ஸவனம், சீமந்தம் மற்றும்வளைகாப்பு மூன்றையும் சேர்த்து செய்யலாம் என பெரியோர்கள் சொல்லியபடி  தற்போது எல்லாவற்றையும் சேர்த்து செய்கிறார்கள்.
           இவ்விழாக்களில் எல்லோரும் குழந்தையையும் தாயையும் வாழ்த்துவதால் அந்த பெண்ணுக்குள் இருக்கும் பிரசவ பயம் நீங்கி மிகவும் சந்தோஷமும், மனோதைர்யமும்,  ஏற்படுவதுடன்  கடவுள் அருளாலும் பெரியோர்கள் ஆசீர்வாதங்களாலும் சுகப்பிரசவம் ஆகும் என ஐதீகம்.

Comments

Popular posts from this blog

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..

உண்மை பக்தி எது ?

ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்...